வேலூரிலிருந்து தந்தியடித்தது கல்யாணராமன். அப்பு சாஸ்திரியின் தம்பி. திருவொற்றியூரில் கணபதி தவமியற்றிக்கொண்டிருக்கும் போதெல்லாம் படைவீடு (படவேடு/படைவேடு) ரேணுகாபரமேஸ்வரி அம்மனைப் பற்றியும் அங்கும் கணபதி வரவேண்டும் என்று ஓயாமல் நச்சரித்துக்கொண்டிருந்தவர் கல்யாணராமன். தந்தியோடு வேலூருக்கு வந்த நாயனா கல்யாணராமனையும் கூட அழைத்துக்கொண்டு படைவீட்டிற்கு விரைந்தார். ரேணுகாவின் அருட்கடாக்ஷம் பெற அங்கே தவமியற்றவும் முடிவு செய்தார்.
ரேணுகாவின் ஆழ்ந்த தரிசனத்திலிருந்து கலைந்து சிறிது நேரத்தில் வெளிவந்துவிட்டார் கல்யாணம். அவ்விடத்தின் சக்தியை கணித்த கணபதி இன்னும் கொஞ்ச நாட்கள் அங்கேயே தங்கியிருந்து மேலும் தவமியற்ற சித்தம் கொண்டார். அப்படி தவமியற்றும் காலத்தில் உமாசகஸ்ரத்தைப் பாராயணம் செய்து மனதில் நிலையாகத் தேக்கிக்கொள்ளவும் திட்டமிட்டார்.
”கணபதி ஏதோதோ மந்திரங்களைச் சொல்லிக்கொடுத்து உமாமகேஸ்வரம் என்பரின் மகன் கச்சபேஸ்வரனை புத்தி பேதலிக்க செய்துவிட்டார்” என்று அப்போது ஊருக்குள் ஒரு வதந்தி காட்டுத்தீயாய்ப் பரவியது. இதை உமாமகேஸ்வரமே மறுத்த போதிலும் சில உறவினர்கள் வேண்டுமென்றே இந்தக் கட்டுக்கதையை திட்டமிட்டுப் பிரசாரம் செய்தனர். மேலும் இளைஞர்களைத் தீவிரவாத அரசியல் குழுவாக மாற்ற முடுக்கிவிடுகிறார் என்கிற கூடுதல் குற்றச்சாட்டையும் அவரின் பால் அவிழ்த்துவிட்டனர். இதுதான் சாக்கு என்று சுந்தரபாண்டியன்( ஆரணி காண்ட்ராக்டார். கணபதி முனி பாகம் 21 - சுதந்திரத் தீ) போலீஸாரை கணபதிக்கு எதிராகத் தூண்டிவிட்டார். ஏற்கனவே தன்னுடைய பிள்ளையும் மருமானும் நாயனாவிடம் மந்திர தீட்சை பெற்றதனால் கெட்டுப்போயினர் என்று மூடத்தனமான நம்பியிருந்ததால் இந்த வாய்ப்பை தவறவிடாமல் கணபதியை உள்ளே தள்ளிவிட வேண்டும் என்று முனைப்பாக இருந்தார் சுந்தர பாண்டியன்.
“படைவீட்டில் நாயனா தங்கியிருப்பது வேலூர் சுற்றுவட்டார இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைப்பதற்குதான்” என்று புரளி கிளப்பிவிட்டார்கள். சின்னசாமி என்கிற போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த பொய்ப் பிரசாரத்திற்கு உறுதுணையாகப் பாடுபட்டார்.
காவலர்கள் அப்பு சாஸ்திரியிடமிருந்து தங்களது விசாரணையைத் துவங்கினர்.
“கணபதியைப் பற்றி வேறு விதமாக எங்களது காதுகளில் விழுந்தது. அதற்கு உம்முடைய கருத்து என்ன?”
“இளைஞர்கள் தடம் மாறாமல் நேர்வழியில் நடபதற்கு கணபதிதான் துணை நின்றார். இந்த இளைஞர்களின் பெற்றோர், உற்றார் உறவினர் அனைவரும் நாயனாவிடம் அனுபூதி பெற்றவர்கள். இவர்களின் தற்போதைய உன்னத நிலைக்கு கணபதியே காரணகர்த்தா. இதை எல்லோரும் அறிவர்” என்றார்.
கச்சபேஸ்வரரின் உறவினர்களும் இப்போது தெளிவடைந்தார்கள். இருந்த போதிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்தியடையவில்லை. தீவிர சந்தேகத்துடன் அவ்விடத்தை விட்டு விலகினார்.
இக்குழப்பங்களுக்கிடையே, வெங்கடாசலய்யா என்கிற மெட்ராஸ் அன்பர் தெய்வீக அவதாரங்கள் பற்றி கணபதியிடம் தான் பேசியதை வைத்து, சரியாகப் புரிந்து கொள்ளாமல், கல்கி அவதாரம் கணபதியின் மூலமாகத்தான் இப்புண்ணிய பூமியில் நிகழவிருக்கிறது என்று துண்டுச் சீட்டுகள் அடித்து விநியோகிக்க ஆரம்பித்தார். கச்சபேஸ்வரர் தன் கையில் அகப்பட்ட அந்தத் துண்டுச் சீட்டை இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாகப் புனைந்து கல்கி அவதாரம் விசாலாக்ஷிக்கு பிறக்கப் போகிறது என்று காண்போரிடமெல்லாம் கதை சொல்ல ஆரம்பித்தார்.
இந்த பரப்புரை சுந்தரபாண்டியனுக்கு வசதியாகப் போயிற்று. கல்கி அவதாரமெடுத்துத் தர்மபரிபாலனம் செய்ய பூவுலகில் நிகழப்போகிறது என்பதை முன்னிறுத்தியும் இந்தச் செய்தியையும் இணைத்து “தி மெட்ராஸ் மெயில்” பத்திரிகையில் “எச்சரிக்கை: இளைஞர்களை ஆபத்தான வழிகளில் தூண்டிவிடும், புண்ணிய ஸ்தலங்களில் உலவும் காவ்ய கண்ட கணபதி சாஸ்திரி” என்று செய்தி வெளியிட்டார்கள். அதில் சர்க்காருக்கு எதிராக ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கம் ஒன்றையும் கணபதியின் தலைமையில் அமையவிருக்கிறது என்றும் எழுதியிருந்தார்கள்.
வூரீஸ் கல்லூரி பேராசிரியர் சி. சுப்ரமண்யன் “தி மெட்ராஸ் மெயில்” பத்திரிகையில் இடம்பெற்றிருந்த அவதூறு செய்திக்கு மறுப்பு வெளியிட்டு “தி ஹிந்து”வில் கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் கவர்னர் கணபதியின் செயல்பாடுகளைக் கண்காணிக்க உத்தரவிட்டார். சுந்தரபாண்டியனின் தூண்டுதலால் போலீஸார் “உமா மகேஸ்வர”த்தை முடக்க திட்டமிட்டனர். சர்க்காருக்கு எதிரான புரட்சிப் பாடல்கள் அதில் இடம்பெற்றிருக்கிறது என்பது சுந்தரபாண்டியனின் குற்றச்சாட்டு.
ஆம். அதுவும் உண்மைதான்! உமா சகஸ்ரத்தில் சில பாடல்கள் தேசபக்தியையும் ஊட்டும்படியாகயும், தாய்நாட்டின் விடுதலைக்காகவும் அன்னை ஆதிபராசக்தி உமையம்மையின் அருள் வேண்டும் என்று பொருள்பட எழுதியிருந்தார். போலீஸார் உமாசகஸ்ர பிரதியை கவர்வதற்கு வரப்போகிறார்கள் என்று ஆப்தர்கள் சிலர் கணபதியை முன்கூட்டியே எச்சரித்தனர். ரேணுகா அம்பிகையின் மீது முழு நம்பிக்கை வைத்து அவ்விடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருந்தார் கணபதி.
படைவீடும் அதன் சுற்றுப்புரங்களும் மனித உடலில் கேசாதிபாதம் அமைந்திருக்கும் ஆன்மிக மையங்களைப் போன்ற அமைப்பில் இருந்தன. படைவீடு மலைகளால் சூழப்பட்டிருந்தது. இருபுருவங்களுக்கு இடையே நுழைவது போன்று வாசல். இந்தப் பீட பூமியின் மேலே போனால் சாம்பல் நிற (விபூதி) பிரதேசத்தில் குண்டலினி (கமண்டலு) நதி பிறக்கிறாள். விபூதி போன்ற இந்த இடத்திலிருந்து தண்ணீர் ஊற்று கிளம்புகிறது. ஜமதக்னி முனிவர் யாகம் செய்த இடமாம். அவரது யாகசாலையிலிருந்த யாக குண்டத்திலிருந்து உதிர்ந்த சாம்பல் கலந்த மண்ணாம் அந்த வெண்ணிற நிலப்பரப்பு. இன்றும் கூட இந்த விபூதியே ரேணுகாதேவியின் கோயிலில் பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
தண்ணீர் கசியும் இந்த இடம் தான் சகஸ்ரரார கமலம் என்றழைக்கப்படும் ஆயிரம் இதழுள்ள தாமரை மலர்ப் பீடம். மனுஷ்யர்களின் உச்சி சிரஸ். அந்நதியில் ஓடும் நீரானது ரிஷி ஜமதக்னியின் கமண்டலத்திலிருந்து விழுந்த புனிதநீர். அந்த நதி படைவேடின் வாசல் வழியே பாய்கிறது. அந்நதியோடும் பாதை சகஸ்ரராரவிலிருந்து சக்தி ஓடும் பாதையாகிறது. சமதளத்திலிருந்து பிரவாகமெடுத்த குண்டலினி நதி இரு கற்பாறைகளுக்கிடையே சிற்றருவியாக விழுகிறது. அதைப் பார்ப்பதற்கு பாம்பு படமெடுத்தது போலிருப்பதால் “பாம்படிச்சான் பாறை” என்று வழங்கப்படுகிறது.
இரு புருவங்களுக்கிடையில் ஆக்ஞா சக்ரம் இருக்கிறது. ரேணுகாவை வஜ்ரேஸ்வரி, வஜ்ரவதி, சண்டி, பரச்சண்டசண்டி மற்றும் சின்னமஸ்தா என்றும் பலவாறாக துதிக்கப்படுகிறாள். யோகநிலையில் சின்னமஸ்தாவை பிளந்த தலை/வெட்டப்பட்ட தலையாக குறிப்பிடுகின்றனர். யோகத்தின் முதிர்ந்த நிலையில் உச்சி சிரஸ் பச்சிளம் குழந்தையின் தலைபோல மெத்தென்று மிருதுவாக ஆகிவிடும். இந்த யோகானுபவத்தை சின்னமஸ்தா என்கிறார்கள். சின்னமஸ்தாதேவி என்ற காளியின் உக்ரரூப வழிபாடும் ஒன்று உண்டு. தனது ஸ்நேகிதிகள் டாகினீ மற்றும் வர்ணினீயின் பசிப்பிணி போக்க தனது சிரசை வெட்டி அம்ருதமாகிய இரத்தத்தை பருக அளித்தாள் என்னும் வரலாறு சின்னமஸ்தாவைப் பற்றியது. ரேணுகாதேவி நம் ஆக்ஞாசக்ரத்தில் தங்கி ருத்ர க்ரந்தி என்ற யோக முடிச்சை அவிழ்க்கிறாள். ஆக்ஞாசக்ர இடமென்பது நமது இருபுருவங்களுக்கிடையில் இருக்கும் வசியமேற்படும் பிரதேசம். குங்குமம் தரிக்குமிடம்.
ஆன்மிக பக்தர்களுக்கான உறைவிடமாக இருக்கும் படைவீடு புரட்சியாளர்களுக்கு புகலிடமாகவும் இருப்பதாக போலீஸார் சந்தேகித்தனர். ஒரு மங்கள வெள்ளிக்கிழமை காலையில் மஃப்டியில் இரு போலீஸார் ரேணுகா கோயிலை அடைந்தனர். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். நாயனா பக்தியுடன் பிரதக்ஷிணம் செய்துகொண்டிருந்தார். ஒவ்வொரு பிரதக்ஷிணத்திற்கு ஒரு ஸ்லோகம் வீதம் இருபத்தேழு முறை வலம் வந்து ரேணுகாவை துதித்து இருபத்தேழு ஸ்லோகங்களை அப்போது இயற்றினார். ”சுரஸிரசர சரண ரேணுகா ஜகதீஸ்வரீ ஜயதி ரேணுகா” என்ற வரிகள் அமைந்த அந்தப் பாடல் கணபதியின் கீதாமாலா என்கிற அச்சுப்பிரதியில் பின்னர் இடம்பெற்றது.
பிரகாரத் திண்ணையில் அமர்ந்து தற்போது இயற்றிய ஸ்லோகங்களை மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்திலேயே முகமறியாதவர்கள் போல அமர்ந்திருந்த மஃப்டி போலீஸாரால் கவனிக்கப்படாமல் உமாசகஸ்ரமும் அங்கேயே இருந்ததுதான் பெரும் ஆச்சரியம்!
அப்போது ஏ.ஆர்.துரைஸ்வாமி என்கிற கணபதியின் அணுக்கர் அங்கே வந்தார். அவரிடம் கணபதி ஜாடையினாலேயே உமாசகஸ்ரத்தை பத்திரமான இடத்துக்கு எடுத்துக்கொண்டு போகச்சொன்னார். வேவு பார்க்கவந்தவர்களிடமிருந்து அதைப் பாதுகாக்கும் பொருட்டு வேஷ்டியில் மறைத்து எடுத்துக்கொண்டு ஓடியவர் பதைபதைப்புடன் கமண்டலு நதியின் மணலில் அதைப் புதைத்துவிட்டார்.
பக்கத்தில் பக்தர்கள் போல அமர்ந்திருந்த சீருடை அணியாத காவலர்களிடம் “வேலூரிலிருந்து எப்போது புறப்பட்டீர்கள்?” என்று வினவினார். அவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. மெட்ராஸிலிருந்து வந்திருக்கிறோம் என்று முன்னரே அவர்கள் கணபதியிடம் கூறியிருந்தார்கள். இப்போது என்ன சொல்வது என்று அவர்கள் திணறிக்கொண்டிருக்கும் போதே உமாசகஸ்ரத்தைப் பற்றி தானாகவே சொல்ல ஆரம்பித்தார். உமையம்மைப் போற்றிப் பாடிய அந்த பாடல்களிலிருந்து சில வரிகளைப் பாடினார். அதைப் பற்றி அவர்களுக்கு எழும் சந்தேககங்களை அவர்கள் மனதில் நினைக்கும் போதே நிவர்த்தி செய்தார். இருவரும் செய்வதறியாது தவித்தனர்.
”திருவண்ணாமலையில் கற்றறிந்த பண்டிதர்களின் முன்னிலையில் உமாசகஸ்ரம் அரேங்கற்றமானது. இதில் தடைசெய்ய என்ன இருக்கிறது? லோகமாதாவாகிய, நற்குணங்களை அருளும், ஆன்மிக பலமளிக்கும் உமையம்மையை இப்புண்ணிய பூமியில் பிரார்த்திப்பதில் என்ன தவறு” என்று வினவினார் கணபதி. இனி அவர்களுக்கு கேட்பதற்கு எதுவுமில்லை.
“இன்று பிரதக்ஷிணம் செய்து முடித்த பிறகு என்ன எழுதினீர்கள்?”
“அன்னை ரேணுகாதேவியைப் போற்றி எழுதினேன்.” காண்பித்தார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளளெல்லாம் அடிப்படையில்லாதவை என்று அவர்கள் புரிந்து கொண்டனர். “தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று கைகூப்பி வணங்கினர். வந்திருந்த இரு காவலர்களில் ஒருவர் “ஐயா, நீங்கள் தயவுசெய்து சில காலம் இந்த மாவட்டத்திலிருந்து தள்ளி இருங்கள். அரசியல் புரட்சி செய்கிறீர்கள் என்று சில முக்கியஸ்தர்கள் உங்களைக் கைது செய்ய போலீஸாரைத் தூண்டிவிடும் முனைப்பில் இருக்கிறார்கள்” என்று வேண்டிக்கொண்டார். பின்னர் இருவரும் அங்கிருந்து விடைபெற்றனர்.
போலீஸ் விசாரணையில் நாயனாவுக்கு எதுவும் பங்கம் ஏற்படவில்லை என்று தெரிந்ததும் அங்கிருந்தவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அன்றிரவு அனைவரும் நிம்மதியாக உறங்கினார்கள். நள்ளிரவில் மழை கொட்டோ கொட்டென்று வானத்தைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. காலையில் எழுந்து பார்த்தால் உமாசகஸ்ரத்தை வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டிருந்தது.
”உமா சகஸ்ரத்தால் நான் எழுப்பிய சக்தி யாரென்று எனக்குப் புரிந்துவிட்டது. அது ரேணுகாதேவிதான். அவளே அனைத்திலும் குண்டலினியாக உறையும் உயிர் சக்தி. நானெழுதிய உமாசகஸ்ரம் கையெழுத்துப் பிரதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டாலும் அவளுடைய அருளால் என்னுடைய நினைவில் அழிக்கமுடியாமல் நிலைத்துவிட்டது.” என்று ரமணருக்கு செய்தி அனுப்பினார் கணபதி.
அங்கே இருக்க வேண்டாம் என்று போலீஸார் எச்சரித்தும் படைவீட்டிலேயே தங்கியிருந்தார் கணபதி.....
0 comments:
Post a Comment