Monday, October 26, 2015

ருத்ரமாதேவீஈஈஈஈஈஈஈஈ....

”ருத்ரமாதேவீஈஈஈஈஈஈஈஈ....” என்ற சன் டிவியின் காது கிழிக்கும் விளம்பர அலறலின் போது வாசலில் வந்தார் ரவி. தொப்பையின் அளவைக் காட்டும் சிவப்புக் கலர் டீஷர்ட். தொளதொளா பாண்ட். அவர் கூட ஒரு கையாள். தேசலான உருவம். பாக்கியராஜ் கண்ணாடி. ஹோண்டா ஆக்டிவாவின் பின் சீட்டிலிருந்து எதிரியின் தலையைச் சீவ முதுகிலிருந்து அருவாள் உருவும் அடியாள் தோரணையில் குதித்து இறங்கினார்.
நான் வாசலுக்கு வந்தவுடன் ரவி நேரே வேலையில் இறங்கினார்.
“சார்.. இப்பவே அறுத்துடலாம்...”
“ம்... அளவு சரியா எடுத்துட்டீங்களா?”
“கீள கால் பாகத்துலேர்ந்து அரையடி.... “
“ரோடு மட்டம் சரியா இருக்கும்ல...ரசமட்டம் வச்சுப் பார்த்தீங்களா?”
“ம்... ட்யூப் பிடிச்சு பார்த்து...இதோ.. சுவத்துல குறிச்சு வச்சுருக்கேன்....” கட்டை சுவற்றில் ஏரோ போட்டிருந்தார். ஹார்ட் வரையாததுதான் பாக்கி.
ரவி...வெல்டிங் ரவி. ரவிச்சந்திரன். கார் ஷெட் க்ரில் கதவை அறுக்க உபகரணங்களுடன் காலையில் வந்திருந்தார். கையாளுக்கு தேடும் கண்கள். தெருவில்.. பக்கத்து மாமரத்தில்... எதிரிலிருக்கும் அடி பைப்பில்..... தெருமுக்குக் கடையில்..... காய்கறி வாங்கிச் செல்லும் குடும்பஸ்த்ரீ.... என்று காணும் இடங்களிலெல்லாம் கண்களை பச்பச்சென்று விதைத்தார். கடைசியில் க்ரில் கதவைக் காதலி போல பார்த்துக்கொண்டிருந்தார். ரவியும் நானும் இடதும் வலதுமாய் கதவை சுற்றிச் சுற்றி வந்து திட்டம் வகுக்கும் போதெல்லாம் கையாள் கதவைக் காதலித்துக்கொண்டிருந்தார். க்ரில் கதவை அறுப்பது ஏன்? என்ற ஆதாரக் கேள்வி இப்போது உங்களுக்குள் எழுந்திருக்கலாம்.
”சாலை சடங்கு” பற்றிய பின் வரும் பாராவை இந்திய சாலைகளின் பவுசு தெரிந்தவர்கள் ஸ்கிப்பலாம். ஐஏஎஸ் எக்ஸாமுக்கு போல படித்துதான் ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இரண்டு நிமிடம் எக்ஸ்ட்ரா டைம் ஒதுக்கமுடியும் என்பவர்கள் முன்னேறிச் செல்க.
தேர்தலுக்கு முன்னர் சாஸ்திரத்துக்கு ரோடு போடுவது அரசியல் சம்பிரதாயம். அந்த சடங்கை செய்யும் போதெல்லாம் ஏற்கனவே கல்லும் கப்பியுமாக கிடக்கும் ரோடை கரண்டிவிட்டு போடாமால் அதன் மேல் லாரி லாரியாய் ரப்பிஷ் கொட்டி.... ஜல்லியடித்து.... வெல்லப்பாகு போன்ற தார் ஊற்றி ஒரு முறை ரோடுக்கு வலிக்காமல் நீவி விடுவார்கள். தூறலில் ரோடு கரைந்து போய் ரீ டெண்டரில் திரும்பவும் போடுவார்கள்.... வருஷம் மும்மாரி பெய்தால் மூன்று முறை பாசமாய் பாகு காய்ச்சி ரோடு. இப்படி ரோடு மேலே ரோடு போட்டு ரோட்டோர வீடுகளை பாதாளத்தில் இறக்கிவிட்டார்கள். ஒரு நாள் காலை வீட்டை விட்டு வெளியே வந்தால் தலைக்கு மேலே ரோடு ஓடும். அப்புறம் மொட்டை மாடிக்கு ஓடிப் போய் ரோட்டில் இறங்கவேண்டிய அதிர்ஷ்ட நிலைக்கு தள்ளப்படுவோம்.
கட். போன பாராவுக்கு முந்தின பாராவில் வந்த வெல்டிங் ரவி க்ரில் கதவில் சாக்பீஸால் குறித்துக்கொண்டிருந்தார். ஆறும் ஆறும் பன்னிரெண்டு அடியுள்ள கோட்டைக் கதவுகள் போன்ற இருபக்க க்ரில் கதவு. தலையில் தங்க வேல் குத்தியிருக்கும். ரவி கோடு போட்டு அவரது திறமையைக் காட்டிவிட்டு “சாக்பீஸ்ல குறிச்ச இடத்துல அறுத்துடுங்க...” என்று திரும்பினார். மறுகணம் கையாள் சுதர்சன சக்கரம் பொருத்திய கட்டருடன் க்ரில் கதவில் உரசி தீபாவளிக்கு முன்னரே மத்தாப்பூ விட ஆரம்பித்தார்.
அரை மணி கழித்து எட்டிப்பார்த்தால் குளத்துக்குள் கோடாலியைத் தொலைத்த விறகுவெட்டி போல கன்னத்தில் கைவைத்து குந்தியிருந்தார்.
“கட்டர் சக்கரம் அறுத்துக்கிச்சு சார்.. அதை கயட்டறது கஸ்டம். ரவியைக் கூப்பிட்டிருக்கேன்...” என்று ஏயெம்ஸி எடுத்தவர்கள் கேஸ் ரெஜிஸ்தர் செய்து வெண்டருக்காகக் காத்திருப்பது போல உட்கார்ந்திருந்தவுடன் உதவிக்குச் சென்றேன். கீ போர்டில் டைப் அடித்த கை ஸ்பானர் பிடித்தபோது தவித்தது. உபகாரம் செய்துவிட்டு உள்ளே சென்றுவிட்டேன்.
ரவி வந்தது தெரியாது. தீபாவளிக்கு ரேழியில் எரிமலை கொளுத்துவது போல ஒளி கண்ணை மறைக்க அறுத்த இடத்தில் ஒரு கம்பி வைத்து வெல்டிங் வேலை நடந்துகொண்டிருந்தது. ரவி மறைந்துவிட்டார்.
மீண்டும் தொழில் ரீதியான பேட்டி கொடுத்தார் கையாள். நிறைய பேசினோம். இனி ரவி காசு வாங்கத்தான் வருவார் என்று நினைத்தது போலவே வேலை முடியும் தருவாயில் வந்து தட்சிணை வாங்கிக்கொண்டார்.
கையில் நோட்டுகளை எண்ணிக்கொண்டே டிவியெஸ் ஐம்பதில் வந்த தெரிந்தவரிடம் பேசிக்கொண்டிருந்த ரவி ஆக்டிவாவைக் கிளப்பும் வரை க்ரில் ஸ்நேகிதமான என்னிடம் கையாள் சித்த நேரம் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்.
“பாஹுபலிக்கப்புறம் எல்லோரும் சரித்திரப் படம் எடுக்கிறாய்ங்க....இல்ல சார்....”
“ஆமாங்க... ஒரு ட்ரெண்டுதானே”
“இருந்தாலும் இது ரொம்ப ஓவருங்க...”
“எது?”
“அனுஸ்காவ வச்சு ருத்ரமாதேவின்னு குஸ்திப் படம் எடுக்கறதெல்லாம்..”
“ஏன் ஓவரு?”
“அளகா இருக்கிறவங்கள வச்சு பாரின்ல ஆடவிட்டு டூயட்டு எடுக்காம.....தடிப்பசங்க முன்னாடி குதிரல ஓடவிட்டு ஈட்டி எறியச் சொல்றாங்களே.... எந்தக் கூமுட்டையாவது இதை பார்ப்பானா...” படபடப்பாகப் பேசினார்.
“ம்... சரிதான்.. இருந்தாலும் அவங்களுக்கு வயசாயிடிச்சுங்களே... கதாநாயகி மாதிரியெல்லாம் இனிமே நடிக்க வைக்க முடியுமா? வீரமான பொம்பளையாதானே நடிக்க வச்சுருக்காங்க....”
”என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க.... நைட் சோவுக்கு நா போறேன்ல...”
எந்த கூமுட்டையாவது பார்ப்பானா?ன்னு சொன்ன வாயின் ஈரம் காயறத்துக்கு முன்னாடி...... என்று கேட்க வாயெடுத்தேன். ”போலாமா?” என்று ஆபத்பாந்தவனாக ரவி வந்துவிட்டார். விஜயகாந்த் வில்லனை உதைக்கும் ஸ்டைலில் பின்னால் காலைத் தூக்கிப் போட்டு பில்லியனில் ஏறிப் பறந்துவிட்டார் கையாள்.
இது போன்ற வெறித்தனமான ரசிகர்கள் இருக்கும் வரை அனுஸ்காவை யாராலும் அசைச்சுக்கமுடியாது.

கணபதி முனி - பாகம் 36: இருதய குகையின் மத்தியில்.....

செகந்திராபாத் செல்லும் வழியில் கும்தா என்ற ஊரை வந்தடைந்தார். அங்கிருந்த வேதபாடசாலையில் கோகர்ணத்திலிருந்தும் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்தும் வித்யார்த்திகள் பயின்று வந்தார்கள். ஊரே ஊர்வலமாகத் திரண்டு வந்து கெட்டிமேளத்தோடு நாயனாவுக்கு பூர்ணகும்ப மரியாதை தந்தார்கள்.

“கற்ற பாடத்திற்கு தக்கவாறு அவற்றின் வழி நிற்பது மிகவும் அவசியம். அடிப்படையில் ஒழுக்கமே உயர்வு தரும். கற்பதற்கு வயதும் காலமும் கிடையாது. ஆகையால் முப்பொழுதும் பயில்வதையே தொழிலாகக் கொண்டால் வாழ்வில் பல உன்னத நிலைகளை அடையலாம்" வித்யார்த்திகள் வேதவிற்பன்னர்கள் பண்டித சிரோன்மணிகள் என்று பெருங்கூட்டம் அவரது பேச்சை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தது.
“மந்திர ஜெபமே நமது தாய்நாட்டையும் தாய் மதத்தையும் தீயவர்களிடமிருந்து காப்பாற்றும். அனைவரும் பகவான் ஸ்ரீரமணரின் அருளுரைகளைப் படியுங்கள். சுபிட்சம் தானாகத் தேடி வரும்...” இப்படி கணபதி சொற்பொழிவாற்றிக்கொண்டிருக்கும் போது இரு மாணவர்கள், தேவேந்திர சுப்ரமண்ய விஸ்வாமித்ரா மற்றும் சுந்தர ராவ் பண்டிட் ஆகியோர் தீட்டிய செவியோடு கவனித்துக்கொண்டிருந்தனர். இவ்விருவரும் பின்னாளில் நாயனாவின் வாழ்வில் ஒரு முக்கியமான பங்கு வகித்தார்கள்.
செகந்திராபாத். ஸ்ரீரமணருக்கு அங்கு எண்ணற்ற பக்தர்கள் இருந்தார்கள். அவர்களில் பலர் உத்யோகத்தில் பெரும்பதவி வகிப்பவர்கள். நாயனாவுக்கு இது போன்ற அறிவார்ந்த சபையில் பேச மிகவும் ஊக்கமாயிருந்தது. கொண்டாட்டமான மனோநிலையில் அவகாசம் வாய்க்கும்போதெல்லாம், கூடிய மற்றும் கூட்டிய சந்திப்புகளிலெல்லாம் பகவான் ரமணரைப் பற்றி ஓயாமல் உபன்யாசம் செய்தார். பலருக்கு மந்திர ஜெப உபாசனை செய்து நற்கதியளிக்கும் மார்க்கத்திற்கு அழைத்து வந்தார்.
ஒரு சிலருக்கு காவ்யகண்டரின் அஷ்டாவதானம் பார்க்க ஆசையாயிருந்தது. தன்னுடைய இலக்கிய மற்றும் வேறு பல வித்தைகளை காண்பிப்பது நேரவிரயம் என்று முடிவு செய்திருந்தாலும் கேட்டவர்களைத் திருப்திப்படுத்த மாதிரிக்காக இரண்டு அவதானங்கள் செய்து காண்பித்தார் நாயனா. அவர் வெறும் மொழிக்காக இலக்கியவாதியல்ல, இலக்கியம் என்பது கடவுளின் கருணையைக் காட்டுவதற்கும் அந்தப் பரம்பொருளின் இறைப் பெருமையை பாடுவதற்கும் என்ற குறிக்கோள் கொண்ட தெய்வக் கவிஞர்.
*
திருப்பதி வேங்கடகவிகள் என்ற இரட்டையர்கள் ஆந்திராவிலிருந்து இலக்கியப் புரட்சி செய்துகொண்டிருந்தார்கள். ஒருவர் திருப்பதி சாஸ்திரி மற்றொருவர் வேங்கட சாஸ்திரி. அவர்கள் செகந்திராபாத்தில் சதாவதனம் செய்தார்கள். அதைக் காணத் திரண்ட பிரம்மாண்டமான கூட்டத்தில் காவ்யகண்டரும் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தார். எங்கு அவதானம் நடந்தாலும் கூட்டம் நடுநடுங்கும்படி இருவரும் நிறைய சவால் விடுவார்கள். மெத்த படித்தவர்கள் கூட எழுந்திருக்க அச்சப்பட்டு கம்மென்று சென்றுவிடுவார்கள்.
வேங்கடகவிகள் வெற்றி...வெற்றியென்று கொக்கரிப்பார்கள். இம்முறையும் “எங்களைப் போல் எந்தத் தலைப்பிலும் கேட்டவுன் பாடல் வடிக்கும் திறன் கொண்டவர்கள் யாரேனும் இந்தக் கூட்டத்தில் உண்டா?” என்று உறுமினார்கள். அந்த மண்டபமே நிசப்தமானது. “அப்படி யாரேனும் வெற்றிபெற்றால் நாங்கள் எங்கள் மீசையை மழித்துவிட்டு வெற்றிபெற்றவர் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறோம்.” உறுமல் அதிகமானது.
"ஆசுகவிகள்... கூட்டத்தில்... யாராவது....” ஏலம் விட ஆரம்பித்தார்கள். நல்ல ஆகிருதியான ஒருவர் எழுந்திருந்தார். “ஓ.. நீர் கவிபாடப் போகிறீரா? பேஷ்...” என்று எக்காளமாகக் கேட்டனர். அவர் ஒன்றும் பேசாமல் விடுவிடுவென்று மேடை நோக்கிச் சென்றார். தலையசைத்து சமிக்ஞையால் இருவரையும் கூப்பிட்டார். வேங்கடகவி சிரசைச் சாய்த்தார். இங்கிருந்து சென்றவர் ஏதோ சில வார்த்தைகள் அவர் காதில் கூறினார். அடுத்த நொடி வேங்கடகவிகள் இருவரும் மேடையை விட்டிறங்கி அந்த நெடிய மனிதரின் பின்னால் பார்வையாளர்களுக்குள் சென்றனர்.
அவர் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து உட்கார்ந்திருந்த காவ்யகண்டரிடம் போய் நின்றார். அவரைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். சிரம்தாழ்த்தி இருவரும் அப்படி சவால் விட்டதற்காக மன்னிப்பு கோரினர். நாயனா சிரித்துக்கொண்டே “நன்றாக செய்கிறீர்கள். வாழ்த்துகள். நிகழ்ச்சியை தொடருங்கள்..எனது ஆசீர்வாதங்கள்..” என்று மனப்பூர்வமாக ஆசி வழங்கினார்.
*
நாயனாவிற்கு எப்போதுமே சித்து விளையாட்டுகளில் இஷ்டமில்லை. சித்துகள் காண்பித்து மக்களை பித்தாக்க அவர் விரும்பவில்லை. சித்துவிளையாட்டுகள் காண்பிக்க ஆரம்பித்தால் அவரைச் சுற்றி எப்போதும் மக்கள் மொய்ப்பார்கள். அவரது சிஷ்யர்களுக்கும் இது தெரியும். ஆனால் எம்.பி. சுப்ரமண்ய ஐயரின் இரு புதல்விகளும் அம்மைநோயில் அவதியுற்ற போதும், ரெங்கசாமி ஐயங்காரின் மகன் தீவிர டைஃபாய்டில் படுக்கையில் கிடந்த போதும் நாயனாவின் அருள் வேண்டி நின்றார்கள். அவரது ஆசீர்வாதத்தால் அவர்கள் உயிர் பிழைத்தார்கள்.
எங்கிருந்தாலும் பகவான் ஸ்ரீரமணரின் பொன்மொழிகளை காண்போரிடம் உபதேசித்து வந்தார் வாசிஷ்ட கணபதி முனி. ரமணர் நாயனாவை அவரது ஜீவனின் குரலாக பாவித்தார். இந்த அருளும் நிறைவும் இருவரிடமும் இருந்தது. உடலால் அவர்கள் வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் இத்தகைய பந்தங்களினால் எப்போதும் சேர்ந்தே இருந்தார்கள்.
நாயனாவும் விசாலாக்ஷியும் 1913ம் வருடத்தின் இறுதியில் பகவான் ஸ்ரீரமணரைத் திரும்பவும் தரிசித்தார்கள். பதபந்தேந்த்ஸ்வரம், கோகர்ணம் மற்றும் சன்னபேலாவில் நடந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்துச் சொன்னார் நாயனா. சுவாரஸ்யமான விஷயங்களை அதீத ஆர்வத்துடன் கேட்டு இரசித்தார் ரமணர். ”கண்ட சதக”த்தை திரும்ப நாயனா சொல்லும் போது அதை தன் கைப்பட எழுதி வைத்துக்கொண்டார் பகவான் ஸ்ரீரமணர்.
கணபதி முனி தன்னிடம் புலம்பிய பிறத்தியாரின் பிரச்சனைகளை ரமணர் முன் வைத்த போது அவர் அருளிய உபதேசங்களை ரமண கீதையின் முதல் அத்யாயத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
“வேதங்களைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதோ சத்திய அசத்தியங்களை பகுப்பாய்ந்து பார்க்கும் திறனோ நம்மை பூரணத்தும் அடையவிடாது. ஆன்மிக நெறியே சம்பூர்ணமான நிலைக்கு வழிவகுக்கும். உள்ளுக்குள் மூழ்கி “நான் யார்?” என்று தேடுவதே பெரிய உபாசனை. அதுவே நம் ஆன்மாவுக்கு திருப்தியளிக்கும். அதில் லயித்துவிடுபவனுக்குப் பெயர்தான் ஞானி! இந்த முறையே ஆத்மவிசாரத்திற்கான விதை. இதுவே நம்முடைய எல்லா முயற்சிகளுக்கும் குறிக்கோள்களுக்கும் வெற்றி தரும் அடித்தளம். இதுவே பற்றற்ற நிலைக்கு ஒருவனை இட்டுச்செல்லும்”
எவ்வளவு சத்தியமான வரிகள்!!
*
விசாலாக்ஷிக்கு திருத்தல யாத்திரை செல்வதில் மிகவும் இஷ்டம். இம்முறை நாயனாவுடன் வடக்கே புவனேஷ்வரம் சென்றார். அங்கே நான்கு மாதங்கள் தவமியிற்றினார். ஆனால் நாயனா போல தனக்கு அற்புத அனுபவங்கள் ஏதும் ஏற்படவில்லையே என்று ஆதங்கப்பட்டார்.
“அம்மா விசாலாக்ஷி.... தவமியற்றுவதில் ஒருவருக்கு நடந்தது இன்னொருவருக்கு நடப்பதில்லை...” என்ற நாயனாவை திருப்தியில்லாமல் கேள்வியோடு பார்த்தார் விசாலாக்ஷி.
“உன்னுடைய தவம் நம்முடைய சிஷ்யர்களுக்கு ஆன்மிக பலம் அளித்தது. அதுவே புவனேஸ்வரியம்மனின் அருட் கடாக்ஷம். அடுப்பு மூட்டி நீ சமையல் பாத்திரங்களைத் தொட்ட மாத்திரத்தில் ருசியான பதார்த்தங்கள் சாப்பிடக் கிடைப்பதே லோகமாதாவின் அருட் செயல்தான்.” என்று நாயனா ஆறுதல் அளித்தார்.
மந்தேசா ராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க அங்கே ஒரு வருஷம் தங்கி தம்பதியாய் தவமியற்றினார்கள். வடக்கு நோக்கி யாத்திரை செல்வதை மறந்து தவக்கடலில் முங்கித் திளைத்தார்கள்.
ஸ்ரீரமணரின் பக்தர்களில் ஒருவர் ராமனாத பிரம்மச்சாரி. 1915ம் வருடத்தில் ஒரு நாள் காலையில் மந்தேசா வந்தார். நாயனா நித்யானுஷ்டங்களில் மூழ்கியிருந்தார். அவைகளை முடித்துவிட்டு வந்ததும்.....
“ரமணரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியை உங்களுக்கு சொல்லலாம் என்று விரும்புகிறேன்”
“ம்... ரமணரைப் பற்றிய எதுவும் எனக்கு பிரியமான விஷயம்.... மனசுக்கு இன்பமளிக்கும்...” என்று நிமிர்ந்தார் கணபதி.
“ஜகதீச சாஸ்திரி ஸ்ரீரமணரின் உபதேசங்களை வைத்து ஸ்லோகம் இயற்ற ஆரம்பித்தார். “ஹ்ரித்ய குஹர மத்யே” என்பது ஆரம்ப வரிகள்...”
“ஆஹா.. ’இருதய குகையின் மத்தியில்’ அற்புதமான ஆரம்பம்... அப்புறம்” மீதத்தைத் தெரிந்து கொள்ளத் துடித்தார் கணபதி.
“ஸ்ரீரமணரின் எதிரில் அமர்ந்திருந்த ஜகதீச சாஸ்திரியினால் அதற்கு மேல் தொடர முடியவில்லை. திணறினார். வார்த்தைகள் வரவில்லை.. சிறிது நேரம் பார்த்த ரமணர் அவரிடமிருந்த பேப்பரையும் பென்சிலையும் வாங்கிக்கொண்டார். சடசடவென்று எழுத ஆரம்பித்தார்...”
“அந்த ஸ்லோகம் என்ன?”
ஹ்ரித்ய குஹர மத்யே கேவலம் ப்ரஹ்மமாத்ரம் 
ஹ்யஹமஹமிதி ஸாக்ஷாத் ஆத்மரூபேணபாதி 
ஹ்ருதி விஸ மனஸாவம் சின்வதா மஜ்ஜதா வா 
பாவன சலன ரோதா ஆத்மநிஷ்டோபவ த்வம்

என்று எழுதி முடித்தார். ஜகதீச சாஸ்திரியின் கண்களில் ஜலம் கட்டிக்கொண்டு நின்றது. அப்படியே கண்ணும் கண்ணீருமாக எழுந்து பகவானை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்”
[அர்த்தம்: ஹ்ருதயத்தின் உள்ளேயிருக்கும் குகையில் பிரம்மம் ஆத்மாவாக ஒளிர்கிறது. ”நான் யார்... நான் யார்.. என்று ஹ்ருதயத்தின் உள்ளேயும் மனசு அதன் அடி ஆழத்தில் புகுந்து தேடத் தேடி நுழைந்தும்... பிராணனை அடக்கும் வித்தையறிந்தும் ஒருவர் ஆத்மாவுக்குள் வசிக்கலாம்]
இந்த ஸ்லோகம் நாயனாவை ஆனந்தத்தின் எல்லைக்குக் கொண்டு சென்றது. ஆன்மிகத்தின் வழியாக முக்தி அடைவதின் சூட்சுமத்தை மூன்று முக்கிய மார்க்கங்களாகக் காட்டியிருக்கிறார் பகவான். இதை தனது ரமண கீதையின் இரண்டாவது அத்தியாயக் கருவாக எடுத்துக்கொண்டார் நாயனா...
நாயனாவும் அவரது தர்மபத்னி விசாலாக்ஷியும் வெங்கட்ராமன் என்பவருடன் வடதிசை நோக்கி யாத்திரைக்கு கிளம்பினார்கள். காசி, கயா, அயோத்தியா, பிரயாகை என்று எல்லா இடமும் சென்று விட்டு கடைசியில் பிருந்தாவனத்தை வந்தடைந்தார்கள். அங்கு பாரத தேசத்தின் தலைசிறந்த பண்டிதர்களின் மாநாடு ஒன்று நடந்து கொண்டிருந்தது... 
அதில்....

ஏவிஎம் ராஜனும் சௌ’CRY' ஜானகியும்

முருகன் குட்டி வயசு ஸ்ரீதேவி ரூபத்தில் வந்து (அவ்வப்போது பளீரென்று சிரித்துக்கொண்டு) அருள் புரியும் துணைவனின் க்ளைமாக்ஸ் காட்சி சன் லைஃபில் ஓடிக்கொண்டிருந்தது. நேற்றிரவு டின்னர் சப்பாத்தி முருகா...முருகா..என்று திவ்யமாக இறங்கிக்கொண்டிருந்த வேளையில் பார்த்த துண்டுக் காட்சி. திரையில், அழும் திலகங்களான ஏவியெம் ராஜனும் (பிதுங்கிய அடி உதட்டுடன்) சௌ’cry' ஜானகியும் (தலையை நிமிர்த்தி டாப் ஆங்கிள் கேமிராவைப் பார்க்கும் போஸில்) சேர்ந்து ஜோடியாய் அழுத....ச்சே... நடித்த படம்.
நெடுநெடுவென கிருபானந்த வாரியார் மகானாக வந்து உபதேசம் செய்தார். கேபி சுந்தராம்பாள் முருகன் கிருதிகளைப் பாடினார். காட்டாற்று நீர் உருட்டிய கரும்பாறைகளின் கடமுடாவாகக் கேபிஎஸ்ஸின் கமகம் காதுகளைக் கழுவி விட்டது. தேவலோகத்திலிருக்கும் முருகனின் செவிக்கு எட்டுமாறு ஏவியெம் ராஜனும் சௌகாரும் விடிய விடிய கோவில் கண்டாமணியை அடித்தார்கள். ஊர் கூடி வேடிக்கைப் பார்த்தது. கைகளில் ரத்தம் வர மயங்கிச் சாய்ந்தார்கள்.
பொழுது புலர்ந்தது. சுந்தராம்பாள் கந்தர் கலிவெண்பா பாடியதும் கலியுக வரதன் செந்திலாண்டவன் ஓடோடி வந்து ஆலயமணியடித்தப் பெற்றோரின் பிரக்ஞையற்றப் பிள்ளையை பிழைக்கவைத்தார்.
அழுதவர்கள் சிரித்தார்கள். ஏவியெம் ராஜனைத் தவிர.
ஏவியெம் ராஜனை சிரிக்க வைத்து யாரேனும் படம் எடுத்திருக்கிறார்களா? அந்தகால மொஹஞ்சதாரோ ஹரப்பா ஆசாமிகள் யாருக்காவது தெரிந்தால் சொல்லவும். எப்போதும் கையிலிருந்த காட்பரீஸ் பிடுங்கப்பட்டப் பாப்பாவாக தோன்றும் ராஜனை சிரித்தபடி பார்க்க ஆசையாயிருக்கிறது.

கணபதி முனி - பாகம் 35: வனதுர்க்கை பறித்துக் கொடுத்த பச்சிலை

கோகர்ண வித்யாபீடத்தில் பாடத்திட்டங்கள் நாயனாவின் மேற்பார்வையில் புத்துயிர் பெற்றன. ரிஷிகள் திருஷ்டாந்தமாக தெரிந்து கொண்ட பல மந்திரங்களைத் தொகுத்து வகைப்படுத்தினார். அம்மந்திரங்களின் சான்னித்யத்தை அறிந்துகொள்ள புதுப்புது திட்டங்கள் வகுத்தார். பொதுவாக ரிஷிகள் வாழ்ந்த காலங்களை மஹாபாரதக் காலத்தோடு ஒப்பிட்டு பட்டியலிடச் சொன்னார். அப்படி படிக்கப்படும் மந்திரங்கள் அமைந்த சூக்தங்கள் அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த பிரசித்தி பெற்றவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடையாகிறதா என்றும் ஆராயக் கேட்டுக்கொண்டார். அந்தந்த ரிஷிகளோடு சம்பந்தப்பட்ட மந்திரங்கள் அவர்களின் அஸ்திர வித்தைக்கு உபயோகப்பட்டதா? அப்படியில்லை என்றால் வேறு எதற்கு உதவியது? வேறு ஏதேனும் ஆன்மிக உண்மைகளை உணர்த்தி அதை அடையும் மார்க்கத்தை மறைமுகமாகச் சொல்லியதா?

கோகர்ணத்தில் இது போன்ற வேத தபஸில் முழுமூச்சாக இறங்கியிருந்தார். ”நான்” என்பதை உதறித் தள்ளி தேகத்திற்கு சுகமும் சந்தோஷமும் தரும் அனைத்தையும் ஒதுக்கிவிட்டார். வடபந்தேஸ்வரத்தில் இத்தகைய வேதத் தபஸில் ஈடுபட்டதால் அவருக்கு இந்த பூலோக நன்மைக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

ஆன்மிகம் மற்றும் தெய்வ சங்கல்பமுடையவர்கள் கல்லாய் சமைந்து உட்கார்ந்து பூஜை புனஸ்காரங்கள் மற்றும் தவம் மட்டுமே இயற்றுவார்கள் என்பதை உடைத்து அவர்கள் இவ்வுலகம் க்ஷேமம் அடைய முடியும் என்பதை நிரூபிக்கத் துடித்தார். தன்னை விட்டு தன்னுடைய தேவைகளை விடுத்து தபஸில் இருப்பவர்களால் மட்டுமே எல்லோருக்கும் உபகாரங்கள் செய்து உலகிற்கு சேவை புரிய முடியும் என்பது நாயனாவின் திடமான கருத்து.

நாயனா தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு இந்த வேத தபஸில் இருந்தார். அப்போது கலுவராயியிலிருந்து அவருக்கு தந்தையார் இறுதி யாத்திரைக்குத் தயாராய் இருப்பதாகவும் அவரைப் பார்க்கப் பிரியப்படுவதாகவும் லிகிதம் வந்தது. உடனே கிளம்பினார். மழை வானத்தைப் பிளந்து கொண்டு கொட்டியதில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. 1912ம் வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி அவர் கலுவராயிக்குள் நுழைவதற்கு முன்னர் அவரது தந்தையார் விண்ணுலகம் எய்தியிருந்தார்.
ஒரு மாத காலம் தந்தைக்கு செய்யவேண்டிய ஈமக்கிரியைகளை கலுவராயியில் தங்கி செய்தார். பின்னர் வித்யாபீட நினைவு சுண்டி இழுக்க உடனே கோகர்ணத்திற்கு திரும்பிவிட்டார்.

ஒவ்வொரு நாளும் வேதமும் தபஸுமாகக் கழிந்தது. நான்கு நாட்கள் கழித்து நாராயண பிரம்மச்சாரி என்கிற நம்பூதிரி நாயனாவை வித்யாபீடத்தில் சந்தித்தார். ”நமஸ்காரம்” சொன்னார். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே “பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் வழிகாட்டுதலின் பேரில் நீங்கள் அருணாசலத்திலிருந்து வருகிறீர்கள்? சரியா?” என்றார். வந்தவர் அசந்துபோனார். அப்படியே நெடுஞ்சாண்கிடையாக நாயனாவின் காலில் விழுந்தார்.

“என்னை தங்களது சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு அருள வேண்டும்” என்று கைகூப்பி நின்றார். அவருக்கு அம்ருதானந்தா என்று நாமகரணம் சூட்டி சந்நியாச தீக்ஷை அளித்தார் நாயனா. சந்நியாசியான நாராயணா பெரிய ஜமீனின் புத்திரன். நாட்டுக்குப் பொதுச் சேவை புரிய வீட்டைத் துறக்க சித்தமாயிருந்தார். ஸ்ரீரமணரின் ஆசி பெற்று அரசியல் இயக்கமொன்றில் இணையத் தயாராயிருந்தார். ஆனால் ரமணர் அவரை நாயனாவிடம் அனுப்பிவைத்தார்.

நாயனா அப்யசித்த மந்திரங்களை வாழ்நாள் முழுவதும் உபாசித்தார். அனைவருக்கும் உதவிகள் பல புரிந்தார். ரமண கீதையில் இந்த நாராயணாவை எழுதி அமரத்துவம் பெறச்செய்தார் நாயனா.

*

கோகர்ணத்திலிருந்து நாலு மைல் தூரத்திலிருக்கும் குக்கிராமம் சன்னிபேலா. அது இயற்கை எழில் கொஞ்சும் சஹாயாத்ரி மலையின் உச்சி. அங்கே வாசிஷ்ட கணபதி முனியின் வழிகாட்டுதலின் பேரில் ஒரு யக்ஞம் செய்வதற்கு கோகர்ண பண்டிதர்கள் உத்தேசித்தார்கள். உபந்தோப்பாத்யாயா சன்னிபேலாவின் முடிசூடா பண்டிதர். கலுவராயில் கணபதி முனியின் தந்தையார் இயற்கை எய்வதற்கு முன்னரே இதற்கான ஏற்பாடுகளை செய்துவைத்திருந்தார். இப்போது நாயனாவை அங்கே அழைத்து தவமியற்றி அவ்விடத்தைத் தூய்மைப்படுத்த வேண்டினார்கள்.

அது நிசப்தமான இடம். ஒரு பக்கம் கடல். மூன்று பக்கங்களிலும் அடர்ந்த காடு. சிலுசிலுவென்று காற்று மரம் கிளைகளை உலுக்கி ஓசையோடு வீசும். நெஞ்சுக்குப் புத்துணர்வு ஏற்றி தவம் செய்யும் ஆசையைக் கிளப்பும். கலுவராயியிலிருந்து திரும்பியவுடன் பண்டிதர்கள் வேதம் முழங்க கணபதி சன்னபேலாவுக்கு கிளம்பினார்.

சன்னபேலாவின் சூழல் தவத்திற்கு மிகவும் ஒத்தாசையாக இருந்தது. விசாலாக்ஷியும் வஜ்ரேஸ்வரியும் வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டார்கள். எஞ்சியிருந்த அனைவரும் மந்திர ஜபம் செய்தார்கள். அவர்களது அமைதியான தபஸினால் அந்த இடத்தில் வார்த்தையில் அடங்காத ஒரு சாந்தி குடிகொண்டது. மூன்று வாரங்கள் இப்படி ஓடின.

அப்புவிற்கு மஞ்சள்காமாலை கண்டது. அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தார். “தீமை தரும் உஷ்ணங்கள் உடம்பிலிருந்து வெளியேறுகிறது.. அவ்வளவுதான்...” என்று நாயனா ஆறுதல் கூறினார். அன்றிரவு அப்பு சில மணிகள் நிம்மதியாகத் தூங்கினார். நடுநிசிக்குப் பிறகு ஒரு சொப்பனம் கண்டு திடுமென்று விழித்து உட்கார்ந்தார். சொப்பனத்தில் தோன்றிய ஒரு பெண்மணி அவரது நாக்கை தனது புடவையின் முந்தானையால் அழுத்தித் துடைத்தார்.
ஆசுவாசப்படுத்திக்கொள்ள வீட்டிற்கு வெளியே வந்தார் அப்பு. அப்போது அவர் கனவில் கண்ட அதே பெண்மணி அவ்வீட்டின் திண்ணையில் சிரித்தபடி அமர்ந்திருந்தார். அதிர்ச்சியில் எதையும் கண்டு கொள்ளாமல் திரும்பவும் வீட்டிற்குள் வந்து படுத்துவிட்டார். மீண்டும் கனவு வந்தது. அதே பெண்மணி வந்தார். இம்முறை ஏதோ ஒரு பச்சிலைக் கொடியை விசாலாக்ஷியிடம் காண்பித்துக்கொண்டிருந்தார். மீண்டும் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு வெளியே வந்தார்.

அப்போது தூரத்தில் மரங்களுக்கிடையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சம் ஆடியாடி வந்துகொண்டிருந்தது. யாரோ ஸ்திரி கையில் அரிக்கேனுடன் நெருங்கினார்கள். வாசலிலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தார் அப்பு. அருகில் வந்ததும் அது விசாலாக்ஷிதான் என்று தெரிந்துகொண்டார். அவர் கண்ட காட்சி அவரை உறைய வைத்தது. அப்பு கனவில் கண்ட அந்த பச்சிலைக் கொடியை விசாலாக்ஷி கொத்தாக கையில் பிடித்திருந்தார்.

”இந்த......... கொடி..... உங்கள்..... கைகளில்...” என்று ஒவ்வொரு வார்த்தையாகத் திக்கித்திக்கிக் கேட்டார் அப்பு.

“காட்டில் ஒரு வயதான பாட்டி இந்தக் கொடியைப் பறித்து என்னிடம் கொடுத்தார்... இது மஞ்சள்காமாலைக்கு மருந்தாம்.....” என்ற விசாலாக்ஷியின் கண்களில் சந்தோஷம் தெரிந்தது.

“அவர் யாராம்?”

“ஏதோ பக்கத்திலிருக்கும் மலைக் கிராமமாம். காலையில் சுள்ளி பொறுக்க தினமும் காட்டிற்கு வருவாராம்...”

இவர்கள் இருவரும் ஆச்சரியாமகப் பேசிக்கொண்டிருக்கும் போது நாயனா அங்கே வந்தார்.

“அது வேறுயாருமில்லை.... வனதுர்க்கையே வயதான பெண் வேடத்தில் வந்திருக்கிறாள்...” என்றார். அப்புவும் விசாலாக்ஷியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். நாயனா சிரித்தார்.

இரண்டு நாட்களில் அதிசயம் நிகழ்ந்தது. மஞ்சள்காமாலை நோயினால் பீடிக்கப்பட்ட அப்பு பூரண நலமடைந்தார். நாயனாவின் ஞானதிருஷ்டியை அனைவரும் புகழ்ந்தனர்.

ஏப்ரல் 1913ல் அந்த யக்ஞம் நடந்தது. வாசிஷ்ட கணபதி முனி யக்ஞத்தில் ஓதப்படும் ஒவ்வொரு மந்திரத்தின் பொருளை அப்பண்டிதர்களுக்கு விளக்கினார். ஏற்கனவே அவர்களுக்கு மந்திரங்களுக்கான அர்த்தம் தெரிந்திருந்தாலும் நாயனாவின் பொழிப்புரையும் வியாக்கியானத்தின் கோணமும் வெகுவாகக் கவர்ந்தது. வேதத்தின் உட்பொருளும் மையக் கருத்துக்களையும் கணபதி முனியிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு அது ஒரு புதிய பாதையை வகுத்துக்கொடுத்தது.

யக்ஞம் பூர்த்தியடைந்த பிறகு ஒரு வாரத்திற்கு இந்திராணியை மனதில் நிறுத்தி தவம் இருந்தார். அங்கிருந்து அப்புவும் கல்யாணராமனும் ஆசிரியர்களாக வேலை பார்க்கும் மஹபூப் கல்லூரி இருக்கும் செகந்திராபாத் நோக்கி பயணப்பட்டார்.
போகும் வழியில்....

நவராத்திரி ரவுண்ட் அப்‬

சில வருடங்களுக்கு முன் கைலாஸம் போன என் பாட்டியின் சாயலில் இருந்த தொன்னூற்று நான்கு வயசுப் பாட்டிக்கு நமஸ்கரித்தது மனசுக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. கொலு விஸிட்டின் புண்ணியம். நெத்திக்கு ஒத்தை. மடிசார். மடி. ஆசாரம். கழுத்தில் பவிழம் கோர்த்த மாலை. அதே குட்டையான உயரம். எவரையும் சாய்க்கும் அமைதியான திருமுகம். காதுக்கு வலிக்காத மிக மென்மையான பேச்சு. சாரதா பாட்டியே சித்த நேரம் எதிரில் நடமாடியது போன்ற உணர்வு. ஸ்ரீ Srinivasan Gopalakrishna Iyer அவர்களின் மாமியார். அக்ஷதை போட்டு ஆசீர்வாதம் செய்தார்.
Saroja Ramanujam மேடத்தின் வீட்டில் ஸ்ரீகிருஷ்ணர் ஜாகையிருந்தார். கிருஷ்ணரின் அவதாரத்திலிருந்து அவரின் பால்ய லீலைகளை லக்ஷணமான திருமுகத்தோடு வடித்திருந்த பொம்மைகள் கொலுவெங்கும் அலங்கரித்தன. ”காதி கிராஃப்ட்... இல்லைன்னா எழிலகம்...” என்ற அவரைச் சுற்றி திசையெங்கும் ஸ்ரீகிருஷ்ணர் வியாபித்திருந்தார், அவரது ப்ரொஃபைல் படம் போலவே!
இன்னும் இருவர் வீடுகள் எனக்கு நெருங்கிய சொந்தக்காரர்கள். இன் லாக்கள். மழலை பேசி மனதை மயக்கும் குட்டிகள் தத்தக்காபித்தக்காவென்று நடமாடும் இடம். கய்மய்யென்று நாலு நாலு வார்த்தைகளில் கையைப் பிடித்து சொர்க்கம் கூட்டிக்கொண்டு காண்பிப்பவர்கள். தொடையில் உட்கார்ந்து தாவாங்கட்டை தடவி தோளுக்கு மேலே தூக்கும் போது தோளிரண்டிலும் தைய்யத்தக்காவென்று நடனமிடும் பால நடராஜர்கள்.
சென்ற வீடுதோறும் என் இரு செல்வங்களும் பாடின. “சாம கானப் ப்ரியே” பிரதான பாடல். அப்புறம் திருப்புகழில் ஒன்று. சில இடங்களில் “உம்பர் தரு....”வாக கணபதி வந்தார்.
நவராத்திரி போன்ற பண்டிகைகள் பக்தியோடு பாசத்தையும் மணக்கும் சந்தனமாய்க் கலந்து கொண்டு வருகிறது. அதையெடுத்துப் பூசிக்கொண்டு வீடு வந்து காய்ந்த சந்தனத்தில் மன்னையின் நினைவு காயாமல் துர்க்கா-லக்ஷ்மி-சரஸ்வதி படம் ஜோராக ஓடுகிறது. “அதோ.. மேல மொதோ படியில நிக்கிற லக்ஷ்மி... உங்கம்மா இத்துணூண்டு குழந்தையா இருக்கறச்சே வாங்கினது....இன்னமும் சாயம் போகாம...” பாட்டி லாப்டாப் திரையைக் கிழித்துக்கொண்டு பேச ஆரம்பிக்கிறாள். கேட்டுவிட்டு பிறகு இங்கு வருகிறேன். குட் நைட்.

சேவாக்கிற்கு சல்யூட்!

பொறந்தவனெல்லாம் ஒரு நாள் சாகத்தான் போறான் என்பது வீரமணியின் பேட்டிங் தத்துவம் என்றால் "போடாங்....” என்று கெட்ட வார்த்தையை நாக்கில் மடித்து என்னை மொத்த வருவீர்கள். இப்போ சொல்லப்போவது அதற்கு ஒத்துப்போகிறதா என்று பாருங்கள். பிட்ச்சில் விழுந்த பந்தெல்லாம் பீச்சாங்கை பக்கமே திருப்பி விளையாடுவான். மிட் விக்கெட், ஸ்கொயர் லெக், லாங் ஆன் என்று கால்பக்க பௌண்டரியே கண். விழுந்த பந்தெல்லாம் கால் திசைக்கு என்பதும் “பொறந்த...” என்கிற முதல் வரித் தத்துவமும் இப்போது முடிச்சுப்போட்டுக்கும்.
வீரமணி என்று ஒரு பேஸ்பால் ப்ளேயர். ஷாட்பூட் எறிவான். சில சமயம் ஜாவ்லின் த்ரோ. தெம்பு தேவைப்படும் எந்த விளையாட்டிற்கும் அவன் ஒரு கை. கட்டுமஸ்தான உடம்பிற்காக ஸ்கூல் கிரிக்கெட் டீமிலும் இருந்தான். பிட்ச்சில் எங்கே பந்து விழுந்தாலும் ஆன் ஸைடில் பறக்கும். ஆஃப் ஸைடிலிருக்கும் ஃபீல்டர்கள் அனைவரையும் தூக்கி ஆன்ஸைடில் போட்டாலும் அவர்கள் கவுட்டி வழியாக பௌண்டரிக்குத் துரத்தும் வித்தை தெரிந்தவன்.
சின்ன வயசில் நான் பார்த்த வீரமணி டேஷிங். அப்புறம் மால்கம் மார்ஷலை மெல்போர்ன் ஸ்டேடியத்துக்கு வெளியே சிக்ஸ் அடித்து நசுக்கிய க்ரிஷ் ஸ்ரீகாந்த் படா பேட்ஸ்மேன். மூக்கை உறிஞ்சிக்கொண்டு சூரிய நமஸ்காரத்தோடு பயபக்திப் பழம். வந்த புதுசில் இளரத்தம் பாய்ந்த சச்சின் அதிரடி ஆட்டக்காரர். ஆனால் ஆறும் நான்குமாய் ரொம்ப நாளைக்கு விளாசி விளையாடியவர் சேவாக்.
ஆட்டத்தின் முதல் பந்து, நாற்பத்தொன்பதில் இருக்கிறேன்.. ஒரு ரன்னில் அரை சதம், இன்னும் இரண்டு ரன்கள் எடுத்தால் செஞ்சுரி என்றெல்லாம் ஈனமானமில்லாம் கட்டை போட்டு விளையாடுவது சேவாக்கிற்குப் பிடிக்காத விஷயம். பந்திற்கு மரியாதை. நல்ல பந்து அடிவாங்காது. மற்றவையெல்லாம் அப்போதே கணக்கு தீர்க்கப்படும். இறங்கு. நொறுக்கு. இறங்கு..நொறுக்கு... இதுதான் சேவாக்கின் தாரக மந்திரம்.
சச்சின் இடது காலை முன் வைத்து பெண்டுலமாய் பேட்டை சுழற்றி நளினமாக ஸ்ட்ரெயிட் ட்ரைவ் விளையாடுவது கண்ணை நிறைக்கும். சேவாக் அப்படி கிடையாது. டேஷிங். டேர் டெவில். பௌன்ஸர் விழுந்தால் கோழையாய்க் குந்திக்க மாட்டார். வெளிநாட்டு மைதானமாக இருந்தால் கவர் பௌண்டரிக்கு வெளியே சட்டையில்லாமல் பெர்முடாஸ் போட்ட யாராவது காட்ச் பிடிப்பார்கள், இந்தியா என்றால், நம் நாட்டின் குளிர் சீதோஷ்ணத்திற்குத் தக்கவாறு கறுப்புக் கோட் போட்டுக்கொண்டு கூலிங் கிளாய் அணிந்து தொப்பியுடன் இருப்பவர் காட்ச் பிடித்து கை உயர்த்துவார்.
நமக்கு ஆசி வழங்குவதற்கு முன்னால் யானை துதிக்கையை பின்னால் தூக்குவது போல பேட்டை தன் தலைக்கு மேல் உபயோகித்து பந்தைக் கெந்தி விட்டு விக்கெட் கீப்பர் தலைக்கு மேலே தேர்ட் மேனில் சிக்ஸ் அடித்த சேவாக்கிற்கு அன்று யானை பலம். அசுர அடிக்கு நாற்புறமும் பந்து எல்லைக்கோட்டைக் கடந்து கேலரியில் வாசம் செய்தது. சேவாக்குக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி.
சேவாக்கிற்கு சல்யூட்!

ண்ணீ...

வடபழனி பஸ்ஸ்டாண்ட் அருகில் நம்ம வீடு வசந்தபவன் திருப்பத்திலேயே நந்து சாரின் பேச்சுக்குரல் என் காதுகளுக்கு மட்டும் கேட்க ஆரம்பித்தது. குரங்குகளைக் கூண்டில் அடைத்து வெந்நீர் பாய்ச்சுவது, தவளையின் ஒவ்வொரு கால்களாக வெட்டி குட்டையில் விடுவது, கௌ ஷிட்டை சாப்பிட்டு மர உச்சிக்குச் சென்ற சிறகொடிந்த பறவை, சமயத்துக்கு வேலை செய்யாது வெறுப்பேற்றும் சுலபமான வேலைகள் என்கிற அடிப்படை விதி கொண்ட மர்ஃபீஸ் லா என்று பல மானேஜ்மெண்ட் பாடக்கதைகளை எங்களுக்குப் புகட்டியவர் நந்து சார். இந்தியன் எக்ஸ்பிரஸில் தேநீர் நேரங்களை சுவை நேரமாக்கியவர்.
எங்கள் வீட்டில் இந்த வருஷம் கொலு இல்லை என்றவுடன் முதல் அழைப்பு ஸ்ரீமதி ஜெயந்தி நந்தகுமார் மேடத்திடமிருந்து வந்தது. வெத்திலை பாக்கு வாங்கிக்க இன்று சென்றோம். கலகலவென்று அரை மணிக்கு மேல் பேசிக்கொண்டிருந்தோம். அழகான கொலு. மானஸா இரண்டு திருப்புகழ் பாடினாள். வழக்கம் போல நந்து சாரின் காமெடி கலந்த பேச்சில் நாங்கள் சொக்கிப்போய் கிடந்தபோது கடிகார முட்கள் ஒன்றையொன்று நூறு மீட்டர் ஓட்டம் போல விரட்டிப் பிடித்தன.
”பொதுவாகவே கலர் வேறுபாடு தெரியாதவர்கள் ஆண்கள்” என்று தீபாவளி பட்டிமன்ற தலைப்பில் நந்து சார் பேசினார். ”எந்த கலர்?” என்ற பெண்களின் கோரஸான க்ராஸ் எக்ஸாமினேஷனில் ”புடவை.. ப்ளௌஸ்...சட்டை... பேண்ட்....மேட்ச்சிங் காண்ட்ராஸ்ட்டிங் கலர்ஸ்....” சாதுர்யமான பதில் ஆண்வர்க்கத்தினருக்கான திறமையான வக்காலத்து. பல சப்ஜெக்ட்டுகளில் நிறைய பேசியதில், குழந்தைகள் செய்யும் எதையும் மகோன்னதமாக்கும் தாய்தகப்பனின் மனநிலையை படம் பிடிக்கச் சொன்ன கதை ஒன்று சாம்பிளுக்கு இங்கே.
அது இங்கா குடித்துவிட்டு தரையில் தவழும் குட்டிக் குழந்தை. “ண்ணீ” மட்டும் தான் அதுக்குச் சொல்லத் தெரியும்.
“காக்கா எதுக்காக சுத்தித்து...”
“ண்ணீ...”
“ஓ.. தண்ணீக்காகவா.... பேஷ்.... எப்போ சுத்தித்து?”
“ண்ணீ....”
“ஓ.. இன்னிக்கா... வெரி குட்... வெரி குட்... அந்த பானைக்குள்ளே என்ன இருந்தது?”
“ண்ணீ....”
“ஓ.. தண்ணீ இருந்ததா... எவ்ளோ ப்ரில்லியண்ட்!!!”
இந்த ரீதியில் கதை முழுவதையும் நாமே அமைத்துக்கொண்டு குழந்தையைப் பாராட்டுகிறோம். இதில் “ண்ணீ...”தான் கதைக் கரு. நாமளே திரைக்கதை எழுதிக்கிட்டோம்...
ஸ்வீட், சுண்டலுடன் கிளம்புவதற்கு முன்னர் அவரது மொட்டை மாடியில் வெண்டைக்காய் விண்ணைப் பார்க்க தலைகுப்புற நின்றதைப் பார்த்து ஆனந்தப்பட்டோம். பிறைச்சந்திரன் பக்கத்தில் பத்தொன்பது மாடி கட்டிடங்களுக்கு மத்தியில் வெட்கத்தோடு எட்டிப்பார்த்தது. இருபுறமும் வானுயர்ந்த கட்டிடங்கள் எழும்பியதில் இவர்களது மொட்டை மாடியில் காற்று பிய்த்து உதறுகிறது. என்னைப் போல் அரைகுறை சொட்டையர்கள் அரை மணி அங்கே நின்றால் வலுவான தென்றலால் முழு மொட்டையர்கள் ஆகும் அபாயமிருக்கிறது. கயத்துக்கட்டில், ஸ்வாமி ஹரிதாஸ் கிரி இல்லையென்றால் உடையாளூர் கல்யாணராமன்... சரி... அப்புறம் கொஞ்ச நேரம் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர்வாள்... இன்னும் வயசாகவில்லையோனோ (எனக்கு)... எஸ்பிபி டூயட்ஸ்... இப்படி எதுனா ராத்திரி பூரா செவிக்குளிர கேட்க ஹேதுவான இடம்.
திரும்பும்போது அசோக்பில்லருக்கு முன்னால் ட்ராஃபிக் ஜாம். பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இன்ச் கூட நகரவில்லை. ஷேர் ஆட்டோ ட்ரைவர் புகாரி ஓரத்திலிருந்து நடந்து போய் மீடியனைத் தாண்டி அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தார். வண்டி இடுக்குகளில் மனையாளுடன் நுழைந்த இருசக்கரக்காரர் பொறியில் சிக்கிய எலி போல மாட்டிக்கொண்டு முன்னாலும் போக முடியாமல் பின்னாலும் எடுக்கமுடியாமல் அவஸ்தைப்பட்டார். “விட்ருங்க...” என்ற பெண்டாட்டி பேச்சை தப்பாமல் கேட்டார்.
“என்னண்ணே பிரச்சனை? ஆக்ஸிடெண்ட்டா?” என்று வேவு பார்த்துத் திரும்பிய ஆட்டோகாரரைக் கேட்டேன்.
“அதெல்லாமில்லீங்க... லாரிக்காரருக்கும் பஸ்காரருக்கும் சண்டை”
“என்ன சண்டை?”
“ஏதோ... லாரிக்காரரு பஸ்காரரை அடிச்சிட்டாராம்.... பஸ்காரரு வண்டி எடுக்கமாட்டேங்கிராரு”
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
என்னுடைய அந்தக் கடைசி கேள்வியில் டரியலாகி “போடா.. போக்கத்தவனே.. அப்புறம் ஏன் என்கிட்டே கேட்டே” என்கிற பார்வையால் என்னைக் குத்திக் குடைந்தார். க்ளைமாக்ஸில் உயில் எழுதாத அப்பா, உயிர் பிரியும் தருவாயில் மரணப்படுக்கையில் குடும்பத்தினர் சுற்றி நிற்க, பேசத் தவிப்பது போல அவஸ்தையில் ஏதோ பேச வந்தார்.
நான் ஸ்நேகமாகச் சிரித்துக்கொண்டிருக்கும் போதே முன்னால் வண்டிகள் நகர்ந்தன. பொறியில் சிக்கிய இருசக்ராதி விட்டு விடுதலையாகி விர்ர்ர்ரென்று பறந்தார். ஆட்டோகாரர் வண்டி எடுக்க ஓடினார். தப்பித்தேன். சிக்னலில் இகோஸ்போர்ட் ஒன்று ஓரத்தில் நின்றிருக்க அதைத்தாண்டி மாநகர பஸ் நின்றிருந்தது. நாலைந்து ஜீப்புகளில் போலீஸ் கூட்டம். லாரியைக் காணோம்.
”நான் உட்பட எல்லோரிடமும் கதை சொல்ல ஏதோ ஒன்று இருக்கிறது”

பாதாள பைரவி

நயன்தாரா மேல் கொண்ட ஒருதலைக் காதலால் தோல்வி, காலையில் ஸ்ட்ராங்காகவும் சூடாகவும் காஃபி கிடைக்கவில்லை என்று பொண்டாட்டியுடன் கோபித்துக்கொண்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள், பக்கத்துவீட்டுக்காரன் படகு காரில் சொகுசாப் போறானே என்ற வயற்றெரிச்சலில் தண்ணீர் லாரியில் தலையைக் கொடுத்து பிராணஹத்தி பண்ணிக்கொள்ள துடிப்பவர்களுக்கு என்று விதம்விதமானவர்களுக்குத் தோதாக சென்னையில் ஒரே இடம். உசுரை மாய்த்துக்கொள்வதற்கு உபாயம் தேடி அலையவேண்டாம், நகரின் முக்கியமான இடத்தில் அந்த கொலைக்களன் இருக்கிறது. அவ்விடத்திற்கு இப்போது ஜில்ஜில்லென்று ஏஸி போட்ட மெட்ரோ ரயிலே விட்டிருக்கிறார்கள்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் எதிரில் அந்த தீவுப் பள்ளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திருவிழாக்களில் மரணக்கிணறு ஓட்டுபவர்கள் ஒரு வாரம் கேம்ப் போட்டு காசு பார்க்கலாம். முப்போதும் அரசியலைச் சுவாசிக்கும் அம்போஜி “விஷால் அணியோ சரத் அணியோ யார் எலெக்சன்ல தோத்தாலும் ஓடி ஒளிச்சிக்கிறத்துக்கு ஒரு இடம் ரெடி... ” என்று கண்ணடித்துச் சொல்லிவிட்டு ”கே”யென இளித்தான்.
பள்ளம் நோண்டியவர் பாதாள லோகத்தில் பங்களா கட்ட கேட்டிருக்கிறார்கள் என்று காதில் வாங்கிக்கொண்டார் என்று நினைக்கிறேன். இரண்டு ஆப்பிரிக்க நாட்டு கஜேந்திரர்களுக்கு ஆதிமூலமே என்று கதறாவிட்டால் கூட மோட்சமளிக்குமிடம். திடீரென்று ஒரு நாள் உரிமையோடு நடுரோட்டில் கூடாரம் போட்டு சம்ப்ரமமாக உட்கார்ந்துகொண்டு தோண்டும் பணியை செவ்வனே ஆரம்பித்தார்கள். சிவபெருமானின் அடியைக் காண திருமால் வராஹமாகப் பூமியைக் குடைந்ததை விட அரை இன்ச்சாவது பெரிதான பள்ளமாக இருக்க வேண்டும் என்பது வின்னிங் டார்கெட். இன்னும் கொஞ்சம் தோண்டினால் பூமிப்பந்தில் ஓட்டை விழுந்து தெலுங்கு பட அதிரடி ஆக்ஷன் ஹீரோக்கள் அதைக் கழுத்தில் ருத்ராட்சக் கொட்டையாக மாட்டிக்கொண்டு சுந்தரத் தெலுங்கில் வில்லனை வாயாலேயே வறுத்து வாட்டியெடுத்து வீழ்த்துவார்கள்.
மழை பெய்தால் தண்ணீர் நிரம்பி ஒரு திடீர் நிச்சல் குளம் உருவாகும் என்று சிட்டி பையன்கள் சொப்பனம் காண்பார்கள். எனக்கு மன்னார்குடி ஐயனார் குட்டை ஞாபகம்தான் வந்தது. இரண்டு மாதங்களாக அந்த ராட்சஷ ஜேஸிபியும் அது தோண்டிய ராட்சஷ பள்ளமும் எதற்கும் தயாராய் இருக்கிறது.
இதோ ஐப்பசி பிறக்கப்போகிறது. ஐப்பசியில் அடைமழை என்பார்கள். குட்டை நிரம்பியவுடன் சொல்லியனுப்புகிறேன். அருவிக் குளியலுக்காகக் குற்றாலத்துக்குப் போவதற்குப் பதில் குட்டைக் குளியலுக்கு கோயம்பேடு வாருங்கள். மோட்சகதி கிடைக்கும்.
அம்போஜி குட்டையை எட்டிப் பார்த்துக்கொண்டே சொல்றான் “மாடு கன்னுகுட்டி குளிப்பாட்டனும்னு நினைச்சாக் கூட ஓட்டிவரச் சொல்லுங்க... குட்டை தாங்கும்....”
வெறுப்பு குறிப்பு: காரணம் எதுவாயினும் இரண்டு மூன்று மாதங்களாக முக்கிய சாலையில் குழி பறித்து விளையாடுவதை எப்போது நிறுத்துவார்கள்? க்ளட்ச் மிதித்து காலிரண்டும் தினமும் கடுக்கிறது.

கொ.கு.அ.கூ.வே‬

ஒரு பரம தரித்ரன் வீட்டுக்கு ஒருநாள் திருடன் வந்துட்டானாம். பாதம் தரையில பட்டும் படாமலும் மொதக்கட்டு இரண்டாம் கட்டைத்தாண்டி பதமா ரேழிக்குள்ள நுழைஞ்சுட்டான். அதான் தரித்ரன் வீடாச்சே.... சுத்தமா துடைச்சுக்கிடக்கு... ஒண்ணுமில்லே... வீட்டுக்கு உடமைக்காரி ரேழில படுத்துண்டிருக்கா... புருஷங்காரன் வெளியூர் போயிருக்கான்... அவளுக்கு திருடன் நுழைஞ்சது தெரிஞ்சுபோச்சு... வீட்ல ஒரு தம்படி கிடையாது... இப்படி வந்து மாட்டினுட்டானே திருடர் பிரகிருதின்னு..... அவனுக்காகப் பரிதாபப்பட்டாளாம்....
அவனும் கொல்லையோட வாசல் அலைஞ்சுப் பார்த்துப்பிட்டு... என்னடா இது ஒண்ணுமே தேரலை...விடியாமூஞ்சி வீட்டுக்குள்ள வந்து மாட்டினுட்டோமே... இவ்ளோ தூரம் வந்துட்டோம்... ஒண்ணுமேயில்லாம வீட்டுக்குப் போறது செய்யற தொழிலுக்கு இழுக்காச்சேன்னு...ரெண்டு மூணு ஜாமமா தயங்கித் தயங்கி வீட்டுக்குள்ளேயே சுத்தறான்...கால் ஓஞ்சுபோச்சு... ஏதும் ஆம்படலை.... கடைசியா சமையக்கட்டுல ஒரு ஓரமா ஈர உமி கிடந்ததை பார்த்துப்புட்டான்....சரி... வந்தத்தத்துக்கு உமியை அள்ளிண்டு போய்டுவோம்னு.. ஹால் மித்தத்துல நிலா பிரகாசமாத் தெரிஞ்சுதாம்.. அதனால அந்த வெளிச்சத்துல இடுப்புல கட்டிண்டிருந்த வேஷ்டியை அவுத்து கீழே விரிச்சுட்டு.. உமியை அள்ள உள்ள போனானாம்....
அவன் சமையக்கட்டுக்குப் போனபோது... ஹால்ல முழிச்சுண்டே படுத்துண்டு இருந்தவ... அந்த வேஷ்டியை சுருட்டிண்டு வாசல் ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்திண்டாளாம்... இடுப்புல வஸ்திரமில்லை... ரெண்டு கை நிறைய உமியை அள்ளிண்டு.... இன்னும் ரெண்டு கையில்லையே.. இந்த ஐஸ்வர்யத்தை அள்ளிண்டு போகன்னு....வந்து பார்க்கிறான்.. ஹால் தரையிலே விரிச்சிருந்த வேஷ்டியைக் காணலை... இது ஏதுடா வம்பாப் போச்சு... கௌபீனம் கூட இல்லாம வந்துட்டுமே...வேஷ்டியையும் காணலையே.. இப்ப என்னடா பண்றதுன்னு... இப்டியே வீதியிலே போனா ஊர்ல யாரெல்லாம் பயப்படுவாளோன்னு... வெளிறிப்போயி சுத்திமுத்தி தேடறான்...
அப்போ வாசல் ரூம்லேர்ந்து “ஐயோ.. திருடன்..திருடன்....”ன்னு ஜன்னல்ல நின்னுண்டு சத்தம் போட்டாளாம் அந்த வீட்டுக்காரி... கௌபீனம் இல்லைன்னாலும் பரவாயில்லைன்னு வாசல் தாண்டி அந்த ஜன்னல் கிட்டே ஓடி வந்து அந்த திருடன் ஆங்காரமா..... “அடியே.... நீ கொள்ளைக் குடுத்த அழகுக்கு கூப்பாடு வேறயோடி.....”ன்னு கேட்டுப்புட்டு அப்படியே ஓடிப்போயிட்டானாம்...
பி.கு: சே.அ.தீக்ஷிதர்வாள் பாகவத சப்தாகத்தில் சொன்ன ஜோக். லோக க்ஷேமார்த்தம் எழுதிப்பார்த்தேன். 
smile emoticon

Thursday, October 15, 2015

கணபதி முனி - பாகம் 34: வாது போர்

வாஸுதேவ சாஸ்திரி கிரஹத்தின் அருகே ஒரு அம்மாளும் அவர் மகனும் குடியிருந்தனர். அந்த ஸ்த்ரீ ஒரு ஹிந்து. விதவை. ஒரே மகனைத் தவிக்கவிட்டு திடீரென்று கிருஸ்துவ மதத்திற்குத் தாவினார். ஜாதி ஹிந்துக்கள் அந்தப் பையனையும் மதத்திலிருந்து விலக்கினர். நாயனாவைச் சந்தித்த பொழுது அந்தப் பையன் தன் நிலைமையைச் சொல்லி ஓவென்று கதறி அழுதான். நாயனா அவனைத் தேற்றினார். அதோடு நிறுத்தாமல் அவனுக்கு உபநயனம் செய்வித்தார். பின்னர் மந்திர ஜபம் உபாசித்து அவனது பாதையை மாற்றினார். ஜாதிமதக் கட்டுப்பாடுகள் கிடுக்கிப்பிடி போட்ட அந்தக் காலத்தில் ஊரே ஒதுக்கித் தள்ளிய ஒரு அனாதைப் பையனுக்கு புரட்சிகரமாக மறுவாழ்வு கொடுத்த தீரர் நாயனா.

1912 ஏப்ரல் மாதத்தின் நடுவில் நாயனாவும், விசாலாக்ஷியும் மஹாதேவரும் கோகர்ணம் வந்திறங்கினர். கோகர்ணத்திற்கு ஒரு புராணக் கதை உண்டு. சகரன் என்கிற மன்னாதி மன்னனின் புத்திரர்களால் கோகர்ணம் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. பின்னர் பரசுராமர் சமுத்திரராஜனை வடியும் படி கட்டளையிட்டார். கோகர்ணம் தண்ணீரிலிருந்து வெளியே வந்தது. பசுவின் காதுபோல (கோ + கர்ணம்) கடற்கரையிருக்குமிடத்தில் அமைந்துள்ள ஸ்தலம் கோகர்ணம்.
கோகர்ணக் கோயிலின் பிரதான கடவுளான மகாபலேஷ்வர் ஸ்கந்த பூர்வஜன் கணபதி பிரதிஷ்டை செய்த லிங்கம். சிறுவனாக வந்த கணேசன் கையில் இராவணன் கொடுத்த லிங்கம். கணபதிக்கும் விசாலாக்ஷியும் தவம் செய்யத் தோதாக ஒரு இடம் கிடைத்தது. கோயில் குருக்கள் தேஜோன்மயமான இரு தபஸ்விக்களைப் பார்த்துவிட்டு ஊரில் இருக்கும் வித்வத் நிரம்பிய பண்டிதர்களை அழைத்துக் காண்பித்தார்.
வேத வேதாந்தங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தெளிந்த நிறைய பண்டிதர்கள் கோகர்ணத்தில் வசித்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் ஹோஸமான் கணேச சாஸ்திரி என்பவர் இலவச வேதபாடசாலை ஒன்றை ஆரம்பித்து வேதசாஸ்திரங்களை வளர்த்தார். வித்யார்த்திகள் நிறைய பேர் வேதம் படித்தனர். கோகர்ண பண்டிதர்கள் பாரத தேசத்திலிருக்கும் ஏனைய பண்டிதர்களைக் காட்டிலும் வேத சாஸ்திரங்களில் ஒருபடி மேலானாவர்கள். அந்த கோஷ்டியும் பெரிது. வாசிஷ்ட கணபதி முனியைக் கண்டதும் கற்கும் ஆர்வத்தில் குதூகலம் அடைந்தார்கள். ஆனால் நாயனா தனது தவத்திற்கு இடையூறாக இருக்கும் என்று அவர்களை விட்டு ஒதுங்கினார்.
கணபதி சிரத்தையாய் தவத்திலிருக்கும் நாட்களில் ஒரு நாள் பாம்பேயிலிருந்து அனந்த சாஸ்திரி என்பவர் கோகர்ண வித்யா பீடத்திற்கு (வேத பாடசாலை) ஒரு லிகிதம் அனுப்பினார். ஒரு வாரத்திற்குள் கோகர்ணம் வந்து இறங்குவாராம். உபன்யாசங்கள் செய்வதற்கு ஏற்பாடாகவேண்டுமாம். அப்புறம் பண்டித கோஷ்டியிலிருந்து ஒருவர் புராண இலக்கியங்களில் அவருடன் தர்க்கவாதம் செய்யவேண்டும் என்கிற கடைசிக் குறிப்பு கோகர்ணவாசிகளுக்கு இடறியது.
கோகர்ண பண்டிதர்கள் அமைதி விரும்பிகள். நிறையக் கற்றுத் தேர்ந்தாலும் வாக்குவாதங்களில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் அனந்த சாஸ்திரி போட்டியாக அறிவித்ததால் யாரை அவர்கள் சார்பாக நியமிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் திரிகாலமும் ஜபதபங்களில் ஈடுபட்டு ஜொலித்துக்கொண்டிருந்த நாயனாவை பரிந்துரைத்தார்கள்.
“யாரந்த அனந்த சாஸ்திரி?”
“அவர் மஹா பண்டிதர். வாயைத் திறந்தாலே ஹாஸ்யம் ததும்பும். புராணம் மற்றும் சம்ஸ்க்ருத இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர்...”
நாயனாவின் ஒரு கேள்விக்கு மருண்டு போய் பத்து நிமிடங்களுக்கு நிறுத்தாமல் மூச்சு வாங்க பதிலுரைத்தார்கள்.
“எல்லாமே தெரியுமா?” நாயனா ஆச்சரியமாகக் கேட்டார்.
“அவரை ஜெயிக்க இந்த லோகத்தில் ஆளில்லை என்று மஹாராஷ்டிர பண்டிதர்கள் அலட்டிக்கொள்வார்கள். ஏகப்பட்ட இலக்கிய விசாரங்களில் பங்கு பெற்று பொன்னும் பொருளும் மலையெனக் குவித்தவர்...” அவரது பராக்கிரமங்களை அடுக்கிக்கொண்டே போனார்கள். நாயனா இதுவரை அனந்த சாஸ்திரியைப் பற்றிக் கேள்விப்பட்டது கிடையாது.
“சரி.. போட்டி நடைபெறும் நாளன்று சந்திக்கலாம். அதுவரை என்னை தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள். நன்றி”. எழுந்தார். கும்பிட்டார். விடுவிடுவென்று தவமியற்றக் கிளம்பிச் சென்றார்.
*
அனந்த சாஸ்திரியாருடன் விவாதம் நடக்கும் நாள். பண்டிதக் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு வித்யா பீடத்தின் வாசலில் நின்றது. நாயனா ஒரு வாரமாக கடுந்தவத்தில் ஈடுபட்டு தேகபலம் குன்றி ஆன்மபலம் பெருக்கி வந்திருந்தார். பார்வைக்கு சோர்வாக இருந்தாலும் பண்டிதத்தில் குறைவில்லாதவர் என்று அனந்த சாஸ்திரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வழக்கமாக அனந்த சாஸ்திரிதான் விவாதத்தை ஆரம்பிப்பார். சைவமோ, வைஷ்ணவமோ அல்லது அத்வைதமோ ஒன்றை தேர்வு செய்து அமர்க்களமாகப் பேசுவார். அவர் பேசி முடித்தவுடன் எதிராளி மறுத்துப் பேச வேண்டும். மீண்டும் அவரது தரப்பு வாதங்களை முன்வைப்பார். எதிராளி மறுக்க.. இப்படியே விவாதம் வலுத்து நிறைவாகத் திறமைசாலிக்கு ஜெயம் கிட்டும். இம்முறையும் அனந்த சாஸ்திரியே ஆரம்பித்தார்.
அலட்சியமாக ”சிவனுக்கு நிகர் தெய்வமில்லை!... ம்.. ஆரம்பியும்... உமது எதிர் வாதத்தை....” என்று சொல்லிவிட்டுக் கனைத்துக்கொண்டார். கச்சேரி ஆரம்பமானது. கண்களில் ஆர்வம் கொப்பளிக்க அனைவரும் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்தனர். நாயனா திருமாலே சர்வேஸ்வரன் என்று பேசப்போகிறார் என்று காத்திருந்தனர்.
நாயனா வேத மார்க்கம் செல்பவர். அவருக்கு ஆதியந்தம் எல்லாமே வேதம்தான். அதுவே பரம ஸ்ரேயஸானது.
“எந்த பண்டிதருமே வேதத்தை பிரமாணமாகக் கொள்ள வேண்டும். புராணங்களில் வரும் பல செய்திகள் முன்னுக்குப் பின் தொகுக்கப்பட்டிருக்கிறது. அவைகளை ஆதாரமாகக் கொண்டு விவாதிப்பது தீர்க்கமான முடிவுக்கு வழிவகுக்காது.” இந்த இடத்தில் ஒரு நிமிடம் நிறுத்தினார் நாயனா.
அனந்த சாஸ்திரிக்கு நாயனா என்ன பதில் சொல்லப்போகிறார் என்று புரியவில்லை. கூட்டம் ஆர்வத்தில் அலைமோதியது. வித்யாபீடத்தில் ”ஆஹா...சரஸ்வதியே கணபதி ரூபத்தில் இங்கே எழுந்தருளியிருக்கிறாள்” என்று வேதவித்துக்கள் சிலர் காதோடு காதாக பேசிக்கொண்டார்கள். ஒரு மிடறு தீர்த்தம் அருந்தினார் அனந்த சாஸ்திரி. அவை காத்திருந்தது.
“வேதங்களின் பிரகாரம் இந்திரனே பரமாத்மா! அவனே முழுமுதற் கடவுள்” என்று ஒரு போடுபோட்டார். ஜலம் அருந்திக்கொண்டிருந்த அனந்தசாஸ்திரிக்கு புரைஏறியது. பண்டிதர்கள் கூட்டம் சலசலத்தது. இதற்கு நாயனா கூறப்போகும் காரணம் என்ன என்று அனைவரும் காதைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தார்கள். நாயனா தொடர்ந்தார்...
“தேவர்களின் இந்திரனான தேவந்திரனின் இரு அம்சங்களாகவே சிவனும் விஷ்ணுவும் வேதங்களில் பாடப்பட்டிருக்கிறார்கள். அதன்படி சைவமும் வைஷ்ணவமும் முக்தி அடைய உதவும் சாதனமாக அதைத் தேடுவோர்க்கு சொல்லப்பட்டிருக்கிறது” என்று சொல்லிவிட்டு அனந்த சாஸ்திரியின் மறுமொழிக்குக் காத்திருந்தார் கணபதி.
அங்கே நிசப்தம் நிலவியது. மிதமான காற்று வீசியது. அனந்த சாஸ்திரிக்கு நாயனாவின் இந்த பதில் முற்றிலும் வித்தியாசமானக் கோணத்தில் அனுகப்பட்டிருக்கிறது என்பதில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். எப்படியும் இதே ரீதியில் இந்த விவாதம் சென்றால் தன்னால் ஜெயிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டார். எழுந்து நின்றார். உத்தரீயத்தை இடுப்பில் சுற்றிக்கொண்டார். பவ்யமாகக் கை கூப்பினார்.
“ஸ்வாமி. என்னை மன்னியுங்கள். உங்களது புராண பாண்டித்தியமும் வேத வித்வத்தும் என்னிடம் லவலேசமும் இல்லை. நான் தோற்றுவிட்டதை மனமார ஒப்புக்கொள்கிறேன். என்னை நீங்கள் உங்கள் சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கவேண்டும்”. நமஸ்கரித்தார்.
பண்டிதர்கள் ”கணபதிக்கு ஜே! நாயனாவுக்கு ஜே!!” என்று ஜெய கோஷங்கள் எழுப்பினார்கள். கோகர்ணர்கள் அனைவரும் தாங்களே வாதிட்டு ஜெயித்துவிட்டது போன்று கொண்டாடினார்கள். இறுமாப்புடன் திரிந்த அனந்த சாஸ்திரிக்கு பாடமும் புகட்டிய நாயனாவைப் போற்றினார்கள். அவரது பதிலில் பொதிந்திருந்த பொருளும் உண்மையும் வேதத்தின் மகிமையையும் அனாவசியமான மத பேதங்களைக் களைந்ததையும் எண்ணியெண்ணி வியந்தார்கள். அவரது பெருமையைப் பேசிக்கொண்டே வீட்டிற்கு கலைந்தார்கள்.
*
மஹா வித்யா பீடத்தில் நாயனா பெற்ற பிரசித்தியும் புகழும் பாராட்டும் அவரது தவத்திற்குத் தடையாய் அமைந்தது. ஸ்ரீமான்.வெங்கட்ராமன் வீட்டில் அவருக்கு தங்க ஏற்பாடாகி அவரிடம் அறிவுரை பெற அவ்வீட்டில் கூட்டம் அம்மியது. ஜ்யோதிஷம் பற்றி அவரிடம் கேட்டபோது அவர் வேதத்தின் கண்ணாகிய ஜ்யோதிஷத்தின் முக்கிய அங்கங்களை வகைப்படுத்தி பொருளுரைத்தார். அதை “லகு சம்ஹிதை” என்று தொகுத்துக்கொண்டார்கள்.
எந்நேரமும் அவரைப் பார்க்க மக்கள் குவிந்தார்கள். ஓய்வொழிச்சலே இல்லாமல் அனைவரது சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தார். நிறைய கலந்துரையாடல் செய்தார். ஒரு நாள் வேதங்களைப் பற்றி பேச்சு எழுந்தது. அப்போது ரிக் வேதத்தின் சில பாகங்கள் தனக்கு அறிமுகமாகவில்லை என்று தெரிந்துகொண்டார். உடனே ரிக்வேதிகளிடம் சென்று அதையும் கற்றுக்கொண்டார்.
அப்படிக் கற்றுக்கொண்ட பாகங்கள் ஸ்ரீமஹாபாரத நாயகனான ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றியது என்றவுடன் அவருக்கு இன்னும் ஆர்வம் கொப்பளித்தது. மஹாபாரத நாயகர்கள் பலரின் அஸ்திர வித்தைக்கு ஆதாரமாக இருப்பது ரிக்வேதத்தின் இந்த அங்கங்கள் என்று படித்துத் தீர்மானித்துக்கொண்டார். அதில் மூழ்க முடிவுசெய்தார். வேதத்தில் இதுபோன்று புதைந்திருக்கும் பொக்கிஷங்களை அங்கிருந்த வேத பண்டிதர்களிடம் கற்றுத் தெளிந்தார். அவரது வித்தை கற்கும் வேகத்தையும் ஆர்வத்தையும் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
வேதவரிகளின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள மொத்த சூக்தத்தையும் எழுதி வைத்துக்கொண்டு அதில் உள்ளே இறங்கவேண்டும். ஒட்டுமொத்தமாக மனதை ஒருமுகப்படுத்தி யோகேஸ்வரனாய் அவ்வரிகளில் நிறுத்தவேண்டும். சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்படும் சில சூக்தங்கள் மனுஷ்யர்களுக்கு ஆன்மிக ஒளியேற்ற வல்லவை. ஆகையால் ஒவ்வொரு சூக்தமாக எடுத்து எஞ்சியிருக்கும் சூக்தங்களோடு வைத்துப் பார்த்து ஆராய வேண்டும். அங்கிருந்த பண்டித சிரோன்மணிகளுக்கு மொத்த சூக்தத்தையும் மனதில் நிறுத்தி வேறு சூக்தஙக்ளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் திறமையில்லாததால் வாஷிஷ்ட கணபதி முனியே அதற்கு தகுதியானவர் என்று நிச்சயமாக நம்பினார்கள். நாயனாவினாலல்லவா சூட்சுமமாக சஞ்சரித்து வேதத்தின் ஹ்ருதயத்தை அடைய முடியும்!!
மேலை நாடுகளின் சாமியார்களுக்கு வேதத்தின் உட்பொருளும் கருப்பொருளும் மறைபொருளும் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களது மொழிபெயர்ப்பு வேதத்தின் புனிதத்தன்மையைக் கெடுத்தது. பாரத தேசத்திலிருந்து சிலரும் இந்த ஆங்கிலமாக்குதலில் ஈடுபட்டார்கள். வரிகளை அவரவர்களின் விருப்பத்திற்கும் புரிதலுக்கும் ஏற்ப வளைத்து கண்டபடி எழுதினார்கள். நட்சத்திர மண்டலத்தினைப் பற்றிய ஆராய்ச்சியில் எழுதிய நூல் என்றும், பூவுலக நன்மைகளைப் பெறும் பொருட்டும் ஆபத்துக்காலத்தில் ரட்சிக்கும் வரிகளாகவும் வேதத்தை வகைப்படுத்தினர்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் சதுர் வேதத்திற்கும் உயிர் ஹ்ருதயத்தில் இருக்கிறது. வேதாராய்ச்சி தவம் போன்றது. “நான் யார்” என்னும் ஆன்மத் தேடல் போன்றது. இந்த ஆராய்ச்சியைத் தொடரும் நிலையில் இப்போதிருக்கும் இடம் அவருக்கு அமையவில்லை. கோகர்ணத்திற்கு வெளியே ஜாகையை மாற்றினார். கஜானனா பட் என்பவர் நாயனாவிற்கு தனியாக வீடு ஒன்றை ஏற்பாடு செய்ய ஒப்புக்கொண்டார். விசாலாக்ஷியும் தவம் புரிய வற்புறுத்தினார்.
நாயனாவுக்கு கஜானனா பட் தன்னுடைய பூர்வ ஜென்மத்திலிருந்து பழக்கம் என்று ஏதோ உள்ளுணர்வுக்கு தட்டியது. கஜானனாவை சிஷ்யராக சேர்த்துக்கொண்டார். அன்றிலிருந்து கஜானனா அவருடைய கோத்திரப் பெயர் கொண்டு “தேவவிரதா” என்றழைக்கப்பட்டார்.
ஹோஸமான் கணேஷ் சாஸ்திரியின் மகன் தேவவிரதா. அவர்தான் கோகர்ணத்திலிருக்கும் மஹா வித்யா பீடத்தின் ஸ்தாபகர். தெய்வரதா ரிக். யஜுர், ஸாம வேதங்களில் விற்பன்னர். நாயனாவுடன் அவருக்கு ஏற்பட்ட பழக்கத்திற்குப் பின்னர் அவரை மஹா வித்யா பீடத்தின் தலைமையேற்கச் செய்தார்கள்.
தேவவிரதாவுக்குக் கணபதியின் வழிகாட்டுதல் வேத பாடங்களிலும் ஆன்மிகப் பயிற்சிக்கும் ஆதாராமாய் அமைந்தது. குருவிற்கு பகல் பொழுது முழுவதும் தொண்டு செய்தார். கணபதி போன்ற குரு அமைந்ததால் வேதங்களைப் பூரணமாக கற்றுத்தெளியும் பெரும் பேறு பெற்றார்.
அந்த வேத பாடசாலையின் பாடத்திட்டங்கள் நாயனாவால் சரிபார்க்கப்பட்டு மீண்டும் வகுப்பட்டது. வகைப்படுத்தப்பட்ட பாடங்களில்....

கணபதி முனி - பாகம் 33: தத்வ கண்ட சதகம்

சென்னையில் நாயனாவைச் சதா சர்வகாலமும் மொய்த்தார்கள். தினமும் பொழுது விடிந்தால் நாயனா வீட்டு வாசலில் ஒரு கூட்டம்.

“ஐயா... எனக்கு உங்களது அறிவுரை தேவை...”
“ஸ்வாமி... ஒரே குழப்பம்.. தெளிவு உங்கள் கையில்... தயவு செய்து....”,
“காளிதாஸனின் குமார சம்பவத்தில்....”
இப்படியெல்லாம் பல்வேறு தேவைகளுக்காக அவரைச் சந்தித்தனர். ஸ்ரீரமணரின் போதனைகளிலிருந்து அதன் ரசத்தை எடுத்துப் பிழிந்து வந்தவர்களுக்கு வாரி வாரி வள்ளலாக வழங்கினார். குழப்பமும் பலவீனமாகவும் வந்தவர்கள் புதுத் தெம்புடன் திரும்பினர்.
இப்படி நாட்கள் பறந்து கொண்டிருந்தபோது, விசாலாக்ஷிக்கு காலடி சென்று அத்வைத ஸ்தாபகரான ஸ்ரீசங்கரரின் ஜென்ம பூமியைத் தரிசித்து வர ஆவல் எழுந்தது. தர்மபத்னியின் விருப்பத்திற்கு நாயனாவும் இசைந்தார்.
இருவரும் காலடிக்கு புறப்படுவதற்கு முன்னர் நாயனாவின் சிஷ்யர்களில் சிலர் விசாலாக்ஷி அம்மையாருக்கு ஜிமிக்கி, பட்டுப் புடவை போன்றவற்றைப் பரிசளித்தனர்.
“எனக்கு ஏனம்மா இதெல்லாம்?” என்று விசாலாக்ஷி மறுத்தார்.
“நீங்க இதெல்லாம் பூட்டிக் கொள்ள வேண்டும்...” என்று அடம் பிடித்தனர். அரைமனதாக அவர்கள் அன்போடு அளித்த பரிசுகளை அணிந்து காலடிக்கு நாயனாவுடன் புறப்பட்டார்.
காலடி. ஸ்ரீசங்கரர் அவதரித்த பூமி. மனமெல்லாம் ஒருவிதமான சந்தோஷத்துடன் நாயனாவும் விசாலாக்ஷியம்மாவும் தம்பதி சமேதராக வீதிகளில் நடந்து வருகின்றனர். போவோர் வருவோரெல்லாம் இவர்கள் இருவரையும் வினோதமாகத் திரும்பித் திரும்பி பார்த்துவிட்டுச் சென்றனர். நாயனாவுக்கு இது புதிராக இருந்தது. “ஏன் இவர்கள் நம்மை இப்படி பார்க்கிறார்கள்? நம்மிடம் என்ன வித்தியாசம்?” என்று விசாலாக்ஷியும் கணபதியும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு புருவம் சுருக்கினார்கள்.
“ஆமாம்.. இவள்.. அவளைப் போலவே இருக்காளே...” என்று ஒரு நடுத்தர வயது அம்மணி பக்கத்தில் தண்ணீர்க் குடம் தூக்கிப் போனவளிடம் சொன்னது விசாலாக்ஷியின் காதுகளுக்கே எட்டியது. இன்னும் இரண்டு பேர் இவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே சாலையோரத்தில் கிடந்த கல் இடறி தடுமாறினார்கள். விசாலாக்ஷி ”என்ன இது?” என்பதாகக் கணபதியைப் பார்த்தார். அவர் மௌனமாக மடத்தை நோக்கி நடந்தார்.
மடத்தின் ஸ்ரீகார்யம் நாயனாவுக்கு தகுந்த மரியாதையோடு உள்ளே அழைத்துச்சென்றார். நாயனாவுக்கும் விசாலாக்ஷிக்கும் தங்கி தவம் புரிவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். மடத்தின் தலைமை கணபதியிடம்...
“ஸ்வாமி.. இங்கு நடைபெறும் ஆன்மிக விவாதங்களில் நீங்களும் கலந்து கொள்ளலாம்.. அப்படியில்லையெனில் தத்துவ சாரங்களை உபன்யசிக்கலாம்... தங்களது சித்தம்.... புண்ணியம் செய்தவர்கள் இதைக் கேட்டு பயனடைவார்கள்...” என்று விஞ்ஞாபித்தார்.

நாயனா பகவான் ஸ்ரீரமணரின் ”நான் யார்?” என்கிற ஆத்ம தேடுதல் தத்துவங்களையும் அவரது போதனைகளையும் அங்கே சொற்பொழிவாற்றினார். அதில் லயித்துப் பலர் ஸ்ரீரமணரின் சீடர்களாக சித்தமாயினர். ஸ்ரீமடத்தின் நிர்வாகிகள் அகம் மகிழ்ந்தனர். பல நூற்றாண்டுக்களுக்குப் பிறகு ஸ்ரீசங்கரர் பிறந்த மண்ணில் அதே போல ஒருவரைக் கண்டும் கேட்டும் மகிழ்வதாக பக்தர்கள் பூரிப்படைந்தார்கள்.
இப்படி உபன்யாசங்கள் நடந்துகொண்டிருக்கும் போது நேயர்களோடு உட்கார்ந்திருந்த விசாலாக்ஷியை ஒரு ஸ்த்ரீ தயங்கித் தயங்கி நெருங்கினாள்.
”அம்மா.. என்னை மன்னித்துவிடுங்கள்...” என்று கைகளைப் பிடித்துக்கொண்டு விசும்பினாள். விசாலாக்ஷிக்கு உடனே அடையாளம் தெரியாவிட்டாலும் பின்னர் காலடியில் கால் வைத்தவுடன் தன்னைப் பார்த்தவள் என்று சுதாரித்துக்கொண்டார். காலடியில் இறங்கிய அன்று “இவ.. அவளைப் போலவே இருக்காளே..” என்று சொன்ன அதே அம்மணிதான் இவள்.
“நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்?” என்று சொற்பொழிவு கேட்பவர்களுக்கு இடைஞ்சலில்லாமல் சன்னமானக் குரலில் கேட்டார் விசாலாக்ஷி.
”நீங்கள் எங்கள் ஊருக்கு வருவதற்கு முன்னால் நாங்கள் ஒரு விஷயம் அரசல்புரசலாகக் கேள்விப்பட்டோம்... அந்த செய்திக்கும் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாக எண்ணி உங்களை சந்தேகித்தோம்... ஆகவே....” என்று இழுத்தாள்.
“என்னைப் பற்றி என்ன கேள்விப்பட்டீர்கள்? என்ன சங்கதி?” என்று விசாரித்தார் விசாலாக்ஷி.
“ஒரு செல்வச்செழிப்பான பிராம்மண சீமாட்டி ஒருத்தி எவனோ ஒருவனுடன் ஓடிவிட்டதாகவும்.. அவள் அவனோடு ஊர் ஊராக யாத்திரை கிளம்பி வருவதாகவும் பேசிக்கொண்டார்கள். நீங்கள் தான் அவள் என்றும் எண்ணிக்கொண்டோம்..”
எவ்வளவு முறை வேண்டாம் என்றாலும் நாயனாவின் பக்தர்கள் வற்புறுத்தி தனக்கு அலங்காரம் செய்துவிட்டது எப்படிப்பட்ட வில்லங்கத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறது என்று வருத்தப்பட்டார் விசாலாக்ஷி. அவருக்கு அதற்கு மேல் அவ்விடத்தில் இருக்க பிடிக்கவில்லை. அன்றைய உபன்யாசம் முடிந்தவுடன் நாயனாவிடம்...
“நாம் வேறு எந்த புண்ணிய க்ஷேத்திரத்திற்குத் தவமியற்றச் செல்லலாமா?”
“ஏன்?”
விசாலாக்ஷி முழுக்கதையையும் சொன்னார்.
“சரி.. நாம் கோகர்ணம் செல்வோம்...” என்று காலடியிலிருந்து விடைபெற்றார்.
காலடியிலிருந்து புறப்பட்ட நாயனாவும் விசாலாக்ஷியும் கோகர்ணம் செல்லும் வழியில் ஸ்ரீகிருஷ்ணர் அனுக்கிரஹிக்கும் உடுப்பியை அடைந்தார்கள். நாயனாவின் பிரதான சிஷ்யர்களில் ஒருவரான வாஸுதேவ சாஸ்திரியின் சொந்த ஊர். அவரின் இல்லத்தை அடைந்தார்கள்... ஆனால் அவரோ சென்னைக்கு சென்றிருந்தார். நிச்சயம் அங்கே தங்கவேண்டும் என்று அவரின் தர்மபத்னி விசாலாக்ஷியின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினார்.
நாயனா அருகில் கடற்கரையோரமிருக்கும் வடபந்தேஸ்வரா க்ஷேத்திரத்திற்குச் சென்றார். அது பலராமர் திருக்கோயில். ஸ்ரீமத்வாச்சார்யாருக்கு ஸ்ரீகிருஷ்ணர் காட்சி கொடுத்த கடற்கரை. இந்த ஆலயமும் அதன் இயற்கை எழில் கொஞ்சும் சுற்று வட்டாரமும் தவம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று கணபதி தீர்மானித்தார்.
உடுப்பியில் பண்டிதர்கள் அதிகம். நாயனாவின் வருகை தெரிந்தால் அவரை சம்ஸ்க்ருத இலக்கியம், தத்துவ உபதேசங்கள், ஆன்மிக சொற்பொழிவுகள் என்று நிர்பந்திப்பார்கள். தீவிரமான இறைத் தேடலுக்கும் தவம் செய்வதற்கும் இதெல்லாம் தடைகற்கள். ஆகையால் அவர் வடபந்தேஸ்வரத்துக்கு விரைந்தார். அங்கு ஊருக்கு வெளியே தொந்தரவில்லாத, ஆட்கள் நடமாட்டமில்லாத சில குன்றுகளுக்கு மத்தியில் தவமியற்ற முடிவு செய்தார்.
பகலெல்லாம் கடும் தவமியற்றுவார். இரவு கிளம்பி ஊருக்குள் வருவார். வீதியில் பிக்ஷையெடுத்து சாப்பிட்டுவிட்டு கிடைக்கும் திண்ணையில் படுத்துத் தூங்குவார். மீண்டும் பொழுது புலர்வதற்குள் அதிகாலையிலேயே யார் கண்ணிலும் படாமல் வெளியேறி குன்றுகளுக்கு இடையில் சென்றமர்ந்து தவம் செய்வார். பதினைந்து நாட்கள் இப்படிக் கடந்தபின்... உண்பதற்கும் தூங்குவதற்கும் ஊருக்குள் செல்லும் பழக்கத்தையும் கைவிட்டார்... இரவுகளிலும் முழுவதும் அயராமல் தவம் புரிந்தார்... இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஊருக்குள் செல்வார். நாட்கள் செல்லச் செல்ல எலும்பும் சதையும் நரம்புமாய் இருக்கும் புறவுடம்பை உதறி ஆன்ம ஒளி பெருகிய அகத்துக்குள் மூழ்கிக் கரைந்துபோனார். பசி தூக்கம் மறந்தார். இருப்பிடம் மறந்தார். வெளியுலகம் மறந்தார். பஞ்ச பூதங்களை மறந்தார். வெயில் நிழல் மறந்தார். உற்றார் உறவினர் என்று எல்லோரையும் மறந்து “நான் யார்?”ரில் மூழ்கி உள்ளே வெகுதூரம் சென்று... வெளியில் வரவும் மறந்தார்.
ஒரு வாரம் கண் திறக்காமல் ஆழ்ந்த தியானத்துடன் கூடிய தவத்தில் புதைந்தார். அந்தப் பக்கமாக சென்ற ஒருவர் “இதுவல்லவோ தவம்! இவரல்லவோ மஹா தபஸ்வி!!” என்று அவர் வெகுநாட்களாக தொடர் தவத்தில் இருப்பதைப் புரிந்துகொண்டார். எப்போது குளித்தாரோ எப்போது சாப்பிட்டாரோ என்ற கவலையில் கணபதியின் தவத்தைக் கலைக்காமல் அவர் கண் திறக்கும் வரையில் அருகிலேயே அசையாமல் சிலையாய் நின்றிருந்தார்.
வெகுநேரம் கழித்துக் கணபதிக்குச் சமாதி நிலையிலிருந்து திடுமென விழிப்பு வந்தது. அவரைக் கைத்தாங்கலாக மெதுவாக அருகிலிருந்த சுனைக்குக் கூட்டி வந்தார். நீர் பருக வைத்தார். பின்னர் அருகிலிருக்கும் மடத்திற்கு ஓடினார். அங்கே குன்றுகளுக்கிடையில் தவம் இயற்றும் தபஸ்வியைப் பற்றி அந்த மடத்தின் தலைமையிடம் தெரிவித்தார்.
சாத்துக்குடி பழச்சாறும் பத்தாறு வேஷ்டியுமாக கணபதியிருக்குமிடத்திற்கு ஓடிவந்தார் அந்த மடத்தின் தலைமை அதிகாரி. நாயனாவிற்கு திருப்தியேற்படும் வரை பழரசத்தைப் பருகக் கொடுத்தார். பின்னர் விசாலாக்ஷி அம்மையாருக்கு கணபதியைப் பற்றிச் செய்தி அனுப்பினார்.
இப்போது கணபதியின் வருகை எல்லோர் காதுகளுக்கும் எட்டியது. சம்ஸ்க்ருத பண்டிதர்கள் மாநாடு போல ஒன்று கூடினார்கள். நாயனாவைப் புகழ்ந்து ஸ்தோத்திரம் பாடினார்கள். இந்து தர்மத்தை பற்றி சொற்பொழிவாற்ற வேண்டி நின்றார்கள். அவர்களின் விருப்பத்திற்கு இணங்க ”தத்வ கண்ட சதகம்” என்று ஒரு மணி நேரத்தில் நூறு ஸ்லோகங்களைப் பாடினார்.
வடபந்தேஸ்வரம் கோயிலின் பிரதானக் கடவுளை உபாசித்து வழிபட்டார். மானுட சேவையிலோ, ஆன்மிக தவத்தினாலோ அல்லது அந்த வித்தை கற்கும் முயற்சியில் அடையும் ஞானத்தாலோ நாம் எல்லாம் வல்ல பரம்பொருளை அடையலாம் என்று அந்த பண்டித குழாமிற்கு அருளினார்.
இது நடந்து சில மாதங்களுக்குப் பின்னர் பகவான் ஸ்ரீரமணரிடம் இதைப் பற்றி நாயனா அகஸ்மாத்தாகச் சொன்னபோது ”தத்வ கண்ட சதகம்” என்ற அந்த நூறு ஸ்லோகங்களையும் சிரத்தையுடன் தனியாக ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டார் ஸ்ரீரமணர்.
கோகர்ணம் செல்வதற்கு முன்னர் பத்து நாட்கள் வாஸுதேவ சாஸ்திரியின் வீட்டில் தங்கினார். அப்போது ஒரு துயரச் சம்பவம் நடந்தது... அது...

தேவதானம்


”இன்னிக்கி புரட்டாசி சனிக்கிழமை... பெருமாள் கோயில் எங்கியாவது போலாமா?”
“இங்க... சென்னைக்குப் பக்கத்துல ஒரு ரங்கநாதர் இருக்காராம்... ”
”அதென்ன... ரியல் எஸ்டேட் அட்வர்டைஸ்மெண்ட் மாதிரி.. சென்னைக்குப் பக்கத்துல....”
”ச்சே... எதையெடுத்தாலும் நக்கல்.. வட திருவரங்கம்னு பேராம்.... பேங்குக்கு வரும் மாமா ஒருத்தர் சொன்னார்..”
“எங்க இருக்கு?”
“மீஞ்சூர் பக்கத்துல...ஆயிரம் வருஷம் பழமையான கோயிலாம்....”
கூகிள் மேப்பை பார்த்தேன். வெற்றிலையில் மை போட்டது போல அந்த இடம் தேவதானம் என்று காட்டியது. உடனே கிளம்பியாச்சு. பெருமாள் தரிசனத்திற்குப் போகிறோம் என்றவுடன் ஆழ்வார்ப்பேட்டை ஸ்ரீநிவாசப் பெருமாள் ஞாபகம் வந்தார்.
”போலாமா?” என்று கேட்பதற்கு முன்னர் “ம்.. ரெடி போகலாம்..” என்றார் வல்லபா சமேத வீகேயெஸ்.
மீஞ்சூர் என்பது சென்னையோடு ஒட்டி உறவாடும் தூரத்தில் இருக்கிறது என்று யாரோ திக்குத் தெரியாத மாலுமி உங்களிடமும் சொல்லியிருக்கக்கூடும். “இதோ.. இங்கதான்... பாரீஸ் தாண்டினப்புறம்... அப்புறம்.. அப்படியே திருவொற்றியூர்.. அப்படியே எண்ணூர்....அப்புறம்.... அப்படியே மணலி.. அப்படியே....” என்று வாயால் வடைசுடுவதைப் போல ”அப்படியே..” ரோடு போடுவது மிகச் சுலபம்.
பாரீஸ் தாண்டியவுடன் பீச் ரோடில் நிற்கும் லாரிகளைப் பார்த்தாலே சேப்பாயிக்கு உதறல் எடுத்துச் சக்கரங்கள் பின்னிக் கொள்ளும். எங்கள் தெரு நீளத்துக்கு ஊர்ந்து செல்லும் லாரிகள் மரவட்டை போல இடதும் வலதும் தலையைத் திருப்பும் போது ஐந்து நிமிடங்கள் ரோட்டிலிருந்து இறங்கி நிறுத்தி டீயும் வடையு சாப்பிட்டுதான் கிளம்பவேண்டும். நூற்றியெட்டுக் கால் லாரியின் ட்ரைவர் இந்த பூமிப்பந்தையே எதிர் திசையில் திருப்ப எத்தனிப்பது போல ஸ்டியரிங் ராட் ஒடிய ஒடிப்பார். லாரி ஓட்டுவது எப்படி? என்பதற்கான பாடாந்திரங்கள் கிடைக்குமிடம்.
கூகிள் மேப்ஸில் தேவதானத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு ஓட்டினாலும் சரியாக தப்பாக ஒரு இடத்தில் திரும்பி எண்ணூர் கடைத்தெருவிற்குள் விட்டு லேலண்ட் ஃபாக்டரிகளின் கேட் 4, கேட் 7 என்று பல கேட்களைப் பார்த்துக்கொண்டே சென்றோம். தொன்னூறு சதவிகித ரோடுகள் வழவழவென்று மொசைக் போட்டது போல இருப்பது தமிழகத்தில் வரம்.
மீஞ்சூரில் ரயில்வே கேட் தாண்டி போய் எட்டு கி.மீ உள்ளே சிங்கிள் பெட் ரோடில் செல்லவேண்டும். நிறைய ஆட்டோக்கள் பக்தர்களை பிதுக்கிக்கொண்டு ட்ரிப் அடிக்கிறது. விரைவுச் செல்வம் பார்க்க விரும்புவோர் நிலமெல்லாம் எல்லைக் கல் நட்டு ஃப்ளாட் போட்டும், மானுட சமூகத்திற்கு தொண்டாற்ற உழைப்பவர்கள் உழவுத் தொழிலும் செய்கிறார்கள். ரோடோர பெரிய அரசமரமும் முள்வேலிக்குள் இருக்கும் குடிசைகளையும் சாலையெங்கும் சாணி போட்டு கன்றோடு மேயும் ஆவினங்களையும் பார்த்துக்கொண்டே வண்டியை விட்டால் வருவது தேவதானம். தேவதானம் ஒரு அழகிய குக்கிராமம். கோயிலே பிரதானம். சின்னக் கோயில். வண்டியை நிறுத்திவிட்டுக் கோயில் உள்ளே செல்வதற்கு முன்னர் ஸ்தல புராணம் பார்த்துவிடலாம்.
ஸ்ரேயஸ்பதியான வைகுண்டவாசன் ஒருமுறை பூலோகத்தில் வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது தேவதானத்தில் மலையென நெற்குவியல்கள் கிடந்தது. தானே மரக்கால் எடுத்து அவ்வளவு நெல்லையும் அளந்து கொடுத்தார். கை அசர நெல் அளந்த களைப்பு மேலிட மரக்காலையே தலைக்கு தலையணையாக சொருகிக்கொண்டு அங்கேயே காலை நீட்டிப் படுத்துவிட்டாராம். சாளுக்கிய மன்னன் ஒருவன் இவரை ஸ்ரீரங்கநாதராக பாவித்து அங்கே ஒரு கோவில் கட்டினான். வட திருவரங்கம் என்று பெயரும் சூட்டினான். தேவர்கள் தானமாகக் கொடுத்ததால் தேவதானமாம்.
இதோ.. அரசமரத்துக்கப்பால் அந்த மூன்று நிலை ராஜகோபரம் தாண்டி கொடிமரத்தருகில் வருகிறோம். புரட்டாசிக்காக இருபது இருபத்தைந்து பேர் கோணலும்மாணலுமான வரிசையில் நின்றிருந்தார்கள். சாதாரண நாட்களில் பட்டரும் பெருமாளும் ஏகாந்த தரிசனம் தருவார்கள். வலது புறம் புளியோதரை பிரசாத விநியோகம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. பிரகாரத்திலேயே மிளகாவை எடுத்து வீசிவிட்டு உள்ளே தள்ளிக்கொண்டிருந்த மத்திம வயதுக்காரர் விரதம் போலிருக்கிறது. உள்ளூர்க்கார பெண்கள் இருவர் ”யாராவது திட்டப்போறாங்கடி...” என்று தர்மம் பேசிக்கொண்டே வரிசையை அறுத்துக்கொண்டு உள்ளே புகுந்து நின்றார்கள். எனக்கு இரண்டு நிமிடங்கள் முன்னர் பெருமாளின் அருள் அவர்களுக்குக் கிடைக்கும்.
துவஜஸ்தம்பம் தாண்டி உள்ளே செல்லும் போது வலது புறம் சுவற்றில் திருப்பணியில் பங்குகொண்ட உபயதாரர்களின் பெயர் பொறித்தக் கல் பதித்திருந்தார்கள். அதில் ஒரு “அண்ணாதுரை” ஒரு லட்சத்துக்கு கொஞ்சம் குறைச்சலாக திருப்பணி செய்து லிஸ்டில் ஃபர்ஸ்ட்டாக இருந்தார். இப்படியும் சில அண்ணாதுரைகள்.
பெருமாள் பதினெட்டரை அடி தூரத்திற்கு சயனத் திருக்கோலம். ஐந்தடி உயரம். பெருமாளின் திருமேனி முழுவதும் சாளக்கிராமக் கல் கலவையில் வடிக்கப்பட்டிருக்கிறது. தலைக்கு கீழே மரக்காலும் குடையாய் ஆதிசேஷனும். திருவடியில் திருமகள் கால் பிடித்துக்கொண்டிருக்கிறாள். கூடவே பூதேவியும் அமர்ந்திருக்கிறாள். நாபிக்கமலத்திலிருந்து பிரம்மன். ஆதிசேஷனுக்கும் திருமுடிக்கும் திருவடிக்கும் தங்கக்காப்பு ஜொலிக்கிறது.
“துளசி மட்டும் இங்க தாங்க... அர்ச்சனை மத்ததெல்லாம் உற்சவருக்கு...” என்று ஜருகண்டி சொல்லாமல் பதமாகச் சொன்னார் பட்டர்பிரான். இரண்டு முறை தீபம் காண்பித்தார். திவ்யமான தரிசனம். பிரகாரத்தில் ரங்கநாயகி சன்னிதிக்கு பூட்டு போட்டுவிட்டு உற்சவ மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்துகொண்டிருந்தார்கள். என்னிடம் தட்டு வாங்கியவர் அப்பரெண்டீஸ் போல் தெரிந்தது. ஓம் என்று முடியும் வரிகளை அர்ச்சித்து பிரசாதமும் தீர்த்தமும் கொடுத்தார். ஆண்டாளுக்கு நேர்த்தியாகப் புடவை கட்டியிருந்தார்கள். நேரே நின்றாற்போலத் தோற்றம். சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் புற்று வடிவில் நாகராஜா சன்னிதிகளும் உண்டு. ஏழு சனிக்கிழமை நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாத் துயர்களும் அகலும் என்பது நம்பிக்கை.
கொடிமரமருகே நமஸ்கரித்து சூரியனின் கடைசி கிரணமும் மறைவதற்குள் கிளம்பினோம். கோயிலுக்குச் செல்லும் போது ஐயாயிரம் லாரிகள் பார்த்தோம். அது குட்டிப் போட்டு வரும் போது ஐந்து லட்சம் லாரிகளாக சாலையெங்கும் இடது ஓரத்தில் அணிவகுப்பு நடத்திக்கொண்டிருந்தது. இசகுபிசகாக மாட்டிக்கொண்டால் திங்கட்கிழமை ஆஃபீஸ் போவதற்குதான் வீட்டுக்கு திரும்பமுடியும். சமயோஜிதமாகவும் போக்குவரத்துப் போலீஸ்காரர்கள் திறம்பட காட்டிய வழிகாட்டுதல்களிலும் பாரீஸ்கார்னரை அடைந்து....ஒரே மெறியில் வீடு வந்து சேர்ந்தேன்.
பெஸ்ட் ஆஃப் கர்னாடிக் ம்யூசிக் என்றொரு சிடி கைப்பட எரித்து (CD BURN) வைத்திருக்கிறேன். அதில் தாஸேட்டன் “என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்... ஸ்ரீ ரங்க நாயகன்...” பாடியதோடு சேப்பாயி ஷெட்டிற்குள் சென்றாள். அந்தப் பாடலில் கேஜே ஜேசுதாஸின் வெல்லக் குரலில் “ஹரி...ஹரி..ஹரி.. என தினம் ஸ்மரி...” என்ற வார்த்தைகள் தொடர்ந்து ரீங்காரமிடுகின்றன.
ஹரி ஓம்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails