Sunday, August 2, 2015

யோகா தினம்

பூனை சிறுகதையில் நாகராஜன் நந்தினி டீச்சரை கல்லால் அடித்துவிட்டு ஓடியிருந்தான். சாயங்காலமாக எழுத்தாளர் சங்கரநாராயணின் S Sankaranarayanan “நன்றி ஓ ஹென்றி” சிறுகதைத் தொகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். வாசலில் நிழலாடியது. ரொம்ப நாளைக்கப்புறம் நாராயணசாமிNarayanaswamy Duraiswamy மாமா வந்தார்.
“மாமா.. வாங்கோ....வாங்கோ...” நிலைவாசலுக்கு ஓடி முகமன் கூறினேன். ஷூவைக் கழட்டிவிட்டு சோஃபாவில் சாய்ந்தார்.
“ஆர்வியெஸ்... ஆஹ்ஹா.... பார்த்துட்டேன்.. வாக்கிங் போன காலோட உங்களைப் பார்க்க வந்துட்டேன்...” என்று பரவசப்பட்டார். அவரைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். மனசுக்குள் எதுவும் வைத்துக்கொள்ளாமல் காட்டாற்று வெள்ளமெனப் பேசுவார். அவரது பேச்சின் உற்சாகம் நமக்கும் பக்கென்று தொற்றிக்கொள்ளும். பெர்முடாஸ் போட்ட எழுபது வயது இளைஞர்.
“மிருதங்கம் திருச்சி சங்கரன் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட். ஏன் தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் புதுக்கோட்டை..”
“எங்களோட ’டேய் அஸோசியேஷன்’ல ப்ரொஃபஸர் ஸாமிநாதனும் உண்டே. 1956 டென்த் பேட்ச். புதுக்கோட்டேல. யாரும் சார் மோர் போட்டுப் பேசப்படாது. எல்லோரும் டேய்தான்! அதான் டேய் அஸோசியேஷன்”
“டெல்லில துவாரகால இருக்கறச்சே...”
“எனக்கு சங்கீதா மேலே ஏன் அஃபெக்ஷன் தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் புதுக்கோட்டை.. போன தடவை வந்தப்போ உங்கம்மா சொன்னா....”
“டீ ஓகேம்மா! கொஞ்சூண்டு சர்க்கரை போடு....போனதடவயே காஃபிக்கு சர்க்கரை போடாம கொடுத்துட்டே!”
“மாமா உங்களுக்கு ஷுகர் இல்லையோ!”
“எப்பவாவது சாப்ட்டா.. கொஞ்சம் கூட எக்ஸர்சைஸ் பண்ணிட்டா போறது.... ஷூகராவது ஒண்ணாவது...”
“இன்னிக்கு யோகா பண்ணினேளா? வேர்ல்ட் யோகா டே!!”
“ம்... இன்னிக்கி ஸ்பெஷல் இல்லியோ!”
தினமும் ஒன்னரை மணிநேரம் யோகா செய்பவர் நாராயணசாமி மாமா. காலை ஐந்தரைக்கு வாக்கிங். ஒரு மணிக்கு சாப்பாடு. ஒழுக்கமான ரிட்டயர்ட் வாழ்க்கை.
“ஸ்ரீவில்லிப்புத்தூர்ல 107 வயசு தாத்தாவாம். தெனமும் யோகா செய்யறாராம். டாக்டர்ட்டே போனதே இல்லையாம்...” என்றேன்.
“ம்.. கரெக்ட்டுதான்.. நான் இன்னிக்கி ரெண்டு மணி நேரம்...” சிரித்தார்.
“கபாலபாட்டி பண்ணினேளா?”
“ம்... பண்ணினேனே...” குழந்தையைப் போல சோஃபாவிலிருந்து துள்ளிக்குதித்து கீழே இறங்கி அர்த்த பத்மாசனத்தில் உட்கார்ந்துகொண்டார். கையிரைண்டையும் சின்முத்திரையாக்கி மடக்கிய கால் முட்டியில் வைத்துக்கொண்டு கண்களை மூடி வயிற்றுப்பகுதியிலிருந்து சைக்கிளுக்கு காற்று அடிக்கும் பம்பில் நுனியில் கசியும் காற்றின் ஓசை போல மூச்சை வெளியே இரைத்துக்கொண்டிருந்தார்.
”இது ஷுகருக்கு ரொம்ப நல்லதாம். இன்சுலின் செக்ரீஷன் நல்லா இருக்குமாம்...”
கபாலபாட்டியை நானும் செய்தேன்.
:”இவ்ளோ வேகமா பண்ணக்கூடாதே... “
“இல்ல மாமா.. இது ஈஷா யோகா... அஞ்சு வருஷத்துக்கும் மேலே பண்ணிண்டுருக்கேன்..”
“நானென்ல்லாம் சிவானந்தா ஸ்கூல். யார்யாருக்கு எப்டி சொல்லிக்கொடுத்தாளோ.. அப்படியே பண்ணுவோம்.. அதான் நல்லது...”
“கார்த்தாலையே பண்ணிடுவேளா?”
“முடியலே... காஃபி குடிச்சுட்டு.. ரெண்டு மணி நேரம் ஆனப்புறம் யோகா பண்றேன்....”
“பத்து மணிலேர்ந்து பதினொன்னரை... ப்ராணாயாமாம்.. கபாலபாட்டி.. சூரிய நமஸ்காரம்.. எல்லோரும் ஆஃபீஸ் ஸ்கூலெல்லாம் போனப்புறம்... நிம்மதியா.. டிஸ்ட்ராக்ஷன் இல்லாம பண்ணுவேன். கான்ஸண்ட்ரேஷன் இல்லேன்னா ஏதாவது ஒண்ணு விட்டுப்போய்டும்....”
நேரம் நிலைகொள்ளாமல் ஓடியது. எல்லாம் பேசினோம். “இதுல ஃப்ரெண்ட்ஸை டேக் பண்றது எப்படி?” தனது சாம்சங்கைக் காட்டி ஃபேஸ்புக் டிப்ஸ் வாங்கிக்கொண்டார். ”உங்களோட ஒரு கதையை விட்டுட்டேன்... என்னை டேக் பண்ணுங்கோ..” ரிக்வெஸ்ட் விடுத்தார். .ஒரு மணிநேரத்துக்கப்புறம் ஒரு நொடி கூட உட்காரமாட்டார். ”இன்னொருதடவை ப்ராப்தம் இருந்தா பார்ப்போம்...” என்று கிளம்பினார்.
“ஆர்வியெஸ்.. ஒண்ணு சொல்லட்டா... முகஸ்துதிக்காக சொல்லலை.. உங்களை பார்த்துட்டு போனா மனசு அவ்ளோ லேசாயிருக்கு... பூரா சிரிச்சுண்டே இருக்கேனா... நிம்மதியா இருக்கு... காட் ப்ளஸ் யூ” என்று வாசலில் நின்று ஆசீர்வதித்துவிட்டு போன நாராயணஸ்வாமி மாமா இதை எழுதும் போது லேப்டாப் மானிட்டரில் ரூபமெடுத்தார். ஒரு முறை சிரிப்பு யோகா செய்தேன். 

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails