எட்டுச் சக்கரங்களையுடைய ஒரு வண்டி மைதானத்திற்குள் கம்பீரமாக நுழைகிறது. முன்னால் கொசகொசவெனப் பெருங்கூட்டம் முண்டியடிக்கிறது. ஜனத்திரளுக்குப் பின்னால் வரும் அது மாட்டு வண்டியா? குதிரை வண்டியா? இல்லையில்லை.. ஐயாயிரம் பேர் தேர் போல இழுத்துக்கொண்டு வருகிறார்கள். நேரே ஓரமாகப் பதினைந்து பிராயம் கூட நிரம்பாதவர்கள் இருவர் நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள். பக்கத்தில் ஒரு ஜடாமுடி ரிஷி. அப்புறம் தங்கக் க்ரீடம் ஜொலிக்க ஒரு வெண் தாடி வேந்தர்.
“ரொம்ப பேர்னால இத தூக்கவே முடியலை... இது ரொம்ப சின்ன பையனா இருக்குதே.... இதால முடியுமா?” முண்டாசுக் கட்டியிருந்தவர்கள் குழுமி நின்று பேசிக்கொள்கிறார்கள். பக்கத்தில் குந்தியிருந்த பெண்கள் ”க்ளுக்...” என்று சிரிக்கிறார்கள். வண்டியில் வருவது திரிபுரங்களை எரித்தபோது சிவபெருமான் கைகளில் விளையாடிய திவ்ய தனுசு.
வண்டி அந்த பதினைந்து வயசுப் பசங்கள் அருகில் வந்து நிற்கிறது.
“குழந்தைகள் வில்லைப் பார்க்கட்டும்...” என்று அந்த ஜடாமுடி முனிவர் உத்தரவிடுகிறார். ஐம்பது பேர் வண்டியின் மீது குதித்து ஏறி இரு பக்கத்திலும் நின்று கொண்டு பெட்டியின் மூடியை லாவகமாகத் திறந்து காட்டுகிறார்கள்.
“நான் தொட்டுப் பார்க்கட்டுமா?” தோளிரண்டும் கருந்தேக்காய் இருந்தவனிடமிருந்து ஆர்வமாய் கேள்வி வந்தது. கண்களில் ஆர்வம் மின்னியது.
ஜனகர் விஸ்வாமித்ரரைப் பார்க்கிறார். இருவரும் பார்வையால் பேசிக்கொள்கிறார்கள். மீண்டும் அந்த சியாமள இளைஞன்
“நான் இந்த வில்லை எடுத்து நாணேற்றிப் பார்க்கட்டுமா?” என்று கேட்கிறான். விஸ்வாமித்ரரும் ஜனகரும், கேட்ட அந்த ராமனைப் பார்த்து “உம்” என்று தலையசைக்கிறார்கள்.
அநாயாசமாகச் சுள்ளி பொறுக்குவது போல ஒற்றைக் கையால் வில்லைத் தூக்குகிறான். வளைத்து நாணேற்றும் போது வில் படாரென்று முறிந்து இரண்டு துண்டாகத் தரையில் விழுகிறது. அப்போது எழுந்த பெரும் சப்தத்தில் பூமி அதிர்ச்சி உண்டாச்சு. சுற்றி நின்றிருந்த பலஹீனமானவர்கள் மூர்ச்சையடைந்து பொத்தென்று சாய்ந்தார்கள். மிருகங்கள் பக்ஷிகள் எல்லாம் நடுநடுங்கின. ஜனகர் நல்ல மாப்பிள்ளைக் கிடைத்துவிட்டான் என்று மனம் மகிழ்ந்தார்.
**
ஸ்ரீமத் இராமாயணம் பற்றி சில்வர் டங் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் பல தலைப்புகளில் ஆங்கிலத்தில் பேசியதை கி. சாவித்திரியம்மாள் தமிழில் ”ராமாயணப் பேருரைகள்” என்று எழுதிய புஸ்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். இராமாயணத்தை சல்லடை போட்டு அலசி ஆராய்ந்த ஸ்ரீநிவாச சாஸ்திரியின் துளிக்கூட பந்தா இல்லாத அவையடக்கமான பேச்சும், கி. சாவித்திரியம்மாளின் அழகான எளிமையான தமிழாக்கம் இரண்டும் என்னை தூங்கவிடாமல் அடுத்த பக்கம் அடுத்த பக்கம் என்று புரட்டி கீழே வைக்கவிடாமல் படிக்கவைக்கிறது. இது மயிலாப்பூர் சம்ஸ்க்ருத அகாடமி வெளியீடு.
வால்மீகி உயிரோட்டமாக எழுதியதை உருக்கமாக எழுத்தில் வடித்திருக்கிறார்கள். பக்கம்பக்கமாகப் படித்துக்கொண்டே வரும் போது கொஞ்சம் நிறுத்தி மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டே சிவதனுசு வண்டியில் வரும் காட்சியையும் அதை ராமன் ஒடித்ததையும் படம் ஓட்டி எழுதிப் பார்த்தேன். மன்னார்குடி ஹரித்ராநதி வடகரை கோதண்டராமர் நினைவுக்கு வருகிறார். ஆஹா. அற்புதம். சிரித்துக்கொண்டே சீதா இளையபெருமாள் ஆஞ்சநேயருடன் கப்சிப்பென்று நின்ற திருக்கோலத்திலிருக்கும் அவனை.....
”பலுகே பங்கார மாயனா? கோதண்ட பாணி - பேசினால் பொன்னும் சிந்திடுமா? கோதண்ட பாணி!” என்று பத்ராசலம் ராமதாசர் ஆனந்த பைரவியில் பாடியதோடு ஸ்ரீராமசந்தரனுக்கு ஜெய மங்களம்!
பின் குறிப்பு: "எடுத்தது கண்டனர் ... இற்றது கேட்டார்" என்ற கம்பநாட்டாழ்வாரை இங்கு அழைத்திருக்கலாம். தூங்கியிருப்பான். அடுத்த ராமாயணப் பதிவில் கூப்பிட்டுக்கொள்ளலாம்! குட் நைட்!!
0 comments:
Post a Comment