Sunday, August 2, 2015

வணக்கம் வண்ணாரப்பேட்டை!!


விஜய்ஸ்ரீ க்ருஷ்ணன் மேடத்திடமிருந்து ஒரு திடீர் அழைப்பு. “வர்ற ஞாயித்துக்கிழமை... வண்ணாரப்பேட்டையில... மிஸஸ் அண்ட் மிஸ்டர் அரிஹந்த்.. நீங்கதான் ஜட்ஜ்... உங்க வைஃபோட வரணும்” என்கிற அழைப்புக்கு மிரண்டு போகாமால் சரியென்று தலையாட்டினேன். “வரேன்” என்று செல்லில் சொன்னேன்.
செகண்ட் லைன் பீச் தாண்டும்போது தோராயமாக எவ்வளவு ஜோடிகள் கலந்து கொள்வார்கள் என்கிற ஆர்வம் பற்றிக்கொண்டது. சிமெட்ரி ரோடுக்கு போவதற்கு முன்னர் “சேப்பாயி என் வண்டியை பின் தொடரலாம்...” என்று விஜய்ஸ்ரீ க்ருஷ்ணன் அலைபேச அவரைப் பின் தொடர்ந்தேன்.
அரிஹந்த் வாசலில் கையேந்துபவர்கள் மத்தியில் பானி பூரி பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் “அப்பா.. மன்சூக்ஸ்” என்று கை நீட்டினாள் சின்னவள். ஸ்வீட்டும் காரமும் அலங்காரமாகக் கண்களைக் கட்டி இழுத்து வாய்க்கு வேலை கொடுக்கும் பணிக்கு கூப்பிட்டது. கடமைக் கண்ணாயிரமாக, வந்த வேலையை கவனித்தேன்.
ஜோடி 1:
“உங்களை மொத மொதல்ல பார்த்த இடம், நேரம் தேதி கேட்ருந்தோம்.... அவரு என்ன எழுதியிருக்காரு தெரியுமா?”

“காமாட்சியம்மன் கோயில்ல.. அக்டோபர் தொன்னூத்தியேளு.... பத்தாம் தேதின்னு நினைக்கிறேன்... என்ன எழுதியிருக்காரு..”
“எதையோ தப்புத்தப்பா எழுதி.. அது மேலே.. இங்க பாருங்க.. இப்படி... பேனாவுனால ரவுண்டு ரவுண்டா எழுதினது மேலேயே ஜாங்கிரி ஜாங்கிரியா சுழிச்சிருக்காரு...என்ன பண்ணலாம் இவரை....ம்..ம்.. வீட்டுக்குப் போயி கவனிங்க...”
ஜோடி 2:
“முதன் முதலா பார்த்தப்ப நீங்க எந்த கலர்ல ட்ரெஸ் போட்ருந்தீங்கன்னு உங்க கணவரைக் கேட்டிருந்தோம்.”

“க்ரீன் கலர்.. சாரி..”
“அவரு ரெட்ன்னு எழுதியிருக்காரு... யாரைப் பார்த்து அது மனசுல பதிஞ்சிருக்குன்னு தெரியலங்க மேடம்.. பார்த்துக்கோங்க...”
ஜோடி 3:
“உங்களுக்கு பிடிச்ச உணவு என்ன?”
“சைவம்...எதுனா.. சாம்பார் சாதம்... தயிர் சாதம்...”
“அவரு என்ன எழுதியிருந்தார் தெரியுமா?”
“என்னங்க”
“பிரியாணியாம்...சிக்கன் பிரியாணியாம்... முறைக்காதீங்க... வீட்டுக்குப் போயி வச்சுக்கோங்க கச்சேரியை....”
கிட்டத்தட்ட இரண்டு டஜன் ஜோடிகள் கலந்துகொண்ட மிஸர்ஸ் அண்ட் மிஸ்டர் ஹரிகந்த் நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடந்தது. வண்ணாரப்பேட்டையில் தகதகவென்று ஜொலித்த அரிஹந்த் மால் மேற்கண்ட கேள்விகளால் கலகலத்தது. கணவ கணவான்களைக் கடைக்கு ஓரத்தில் தள்ளிக்கொண்டு போய் மேலே கேட்டது போல பத்து கேள்விகளைக் கொடுத்து எழுதி வாங்கிக்கொண்டு மங்கையர்குல திலகங்களை மேடையில் அழைத்து பதில் கேட்டோம். வழக்கம்போல நம்மாட்கள் சொதப்பியிருந்த சில ரசிக்கத்தக்க பதில்களை படித்தீர்கள்.
”எவ்வளவுக்கு எவ்வளவு தப்புத் தப்பா பதில் எழுதியிருக்காங்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்க மேலே லவ்வு...” என்று புருஷர்கள் சார்பில் சப்பைக்கட்டிப் பேசினேன். உங்களது பௌஸு அம்புட்டுதான் என்று மனைவிகளின் கண்களில் எகத்தாளத்தோடு சிரிப்பும் கலந்து வழிந்தது.
இறுதிச் சுற்றுக்கு சங்கீதா மேடையேறி கேள்வி பதில் கேட்டுத் துளைத்தார்கள். எங்கள் இருவரோடும் நின்று நிகழ்ச்சியை வெகு சிறப்பாகத் தொகுத்த நிவேதிதா கண்ணனை மனமாரப் பாரட்டலாம். ஒளிஒலிமயமான எதிர்காலம் இருக்கிறது. வாய் பேசும் அழகுப் பதுமையாக மேடையில் வலம் வந்தார். ஆங்கிலமும் தமிழும் சரளமாக வருகிறது. வாழ்த்துகள்.
இரண்டரை மணி நேர கொண்டாட்டமான தருணத்திற்குப் பிறகு மன்சூக்ஸ் உரிமையாளர் பரிசுகள் வழங்க எனக்கும் சங்கீதாவிற்கும் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசொன்று கொடுத்து ஸ்வீட் பாக்ஸோடு வழியனுப்பினார்கள். மறக்கமுடியாத ஞாயிறு. மனசு முழுக்க உற்சாகம் பொங்கியது.
அரிஹந்த் மால் கடந்து சிக்னலில் நின்ற போது எஃப்ம்மைத் தட்டினேன். “நீ வெண்ணிலா மூட்டை... நான் வண்ணாரப்பேட்டை....” என்று ராகமாய் பாடியது.
நான் மெர்சலாயிட்டேன்!


0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails