”உருளக்கிழங்கு கறி ருஜியாத்தான் இருக்கும்... அதுக்குன்னு சட்டியோட திம்பேன்னு சொல்லுவியோ.. பிடிச்சிருந்தாலும் அளவோடதான் சாப்பிடணும்டா..”
“கடேசிக் கடலை சொத்தைப் பாட்டீ.... இன்னோண்ணு தாயேன்...”
”இந்தாடா.. திண்டி சாப்பிடாதே.... அப்புறம் எப்பவுமே கடேசி கடலை சொத்தையாதான் கிடைக்கும்...”
“தேங்கா கல்லப் பருப்பு பாயஸம் பிடிக்கும்.. பிடிக்கும்.... கொண்டா..கொண்டா... தட்டுல கொட்டுடி அப்டியேன்னு பறந்தின்னா.... வெங்கலப்பானை பாயஸத்தை நீ ஒருத்தனா வயறு முட்டக் குடிக்க முடியுமா? தெகட்டும்.. அரை பானைலே வாந்தி வரும்.. ”
“க்ளப்புக் கடேலே போடற சாப்பாடும்... நம்ம ஆத்துல பண்றதும் ஒண்ணேதான்டா தம்பி... அதே காய்கறி.. அதே அரிசி... அதே ரசம்... ஆனா என்ன போட்டாலும் ஒரு ஜான் வயத்தை மிஞ்சி சாப்டுடட முடியுமாடா?”
“நித்யமும் கல்யாண சாப்பாடுன்னா
... அன்ன த்ரேஷமா போய்டாதோ.... மொளகு குழம்பும் பாகற்கா பிட்ளையும் சாப்பிடணுமே... அதுவும் வேணுமே இந்த ஒடம்புக்கு.. ”
வடபழனி சிக்னலருகே மெட்ரோ ரயில் ”போஸ்டர்” இரும்பு தடுப்பில் ஒட்டியிருந்த இந்தப் படப் போஸ்டரைப் பார்த்ததும் சாரதா பாட்டிதான் அலையலையாய் ஞாபகம் வந்தாள். வீடு வரும்வரை காதுக்குள் கலகலவென்று பேசிக்கொண்டே வந்தாள். சௌஜன்யமா.. கொஞ்சம் அதட்டி.. மெதுவாய் சிரித்து... என்று கலந்துகட்டி நவரசமாய்ப் பேசினாள்.
அவள் காலடியில் கட்டுப்பாடாக வளர்ந்ததில் இன்றுவரை பாய்ந்து தின்னும் பழக்கம் இல்லை. உப்பு உரைப்பு என்று உணவில் எங்குமே நொட்டை சொல்வதில்லை. கிடைத்ததில் பிடித்ததை ரசித்து உண்ணும் வழக்கம் வளர்ந்தது. “இன்னிக்கு ஆண்டவன் அளந்த படி இவ்வளவுதான்...” என்கிற பக்குவம் தாராளமாக இருக்கிறது. எம்சிஏ படிக்கும் போது நண்பர்களுடன் க்ரூப் ஸ்டடி செய்து விட்டு அர்த்தஜாமத்தில் ரேழி ஓரத்தில் உட்கார்ந்து உள்ளங்கையகல டிஃபன் பாக்ஸ் மோர் சாதமும் தொட்டுக்க ஒரு கோலி சைஸ் சின்ன வெங்காயமும் அவளிடமே சாப்பிட்டுப் பழகினேன்.
**
சுகுமாரின் சப்ஜெக்ட் நன்றாக இருக்கும் போல மனசுக்குப் படுகிறது. ஆர்வமுள்ள தயாரிப்பாளரும் அலட்டலில்லா நடிக்கத் தெரிந்த கதாநாயகனும் அதிசீக்கிரம் அவருக்குக் கிடைக்க ஆண்டவன் அருள்பாலிப்பாராக!
0 comments:
Post a Comment