Sunday, August 2, 2015

கணபதி முனி - பாகம் 22: திருவண்ணாமலை தபஸ்

அந்தப் படத்தில் இருந்தவர் தியோசாஃபிகல் சொஸைட்டியின் தலைவராக இருந்த கர்னல் ஆல்காட். கணபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. கர்னல் ஆல்காட்தான் பத்ரகாவா? சென்னையில் இருக்கும் போது தன் கண்ணில் ஏனிந்த ஆல்காட்டின் படம் படவில்லை என்று அதிசயித்தார். அடையாறில் தங்கியிருந்த போது இவரைச் சந்தித்திருந்தால் நிச்சயமாக தங்களது பொது அபிப்பிராயங்களைப் பற்றிப் பேசியிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டார். தன்னுடைய பிறப்பின் லட்சியத்தை நிறைவேற்றாமல் பத்ரகா ஏன் பாதிலேயே பரலோகம் சென்றார் என்று கணபதியின் மூளைக்குள் ஆயிரமாயிரம் கேள்விகளாய்க் கிளைவிட்டு வெடித்தது.

ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோ போன்ற மேலை நாடுகளுக்குச் சென்று ஆன்மிகத்தின் அருமைபெருமைகளை விளக்கியது போல கர்னல் ஆல்காட் ஒற்றுமையின் சாரத்தை இந்தியர்களிடம் விதைக்க வந்தார். பாரத தேசத்து மக்கள் தங்கள் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் ஆன்மிக காரியங்களில் ஈடுபடவேண்டும் என்று கணபதி விரும்பினார். புலனின்பங்களில் ஈடுபட்டு மேனியின் புறவயமான வாழ்க்கையில் இன்பம் நுகரும் மேலை நாட்டவரும் ஆன்மிகத்தில் ஈடுபடவேண்டும். இப்படியாக பல விஷயங்களை மூளையில் போட்டுப் புரட்டிக்கொண்டிருந்த கணபதி மீண்டும் தவமியற்ற இறங்கினார்.
இவ்வேளையில் அவரது தந்தையார் நரசிம்மசாஸ்திரி தனது மகனையும் மருமகளையும் பார்க்க விரும்பினார். அவருக்கு மீண்டும் கண்ணில் பார்வைக் கோளாறு ஏற்பட்டது. கலுவராயிக்கு ஏப்ரலில் சென்றார் கணபதி. சிலாக்கியமான பல விஷயங்களைப் பேசி அவருடன் பொழுதைக் கழித்தார். பின்னர் அங்கிருந்து தீர்த்தயாத்திரையாக ப்ரயாகைக்குப் புறப்பட்டார். கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் புண்ணிய ஸ்நானம் செய்தால் தந்தைக்கு பார்வை பிழைக்கும் என்று நம்பினார்.
ப்ரயாகை சென்று மீண்டும் கலுவராயிக்கு திரும்பும்போது அவரது மகன் மஹாதேவனுக்கு அம்மை போட்டிருப்பதாக தகவல் வந்தது. மஹாதேவன் வேலூரில் சிவராம சாஸ்திரியின் அரவணைப்பில் இருந்தான். நேரே வேலூர் சென்று சீதளாதேவி அம்மனைத் துதித்து பாடல்கள் பாடினார். மஹாதேவனைப் பீடித்திருந்த அம்மை நோய் உடனே விலகியது. விசாலாக்ஷி அப்போது கர்ப்பஸ்திரீயாக இருந்தார்.
படைவீடு வேலூரிலிருந்து 24 மைல்கள். அதுவரை கணபதி அங்கிருந்து அருள்பாலிக்கும் ரேணுகாதேவியை எட்டிப்பார்த்தது கிடையாது. அக்டோபரில் வரும் நவராத்ரியின் போது படைவீடு ரேணுகாதேவியம்மனை தரிசனம் செய்தார்கள். இவ்விடத்தில் மீண்டும் தவமியற்றும் எண்ணம் ஸ்திரப்பட்டது. படைவீடு கணபதியின் சரித்திரத்தில் திருப்புமுனையானது.
படைவீட்டிலிருந்து திரும்பிய உடன் பள்ளியில் ஏற்பட்ட சிறு வேண்டத்தகாத சம்பவத்தால் வேலையைத் துறக்கும் நிலைக்கு வந்தார் கணபதி. கற்கால நடைமுறையான ஜபதபங்களை விட்டொழிக்க வேண்டும் என்றார் ஹெட்மாஸ்டர் தாமஸ் ஹாரிஸ். நவீன யுகத்தில் அதெல்லாம் செல்லுபடியாகாது என்றும் அறிவுறுத்தினார். தவத்தினால் மேன்மை அடையமுடியும் என்று காட்டுகிறேன். அதற்கு முதல்படியாக இந்த வேலையை நான் ராஜினாமா செய்கிறேன் என்று கடிதம் கொடுத்தார். ஹாரிஸ் துணுக்குற்றார். தன்னால் ஒரு நல்ல ஆசிரியர் வேலையை விடுகிறார் என்று நொந்தார். நீங்கள் காரணமில்லை என்று அவரைத் தேற்றி, ஒரு கனலாகக் கழன்றுகொண்டிருந்த தபஸினால் வேலூரிலிருந்து அன்றிரவே ( 3-11-1907) கிளம்பினார் கணபதி.
மறுநாள் காலையில் திருவண்ணாமலையில் வந்திறங்கினார் கணபதி. அவரது சீடரான வாசுதேவ சாஸ்திரி தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். திடீரென்று வேலையை விட்டுவிட்டு வந்திறங்கிய மாஸ்டரைப் பார்த்து ஆச்சரியப்பட்டாலும் தீபாவளியில் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று மகிழ்ச்சியடைந்தார் வாசுதேவ சாஸ்திரி. ஊரே கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருக்கும் தீபாவளியை தனது குருவோட சேர்ந்து கொண்டாடலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
“வாசுதேவா.. எனக்கு ஒரு தனியான அமைதியான இடத்தைக் காட்டு. நான் தவமியற்ற வேண்டும்.” என்றார் கணபதி ஆசுவாசமாக. ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த பச்சையம்மன் கோயில் ( மரகத ஷ்யாமலாம்பாள் கோயில் ) தோதாக இருக்கும் என்று பரிந்துரைத்தார். “நான் திருவண்ணாமலைக்குத் திரும்பியதை உன்னுடன் வைத்துக்கொள்” என்று பச்சையம்மன் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றார். வாசுதேவ சாஸ்திரி தனது குருவுக்குத் தேவையானவைகளை பிரத்யேகமாக கவனித்துக்கொண்டார்.
ஷ்யாமலாம்பாளை மந்த்ரியாம்பா (திரிபுரசுந்தரியின் மந்திரி) என்று லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் குறிக்கப்பட்டிருக்கும். திரும்பவும் தவ வாழ்விற்கு திரும்பியதில் கணபதிக்கு உள்ளூர மகிழ்ச்சி. அன்றிரவு அர்த்தஜாமத்திற்குப் பிறகு அவர் தவமியிற்றிக் கொண்டிருக்கும் போது பச்சையம்மனின் கர்பக்கிரஹத்திலிருந்து இசை ஒலிப்பது கேட்டது. உற்றுக் கேட்டார். நடனமாடுபவர்களுக்குத் தோதான லயம் போல தோம்..தொம்.தகதிமி என்று கேட்டது. நேரம் செல்லச் செல்ல இந்த முழக்கம் வலுத்து பேரிரைச்சலாகக் கேட்டது.
வாசல் மண்டபத்தில் வடக்கு நோக்கி அமர்ந்திருந்த கணபதி கர்ப்பக்கிரஹம் நோக்கித் திரும்பினார். அவர் கண்ணுக்கு நிறைய வினோத கொடூர உருவங்கள் தோன்றின. செவிப்பறையைக் கிழிப்பது போன்ற ”கெக்கெக்கே...ஹெஹ்ஹே...” சப்தங்களோடு கோரத் தாண்டவமாடிக்கொண்டு அவ்வுருவங்கள் கணபதியை நோக்கி வரத்துவங்கின. இதில் துணுக்குற்ற கணபதி அம்பிகையை
”உக்ஷராஜ வாஹனஸ்ய ஜீவிதாத்கரீயஸி 
பக்ஷிராஜ வாஹநாதி வர்ண்யமான வைபவா 
கேகிலோக சக்ரவர்த்தி வாஹனேன புத்ரிணீ 
வாரணாரி ஸார்வபௌம வாஹனா கதிர்மம”

(நந்திவாஹனனின் பிராணநாயகியே, பக்ஷிகளின் ராஜாவாகிய கருடவாஹனத்தில் வரும் விஷ்ணுவை ஆராதிப்பவர்களாலும் துதிக்கப்படுபவளே, வண்ண மயிலேறும் குமாரஸ்வாமியின் அன்னையே, யானைகள் மிரளும் சிம்மத்தை வாஹனமாகக் கொண்டவளே.. எம்மைக் காத்தருள்வாய்)
என்று துணைக்கு அழைத்தார்.
உடனே அங்கு நிலவிய குழப்பம் பனித்திரை போல மாயமாய் விலகியது. வினோத ஆட்டங்கள் சட்டென்று அடங்கின. சமூகத்தில் ஆன்மிகத்திற்கு எதிராக நிலவும் சில துர்நிமித்தங்களே அப்படி கொடூரமாக ஆட்டம் போட்டதை உணர்ந்தார். இதைக் களையெடுக்க உறுதிபூண்டார். இப்படிச் செய்தால் இப்பூலோகத்தில் இறைத்தன்மை பூக்கும்.
புராண கால ரிஷிகள் தங்களது தபோ வலிமையால் பல தெய்வீக அவதாரங்களுக்குக் காரணமானார்கள். வசிஷ்டரின் தவத்தால் மஹாவிஷ்ணுவின் இராமாவதாரம் நிகழ்ந்தது. குமரனின் படைக்கு ப்ருஹஸ்பதியின் அமைச்சர்கள் உதவி புரிந்தார்கள். கணபதி, தனது பெயருக்கு ஏற்ப இப்புவியில் ஆன்மிகத்திற்கும் இறைநிலையை எட்டுவதற்கும் தடையாக இருப்பவைகளை வேரறுக்க இன்னும் தீவிரமாக தவமியற்ற உறுதி பூண்டார்.
பொழுது புலர்ந்தது. நேற்றிரவு நடந்தவைகளை அசை போட்டார் கணபதி. ப்ரணவ மந்திரத்தில் தவமியற்ற முடிவு செய்தார். ஆனால் அதற்கு அமைதியான தனிமையான சூழல் தேவை. பச்சையம்மன் கோவில் ஜனங்களின் அதிக சலசலப்புக்கு மத்தியில் இருந்தது.
“ஸ்வாமி... தென்மேற்கில் இருக்கும் ந்ருதி லிங்கத்தின் அருகில் நீங்கள் தவமியற்றலாம். எந்தவிதமான தொந்தரவுகளும் இல்லாத இடம்.” என்றார் வாசுவேதவ சாஸ்திரி அடக்கமாக.
ந்ருதி லிங்கம் வந்தடைந்தார் கணபதி. இயற்கையான தனிமையான சூழல் அவருக்கு தவமியற்ற மிகுந்த ஊக்கமளித்தது. சுற்றிலும் பசுமை. நேரே அண்ணாமலை. வேறென்ன வேண்டும்? அது ஒரு கார்த்திகை மாதம். பத்து நாட்கள் அருணாசலேஸ்வரருக்கு உற்சவம் கோலாகலமாக நடைபெறும். தினமும் அபீதகுஜாம்பாளுடன் அருணாசலேஸ்வரர் திருவீதியுலா வருவார். அக்கம்பக்கத்திலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் திருவண்ணாமலையில் நிரம்பி வழியும். அம்பிகையுடன் சிவனாரின் திருவலம் கண்டு உள்ளம் மகிழ்வர்.
ஏழாம் நாள் தேர்த்திருவிழா.
அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails