Saturday, May 9, 2015

த்ரிஷ்யம்

ஜியோர்ஜ் குட்டியை உங்களுக்குத் தெரியுமா? ஸ்கூல் போகும் இரண்டு பெண் குட்டிகளின் அன்பொழுகும் பிதா. நாலாங் கிளாஸ் வரை படித்தவர். லோகல் கேபிள் டிவி ஆபரேட்டர். சதா சர்வகாலமும் அசராமல் சினிமா பார்ப்பார். பொண்டாட்டி ராணி இல்லத்தரசி. பத்தாங்கிளாஸ் ஃபெயில். ஜியோர்ஜ் குட்டிக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலம் நீச்சென்று இருக்கிறது. தெளிந்த நீரோடை போல சந்தோஷமாகச் செல்லும் குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு சம்பவத்தால் சூறாவளியடிக்கிறது. அதை சவாலாக எதிர்கொண்டு குடும்பத் தோணியை கவனமாகத் தள்ளி கரை சேர்க்கிறார். அற்புதமான படம். த்ரிஷ்யம். ஃபேமிலி த்ரில்லர். ஊரே கொண்டாடிய படம். நேற்றிரவு சயனக்கோலத்தில் பார்த்தேன்.

ரவுடி ராத்தோர் பார்த்துக் காயம்பட்ட மனப் புண்ணுக்கு மயிலிறகால் வருடியது போல இருந்தது. ஜியோர்ஜ் குட்டி (மோகன்லால்), ராணி(மீனா), குட்டிமோல் (எஸ்தர்), கீதா ப்ரபாகர்(ஆஷா சரத்) நால்வரும் சிறப்பாகச் செய்திருந்தார்கள். வெகு யதார்த்தமான நடிப்பு. படம் முடிந்ததும் நம்மோடு பழகியவர்களைப் பிரிவது போல இருந்தது. ஒரு நல்ல படத்திற்கு பூசிமொழுகாத கதைதான் மூலாதாரம். நாயகனுக்காகப் பலவந்தமாகச் சேர்க்கப்படும் காதல், பாசம், விரோதம், குரோதம், பன்ச் வசனம், பாடல்கள் போன்றவைகளால் கதை சின்னாபின்னமாகி பார்க்கவந்தவர்களைக் குதறி விடுகிறது.

படத்தின் முதல் ஒரு மணி நேரத்தில் குடும்ப பாசம் தூக்கலாக இருக்கிறது. பக்கத்திலிருக்கும் சிறுநகரமான தொடுபுழாவிற்கு ஷாப்பிங் செல்ல, பிரியாணி சாப்பிட, ஒரு ஆட்டம் சினிமா பார்க்க என்று சின்னச் சின்ன அபிலாஷைகள் நிறைந்த பாத்திரமாக ஹோம்மேக்கர் மீனா. மருமகனை மகனாக பாவிக்கும் மீனாவின் தந்தை. அம்மா மாருதி வாங்கச் சொன்னால் ஆடி கார் வாங்கச் சொல்லி அப்பாவை கூத்துக்கட்டி அடிக்கும் பெண்பிள்ளைகள் என்று சிரிப்பும் சந்தோஷமுமாகக் குடும்பத்தில் அன்பும் வாத்சல்யமும் கமகமக்கிறது. பார்வையாளனை ஏங்க வைக்கும் கிருஹஸ்தாஸ்ரமக் காட்சிகள்.

ஸ்க்ரீனில் தோன்றும் சீன்களிலெல்லாம் ஒரு சட்டையும் வேஷ்டியும்தான் லாலேட்டனின் காஸ்ட்யூம். அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பினால் கைலியும் சட்டையும். பாந்தமான நடிப்பு. வாஸுதேவின் காமிரா கேரளாவின் ஒட்டுமொத்த எழிலை பங்கப்படுத்தாமல் அப்படியே பச்சைப்பசேலென்று காட்சிப்படுத்தியிருக்கிறது. நடமாட்டமில்லாத சேரநாட்டு கிராமத் தெருக்களும் இரு புறமும் அடர்ந்திருக்கும் பசுமையும் கண்ணுக்குக் குளிர்ச்சி. பாத்திரங்களுக்குப் பின்னால் திரையில் தெரியும் செங்கல் காம்பௌண்ட் பாசியின் மணம் நாசியில் ஏறுகிறது. பொத்துக்கொண்டு ஊற்றும் மழைக் காட்சியில் நமக்கும் குளிரெடுக்கிறது. வாஸுதேவிற்கு ஒரு சபாஷ். இயக்குநர் பாட்டு கூத்து என்றெல்லாம் நேரத்தை வீணடிக்கவில்லை. பாட்டுப் பின்னணியில் கதை சொல்கிறார். கதையை ஜவ்வாக இழுக்காமல் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று நறுக்கென்று சொல்லியிருக்கிறார் ஜீத்து ஜோஸப். நல்ல விறுவிறுப்பு.

வீட்டின் கொல்லைப்பக்கம் நுழைந்து ப்ளாக்மெயில் செய்யும் ஐபிஎஸ் ஆஃபீஸரின் காமாந்தக பையனை யதேச்சையாக மண்டையில் அடிக்க அவன் அங்கேயே மண்டையைப் போடுகிறான். செல்வச் செழிப்பில் பணத்தில் புரளும் தனவந்தர்களின் வாரிசுகளின் நிலையைக் காட்டும் விதமாக ஐஜியின் பிள்ளை அவன். வீட்டு வாசலில் பறித்த ஆளுயுரக் குழியில் போட்டு ஜியோர்ஜ் குட்டியின் மனைவியும் மகளும் மூடிவிடுகிறார்கள். இங்கிருந்து கதை அசுர வேகத்தில் நகர்கிறது. தனது குடும்பத்தைக் காப்பாற்ற மோகன்லால் படும் அவஸ்தைகள் அவரது முகத்தில் அப்பட்டமாக வெளிப்படுகிறது. பல இடங்களில் மோகன்லாலின் கண்கள் மட்டுமே கதை பேசுகிறது.

இந்த கொலைகேசில் போலீஸிடம் மாட்டிக்கொண்டு விடுவோம் என்று குடும்பம் அலறி அழும்போது “அப்பா நானிருக்கேன். யாரும் கவலைப்பட வேண்டாம்..” என்று தேற்றும் ஒரு காட்சி போதும், சினிமா பார்க்கும் அப்பாக்களுக்கு அந்த குடும்பத்தின் பாரம் தங்கள் தோள்களில் வந்து ஏறியதைப் போன்ற உணர்வு. ப்பா... அப்போது மோகன்லால் முகத்தில் தெரியும் அந்த அழுத்தம்... சொல்லில் அடங்கா. ”நாந்தான்டா ஜியார்ஜ்.. நானடிச்சா லார்ஜ்...” போன்ற அசட்டுத்தனமான பன்ச் வசனங்கள், “விஷ்...விஷ்..விஷ்...” என்று காற்றைக் கிழித்து காதையும் கிழிக்கும் அபத்தமான சண்டைக்காட்சி சப்தங்கள் ஏதுமில்லாத அமைதி அற்புத சுகமளிக்கிறது.

காசு கொடுக்காமல் டீக்கடையில் சாப்பிடும் போலீஸ் சகாதேவன். ஜியோர்ஜ்குட்டிக்கு சகாதேவனின் இந்த அற்பச் செயல் எரிச்சலூட்டுகிறது. இதன் காரணமாக ஓரிரு முறை சகாதேவனோடு உரசும்படி ஆகிறது. இந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு க்ளைமாக்ஸில் மோகன்லாலை வெளுத்து வாங்கும் காட்சியில் கான்ஸ்டபிள் கலாபவன் ஷஜோன் மிளிர்கிறார். அவ்வப்போது சீறும் சகாதேவனாக வருகிறார். ஜியோர்ஜ் குட்டியின் குடும்பமே அடிபடும்போது ஊரே திரண்டு வந்துவிடுகிறது. ஜியோர்ஜ் குட்டிக்காக வக்காலத்து வாங்கிக்கொண்டு வரும் டீக்கடைத் தாத்தாவிடம் ஒரு சாயா வாங்கிக்குடிக்க ஏங்குகிறது மனம்.

தான் ஒரு தேர்ந்த நடிகன் என்று காட்சிக்குக் காட்சி நிரூபிக்கிறார் மோகன்லால். அவருக்கு நிச்சயம் இது ஒரு மைல் கல் படமாக இருக்கும். படம் முடிந்து பலமணிநேரம் ஆனாலும் ஜியோர்ஜ் குட்டியை மறக்கமுடியவில்லை. இதுபோன்ற கதைக்களம்தான் இனிமேல் தனக்கு லாயக்கு என்று லிங்கேஸ்வரனுக்கு எப்போது புரியும்?

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails