சிந்தா நதி சுழித்து ஓடிக்கொண்டிருக்கிறது.
வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு படிக்கரையில் நிதானமாக நின்றுகொண்டிருந்தேன். மெதுவாய் இறங்கி கடைசி படியிலிருந்து கால் கட்டைவிரலை லேசாக நனைத்துப் பார்த்தேன். முதலைபோல சடாரென்று ஆளை உள்ளே நீருக்குள் இழுத்துவிட்டது. நீலவானத்தைப் பார்த்து மல்லாக்க கவிழ்ந்து அது இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆனந்தமாகப் போகிறேன். மேனியெங்கும் ஒரு இதமான ஜில்லிப்பு. மனசு விட்டுப்போகிறது.
சில இடங்களில் கரையோர மரங்களிலிருந்து விழுந்த சருகுகள் முதுகின் மேலே ’பச்ச்க்’.
கிளைகளிலிருந்து இன்னிசையாக வரும் “க்வீய்ங்...க்வீய்ங்...”. அதோ! அங்கே
ஒரு குடைசாய்ந்த காயிதக் கப்பல். எந்தச் சிறுவன் நீரில் விட்டுக்
கைகொட்டிச் சிரித்தானோ?
இருள் கவியும் நேரத்தில் அகல் விளக்கு மிதந்து வருகிறது. விடியற்காலையில் பொற்கிரணங்களில் ஜொலிக்கும் சிகப்பும் மஞ்சளுமாய் மலர்கள் மூழ்கியும் மிதந்தும் கூட்டமாய்க் கடந்து செல்கிறது. வர்ணஜாலம். நுரைத்தும் சுழித்தும் ஓடும் சிந்தாநதியில் சுகமாக நீராடிக் கொண்டிருக்கிறேன். ”ப்ளக்..ப்ளக்”கென்ற ஓசையுடன் குமிழிகள் கொப்பளிக்க ஸ்நானம் செய்ய தலையை மூழ்கிக் கண்ணைத் திறந்தால் காலடியில் வெள்ளை வெள்ளையாய் ஆயிரம் சிப்பிகள்.
நதியில் இவ்ளோ சிப்பிகளா? அதற்குள் முத்தும் வளருமோ? வளர்ந்திருக்கிறதே!
லால்குடி சப்தரிஷி ராமாமிர்தத்தின் சிந்தா நதி வாசிக்கும் அனுபவம்.
0 comments:
Post a Comment