Saturday, May 9, 2015

குறுஞ்செய்தி‬

“நா டிஸ்டர்ப் பண்றேனா?”.

யோகா மாஸ்டர்கள் ப்ராணாயாமம் சொல்லிக்கொடுக்கும்போது முதுகு தடவிக் கொடுத்துப் பேசுவது போல ரொம்பவும் சாத்வீகம். அமைதி ததும்பும் தவசிரேஷ்டருக்கு ஒப்பான களை சொட்டும் முகம். நெற்றியில் விபூதிக் கீற்று. அறுபத்தைந்திலிருந்து எழுபதுக்குள்ளிருக்கலாம். நான்கு முழ காவி வேஷ்டியை டப்பாக் கட்டாக கட்டியிருந்தார். கையில் பால் பாக்கெட் கூடை. அதை மீறி கறிவேப்பிலைக் கொத்து எட்டிப் பார்த்தது.

“இல்லைங்க... என்ன வேணும்?” நெற்றியைச் சுருக்காமல் கேட்டேன். ட்யூஷன் முடிந்து வீடு செல்லும் பொடிசுகள், பிழைப்புக்கு ஆஃபீஸ் கேப் பிடிக்க ஓடுபவர்கள், பின்னால் ”தொடர்ந்து வா.. தொட்டுவிடாதே....” அருளிய கோயம்பேடு காய்கறி வேன், வீடுவீடாய் பிகிலடித்து குப்பை சேகரிக்கும் துப்புரவுப் பணியாளர், பேப்பர் வாங்கி நாய் வாயில் கவ்வக் கொடுத்து கைவீசிச் செல்லும் மாமா என்று தீயாய் பற்றிக்கொண்டு திகுதிகுவென எரிந்த காலை நேர பரபரப்பு.

புராண காலத்து மொபைலை ”உங்களுக்கொன்னும் சிரமமில்லையே...” என்று என் கையில் திணித்தார். ஸ்கூல் பஸ்ஸுக்கு காத்திருந்த என் பெரியவள் அந்த மொபைலை அபூர்வமான அகழ்வாராய்ச்சிப் பொருள் போல பார்த்தாள். ரொம்ப நாள் பழக்கம் போல என்னிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்தார்.

“இங்கே பாருங்கோ.. ம்... அந்த மொதல்ல இருக்கிற... ம்...ம்... மொதோ நம்பர்தான்.. அதுக்கு ஒரு மெசேஜ் கொடுக்கணும். எனக்கு இதெல்லாம் தெரியாது.. நா அந்தக் காலத்து மனுஷன்... உங்களுக்கு எதாவது வேலையிருந்தா வுட்டுடுங்கோ.. சிரமப்பட வேண்டாம்... நான் யார்ட்யாவது பார்த்துக்கிறேன்.. இல்லைன்னா...”

கண்களில் ஒருவித தவிப்பு தெரிந்தது. ஏதோ தலைபோகிற அவசரம் போலிருக்கிறது. கைகளை ஷாக் அடித்தது போல உதறிக்கொண்டார்.

“அப்பா.. பஸ் வந்துடுத்து.. டிஃபன் பேக்கைக் குடு....” கையிலிருந்து வாங்கிக்கொண்டு பிள்ளைகள் ஸ்கூலுக்குப் போக பஸ்ஸேறினார்கள். வ்ர்ர்ர்ர்ரூம்... பஸ் போயாச்சு.

பஸ் நிறுத்தத்தில் நானும் அவரும்தான். காலையில் குடித்த காஃபி என் நாசியில் ஏறும் அளவிற்கு நெருங்கி வந்து நின்றுகொண்டார்.

“ம்.. சொல்லுங்க சார்...”

“வயசுக்கு மரியாதையில்லை சார்!”

”என்னாச்சு...”. பயந்துவிட்டேன்.

“மாங்கு மாங்குன்னு.... இங்கேர்ந்து வண்டலூர் தாண்டி போய் வேலை பார்த்தேன்.. ஊஹும்.. மரியாதை இல்லை சார்...ஊஹும்.. ” இப்படியும் அப்படியும் தலையை சுளுக்கும்படி ஆட்டினார்.

“கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க.. என்னாச்சு?”

“அது வேணாம் சார்.. ஒரு மெசேஜ் மட்டும் அடிச்சுக் குடுங்க சார்.. அனுப்பணும்...”

“என்னன்னு?”

“மூனு தடவை மெசேஜ் பண்ணியும் உன்கிட்டேயிர்ந்து பதிலில்லை.”

“சரி...”

“என் வயசுக்காவது நீ மரியாதை தந்திருக்கலாம்....”

“ம்.. அப்புறம்...”

“நான் வந்துபோனத்துக்கு கன்வீனியன்ஸானும் குடு....”

“கன்வீனியென்ஸில்லை.. கன்வேயென்ஸ்....”

“ம்.. அத்தையாவது கொடு....”

கர்ம சிரத்தையாக அடிக்க ஆரம்பித்தேன். தெருவில் போவோர் வருவோரை குரைத்துக் கலாய்க்கும் ஏரியா தாதா கறுப்பு நாய் உற்றுப்ப் பார்த்துக்கொண்டே கடந்ததை என் ஓரக்கண்ணால் பார்த்தேன்.

இப்போது முதுகுப் பின்னால் வந்துவிட்டார். “சார்... டியர் கணேஷ்....னு ஆரம்பத்துல சேர்த்துக்கோங்கோ.... சின்னப் பையந்தான்... இருந்தாலும் டியர் போடாம எழுதினா நன்னாயிருக்காது....”

மெஸேஜ் அடித்துக்கொண்டிருந்தேன். “சார்.. டியர் கணேஷ்.. போட்டுடுங்கோ.. இல்லைன்னா மரியாதையா இருக்காது...”

நிமிர்ந்து சிரித்தேன். T9 வசதி இல்லாத சாதா ஃபோன். ஸ்மார்ட் ஃபோன்களில் விளையாடி எஸ்ஸெம்மெஸ் சுகம் கண்ட விரல்கள் அந்த மொபைலில் தட்டுவேனா பார் அழுத்துவேனா பார் என்று ஸ்ட்ரைக் செய்து எனக்கு வேடிக்கைக் காட்டியது. அவருக்கு மெஸேஜ் சேவை செய்துவிட்டு வாக்கிங் வேறு போக வேண்டும். சூரியன் யாருக்கும் கவலையில்லாமல் வான் மேலே ஏறி விரைந்து வந்துகொண்டிருந்தான். நிமிடங்கள் நொடியில் கரைந்தன.

“சார்.. உங்களுக்கு இதுல அடிக்க வருதில்லை.. இல்லைன்னா.. சொல்லுங்க...”
நிமிர்ந்து பார்த்தேன். ஒன்றும் பேசவில்லை. அவரது முகத்தில் கவலையை அள்ளி பூசியிருந்தார். கணேஷைக் க்ரஷ் பண்ணிக்கொண்டிருந்தார்.

மூன்று தடவை மெஸேஜ் செய்தும் பதிலில்லையை ஆங்கிலப் படுத்திக்கொண்டிருந்தேன். “பையன் சிடியெஸ்ல இருக்கான். பொண்ணு தஞ்சாவூர்க்காரருக்கு வாக்கப்பட்டு மலேஷியால சௌக்கியமா இருக்கா... நானும் பொண்டாட்டியும்தான் இங்க.. ரிடையர் ஆனப்றம் வேற வேலைக்கெல்லாம் போக வேண்டாம்னு தலைப்பாடா அடிச்சுண்டா.. நாந்தான்.. ச்சும்மா விட்டத்தைப் பார்த்துண்டு தேமேன்னு உட்காண்டு என்ன பண்ணப்போறோம்னு....” வீட்டு ஜாதகம் படிக்க ஆரம்பித்தார்.

வயசுக்காணும் மரியாதை கொடுத்திருக்கலாம்மை தடவித்தடவி டைப்பிக்கொண்டிருந்தேன்.

“சார்.. ஆரம்பத்துல டியர் கணேஷ் போட்டுக்கோங்கோ.. இல்லைன்னா நல்லாயிருக்காது....”

”என்ன சார்.. இன்னிக்கி வாக்கிங் போகலையா...” ரோஜாப்பூ பூக்காரர் நியாபகப்படுத்திவிட்டு சைக்கிளை விரைவாய் மிதித்தார். லிங்கம் ஸ்டோர்ஸில் கீரையும் வெண்டைக்காயும் வாங்கிக்கொண்டு நைட்டிப் பெண்கள் நகர ஆரம்பித்தார்கள்.

“டியர் கணேஷ்.. போட்ருக்கீங்களா?” முதுகுக்குப் பின்னாலிருந்து புஸ்புஸ்ஸென்று ஸர்ப்பமாய் மூச்சு விட்டு என் கழுத்து வேர்வையைக் காய வைத்தார்.

மொத்தமும் டைப்பிவிட்டேன். குறுஞ்செய்தி பெரும் வேலை வாங்கியது. “வயசுக்காவது மரியாதை கொடுத்திருக்கலாம்...” என்று முதலில் இருந்து வாழ்க்கை ஒரு வட்டமாக ஆரம்பித்தார்.

”சார்.. அனுப்பியாச்சு.....”

“போயிடுச்சுங்களா? நீங்க இவ்ளோ நேரம் செலவு பண்ணி அடிச்சதுனாலேயாவது.. அவர் கன்வீனியன்ஸ் கொடுக்கிறாரான்னு பார்க்கலாம்....”

“சார்.. அது கன்வேயன்ஸ்...”

“ஆமா.. கன்வீனியன்ஸ்.....”

இதற்கு மேல் திராணியில்லை.” விடை கொடுங்கள் தயாபரா” போலப் பார்த்தேன். “நன்றி சார்.. இந்த காலத்துல வயசுக்கு யாரு மரியா.....”

அவரது நன்றிக்கு நன்றி சொல்லி பத்தடி நகர்ந்திருந்தேன். பித்து பிடித்தது போல எதிர் திசையில் நடந்துகொண்டிருந்தார். காசு கேட்பதிலும் திரும்பத் திரும்ப “டியர் கணேஷ்....” போடச்சொன்ன அந்தப் பெரியவர்.... காலை வாக்கிங் முடிந்து..... நாள் முழுக்க அலுவலகத்தில் வேலைப் பார்த்து... குட் நைட் சொல்லி படுக்கும் வரை இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறார்.

யார் அந்த கணேஷ்? அவர் கன்வீனியென்ஸுக்கு வேலை பார்க்காமல் இந்த வயசுக்காவது மரியாதை கன்வேயன்ஸ் கொடுத்திருக்கலாமோ?

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails