Saturday, May 9, 2015

கல்யாணமே வைபோகமே

டைரக்டர் வசந்த் ”நா சாப்பிடறா மாதிரி இல்லை... உங்களைப் பார்த்துட்டுதான் உட்கார்ந்தேன்..” என்று பட்டுக்கோட்டை பிரபாகரிடம் ( Pattukkottai Prabakar) சொல்லிக்கொண்டிருந்தார். எதிர் வரிசையின் ஓரத்தில் தோசைக்கு ஒத்தாசையாக பனீர் தொட்டு வாயில் தள்ளிக்கொண்டிருக்கும்போது என் காதில் விழுந்தது. பிகேபிக்கு இன்னும் ஏன் யாரும் ஹீரோ சான்ஸ் தரவில்லை என்கிற கேள்வியில் நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். ”ஏன் தரவில்லை..” ஸ்க்ராட்ச் விழுந்த ஆடியோ சிடி பாட்டு போல ரிப்பீட்டில் துள்ளியது.

கேப்டன் கட்சியின் பேனர்களும் அவரது பளீர் சிரிப்பைத் தாங்கிய பதாகைகளும் வழிநெடுக நிறைத்திருந்தன. தப்பான மண்டபமா என்று சேப்பாயியின் ப்ரேக்கில் கால் வைக்கும் போது உள்ளே இரவைப் பகலாக்கிக்கொண்டிருந்த விளக்குகளில் சில கள்ளத்தனமாக கண் சிமிட்டி அழைத்தன. உள்ளே நுழைந்தால் அது ஒரு கல்யாண கிராமம். பேலேஸ் பேலேஸாகக் கட்டியிருந்தார்கள். ஜானுவாசத்துக்கு சௌகரியமாய் வாசலில் பிள்ளையார் கோயில். கொளப்பாக்கம் இவிபி ராஜேஸ்வரி. பின்னால் காடு வளர்த்து ரிசார்ட் கட்டி வாடகைக்கு விட்டால் தேனிலவு கொண்டாட ஏழு கடல் ஏழு மலை தாண்ட வேண்டாம். நிச்சயதார்த்தம் முதல் தேனிலவு வரை. பேக்கேஜ்.

ழுத்தாளர், நண்பர், எனது பேட்டைக்காரர், பாண்டி பஜார் நாயுடு ஹாலில் முதன்முதலில் பார்த்து நண்பரான திரு. நளினி சாஸ்திரி என்று எழுத்தாளர்களின் இலக்கிய வட்டத்தில் அறியப்படும் Sekar Ramamurthy அவர்களின் புத்திரனின் திருமணம். தங்கமான மனுஷர். கூட்டமான கூட்டம். அதிலும் அதே டெசிபலில் அலைவரிசை மாறாமல் அன்பாக விசாரித்தார்.

பிரம்மாண்டமான மேடையேறி வினு வர்ஷித்தையும் ( Vinu Varshith ) ஜனனியையும் வாழ்த்தினேன். வினுவின் பக்கத்தில் நிற்பவர்கள் வளர்ந்த குழந்தையாக வீடியோவிலும் புகைப்படத்திலும் தெரிவார்கள். பையன் ”உயர்ந்த மனிதன்”. நளினி சாஸ்திரி ஜிகுஜிகுவென்று மாப்பிள்ளைக்குப் போட்டியாக ஜொலித்தார். முகத்தில் இளமை பிரகாசமாகச் சுடர்விட்டது. கவிதாயினி மதுவர்ஷினியையும் குசலம் விசாரித்துவிட்டு இறங்கினேன். போஜன அறைக்குச் சென்றபோது கேட்டதை முதல் பாராவில் எழுதி உங்களை இப்பதிவுக்குள் கையைப் பிடித்து உள்ளே இழுத்தேன்.

கால் கி.மீக்கு பளபளக்கும் பாத்திரங்களில் நானாவித பதார்த்தங்களை அடுக்கியிருந்தார்கள். பாத்திரத்துக்குப் பாத்திரம் பரபரப்பாக பரிமாறினார்கள். (ப்பா.. போன வரியில் எவ்ளோ பா..பா..ப...ப) உள்ளுக்குள் சம்மனமிட்டு அமர்ந்திருக்கும் சர்க்கரை ஆசான் நான்கே ஐட்டங்களோடு தட்டை மடக்கி சாப்பிட விரட்டினான். சாப்பாட்டிற்குப் பிறகு பழம் சாப்பிட்டால் அஜீரணமாகும் போன்ற சிக்கலான வைத்திய ஆலோசனைகளை சஞ்சய் ராமசாமியாக மறந்துவிட்டு ஒரு தொண்ணை நிறைய, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு சுளை, அண்ணாசி, தர்பூசனி என்று பலவர்ண சாலட்டோடு மண்டபத்திலிருந்து கிளம்பினேன். ராஜேஸ்வரியின் மதில் சுவருக்கு அந்தப் பக்கம் உடமஸ்தர்கள் சென்னை ஏர்போர்ட்காரர்களாம். சுருள் முள்வேலிக்கு அப்பாலே இருந்த டவரில் ஒரு போலீஸ்காரர் பொம்மையாக நின்றிருந்தார். அவரது எண்ணக் குதிரையில் எங்கு ஓடிக்கொண்டிருக்கிறாரோ?

ஏரோப்ளேனை இவிபியின் கொல்லைப்புற கார் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு பேப்பரிலும் ஆளாய்பேயாய் லைவ் ரிலேக்கு அலையும் இருபத்துநான்கு பெருக்கல் ஏழு செய்தி சேனல்களிலும் இடம்பிடிக்கும் திருமண ஜோடி யாராக இருக்கும் என்ற அதீத கற்பனையில் சேப்பாயில் வந்து கொண்டிருந்தேன்.

தூரத்தில் முழு நிலவு காய்ந்துகொண்டிருந்தது. வெண் திட்டாய் பஞ்சு மேகம் தலைகாணிபோல பக்கத்தில். வினுவர்ஷித்துக்கும் ஜனனியும் வாழ்நாள் முழுக்க இந்தப் பூரண சந்திரனைப் போன்ற பொலிவுடனும் குளிர்ச்சியுடனும் (Be cool.. பில்குல்...) வாழவேண்டும்.... “ஆஹா.. இன்ப நிலாவினிலே...”.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails