மும்முரமாகக் கார் துடைத்துக்கொண்டிருந்தேன்.
”என்ன அங்கிள்?” என்று பெண்மை பூசிய குரல் முதுகுக்குப் பின்னால் கேட்டது. சைக்கிள் பாரில் மெயின் பாயிண்ட் அடிபடாத மாதிரி லாவகமாகக் குதித்துக் காலூன்றி நின்றான் கிருஷ்ணன்.
”சொல்லுடா க்ருஷ்ணா...”. என்னைப் பார்த்துவிட்டால் பேசாமல் வீட்டைத் தாண்டமாட்டான் கிருஷ்ணன்.
தலையைச் சிலுப்பிக்கொண்டு “ப்பா... நல்ல தூக்கம்.... ட்யூஷனுக்காக பாதியிலேயே எழுந்து வந்துட்டேன்...”
“எத்தனை மணிக்கு எழுந்துண்டே?”
“ஆறு மணிக்கி...” சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டான்.
”அடப்பாவமே... அது ரொம்ப சீக்கிரமாச்சேடா..”
”அங்கிள்.. நா இப்ப பத்தாவது... ஆறு மணிக்குக்கூட எழுந்துக்கலைன்னா அப்பா தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்ருவார்...”
“கொடுமைடா க்ருஷ்ணா... நானெல்லாம் உன்னை மாதிரி இருக்கரச்சே...”
”சும்மா கத வுடாதீங்க அங்கிள்... எதையெடுத்தாலும் நானெல்லாம்னு...நானெல்லாம்னு பாடிக்கிட்டு... சரி... நாளன்னிக்கி பொங்கல் காலேலே எத்தனை மணிக்கு வைக்கணும்”
“உனக்கு எப்போ பசிக்கறதோ அப்போடா...”
“விளையாடாதீங்க அங்கிள்.. எப்போ.”
“மொதோநா ராத்திரியே தை மாசம் பொறந்துடறதுடா... கார்த்தாலே எப்போ வேணுமின்னாலும் நம்ம சௌகரியத்துக்குப் பொங்கல் வைக்கலாம்..”
“நாங்கெல்லாம் எங்காத்து தொட்டி மேலே சூரியன் அடிக்கும்போது பொங்கல் வச்சுடுவோம்...”
“தொட்டி மேலே சூரியன் அடிக்கலைன்னா.. பொங்கல் கிடையாதா?”
“கடிக்காதீங்க அங்கிள்..”
“நீ கரும்பெல்லாம் கடிப்பியோ...”
“ம்... ஒரு கரும்பு எவ்ளோ?”
“இந்த வருஷம் கட்டு முன்னூறு ரூபாயோ என்னமோ போட்ருந்தான்...”
“அப்ப.. ஒரு கரும்புதான்... அதுல பாதி அந்த இலையில போயிடும்..”
“அது இலையில்லடா.. தோகைன்னு சொல்லணும்..”
“அதென்ன மயிலா?”
“திரும்ப கடிக்கிறயா? சரி.... பொங்கலோ பொங்கல்னு கத்துவியோ?”
“ம்... சத்தமா.. தாம்பாளத்துல கரண்டியால டிங்கிடிங்கின்னு அடிச்சுண்டே நானும் எந்தம்பியும் அப்பா காது கிழியக் கத்துவோம்... சரி அங்கிள் ஸ்கூலுக்கு லேட்டாறது.. நா கிளம்பறேன்..”
“க்ருஷ்ணா.. ஒரு சந்தேகம்...” பெடலடிக்கப் போனவனை மறித்துக் கேட்டேன்.
“என்ன அங்கிள்?”
“நாளன்னிக்கி உங்காத்து தொட்டி மேலே சூரியன் அடிக்கலைன்னா...”
கொதித்துப் போய் சீட்டிலிருந்து எழுந்து ஏறி..ஏறி.. சைக்கிளை மிதித்து தெரு முக்கில் மறைந்துபோனான் கிருஷ்ணன். பொங்கல் வந்தாச்சு.
0 comments:
Post a Comment