Saturday, May 9, 2015

ஃபன்னி வாழ்வு

செத்துப்போகப்போறோம்னு ஒரு குருவுக்கு ஞானதிருஷ்டியில தெரிஞ்சுது. தன்னோட அத்யந்த சிஷ்யனைக் கூப்பிட்டு,

“நான் கூடிய சீக்கிரம் செத்துப்போகப்போறேன்.. நீ எனக்கு ஒரு உபகாரம் செய்யணும்.. செய்வியா?”ன்னார்.

“என்ன வேணும் குருவே”ன்னு கும்பிட்டு நின்னாரு அந்த சிஷ்யர்.

“அதோ.. அங்க சாக்கடைக்கிட்டே மேஞ்சிகிட்டிருக்கிற பன்றிக்கு நாலாவது குட்டியா பொறக்கப்போறேன்..புருவத்துக்கிட்டே ஒரு தழும்போட திரிவேன்... பார்த்தவுடனே அருவாளை எடுத்து ஒரே போடா போட்டு என்னைக் கொன்னுடு.. அந்த பன்னி ஜென்மாவிலேர்ந்து எனக்கு விடுதலை கிடைச்சுடும்...”ன்னார்.

“ஆகட்டும் குருவே!”

*

அதே பன்னியைக் கண்டுபிடிச்சுட்டார் சிஷ்யர். அதோட நாலாவது குட்டியையும் கண்டு பிடிச்சாச்சு. கத்தியை எடுத்து ஓங்கி கழுத்துல போடப் போனாரு.. அந்த சிஷ்யரு...

“நிப்பாட்டு... தயவு செய்து நிப்பாட்டு...” ன்னு அந்தப் பன்னிக் குட்டி வாய்விட்டு அலறிச்சு. 

சிஷ்யன் அதிர்ந்து போயி... என்னடா பன்னிக்குட்டி பேசுதேன்னு வாயைப் பொளந்துகிட்டு நிக்கும்போது..... அந்த பன்னிக்குட்டி இன்னும் பேசிச்சு....

“போன ஜென்மால உனக்கு குருவா இருந்தப்ப.. பன்னிக்குட்டியா பொறந்ததும் என்னைக் கொன்னுடுன்னு சொன்னேன். ஆனா இப்போதான் தெரியறது.. பன்னியா இருக்கிறது எவ்ளோ சுகம்னு....ஆஹா சாக்கடை எப்படி மணமா இருக்குது தெரியுமா? ப்ளீஸ் என்னை வுட்டுடு.. இப்படியே பன்னியாவே அலையறேன்...”

கதை ஃபன்னியா இருக்குல்ல... எந்த உசிருக்கும் அந்த உசிரு முக்கியம். ஏகே ராமானுஜனின் Folktales from Indiaவில் படிச்சு கீழே வைப்பதற்கு முன்னர் அந்தந்தப் பிறவிகளில் செய்யும் நல்வினை தீவினைகளுக்கேற்ப பிறவிச் சுழலில் சிக்கித் தவிப்பதை மணிவாசகப்பெருமான் சிவபுராணத்தில் பாடும் ”புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்.....” என்ற பட்டியலில் பன்னியையும் இணைத்துப் பார்த்து சிரித்துக்கொண்டேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails