Saturday, May 9, 2015

செல்வமே.. சிவபெருமானே...

புவியீர்ப்பு விசை போல ஹார்மோனியப் பொட்டிக்கென்று ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. வாசலில் கார் துடைத்துக்கொண்டிருக்கும் போது பிடித்து வீட்டுக்குள்ளே இழுத்தது. மார்கழி உத்சவம் ஜெயாவில். உடையாளூர் கல்யாணராமன். வார்த்தைக்கு வார்த்தை குரலில் பக்தியைக் குழைத்துப் பூசுகிறார். மனசு பட்டென்று விட்டுப்போகிறது.

செல்வமே... சிவபெருமானே என்று மாணிக்கவாசகரின் வார்த்தைகளில் கல்லையும் உருக்குகிறார். ”பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி....” என்று உடையாளூர் விஸ்தாரமாகப் பாடுவதைக் கேட்போருக்கு கண்களில் நீர் தாரை தாரையாய் வழிகிறது. இதற்கு உருகார்... வேறு ஒரு வாசகத்தும் உருகார்....

வேலவா..வேலவா.. வேல் முருகா வா..வா.. என்ற பாடலில் நம் தோளில் அனாயாசமாகக் காவடி ஏற்றி ஆட விடுகிறார். ப்ரபோ கணபதியில் ஒரு ஸ்திரமான பிடி பிடித்தார். ஞானமுதல்வனுக்கு ஏக மரியாதை.

”நாம சங்கீர்த்தனம் என்பதே நல்ல எக்ஸர்சைஸ் என்கிறார். கையைத் தட்டி ஆடும் பொழுது ஷோல்டர் பெயின் போயிடும்.” ”கையைத் தட்டி என் கூடப் பாடும் போது.. பக்கத்துல இருக்கறவர் என்ன நினைப்பாரோன்னு வெட்கம் வந்ததுன்னா.. கண்ணை மூடிண்டு கையைத் தட்டிப் பாடுங்கோ....” போன்ற நகைச்சுவைகள் இடையிடையே..

ராமா...ராமா.. என்று நாமம் சொல்லடா.. எமன் மிக பொல்லாதவன் விடமாட்டான்... ராம பக்தன் என்று சொன்னால் தொடமாட்டான்.. ஆஹா..ஆஹா.. அற்புதம்..அற்புதம்..

இப்போது விட்டலா..விட்டலா.. பாண்டு ரங்கா.... யதுகுல திலகா... விட்டல..விட்டல்.. ஜெய்..ஜெய்.. விட்டல...

சபரிகிரீசனே பாஹிமாம்... சாந்த ஸ்வரூபனே ரக்ஷமாம்...

காலையிலே இன்னும் ஒரு வாரத்திற்கான பக்தி டோஸ் ஏற்றிக்கொண்டேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails