அர்த்தராத்திரி. வெங்கடேசனுக்கு ஃபோன். திடுக்கிட்டு எழுந்தால்
எதிர்முனையில் ஆஃபீஸ் நண்பர். “சாரி சார்.. மூர்த்தி செத்துட்டார்..”.
மூர்த்தி காலமான துக்கத்தைக் காட்டிலும் இன்னொரு துக்கம் வெங்கடேசனை
படுக்கையிலிருந்து முட்டித் தள்ளியது. அச்சச்சோ.. இனிமேல் யாரிடம் கேட்பது?
என்ற நினைப்பில் இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. காலையில் மனைவியும்
அவரும் துக்கம் நடந்த வீட்டில் இருந்தார்கள். “நிச்சயம் என்னாச்சுன்னு
கேட்டுட்டு வந்துடுங்க.. சும்மாவா?... சரி.. பசங்களை ஸ்கூலுக்குக்
கிளப்பணும்...நான் புறப்படறேன்....” என்று வெங்கடேசனின் மனைவி வீட்டுக்கு வந்துவிட்டார்.
வெங்கடேசனுக்கு சாவு வீட்டில் கேட்க வாய் எழவில்லை. மூர்த்தி
ஏமாற்றவில்லை. எமன் தானே ஏமாற்றினான் என்று மனசைத் தேற்றிக்கொண்டு பிரேதம்
எடுக்கும்வரை இருக்கலாம் என்று அமைதியாகஅமர்ந்திருக்கிறார். சவ
ஊர்வலத்திற்கு எல்லாம் ரெடி. வீட்டிற்கு போகலாம் என்று வெங்கடேசன்
எழுந்திருக்கும்போது இறந்துபோன மூர்த்தியின் பையன் ஓடி வந்து “அம்மா
கூப்பிடறாங்க...”ன்னு உள்ளே அழைத்துப்போகிறான். அழுது முகம் வீங்கிய
மூர்த்தியின் மனைவி “இந்தாங்க..உங்க கிட்ட வாங்கின பத்தாயிரம் ரூபாய்...”
என்று எடுத்து ரூபாய் நோட்டுக் கட்டை நீட்டுகிறார். வெங்கடேசனுக்கு
தூக்கிவாரிப் போடுகிறது. ”இல்லீங்க...” என்று சங்கோஜமாக வாங்க மறுக்கிறார்.
“நெஞ்சு வலின்னு மாரைப் பிடிச்சுக்கிட்டு ஆஸுபத்திரி போற வழியில
வெங்கடேசன் கிட்டே பத்தாயிரம் ரூபாய் வாங்கியிருக்கேன். கொடுத்துடுன்னு
சொன்னார்ங்க.. வீட்டுக்கு உசிரோட திரும்பலை... நீங்க இத வாங்கிக்கிட்டாதான்
அவரு நிம்மதியா போவாரு....”ன்னு பிரேதத்தைக் காண்பிக்கிறாள் மூர்த்தியின்
மனைவி.
அதிர்ந்துபோன வெங்கடேசன் குழந்தை போல குலுங்கி அழுதார்.
*
ஏதாவது புரட்ட காலையில் சரியாக நானூற்று இருபது விநாடிகள் நேரமிருந்தது. எழுத்தாளர் Vidya Subramaniam
எழுதிய ”தகப்பன் சாமி” சிறுகதைத் தொகுப்பு மேஜையில் படுத்திருந்தது.
மொத்தம் இருபத்தோறு கதைகள். குன்ஸாக திருப்பிய பக்கத்தில் படித்த “கடன்
பட்டார் நெஞ்சம்....” என்கிற சிறுகதையிலிருந்து நான் உள்வாங்கியதை மேலே
எழுதியிருக்கிறேன். பத்தாயிரம் ரூபாய் என்பதை வலுக்கட்டாயமாக கடைசி பாரா
வரை இழுத்து எழுதிப்பார்த்தேன். மூலத்தில் ஆரம்பத்திலேயே இத்தனை ரூபாய்
என்று ஆரம்பித்து வசனமாடி எண்ணங்களாடி துளிக்கூட தொய்வடையாமல் கதையை
ஓட்டியிருந்தார் கதாசிரியர்.
ஆஃபீஸ் சென்ற பின்னரும் மனசைக்
குடைந்தது. மூர்த்தியின் உன்னத குணமும் வெங்கடேசனின் யதார்த்த குணமும்
சேர்ந்து கலந்துகட்டி பல நியாபகங்கள் எழுந்தன.
மூர்த்திகள் வாழ்க.
0 comments:
Post a Comment