சேப்பாயியில் வீட்டிலிருந்து ஏழே நிமிடத்தில் ஏ.எம்.ஜெயினுக்குள்
நுழைந்துவிடலாம். ஏழாவது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி-2015.
இன்றைக்கு நாளைக்கு என்று நாட்களைத் துரத்திவிட்டு நேற்று ஆறாம் நாள்
ஒருவழியாகப் போயாச்சு. காட்சிக்குள் நுழைந்ததுமே பக்திமணம் கமழ்ந்து
நாசியில் ஏறி நம்மை மின்னல் நேரத்தில் ஒரு ’படார்’ யோகியாக்கியது.
பிரதக்ஷிணமாக இடது புறம் திரும்பியதும் திருப்பதி ஏழுமலை வெங்கடேசப்
பெருமாள். ஜிலுஜிலுவென்று பத்மாவதி தாயோரோடு அருள்பாலிக்க ரெடியாய்
இருந்தார். அவர் தோளில் ”டியர் வெங்கி” என்று கைபோட்டுக்கொள்ளும்
ஸ்திதியில் பக்கத்தில் நின்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்கள். “பெருமாளே”.
பக்கத்து ஸ்டாலில் ஸ்ரீவில்லியிலிருந்து ஆண்டாள் நாச்சியாரின் தங்க விதான
நன்கொடை விண்ணப்பத்துடன் பட்டர் தாழம்பு குங்குமம் ஒரு சிட்டிகை
கொடுத்தார். ஏழூருக்கு மணத்தது. முழுக் கண்காட்சியும் சோர்வின்றிச் சுற்ற
உடம்பிற்கு தெம்பு.
ஆறு ட்ராக்கில் நூறு மீட்டர் ரேஸ் நடத்தலாம் போல
விசாலமான நடைபாதை அமைத்திருந்தார்கள். "உம்மாச்சி காப்பாத்து..”ன்னு கால்
முட்டியளவு வளர்ந்த சில குழந்தைகள் நம்மை உரசி ஓடும்போது மனசுக்கு
பரவசமாயிருந்தது. புத்தகக்காட்சி போல எங்கு கால் வைத்தால் எந்தப் பொறியில்
மாட்டுவோமோ என்கிற மரணபயமில்லாமல் ஸ்டால்களைப் பார்த்துக்கொண்டேயும்
இடையில் தோன்றும் அர்ச்சாவதாரங்களுக்குக் கன்னத்தில் போட்டுக்கொண்டேயும்
ஜாலியாக நடக்கலாம். கழிவறை வசதிகள் வெகு ஜோர். நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை.
கார் நிறுத்தக் கட்டணமில்லை. டோக்கனில்லை. சீராக ஐநூறு கார்கள்
நிறுத்துமளவிற்கு க்ரௌண்ட். ஆஹா. வசதிகள் ஆயிரம். வாழ்க கண்காட்சிக்
குழுவினர்.
நிறைய ஸ்டால்கள். ஸ்ரீசூர்ணமும் கோபிச் சந்தனமும்
பட்டையும் கொட்டையுமாக ஜேஜேயென்று ஜனத்திரள். ஜில்லென்று ஒருவித
குளிர்ச்சியை உணரமுடிந்தது. நுழைந்த மூன்றாவது ஸ்டாலிலேயே புத்தகம் பொறுக்க
ஆரம்பித்தேன். “ப்பா.. இது புக்ஃபேர் இல்லே...” என்று கையில் கிள்ளி
முட்டியால் இடித்தாள் இளையவள். சிரித்துக்கொண்டேன். டாக்டர் டி.எஸ்.
நாராயணஸ்வாமியின் “தெரிந்த புராணம் தெரியாத கதை” இருபாகங்களையும்
அள்ளிக்கொண்டேன். பக்கத்தில் அருணகிரியாரின் ”நாள் என்செயும் வினைதான் என்
செயும்...” என்று திடமாகச் சொன்ன கந்தர் அலங்காரத்திற்கு கொட்டாம்பட்டி
புலவர் மு. இராமலிங்கம் உரை எழுதியிருந்த புத்தகம். முப்பதே ரூபாய்.
பைக்குள் சென்றது.
தமிழன்பர்கள், ஆதிசைவர்கள் என்றெல்லாம்
மன்றங்கள் இருந்தது. நம்முடைய பழங்காலத்து வாத்தியங்களான கொம்பு, கொக்கறை,
தூம்பு போன்றவைகள் மாதிரிக்கு வைத்திருந்தார்கள். திடீரென்று யாரோ ஊதிய
சங்கு பாஞ்சன்யமாகக் கேட்டது. ஒரு நடையில் சைவர்களின் கூட்டம் நிறைய
பார்க்க முடிந்தது. அறுபத்து மூவரின் புராண கதையோடு இயைந்த முக்கிய
சம்பவத்தில் அந்தந்த நாயன்மாரையும் வரைந்து கலர்ப்படம் ஒட்டியிருந்த ஒரு
ஸ்டாலில் “இந்த படமெல்லாம் விலைக்குக் கிடைக்குமா?” என்றேன். அம்பாள்
மாதிரி உட்கார்ந்திருந்த அம்மணி “அந்த நோட்ல உங்க முகவரி எழுதுங்க சார்.
பிரிண்ட் போட்டாக் கூப்பிட்டுக்கொடுக்கிறோம்” என்றார்கள். ஆர்விஎஸ்
என்றெழுதி மொபைல் நம்பர் கொடுத்திருக்கிறேன்.
இந்து சமய
அறநிலையத்துறை பெரிய ஸ்டாலொன்று போட்டிருந்தார்கள். பெருமாளும் தாயாரும்
ஏகாந்தமாக இருந்த அந்த ஸ்டாலில் சடாரி வாங்கிக்கொண்டு பின்னாலேயே
திரும்பினர் சிலர். வடக்கிந்திய கிராமமொன்றிலிருந்து குடும்பமாய்
வந்திருந்த ஒரு குழுவினரின் வயது முதிர்ந்த பாட்டி ஒரு ஸ்டாலில்
அமர்ந்திருந்தார். அவரை மூடியிருந்த தோல் போர்வையில் லட்சம் சுருக்கங்கள்.
ஆனால் கண்களில் அசாத்திய தீர்க்கம். எவரையும் இரண்டு நொடியாவது
கட்டிப்போடும் காம்பீர்யம்.
ஸ்ம்ஸ்க்ருத அகாடமியினர் கடை
விரித்திருந்தார்கள். கி. சாவித்திரி அம்மாள் மொழிபெயர்த்த வி.எஸ்.
ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார் ஆங்கிலத்தில் ஆற்றிய இராமாயணப் பேருரைகளின்
புஸ்தகம் ஒன்று கிடைத்தது. பொக்கிஷம். திருப்பின பக்கமெல்லாம் கண்
எடுக்காமல் படிக்க வைக்கிறது. அவரது அடக்கம் என்னை பிரமிக்க வைக்கிறது. ஒரு
துளி. “கடல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நாம் கொண்டு போகும் பாத்திரம்
எவ்வளவு பெரியதோ அந்த அளவுக்குதான் தண்ணீர் நிரப்பிக்கொண்டு வரமுடியும்
என்ற வசனம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதுபோல என்னுடைய
சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இராமாயணத்தை ரொப்பிக்கொண்டிருக்கிறேன்”
என்கிறார். கொஞ்சம் படித்தாலே கும்மாளம் போடும் கூட்டத்தில் சாஸ்திரியாரின்
அவையடக்கம் நாமெல்லா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
ஹிந்து மிஷன்
ஆஸ்பத்திரிக்கு அடுத்த ஸ்டால் ஞானவாபி. ஸ்ரீகாயத்ரி ட்ரஸ்ட்.
குரோம்பேட்டைக்காரர்கள். சிரார்த்தமும் மஹாளயமும் என்கிற நாற்பது பக்க
புஸ்தகத்தை எடுத்துக்கொண்டேன். “முப்பது ரூபாய்தான். அந்த உண்டியல்ல
போட்டுடுங்கோ” என்று கையில் காசு வாங்காமல் மேசையில் கைக்காட்டினார்.
“அனாதை பிணத்தோட கார்யத்துக்கு யூஸ் பண்ணுவோம்..” என்றார் கொசுறாக. முப்பது
ரூபாய்க்கு மேலேயே யத்கிஞ்சிதம் கைங்கர்யம் செய்தேன். நன்றி தெரிவித்தார்
பெரியவர். அவர் செய்யும் இந்த செயற்கரிய செயலுக்கு நாமல்லவா நமஸ்காரம்
செய்யவேண்டும்?
இறைவன் போல சர்வவியாபியாக நிறைதிருப்பது ஊட்டி வறுக்கிதான். குடிக்க பழரசத்தோடு.
ஆஞ்சநேயர், கண்ணப்பர், விவேகானந்தர், சதாசிவம் என்று காணும் தெய்வங்களோடு
எல்லோரும் செல்ஃபி வித் ஸ்வாமீஸ். ஆங்காங்கே செருப்பைக் கழட்டிவிட்டு
ஸ்வாமி கும்பிட்டார்கள். வைதீக ஸ்ரீக்கு எதிர்த்தார்ப்போல ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ.
நாலாயிர திவ்ய ப்ரபந்தம் ஒன்றும் ஜிகினாவில் ஜொலித்த ஆலிலைக் கிருஷ்ணர்
மற்றும் ஸ்ரீராம பட்டாபிஷேக படமும் வாங்கினேன். ”கவரெல்லாமில்லை.
தீர்ந்துபோய்டுத்து...” என்று கஷ்கத்தில் ஏற்றிவிட்டார்.
ஸ்ரீரெங்கநாச்சியார் ஸமேத ஸ்ரீ அழகிய மணவாளனை கையில் ஏள பண்ணிக்கொண்டேன்.
சின்மயாநந்தா, சித்பவானந்தா, சிவானந்த குருகுலம் என்று நெறிதவறாத ஆன்மிக
குருமார்களின் ஆஸ்மர ஸ்டால்கள். ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் புஸ்தக ஸ்டாலும்
உண்டு. எவ்ளோ தடிமனில் புஸ்தகம் போட்டாலும் சொற்ப ரூபாய்க்கு விற்கும்
தன்னிகரற்ற மடம். கொட்டகையை விட்டு வெளியில் வந்தால் பிரம்மாண்டமான மேடை.
அனைவரையும் கவர்ந்திழுத்தது ஒரு மொபைல் லக்ஷ்மி நரசிம்மர் கோயில்.
தெலுங்கானாவின் யாதகிரிகுட்டாவிலிருந்து ஒரு நாற்சக்கர வாகனத்தை கோயிலாக
அலங்கரித்து வந்திருந்தனர். அற்புதமான தரிசனம்.
கன்னடத்தில்
ஜான்சிராணி லக்ஷ்மிபாய் ட்ராமா நடித்துக்கொண்டிருந்தார்கள். மன்னையில்
அரிச்சந்திரா நாடகம் பார்த்த நியாபகம் மனசைக் கிள்ளியது. சின்னவள்
ஆர்வமிகுதியில் முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தாள். மிகவும்
இரசிக்கும்படி நடித்தார்கள். சுழன்று ஆடிக்கொண்டிருந்த ஜான்சிராணியைப்
பார்த்து “அப்பா... ஜான்சிராணியா நடிக்கிறது மேலா ஃபீமேலாப்பா...” என்று
துறுவினாள். “நீயே கண்டுபிடி...” என்று விட்டதும் இரண்டாவது விநாடியில்
“ஆம்பளை...” என்று சிரித்தாள்.
வரவுசெலவுக் கணக்கை ஒரு ஃப்ளெக்ஸில்
ப்ரிண்ட் போட்டு தைரியமாகக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். நம்பிக்கையில்
ஒருத்தரும் சீந்தவில்லை. கணக்கை ஒருத்தருக்கும் தெரியாமல் மூடும்போதுதான்
அதைப் பார்க்கவேண்டும் என்று ஆவலாதி அதிகமாகி கழுத்தின் மேல் துண்டு
போட்டுக் கணக்கு கேட்கிறார்கள். திறந்த புத்தகமாய் இருந்துவிட்டால் யாரும்
சீண்டுவதில்லை. ஆங்.. சொல்ல மறந்துவிட்டேனே.. இங்கேயும் ஆனந்தம் யூத்
ஃபௌண்டேஷன் இருந்தார்கள். இஸ்கான்காரர்கள் திவிர க்ருஷ்ண பக்தியில்
ராமஸ்மரணையில் ஈடுபட்டார்கள். ரவிசங்கரின் ஆர்ட் ஆஃப் லிவ்விங் ஜக்கி
வாசுதேவி ஈஷா போன்ற டென்ஷன் கார்ப்போரேட்டர்களுக்கு அமைதி யோகா க்ளாஸ்
எடுக்கும் பன்மொழி குருமார்களின் ஸ்டால்களும் இளைஞர்களை
ஈர்த்துக்கொண்டிருந்தது.
முக்கியமான ஒன்று, நெமிலிச்சேரியில்
இயங்கும் வேதபாடசாலையின் SDP charities ஸ்டால். “நாற்பது
வித்யார்த்திகளுக்கு வேதம் சொல்லித்தரோம். பத்தாவது வரைக்கும் ஸ்கூல்
பாடத்தோட... நெமிலிச்சேரியில க்ருஷ்ண யஜுர் வேதம். நன்மங்கலத்துல சுக்ல
யஜுர்.” என்றார் திருமண் இட்டிருந்த ஒரு பெரியவர். வேஷ்டியை எங்கள்
தஞ்சாவூர் ஸ்டையில் டப்பாக் கட்டு கட்டியிருந்தார். அந்த ரித்விக்குகள்
வேதம் சொல்வது போன்ற ஒரு ஸிடியை தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள்.
என்னால் இயன்றதை உண்டியலில் இட்டு வந்தேன். நிச்சயம் ஒரு முறை நேரில்
சென்று பார்க்க வேண்டும்.
பெரியதிருவடி Jataayu B'luru வைத் தரிசிக்கும் பாக்கியமில்லை. வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் மானஸா கேட்டாள் “ஒன்ஸ் மோர் போலாமா டாடி!”
வேதோ ரக்ஷதி ரக்ஷிதா! தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா!!
0 comments:
Post a Comment