Saturday, May 9, 2015

2015: புது வருஷ சபதங்கள்

ஆஃபீஸிலிருந்து வரும் வழியெங்கும் டாஸ்மாக்குகள் வாசலில் அரசு கஜானாவை நிரப்பி அழகு பார்ப்பவர்கள் பழியாய்க் கிடந்தார்கள். ஜேஜேயென்று கூட்டமான கூட்டம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மேல் போதை. ”டொய்ங்..டொய்ங்...” என்று புத்தாண்டு வாழ்த்து ஈமெயில்கள் ஐஃபோனை தூங்க விடாமல் விழுந்துகொண்டிருக்கிறது. பார்க்குமிடமெல்லாம் நேரில் கைகுலுக்கி வாழ்த்தி மகிழ்ந்தார்கள். பதினான்கு பறந்துவிட்டது. இதோ நாளையிலிருந்து இன்னொரு புதுவருஷம். 

இந்த வருஷத்தில் ஒன்றிரண்டு தவிர புதியதாய் கதையெழுத நேரம் ஒழியவில்லை. வரும் பதினைந்தில் சில சபதங்கள்.

1. கணபதி முனியின் சரிதம் முழுவதும் எழுதி புஸ்தகமாகப் பார்க்க வேண்டும்.
2. மன்னார்குடி டேஸை - “ஹரித்ராநதி” என்று பெயரிட்டு அச்சில் கொண்டுவர வேண்டும். (புஸ்தக தலைப்பு தந்தவர் இரா. முருகன்)
3. பதினான்கில் தேடித்தேடி வாங்கிய புஸ்தகங்களை அட்டையோடு அட்டை படித்து முடிக்கவேண்டும்.
4. நித்யமும் நேரத்தோடு தூங்கி கண்ணுக்கு அடியில் கூலிங்கிளாஸ் மாட்டிவிட்டது போன்றிருக்கும் கருவளையங்களைக் களைந்து சுந்தர ரூபம் பெறவேண்டும்.
5. நட்பிற்கும் சுற்றத்திற்கும் பதினான்கு போலவே பதினைந்திலும் என்னால் ஆனமட்டும் உபகாரங்கள் செய்து மகிழவேண்டும்.
6. கம்பராமாயணமும் கர்நாடக சங்கீதமும் ஓரளவாவது கற்று இன்பம் துய்க்கவேண்டும்.
7. ”பரவாயில்லை.. இன்னிக்கி ஒரு நாள் சாப்பிடலாம்.. ” என்று சுய சமாதானம் சொல்லிக்கொண்டு ஸ்வாகா செய்யும் பாயஸம், கடலை மிட்டாய், பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம், கேக், திருப்பதி லட்டு, க்ரீம் பிஸ்கட், திருநெல்வேலி அல்வா, டெய்ரி மில்க், கிட்கேட், ரவா லாடு போன்றவைகளை ”சீச்சீ.. இது கசக்கும்...” என்று வெறுத்து பற்றில்லாமல் விட்டொழிக்கவேண்டும்.
8. ஆனந்தம் போன்ற முதியோர் இல்லங்களுக்கு அடிக்கடி சென்று யத்கிஞ்சிதமாவது உதவ வேண்டும்.
9. வேலையில் இன்னும் முனைப்போடு ஈடுபட்டு இன்னும் நன்றாக முடுக்கிவிட்டுக்கொண்டு செய்யவேண்டும்.
10. படுக்கையில் கிடக்கும் நீலா சித்திக்கும் இன்னும் என்னை நம்பியிருக்கும் என் வீட்டு 70+களுக்கும் ஈடில்லா இன்பம் அளிக்க பகவானின் அருள் வேண்டும்.
11. புது டைரிகளில் ”personal memoranda" வுக்குப் அப்புறம் பத்து இருபது பக்கமாவது எழுதிப்பார்த்துவிட வைராக்கியம் சித்திக்கவேண்டும்.
12. விடுபட்ட சில உலக சினிமாக்கள் சிலவற்றைப் பார்த்துவிடவேண்டும்.
13. அநேகர் விரும்பும்படி நடந்துகொள்ள ஆகச்சிறந்த முயற்சிகள் எடுக்கவேண்டும்.
14. ஆ.வி. குமுதம் போன்ற வெகுஜன இதழ்களில் ஒரு பக்கம் அரை பக்கமாவது எழுதிவிட வேண்டும். ஏற்கனவே பதினான்கில் குங்குமத்தில் ஐந்து பக்கங்கள் நிரப்பியது மனசுக்கு திருப்தியாக இருந்தது.
பதிமூன்றில் இருந்த நண்பர்கள் எண்ணிக்கையைப் போல இருமடங்கு பதினான்கில் வாய்த்தது. தினமும் நண்பர்கள் கணக்கு அரசியல்வாதியின் ஸ்விஸ் வங்கிக் கணக்கு போல வளர்ந்து நட்புக் காடாய்ச் செழித்தது. புதுசுபுதுசாய் தினுசுதினுசாய் நண்பர்கள். ஏற்கனவே அறிமுகமாகி நட்புச் சங்கிலியில் இறுகக் கட்டிப்போட்டவர்களிடம் இன்னும் அன்னியோன்யம் ஏற்பட்டது. அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
WISH YOU A HAPPY AND PROSPEROUS NEW YEAR - 2015

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails