தொடுவானத்தில் மஞ்சள் பூசியிருந்த சாயங்கால நேரம். போர்டின் தங்கமுலாமில் "காவேரி போஜனம்”. சூரிய வெளிச்சத்தில் தகதகத்தது ப்ளேட் டம்பளர் ஓசைகள் ஆர்க்கெஸ்ட்ரா நடத்திக்கொண்டிருந்ததன. கடை பரபரப்பாக இருந்தது.
”யேய்.. யாருப்பா டேபிள் ஏழு?.. கஸ்டமர் கையி காய தேடறாங்க..”
“அசோகா ஹல்வா... சூடாயிருக்கு.. வாசல் போர்டுல எழுது.... பக்கத்துல ஆவிபறக்கிற மாதிரி சின்னதா படம் போடு...”
“ஈவினிங் ஸ்பெஷல்... அடை அவியல்... அதையும் போல்டா எழுதிடு..... தட்டு வரைஞ்சு கலர் சாக்பீஸ்ல ஓரத்துல வெல்லச்சர்க்கரையை குமிச்சா மாதிரி போடச்சொல்லு...”
“செக்கியூரிட்டியை.. டூவீலரயெல்லாம் வரிசையா போடச்சொல்லி சொல்லச்சொல்லு... என் காருக்கு கொஞ்சம் இடம் விட்டு வண்டியெல்லாம் வைக்கச்சொல்லு....”
ஒரு வருஷமாகத்தான் வாசலில் கண்ணாடிக் கதவு. அலங்கார மேஜை. குஷன் நாற்காலி. வெள்ளித் தட்டில் வட்டமாக வெட்டிய வாழை இலைப் போட்டு உணவுப் பரிமாறல். கண்ணாடி வழியே என் ஸ்வேத ஃபார்ச்சூனரை கல்லாவிலிருந்து ரசித்துக்கொண்டிருந்தேன். வெள்ளை அண்ட் வெள்ளையில் சர்வர்கள். கண்டத்தில் ”போ”வுன் கையில் கேட்ஜட்டெல் ஆர்டர் எடுப்பவர்கள். தட்டு மட்டுமே தெரியுமளவிற்கு அரையிருட்டில் பந்தி. வாரத்திற்கு வாரம் மளமளவென்று விருத்தியடைந்து இரண்டே வருஷத்தில் கொஞ்சம் காசும் வாசலில் காரும் சேர்ந்ததில் அப்பாவோட ஆசீர்வாதம் பரிபூரணமாக நிறைந்திருக்கிறது.
சென்னையிலிருந்து திருச்சிக்குள் நுழையும் வயிறு காயாதவர்கள் கூட “காவேரில காஃபியாவது குடிச்சுட்டுப்போவோம்...” என்று காரை நிறுத்தி உள்ளே நுழைந்துவிடுவார்கள். ”ராத்திரியும் கொஞ்சம் கடையைத் தொறந்து வச்சேன்னு வச்சுக்கோ... சேல்ஸ் இன்னும் பிச்சுக்கும்...” என்ற அடாத அட்வைஸ்களுக்கு மயங்காமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். எனக்கான கஸ்டமர்கள் யார் என்று இனம் கண்டு வியாபாரம் செய்ததில், லயன்ஸ் க்ளப் ரோட்டரி சங்கத்து உள்ளூர்வாசிகள் விழா நடத்தி பாராட்டுப் பத்திரம் கொடுத்தார்கள். ஹை க்ளாஸ் விஜிடேரியன் என்ற பெயரையும் காவேரி போஜனம் சம்பாதித்துக்கொண்டது.
“அழுக்கு வேஷ்டியும்... தோளுக்குத் சேப்பு காசித்துண்டோட... வேர்வையும் வேக்காளமுமா... புகையிலே நின்னு நின்னு.. சனீஸ்ரபகவான் பிடிச்சுண்ட நளமஹாராஜா மாதிரி கறுத்துப்போயி.. படாத பாடு பட்டார்டா அந்த மனுஷன்... சமயபுரத்தம்மாவோட க்ருபா கடாக்ஷம்... இப்போ கொஞ்சம் நிமிர்ந்திருக்கோம்...” கடையடைத்து... வாசற்படியில் திருஷ்டிக்கு சூடம் ஏற்றி... இரவு வீட்டிற்குள் காலெடுத்து வைக்கும் போது அம்மாவின் நித்யபடி புலம்பல்.
பெரிய இலுப்பச்சட்டியில் அசோகா ஹல்வா கிளறி உள்ளங்கையகல நறுக்கின வாழையிலையில் சுடச்சுட கொடுப்பார் வெங்கட்ராமய்யர். ”வெறும் ஹல்வா மட்டும் எவ்ளோ நாள் போடுவே வெங்குட்டு. அவல் கடலை வறுத்துப்போட்டு கரகரன்னு மிச்சர் போடேன். பிச்சிண்டு போகும்...” என்று ஏற்றிவிட்டவர் அட்வகேட் சீனு.
“டே கண்ணா! வக்கீல் சீனு அவ்ளோ பெரிய மனுஷ்யர். மெட்ராஸ்லே போய் காரசாரமா வழக்காடிட்டு காரைப் போட்டுண்டு வந்து ரோடோரமா உங்கப்பா கடேலே நிறுத்தி ஹல்வாவும் மிச்சரும் சாப்டுவார். காவ்ரியாத்தங்கரைக்காரனுக்கு காஃபி போட வராதாடா? ஏம்மா தர்மு.. நீ சொல்லப்டாதா.. இல்லே ஒத்தாசைக்கு அவனுக்குப் பக்கத்துல நின்னு ஆத்திக் கொடேன்.ன்னு ஒருநாள் கெளப்பி விட்டார்...”
இப்படியாக கடை விஸ்தரிப்பு, சொந்தக்காராளோட சேதிகள் என்று தினமும் என்னிடம் சொல்ல அம்மாவுக்கு ஏதோ ஒரு ராமாயணம் இருக்கும். ”நன்னிலம் பெரியப்பாவோட பெரியவ... அதாண்டா.. லீலா.. அவளோட மாமனாருக்கு சித்த ஸ்வாதீனம் இல்லாம போய்டுத்து.... தானா சுவத்தைப் பார்த்து பேசிண்டு... கைகொட்டிச் சிரிச்சிண்டு... ஸ்நானம் பண்ணிட்டுக் கட்டிண்ட வேஷ்டியைக் கழட்டி கொடில உணர்த்தரேன்னு நேத்திக்கு ஒரே ரகளையாம்.. ஜாதகமெல்லாம் நன்னா பார்ப்பாரே... அவருக்குடா.. நீ அப்போ பொடிப்பய... என்னோட மடிய விட்டு எறங்கமாட்டே....”
”அட போம்மா.. பசிக்கிறது.. சாதம் போடு.. ” இராத்திரி கைலிக்கு மாறிவிட்டு படுக்கையில் சுஜாதாவோ.. திஜாவோ.. லாசராவோ புரட்டப் போய்விடுவேன். கடல் போன்ற வீட்டில் ரெண்டே பேர். பகல் வேளையில் சுந்தரி பார்த்துப்பாள். வீடு பெருக்கி, வாசல் கோலம் போட்டு, பால் வாங்கி வைத்து, பத்துப்பாத்திரம் தேய்ச்சு, சன் லைஃபில் அம்மாவோடு சிவாஜி எம்ஜியார் பாட்டு பார்த்து... எல்லாம்.. எல்லா வேலையும்.. ஏழு எட்டு மணிக்கெல்லாம் ”நா வரேம்மா...”ன்னு வீட்டிற்கு போய்விடுவாள்.
நான் வீட்டிற்கு வரும் பதினோரு மணிக்குள் ஆயிரமாயிரம் அனுபவகக் கதைகள் அவளுக்குள் வந்து முட்டும். பேச நாதியில்லை. ராப்பகல் அகோராத்திரியாக அப்பாவின் அபார உழைப்பு. பல ஆண்டுகளாக வீட்டில் கோலோச்சிய அக்காவை விரட்டிவிட்டு தங்கை திருமகள் வீட்டிற்குள் நுழைந்தாள். அவரும் போய்ச்சேர்ந்துட்டார். வேற மனுஷா கிடையாது. நானும் அம்மாவும்தான். டீவியெல்லாம் பிடிக்காது. “எப்போப் பார்த்தாலும் குடும்பத்தைக் கெடுக்கற கதையே காட்றான்கள்... ரெங்கநாதர் இவாளுக்கெல்லாம் நல்ல புத்தி கொடுக்கப்படாதோ...”ன்னு அங்கலாய்த்து அணைத்துவிடுவாள்.
“எண்பது வயசு தாண்டமாட்டார்னு லீலா மாமனார் கரெக்ட்டா சொன்னார்டா.. “ ரெண்டாவது நாளும் நுழைந்தவுடன் அம்மாவின் புலம்பல். காதில் போட்டுக்கொள்ளாதது போல உள்ளே நுழைந்தேன். டைனிங் டேபிள் மேஜையில் கோயம்புத்தூரிலிருந்து பிரகாஷ் கல்யாணப் பத்திரிக்கை கிடந்தது. என்னோட காலேஜ் மேட். வக்கீல் சீனு மாமாவின் பையன். ”எண்பது வயசு..”ன்னு பேச ஆரம்பிச்சாலே அப்பா தவறிப்போன கதையைச் சொல்லுவாள் அம்மா. சதாபிஷேகம் முடிஞ்சு தம்பதியாய்த் திருவிடைமருதூர் போயிருந்தார்கள். கடையம் குஞ்சு மாமா பையனும் நானும் கூட வரோம்னு தலைப்பாடா அடிச்சுண்டோம். அப்பாவுக்கு இந்த மாதிரி காவலுக்கு வர்றதெல்லாம் பிடிக்காது. “ச்சே..ச்சே.. வேலயப் பாருங்கோடா.. எனக்கு தர்மூ இருக்கா...”ன்னு அம்மாவோட பிடிவாதமா தனியாக் கெளம்பிட்டார்.
“நன்னா மஹாலிங்கம் தர்சனம் ஆச்சு. வெளிப் பிரகாரம் சுத்தினா அஸ்வமேத யாகம் பண்ணின பலன்டீ... ன்னு என்னையும் அழைச்சுண்டு நெருஞ்சி முள்ளெல்லாம் கால்ல குத்தக் குத்த வேகாத வெய்யில்ல பிரதக்ஷிணம் பண்ணினார்.. சின்னக் கொழந்தையாட்டம் கோபுரவாசல் ஆனேட்ட ஆசீர்வாதம் வாங்கிண்டார்... தர்மூ நீயும் தலையைக் குனிடீன்னார்.. வெளில கோயில் தீர்த்தத்து படில செத்த நேரம் உட்கார்ந்தார்.. தர்மூ... தொண்டையை அடைக்கிறது... தண்ணீ தாகமிழுக்கறது..ன்னார்.. எதிர்த்தாத்துல போய் ஒரு சொம்பு தூத்தம் வாங்கிண்டு ஓடி வர்றதுக்குள்ளே தலை சாய்ஞ்சிடுத்து...”
“அம்மா... லீலா மாமனார் சொன்னதால அப்பா போய்ட்டார்னு சொல்றியா?”
“இல்லேடா.. நல்லது யார் சொன்னாலும் நடக்க நாழியாகும்.. கெட்டது ஒடனே பலிச்சுடும்..”
”இப்போ என்ன அதுக்கு?”
“ஒரு காரை வாங்கிவச்சுண்டு ஊரூரா சுத்தறியே.... அவர் பிரயாணமெல்லாம் ஜாக்கிரதையா போகணும்னு சொல்லியிருக்கார்டா.... இப்போ அவர்க்கு சித்த ஸ்வாதீனம் இல்லைன்னாலும்... வாக்பலிதம் உண்டுடா அவர்க்கு.. சக்தி உபாசகர்... அதான் பயம்மா இருக்குடா...”
“போம்மா.... எதாவது சொல்லிடப்போறேன்... ஊரூரா பொழுதுபோகவா சுத்தறேன்.. ஏதோ எனக்குப் பிடிச்ச கோயில் குளம்னு சுத்திண்டிருக்கேன்...”
”வர்ற வைகாசிக்கு நாப்பதுடா... ஒனக்கொரு கல்யாணம் கார்த்தி பண்ணிப் பார்க்கவேண்டாமாடா?”
“ஆச்சரியமா இருந்தது... இத்தன நாழி பேசினதுல என் கல்யாணத்தைப் பத்தி மாதுஸ்ரீ தர்மாம்பாள் ஏதும் பேசலையேன்னு....”
“எகத்தாளம் பண்ணாதேடா.. லீலா மாமனார் லேசுப்பட்ட ஆளில்லை.. வக்கீல் சீனு மாமாவுக்கும் அவர்தான் நாள் குறிச்சார்... அப்போ அவருக்கு சித்த பிரமையெல்லாமில்லை... நாம இந்த வீடெல்லாம் வாங்கினத்துக்கப்புறம் நம்மாத்து ஊஞ்சல்ல உட்கார்ந்து காஃபி ஆத்திக் குடிச்சிண்டிருந்தார். லீலா மாமனார் ஸ்வாதீனமா ’உம்ம கையைக் கொடும்’ன்னு வெடுக்குனு வாங்கிப்பார்த்துப்பிட்டு ’ஒடம்பை நம்ம சுப்புராவ் டாக்டர்கிட்டே காமிச்சுக்கும்’னு பூடகமா சொல்லிட்டுப்போய்ட்டார். ’அடுத்த வாரத்துல காமிச்சுக்கிறேண்டா வெங்குட்டு’ன்னு அப்பாட்ட சொல்லிட்டுப் போனார்... அவாத்துல எல்லோரும் தஞ்சாவூருக்குன்னு காரைக் கிளப்பிண்டு வாசல்ல நிக்கறா...இவரைக் காணும். அப்பாவைப் பார்த்த்துட்டு வாடான்னு பிரகாஷை ஆத்துக்குள்ளே துரத்தினா அவாத்து மாமி.... அவன் அலறியடிச்சு ஓடி வந்து... அப்புறம்தான் உனக்கும் தெரியுமே...”
அம்மா தொணதொணவென்று பேசுவாள். பாவம்! இப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயமாக விடுப்பு எடுத்துக்கொள்கிறேன். அவளையும் காரில் அழைத்துக்கொண்டு ரெங்கநாதரோ, சமயபுரம் மாரியம்மனோ இல்லை திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியோ அழைத்துக்கொண்டுபோய் காண்பித்துவிட்டு எங்கள் ஹோட்டலில் டின்னர் முடித்துவிடுவோம்.
போனவாரம் திருவாரூருக்குப் போய் தியாகராஜர் தரிசனம் பண்ணினேன். கமலாபுரம்கிட்டே வரும்போது கன்னுக்குட்டியொன்று துள்ளிக்குதித்து அம்மாப் பசுவைப் பார்க்க ரோடுக்குக் குறுக்காக ஓடியது. மனுநீதிச்சோழன் மின்னல்வெட்டாய் நியாபகம் வந்தான். சீட்டிலிருந்து எழுந்து ப்ரேக்கில் ஏறி உட்கார்ந்தேன். அப்பாம்மா செய்த புண்ணியம். வலதோரம் ஒரு அரசமரத்தில் உரசி நின்றது. ரியர்வ்யூ மிரர் உடைந்து தொங்கியதோடு போனது.
“கண்ணா! அம்மா சொல்றேன்னு நினைச்சுக்காதே... வண்டியில சுத்தறத விடுடா.. லீலா மாமனார் சொன்னதுதாண்டா திரும்பத் திரும்ப ஞாபகம் வர்றது.. பிரயாணம் வேண்டாம்... ஆக்ஸிடெண்ட்ல உசிர் போகக்கூட வாய்ப்பிருக்குன்னு சொல்லியிருக்கார்டா...”
“அம்மா.. இதெல்லாம் சுத்த ஹம்பக்.. நீ புலம்பாம இரு... நாம ஸ்வாமியெல்லாம் கும்படறோம்... ஒண்ணும் ஆகாது...”
“ஜோஸியம் பொய்யின்றியா.....”
“ஜ்யோதிஷம் வேதத்தோட கண். பொய்யின்னு சொல்லலை. ஆனா க்ஷண நேரம் தப்பிப்போனாலும் கால்குலேஷன் மிஸ் ஆயிடும்மா... ஏதோ அவர் சொன்ன ரெண்டு தடவை அகஸ்மாத்தா பலிச்சுப்போச்சு... மனசைப் போட்டுக் குழப்பிக்காதே...”
டின்னர் முடித்து வீட்டில் நுழையும் போது திரும்பக் கேட்டாள்.
“கோயம்புத்தூர் கல்யாணத்துக்குப் எப்படிப் போரே?”
“என் வண்டிதான்..”
“தாயே... சமயபுரத்தம்மா.. நீதாண்டியம்மா காப்பாத்தணும்...”. உள்ளே போய்விட்டாள்.
கோயம்புத்தூரிலிருந்து திரும்பும்போதும் ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட். அம்மாவுக்குத் தெரியாமல் வைத்திருந்தேன். கமலேஷ் சும்மாயில்லாமல் “மாமீ! மயிரிழையில தப்பிச்சேன்னு சொல்லுவாளே.. அந்த மாதிரி தப்பிச்சோம்...”. சமையற்கட்டுலேர்ந்து ஓடோடி வந்தாள் அம்மா. “என்ன சொன்னே? என்ன ஆச்சு?” கேள்விகளால் துளைத்தாள். இனி மறைக்கமுடியாது. “என்னாச்சுடா கண்ணா?” என்னை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டாள்.
“முன்னாடி லாரி போய்ண்டிருந்தது. அதுக்கு முன்னாடி ஒரு கவர்மெண்ட் பஸ். அஞ்சாறு கிலோ மீட்டர் தாண்டவே முடியலை. லாரியை ஓவர்டேக் பண்ணினேன். ரொம்ப தூரத்துல ஒரு கார் எதிர்த்தாப்ல வந்துண்டிருந்தான். பஸ்ஸையும் ஓவர் டேக் பண்ணிடலாம்னு போறச்சேதான் லாரிக்கும் பஸ்ஸுக்கும் நடுவுல ஒரு கார் இருந்தது. முன்னாடி வந்திண்டிருந்த கார் பக்கத்துல வந்துடுத்து. முன்னாலையும் போக முடியாது.. பின்னாலையும் போக முடியாது... மாட்டினுட்டேன்... அப்படியே ரைட்ல ரோட்டுக்குக் கீழே ஒரு சின்னப் பள்ளத்துல இறக்கிட்டேன்...”
அம்மா கலவரமானாள். “கண்ணா.. வேண்டாம்டா.. நடக்கிறதெல்லாம் நன்னாயில்லை. என் மனசைப் பிசையறது... ரொம்ப தூரம் போகனும்னா பஸ்ல போடா.. இல்லே ட்ரெயின்ல போ.. இப்படி போகாதேடா.. லீலா மாமனார் நினைப்பு வந்துண்ட்டே இருக்கு...”
அம்மாவை சமாதானப்படுத்தினேன். போகலைன்னு சத்தியம் பண்ணினேன். ஒரிரு வாரங்கள் ஓடியது. நாற்பது வயசுக்கு மேலே கல்யாணமெல்லாம் வேண்டாம் என்று வைராக்கியமாக இருந்தேன். ஹோட்டலிலிருந்து ராத்திரி வந்த போது ஒரு ஃபோட்டோவை முகத்துக்கு நேரே நீட்டினாள். அதிரூப சுந்தரியாக இருந்தாள். நெற்றியில் குங்குமத்தோடு விபூதியும் துலங்கியது. சாந்தமான முகம். “பொண்ணு மாம்பலமாம். பேரு வாணி. அவாளுக்கு பூர்வீகம் மாயூரமாம். மாயவரம் பக்கத்துல நீடூர்ல தோப்பு தொறவெல்லாம் இருக்காம். அதுக்கும் முப்பத்தஞ்சு ஆயிடுத்து. ஜாதகம் பார்த்துட்டேன். பொருந்திப் போறது. வர்ற ஞாயித்துக்கிழமை பொண்ணு பார்க்க வர்றேளான்னு கேட்டா? வரேன்னு சொல்லிட்டேன். ராக்ஃபோர்ட்ல புக் பண்ணிடு.”
“அடுத்த வாரத்துக்கு இப்போ கிடைக்குமா? தட்கால் ட்ரை பண்ணலாம். கிடைக்கலைன்னா என்னோட ஸ்வேதம்தான்.. “
”எனக்கு இப்பவே பயம் வயத்துல புளியைக்கரைக்கறதுடா... வேண்டாம்......”
ஞாயிற்றுக்கிழமை. சாயந்திரம் நாலரை மணி ராகுகாலத்துக்கு முன்னாடி சென்னையில் இருக்கவேண்டும். “முக்குப் புள்ளையாருக்கு ஒரு சிதறு தேங்காய் ஒடச்சுடுடா...” சொல்லிவிட்டு அம்மா முன்னால் உட்கார்ந்துகொண்டாள். திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் ஃபார்ச்சுனர் வேகம் பிடித்தது. கடைப் பையன் கமலேஷ் ஏதோ பேசிக்கொண்டே வந்தான். பின்னாடி புதுமாப்பிள்ளை பிரகாஷும் அவன் பொண்டாட்டியும் களுக் களுக்கென்று சிரித்துக்கொண்டே ரகசியம் பேசினார்கள். மனசுக்கு நிறைவாக இருந்தது.
சிறுவாச்சூர் மதுரகாளி தாண்டினோம். “அம்மா.. மதுரகாளி..” திசையைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டாள் தர்மாம்மா. “அண்ணா.. காஃபிக்கு எங்கியாவது நிறுத்தலாமே....” கமலேஷ் மௌனத்தைக் கலைத்தான். “டேய்... உன்னோடது மாதிரியில்லாம நல்ல ஹோட்டலா நிறுத்துடா.. பசிக்கிறது...” பிரகாஷ் நக்கலடித்தான்.
திண்டிவனம் தாண்டியவுடன் வஸந்தபவன். இரண்டு கார்களுக்கு நடுவில் ஃபார்ச்சூனரைச் சொருகினேன். இறங்கும்போதே “எனக்கு காஃபி போறுண்டா” என்றாள் அம்மா. “கிளம்பறச்சேயே லேட் பண்ணிட்டே... நாலரைக்கு ராகுகாலம் ஆரம்பிச்சிடும்.. இல்லேன்னா ஆறு மணிக்கு மேலே போகணும்... திரும்பவும் திருச்சி வர்றத்துக்கு ரொம்ப லேட் ஆயிடும்...”
பிரகாஷும் அவன் பொண்டாட்டியும் நெய் ரோஸ்ட் சாப்பிட்டார்கள். என்னோடும் அம்மாவோடும் கமலேஷ் காஃபி குடித்தான். “ஃப்ரெஷ் ஜூஸ் எதுவும் சாப்பிடறயா?”ன்னு பிரகாஷிடம் கேட்டேன். ”ம்...” என்று அவன் பொண்டாட்டி தலையாட்டினாள். தலையில் மல்லிகைப் பந்து சூட்டியிருந்தாள். புதுப்பொண்ணு என்று சர்வர் உத்துப்பார்த்துவிட்டுப் போனான். “மொஸாம்பி ஒண்ணும்.. பொமோகிரேனேட் ஒண்ணும் குடுங்க...சீக்கிரம்..”
“அவசரப்பட வேண்டாம் கண்ணா.. கேட்டியா.. மெதுவாவேப் போலாம்... நாலரைக்கு மின்னாடி போக முடியாது.. பரவாயில்லே...” காற்று வீசி கேசத்தைக் கலைத்துக்கொண்டிருந்தது. வஸந்த பவன் வாசலில் பிரகாஷுக்காக நின்றுகொண்டிருந்தேன். “புதுப்பொண்ணு மாப்பிள்ளை.. மெதுவாத்தான் வருவாங்க...” கமலேஷ் அநியாயத்துக்கு வெட்கப்பட்டுக்கொண்டு சொன்னான். சிரித்தேன். பக்கத்து பீடாக் கடையில் ஒரு நிஜாம் பாக்கு வாங்கலாம் என்று நகர்ந்தேன்.
“க்ரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்....” தொடர்ந்து “டமார்.....” என்று மோதும் சத்தம். திரும்பி சாலையைப் பார்த்தேன். எதிர்புறத்தில் திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த டஸ்டர் க்ராஸ் செய்து ஓடியவனுக்காக ப்ரேக் அடித்து மீடியேட்டரில் மோதி நின்றது. பின்பக்கத்திலிருந்து டயர் தேய்ந்து புகை கிளம்பியிருந்தது. அம்மா ஆடிப்போயிருந்தாள்.
இங்கிருந்து எதிர்சாரிக்கு ஓடினேன். கமலேஷ் பின்னாலயே ஓடி வந்தான். “பார்த்துடா...” அம்மா பதறினாள். டஸ்டரை சுத்தி வந்தேன். உள்ளே அசைவு தெரிந்தது. ஒவ்வொருத்தராக இறங்கினார்கள். பின் கதவு ஜாம் ஆகியிருந்தது. முன்னாலேறி திறந்துவிட்டேன். வயசான அம்மா. அப்பா. ஒரு சின்னப் பெண். கல்லூரியில் படிக்கலாம். ஓட்டியவன் அண்ணன் போல இருந்தான். “என்னப்பா ஆச்சு?” விசாரித்தேன். “ஸ்டுப்பிட் சார்... நின்னுக்கிட்டே இருந்தான். தபால்னு ஓடிவந்துட்டான்....” எதிர்புற மரத்தடிக்கு ஒவ்வொருத்தராக கொண்டு போய் விட்டேன். ”வண்டிக்கு பின்னால செடி குத்தி வையுப்பா.. ரோட் சர்வீஸுக்கு ஃபோன் பண்ணிட்டியா?” வண்டியின் பின்புறத்திலிருந்து இன்னமும் புகை கசிந்தது.
ரோடு கிராஸ் செய்து வந்துகொண்டிருந்தேன். கமலேஷ் என் பின்னாலையே வந்தான். மோதிய வண்டியை ஒருமுறை பின் பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். வேகமாக ஒரு நகரப்பேருந்து கடந்து சென்றான். “பேய்த்தனமா ஓட்றானுங்கல்ல?..” கமலேஷிடம் வினவினேன். அவன் சிரித்தான். “போகலாம்... லேட்டாவுது...” கூப்பிட்டான். எதிர்முனையில் அம்மா தவிப்போடு நின்றுகொண்டிருந்தாள். பிரகாஷும் அவன் மனைவியும் வந்து காத்திருந்தார்கள். இங்கிருந்தே ஆட்டோ லாக்கை திறந்து உள்ளே போகச்சொன்னேன்.
“கமலேஷ்.. நீயும் க்ராஸ் பண்ணு.. வந்துடறேன்...”
“நீங்க எங்க போறீங்க?”
“டேய்.. பின் சக்கரத்துகிட்டே தங்கச் சங்கிலி ஒண்ணு கிடக்கு. அந்தம்மாவோடதுன்னு நினைக்கிறேன் கொடுத்துட்டு வரேன்...” கமலேஷ் மீடியேட்டரில் ஏறி அந்தப் பக்கம் கடந்து செல்ல காத்திருந்தான்.
டஸ்டர் பின்னால் குனிந்து செயினை எடுக்கும் போது வெகு அருகாமையில்........ என்ன சத்தம்?....
ஏதோ.......இல்லையில்லை...
லாரி...லாரி... ஆமாம் ஜல்லி லோடு லாரி.....
................................................
என்னையும் டஸ்டரோடு சேர்த்து அழுத்திக் கூழாக்கிச் ரத்தச்சாறை வழியவிட்டதை நான் பக்கத்து புளியமர உச்சியிலிருந்து பார்த்தேன். பிரகாஷும் மனைவியும் மோகம் களைந்து அதிர்ந்திருந்தார்கள். கமலேஷ் செய்வதறியாது நின்றிருந்தான். அம்மா “கண்ணாஆஆஆ...” என்று மூச்சுவிடாமல் அலறி மூர்ச்சையடைந்தாள். பிரேதத்தை திருச்சிக்கு கொண்டு போய் விடுவார்கள். ஆம்புலன்ஸுக்கு டஸ்டர் பையன் ஃபோன் பண்ணிவிட்டான்.
எனக்கு ”வாகன ஆக்ஸிடெண்டால சாவு”ன்னு சொன்ன லீலா மாமனார் நினைவுக்கு வந்தார். இன்னொருத்தன் ஆக்ஸிடெண்டால உனக்குச் சாவுன்னு தெள்ளத் தெளிவாச் சொல்லியிருந்தா எட்டிப் பார்த்திருக்கமாட்டேன்ல. புளியமரக் காத்து லேசாக இழுத்தது. ”அகால ம்ருத்யூ ஹரணம் சர்வ ரோக நிவாரணம்....” போன சங்கராந்திக்கு பூஜை பண்ணிய பாலை என் குழித்த கையில் உத்திரண்ணியால் விட்ட வாத்தியார் அலையலையாய் தெரிந்தார்.
பின்குறிப்பு: நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதிய கதை!