Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 5 : ஜோதிஷ திலகம்

...வெகுண்டு போன அந்த ஜோதிடர் ஜாதகக் கட்டுகளை திண்ணையில் விசிறியெறிந்து “இதைவிட பெருசா உன்னால் என்ன சொல்லிவிட முடியும்? ம்.. ” என்று உறுமி காட்டுக் கத்தலாகக் கத்தினார். இதற்கெல்லாம் கணபதி அசரவேயில்லை. கை அனாயாசமாகச் சீட்டாடிக் கொண்டிருந்தது. ராமதாஸ் பந்துலு கேட்ட ஜாதக சந்தேகக் கேள்விகளுக்கு வாயிலிருந்து வார்த்தைகள் தங்குதடையில்லாமல் ப்ரவாகமாக வந்து விழுந்து கொண்டேயிருந்தது.

இந்த இளைஞன் லேசுப்பட்டவனில்லை என்று அந்தக் கூட்டம் அதிசயித்தது. கூச்சலிட்ட ஜோதிடர் பொட்டிப்பாம்பாக அடங்கினார். வாய் பிளந்தார். கோஷ்டியினர் அடுத்தநாளும் அங்கேயே தங்கும்படி வேண்டினார்கள். “மன்னித்துக் கொள்ளுங்கள்...” என்று ஒற்றை வார்த்தையில் கணபதி க்ஷேத்திராடனம் புறப்படுவதைத் தெரிவித்தார். பந்துலு கணபதிக்கு கைகொள்ளா வெகுமதிகள் அளிக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனாலும் அதிகாலையில் கணபதி மற்ற இருவரோடும் விறுவிறுவென்று கிளம்பினார்.

நேற்று தாம்தூமென்று குதித்த அந்த வயதான ஜோதிடர் பந்துலுவின் ஏவலின் பேரில் தர்மசாலாவிலிருக்கும் வாரனாசி அச்சுதராம சாஸ்திரி என்பவரிடம் காதும்காதும் வைத்தார்ப்போல சில விஷயங்களை போட்டுவிட்டு நகர்ந்துவிட்டார். அச்சுதராம சாஸ்திரி புலவர். தர்மசாலை வைத்திருக்கும் கிருஷ்ணம்மா நாயுடுவின் ஆப்த நண்பர். நாயுடுவுக்கு நேரமே சரியில்லை. எதையெடுத்தாலும் சறுக்கல். தனது நண்பனுக்கு விடிவுகாலம் வராதா என்று காத்திருந்த அச்சுதராம சாஸ்திரி, கணபதியின் மேதாவிலாசத்தைப் பற்றி அந்த ஜோதிடர் சொன்னவுடன் எப்படியாவது கணபதியை கிருஷ்ணம்மா நாயுடு வீட்டிற்கு அழைத்துச் செல்ல தீர்மானித்தார்.

கிருஷ்ணம்மா நாயுடு தர்மசிந்தனையுள்ள மிராசுதார். முதல் தாரத்தின் வழியே சந்ததியில்லை என்பதால் இரண்டாவது மணம் புரிந்துகொண்டார். துரதிர்ஷ்டவசமாக இரண்டாவது கல்யாணத்திற்குப் பிறகு தீராத மலட்டுத்தனமை அவரைத் தொற்றிக்கொண்டது. கணபதி அவருடைய ஜாகத்தைப் பிரித்தார். சில நிமிடங்களில் “மூன்று மாதத்தில் இந்த நோயிலிருந்து சொஸ்தப்படுவீர்கள். உங்களது இரண்டாவது மனைவிக்கு ஒரு மகள் பிறப்பாள். நீங்கள் ஒரு மகனை வேறு சுவீகாரமெடுத்துக்கொள்வீர்கள்” என்று சரமாரியாகப் பொழிந்தார்.

கணபதி அங்கு இருந்தாலே நாயுடுவுக்கு அது ரோக நிவாரணமாகயிருந்தது. நாயுடுவும் அந்த வியாதியிலிருந்து ஏறக்குறைய விடுபட்டது போல உணர்ந்தார். மற்ற இரு யாத்ரீகர்களுக்கும் பணம் கொடுத்து வழி அனுப்பிவிட்டு கணபதியை தன்னுடன் பத்திரப்படுத்திக்கொண்டார்.

கணபதியின் காசி யாத்திரை தடைப்பட்டது. அச்சுதராம சாஸ்திரியுடனும் இன்னும் சிலருடன் சத்சங்கம் அமைத்துக்கொண்டு இலக்கியங்களையும் காவியங்களையும் அக்கக்காக அலசினார். திண்ணைகள் திணறின. யாராவது முழநீள பாடலைப் பாடினால், அவர்கள் முடித்ததும் திரும்ப ராக தாளம் மாறாமல் கணீரென்று பாடுவார். கையில் நீட்டிய புஸ்தகத்தை குன்ஸாக ஒரு பக்கத்தைத் திறந்து பார்ப்பார். இரண்டு மூன்று தடவை தலைக்கு மேலே தூக்கிப் போட்டு விளையாட்டாக கேட்ச் பிடிப்பார். குழுமியிருப்போர் வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டிருக்க, சற்று முன்னர் திருப்பிய பக்கத்தை அக்ஷரம் பிசகாமல் அப்படியே ஒப்பிப்பார். அனைவரும் திறந்த வாய் மூடாமல் இதை இரசிப்பார்கள்.

அவரது ஆற்றலுக்கு எல்லையே இல்லை. ஒரே நேரத்தில் இரண்டு கையாலும் சுற்றி அமர்ந்திருக்கும் நாலைந்து பேருடன் செஸ் விளையாடுவார். அந்த ஐந்து பேருக்கும் நகர முடியாமல் செக்கும் வைப்பார். ஆட்டம் ஜெயிப்பார். இப்படி சகஜமாக அனைவரோடும் விளையாடிக்கொண்டிருக்கும் வேளையிலும் சரளமாக சமஸ்கிருதக் கவி புனைவார். அந்த அமுதத்தைக் கேட்பவர் உணர்ச்சிவசப்பட்டு புளகாங்கிதமடைவார்கள். நந்திகிராமத்தில் அவர் இருந்த வரையில் அவ்வூரிலிருந்த நிறைய புத்திசாலிகளைக் கவர்ந்து தம் பக்கம் காந்தமாய் இழுத்தார். அதே சமயத்தில் அவர் கணித்தது போல நாயுடு தனது நீங்கா மலட்டுத்தன்மையிலிருந்து பூரண நலம் பெற்றார். நாயுடுக்கு சந்தோஷமான சந்தோஷம்.

கணபதியின் தந்தை நரசிம்ம சாஸ்திரியை அழைத்து வர ஆளனுப்பினார். தந்தையையும் மகனையும் சதஸ்ஸில் நிற்க வைத்து பூரண கும்ப மரியாதை அளித்து கௌரவித்தார். வருடத்திற்கு ஐம்பது ரூபாய் கணபதிக்கு சம்பாவணையாகத் தருவதாக வாக்களித்தார். மேலும் அவரது தீர்த்தயாத்திரைக்கு தேவையான பொருட்செலவையும் ஏற்பதாக உறுதியளித்தார். “இவருக்கு தீர்த்தயாத்திரை போவறதுக்கு எவ்வளவு வேணுமின்னாலும் உதவலாங்க...ஆனா ரொம்ப சின்ன வயசா இருக்காருங்க.. அதான்.. காசி வரைக்கும் ரொம்ப தொலைவுக்கு இப்ப எப்புடி ஒண்டியாளா அனுப்புவீங்கன்னு?.. ” என்று நரசிம்ம சாஸ்திரியிடம் தடுமாறினார்.

மகோன்னதமாகத் தவத்துக்கு கிளம்பிய கணபதியின் தீர்த்தயாத்திரைப் பயணம் கிருஷ்ணம்மா நாயுடு என்கிற நல்ல நண்பரை சம்பாதித்ததுடன் நிறைவுக்கு வந்தது. தந்தையுடன் கலுவராயவிற்கு அமைதியாகத் திரும்பினார்.

கணபதி இப்போது கலுவராயவில் கிரஹஸ்தாஸ்ரமத்தில் ஊறியிருந்தார். குடும்பஸ்தனாக அவர் தவத்தை விட்டவர் போல இருந்தாலும் மனசுக்குள் தவமும் ஆன்மிகமும் கனலாகக் கனன்று கொண்டிருந்தது. அற்ப வாழ்க்கை வாழ்கிறோம் என்று அடிக்கடி குமுறிக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் பூஜையறையில் ஜபம் செய்துகொண்டிருந்த போது அவருக்கு முன்னால் புசுபுசுவென்று புகைப் போலக் கிளம்பிய இடத்தில் முழுநீள தாடியுடன் ஒரு உருவம் மசமசவென்று தெரிந்தது.. அது.....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_5‬
‪#‎கணபதி_முனி‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails