Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 3 : விளையும் பயிர்

”பிரசவிக்கும் பெண்மணி அக்கணமே உயிர் துறப்பார்..” என்ற திடுக்கிடும் துக்கச் செய்தியைச் சொன்னார் கணபதி. அப்படியே நடந்தது. இறந்தபோது அவரது அன்னைக்கு வயது 35. வீட்டிலுள்ளோர் கதறி அழும்போது அதிர்ச்சியில் செய்வதறியாது திண்ணையில் நிலைகுத்திக் கிடந்தார். 

சமஸ்கிருத இலக்கணத்தையும் கவிராஜர்கள் பாரவி* போன்றோரையும் வேதூல வெங்கடராய சாஸ்திரியிடம் கற்றுத்தேர்ந்தார். தனது அண்ணன் பீமா சாஸ்திரி மற்றும் தங்கை அன்னபூர்ணா ஆகியோருக்குத் திருமணம் நடந்தேறிய பின்னர் தனது பனிரெண்டாவது வயதில் விசாலாக்ஷியை கரம் பற்றினார். அப்போது விசாலாக்ஷிக்கு வயது எட்டு. புதுமாப்பிள்ளையாக ”பிருங்க சந்தேஸா” என்று ஒரு சிறிய சிருங்கார காவியம் படைத்தார். தன் காதல் மனைவிக்கு அர்ப்பணித்தார். வெங்கடராய சாஸ்திரி புகழ்ந்து தள்ளினார். அவருக்குப் பெருமை. காளிதாஸனின் மேகதூதம் போல அமையவில்லையே என்று குறைப்பட்டுக் கொண்டு படைத்ததைக் கிழித்தெறிந்தார் கணபதி. 

பதினான்கு வயதுக்கு முன்னர் அவரெழுதிய சில ஸ்லோகங்கள் கண்டெடுக்கப்பட்டு பத்திரமாக சேமிக்கப்பட்டது. ஒரு சில...

வந்தேமாஹே மஹாதேவம்
யாஸ்ய வந்தாரவோ ஜனாஹ்
நவிந்தந்தி புணர்மாதுஹ்
குச கும்ப பயோரஸம்
மஹேஸ்வரனை வந்தனம் செய்பவர்கள் மீண்டுமொரு ஜென்மம் எடுத்து அம்மாவிடம் பாலுண்ணும் நிலையடையாமல் முக்தி அடைவார்கள் என்பது மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள்.

காகோல முஞ்ச கர்வம்
படபானல முஞ்ச திவ்ரதாதர்பம்
வேகவதி ஜலம் ஏதத்
தாருணசூடாமணிர் ஜெயதி
உன்னுடைய செருக்கை காகோல விஷம் அழிக்கட்டும். பாடபாக்கினி கடற் தீ உன்னுடைய ஆணவத்தை ஒழிக்கட்டும். வேகவதி நதியின் ஜலம் உன்னுடைய துக்கத்தைத் துடைத்து ஜெயத்தை அருளட்டும்.

இஹகேஸாம்சித் ஏச ச்சேனா
சந்தோஸாய கா க்ஷதி
கிம் ஆனந்தாய காகானாம்
பாலகோகில காகலி
இது யாருக்கும் இன்பமளிக்காவிட்டால் என்ன நஷ்டம்? இளங்குயில் காக்கைகளின் கூட்டத்திற்கா பாடுகிறது?

பதினான்கு வயதில் காவியங்கள், நாடகம் அலங்கார சாஸ்திரங்கள் என்று சர்வகலா வித்தகரானார். நினைத்தால் அந்தக் கணமே அவ்விடத்திலேயே ஸ்லோகங்கள் புனையும் திறன் பெற்றிருந்தார். பதினெட்டு வயதில் இதிகாச புராணங்கள் அவருக்கு அத்துபடியாயிற்று. மேடையேறி அஷ்டாவதானம் புரியுமளவிற்கு திறமைகளை வளர்த்துக்கொண்டார். இலக்கிய சபையில் எட்டு கேள்வியாளர்கள் சூழ அமர்ந்து அவர்களின் கேள்விகளுக்கு பாட்டாக பதில் சொல்லவேண்டும். முடிவுறும் தருவாயில் கவி அனைத்து கேள்விகளையும் பதில்களோடு பாட்டாக படித்துக் காட்ட வேண்டும். 

மஹாபாரதம் அவருடைய ரிஷியாகும் வைராக்கியத்தை மேலும் முடுக்கியது. நரசிம்ம சாஸ்திரி மந்திர ஜெபங்களிலும் தியானத்திலும் கணபதியை வெகுவாகத் தயார்படுத்தியிருந்தார். வீட்டுச் சூழ்நிலை தவமியற்றுவதற்கு இடையூராக இருக்கும் என்று முடிவு செய்து ஏதாவதொரு புண்ணிய ஸ்தலத்திற்கு யாத்திரை சென்று தபஸில் ஈடுபட காத்திருந்தார்.

இதற்கிடையில் நரசிம்ம சாஸ்திரி கணபதிக்கு மணமுடிக்க விரும்பி பெண் பார்க்க ஆரம்பித்தார். குடும்பஸ்தனாக ஆவதற்கு முன்னர் தவமியற்ற விரும்பினார் கணபதி. “க்ருஹஸ்தாஸ்ரம தர்மத்திலிருந்து தப்பித்து நான் ஓடவில்லை. ப்ராசீனமான குடும்பப் பொறுப்பிலிருந்து கேவலமாகத் தப்பித்து ஓடுவது மகோன்னதமான காவியுடுத்தலை களங்கப்படுத்தும் துர் செயலாகும்.” என்று நரசிம்ம சாஸ்திரியிடம் சுய விளக்கமளித்தார். பெண்களைப் பாவத்தின் பிறப்பிடமாகவும் மாயீகளாகவும் நம்பிய நாட்களில் அதை திட்டவட்டமாக மறுத்தார். 

பண்டைய காலத்தில் ரிஷிகள் குடும்ப வாழ்க்கையை விட்டு விலகாமல் தங்களது தர்மபத்தினியோடு இல்லற தர்மத்தில் எளிமையாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்கள். மெய்ஞ்ஞானம் அடைந்தார்கள். பெண்களை வெறும் போகப்பொருளாக அவர்கள் நடத்தவில்லை. ரிஷிபத்தினிகளும் ஆன்மீக வேள்விகள் இயற்றும் யோக்கிதையைப் பெற்றிருந்தார்கள். ரிஷிகளும் தங்களது தர்மபத்தினகளுக்கும் நல் ஆசானாக இருந்து தீக்ஷையளித்து ஒழுக்கமான சமூகத்தை உண்டாக்கினார்கள். இதுபோன்றவைகளை வேதங்களிலும் புராணங்களிலும் படித்துத் தன்னை உரமேற்றிக்கொண்டார் கணபதி.

நரசிம்ம சாஸ்திரிக்கு கணபதியின் இந்த மார்க்கம் மனசுக்கு நிம்மதியளித்தது. தன்னுடைய மருமளும் பூஜை தபஸ் போன்றவைகளில் ஈடுபடுத்தவேண்டும் என்று விரும்பினார். திருமணத்திற்கு கணபதி விதித்த நிபந்தனை விசித்திரமானது. “கிரஹஸ்தாஸ்ரம தர்மங்களை மீறாமல் நடந்து கொள்கிறேன். ஆனால், வீடாறு மாதம்... தபமியற்ற காடாறு மாதம் என்று சென்றுவிடுவேன்”. 

பொமிகபடு கிராமத்திற்கு நரசிம்ம சாஸ்திரி வந்தடையும் போது மிகவும் கலக்கத்தில் இருந்தார். கணபதியின் இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே என்று விசாலாக்ஷியிடம் சொன்னபோது “அப்படியே அவர் விருப்பம்படியே ஆகட்டும் அப்பா. எனக்கும் ஒரு விருப்பம் உள்ளது.. நீங்களும் அதை ஆமோதிக்க வேண்டும்” என்றதும் குழுமியிருந்தவர்கள் நெற்றி சுருக்கினார்கள். ”இரண்டு பிள்ளைகளை நான் பெற்ற பிறகு இதுபோன்ற தபஸ்களில் நான் ஈடுபடுவதையும் யாரும் தடுக்கக்கூடாது” என்றதும் ஜாடிக்கேற்ற மூடியாக பொருந்திவிட்டார்கள் என்று இருவீட்டாரும் மகிழ்ந்தனர்.

இப்படி இருவரும் தபஸ்விகளாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்ட போது கணபதிக்கு வயது பதினெட்டு, விசாலாக்ஷிக்கு பதினைந்து!

*பாரவி எழுதிய கிராதார்ஜுனியம் புகழ்பெற்ற காவியம். அர்ஜுனன் சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் வாங்கிய சரிதம்.

[ஸ்லோகங்களின் தமிழ் வடிவம் என்னுடைய சமஸ்கிருத பாஷையறிவினால் கொஞ்சம் தடுமாறியிருக்கலாம். நட்புகள் மன்னிக்க! ]

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails