Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 11 : பிறைச்சந்திரனை முத்தமிட்ட எறும்பு

நவத்வீபா “ஹரிஸபா”வில் கணபதியின் பாண்டித்யம் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. சுற்றுச் சுவர்களும் ரசிக்கும்படி அம்பிகா தத்தரும் கணபதியும் கன சுவாரஸ்யமாக தர்க்கம் செய்கிறார்கள். இங்கு புதிதாய் வருபவர்கள் அப்படி அந்த தூண் பக்கத்தில் இருக்கும் சந்து இடத்தில் சப்தமில்லாமல் அமர்ந்துகொள்ளுங்கள்.

“வருடத்தில் ஒரு நாள் கௌரி சிவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள்...”... இது இரண்டாவது சமஸ்யம் என்று கணபதியை நோக்கி கையை ஆட்டினார் அம்பிகா தத்தர்.

“விநாயகர் சதுர்த்தி அன்று விண்ணில் தோன்றும் நிலவைப் பார்த்தால் துன்பம் பல வந்து சேரும் என்று கணேசபுராணம் சொல்கிறது. நான்காம் பிறை. சந்திரசேகரனாகிய சிவன் தன் சிரசில் தாங்கியிருப்பதால் உமையம்மை அன்று ஒரு நாள் சிவபெருமானின் வதனத்தை பார்க்கமாட்டாள்....” என்று கவி பாடினார். கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது.
“ம்.. மூன்றாவது.....” இதில் கணபதி சறுக்கலாம் என்று வேடிக்கை பார்த்தார்.

”இது ஜாதகக் கட்டத்தில் வரும் புதிர். ஒரு குழந்தையின் ஜாதகத்தில் ராகு கோணத்திலும் குரு மூன்றிலும் குஜன் ஏழிலும் இருந்து சூரியன் சந்திரன் இருவரும் லக்னத்தில் சேர்ந்திருந்தால் அந்தக் குழந்தை பிழைக்காது*. இதுவே சந்திரனோடு சேர்ந்து சூரியனும் தொலைந்தது....” அவிழ்க்க சிக்கலான இந்த முடிச்சுக் கவிக்கு கணபதியின் பதில் சுடச்சுட வந்ததும் அவையோர் எழுந்து கரகோஷித்து மரியாதை செய்தனர். அரங்கத்தின் உற்சாகம் அடங்க கொஞ்ச நேரம் ஆனது.

“அமைதி....அமைதி.. இப்போது நான்காவது சமஸ்யத்துக்கு விடையளிக்கலாம்...” என்று தேர்வைப் பிடித்து நகர்த்தினார் அம்பிகா தத்தர்.

“அப்போது தாக்ஷாயினியாக உமையவள் அவதாரமெடுத்திருந்தாள். தனது தந்தை தக்ஷன் நடத்தும் யாகத்திற்கு தன் கணவனை அழைக்வில்லை என்று அறிந்ததும் தக்ஷனிடம் போய் மல்லுக்கு நின்றாள். அவர் “இடுகாட்டில் சுடலைப்பொடி பூசியலைபவனுக்கு எதற்கு மரியாதை? அவனை ஏன் கூப்பிடவேண்டும்?” என்று ஏகவசனத்தில் தூஷிக்க கோபாக்கினியில் தன்னையே பஸ்பமாக்கிக்கொண்டு சாம்பலானாள். இந்த சங்கதி சிவனார் காதுக்கு எட்டியதும் சக்தியில்லாமல் மூர்ச்சையாகிக் கீழே சரிந்தார். அப்போது அவரது ஜடாமுடியில் தாங்கியிருந்த சந்திரனும் தரையைத் தொட்டது. தேனோ இனிப்போ கிடைக்குமா என்று அந்தப் பக்கம் ஊர்ந்து கொண்டிருந்த ஒரு எறும்பு அப்போது அந்த பிறைச் சந்திரனை நக்கி முத்தமிட்டது....” என்று கவிநயம் கொஞ்ச பதிலளித்தார்.

அவை ஆச்சரியத்தில் மூழ்கியது. எல்லா சமஸ்யத்திற்கும் பளிச்பளிச்சென்று மின்னலாய்ப் பதிலளித்தார். கவி மழை பொழிந்து கூடியிருந்தவர்களின் காதுகளுக்கு தேனூட்டினார். மொத்த சபையும் எங்கேயும் நகராது கேட்டுக்கொண்டிருந்தது. அற்பசங்கைக்குக்குக் கூட ஒதுங்காமல் பலர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இப்போது அம்பிகா தத்தர் கணபதியை வைத்து அக்கூட்டத்தினருக்கு இலக்கிய விருந்து படைக்க உத்தேசித்தார். ஏதேனும் காவியத்திலிருந்து இரண்டு ஸ்லோகங்களை எடுத்துக்கொண்டு அதை அவையோர் முன்பு எளியோரும் தெளியும் வண்ணம் விஸ்தாரமாக விமர்சிக்க வேண்டும்.

முதலில் காளிதாசனின் ரகுவம்சம். ஒன்பதாவது சர்க்கத்தில் ஏழாவது ஸ்லோகம். இரண்டாவதாக பதினோராம் நூற்றாண்டில் போஜ ராஜாவின் அரண்மனையை அலங்கரித்த மம்மதா பட்டரின் காவ்யபிரகாஸத்திலிருந்து. அம்பிகா தத்தர் சைகை செய்ய கண்பதி ஸ்லோகங்களைக் அக்கக்காகப் பிரிக்க ஆரம்பித்தார். கடினமான பல ஸ்லோகங்களை பலாவிற்குள் இருக்கும் சுளை போல உறித்து தேனில் தோய்த்துச் சபை ருசிக்கக் கொடுத்தார். அறிஞர்களின் அச்சபை களை கட்டியது.

ரகுவம்ச காவியத்திலிருந்து அமிர்தங்களைப் பிழிந்து கொடுத்துவிட்டு காவ்யபிரகாஸத்திற்கு தாவினார். வெகுநேரம் பிரசங்கித்ததாலோ என்னவோ “சர்வேசம்” என்று உச்சரிப்பதற்குப் பதிலாக நா லேசாகப் பிழன்று “சர்வேசாம்” என்று கால் வைத்து நெடிலாக முடித்தார். உடனே நாக்கைக் கடித்துக்கொண்டு தவற்றைத் திருத்தி பிழையில்லாமல் மறுபடியும் பாடினார். காலையிலிருந்து இரைக்குக் காத்திருக்கும் கொக்கு போல விடாப்பிடியாக நின்ற அம்பிகா தத்தர் இதை கோட்டை விடுவாரா? லபக்கென்று பிடித்துக்கொண்டார்.

“உன் பாடலில் குறையில்லை; கட்டுரையில் சர்வஜனங்களையும் கட்டிப்போடுகிறாய்; ஆனால் பேச்சில் கோட்டை விட்டாயேப்பா? மூவுலகையும் பரிபாலணம் செய்யும் தாராவை வணங்குவதில்லையோ?” என்ற அர்த்தத்தில் சம்ஸ்க்ருத கவி பாடி எள்ளி நகையாடினார்.

சாக்தராகிய கணபதி முனிக்கு ஸ்ரீதாரா தேவியை வழிபடாதவனே என்று அம்பிகா தத்தர் சொன்னவுடன் சுறுசுறுவென்று ஏறியது. அம்பிகா தத்தரும் சரஸ்தாரா என்று பாடுவதற்கு மாறாக இலக்கணப் பிழையுடன் திரிபுவன ”சாரா தாரா”... என்று பாடிவிட்டார். கணபதி அவையைப் பார்த்து அர்த்தபுஷ்டியாகச் சிரித்தார். அம்பிகா தத்தருக்கு முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. ”என்ன?” என்று கையை ஆட்டி சமிக்ஞையினால் கேட்டார். அரங்கம் சூடு பிடித்தது. காவிய இரசிகர்களுக்கு கன்னல் விருந்து. கணபதி என்ன சொல்லப் போகிறார் என்று கூட்டம் கண் கொட்டாமல் ஆர்வமாய்க் காத்திருந்தது. நாமும் அடுத்த அத்தியாயம் வரை காத்திருப்போம்.

*ஜாதகக் கட்டங்களை விளக்கிய Vk Srinivasan க்கு நன்றி!

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_11‬
‪#‎கணபதி_முனி‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails