Tuesday, July 29, 2014

வள்ளல் இஷாந்தின் அருட்பெருங் கருணையினாலே.....

மெக்கல்லமும் ஸ்மித்தும் அண்ணன் தம்பியாய் கைகோர்த்துக் களத்தில் இறங்கி சென்னையின் வெற்றிக்காக விளையாடினர். வெண்ணை திரண்டு வர்ற நேரத்தில பானையை உடைக்கிறா மாதிரி மெக்கல்லமின் மிடில் அண்ட் ஆஃபை பிளந்துவிட்டார் கேவி.ஷர்மா.

கர்ண பரம்பரையில் வந்த ரன்னளிக்கும் வள்ளல், கருணைக் கடல் இஷாந்த் ஷர்மா அரைக்குழியும் முழுக்குழியுமாக வீசி ஓப்பனர் ஸ்மித்தை சிக்ஸர்ஸ்மித்தாக்கி மைதானத்தாரை மகிழ்வித்தார். முனி இஷாந்த்தின் ஜடாமுடி பந்துவீசும் போது கண்ணை மறைக்கிறது போலும், பிட்ச்சின் அங்கமெல்லாம் பந்தைக் குத்தி ரணகளப்படுத்திவிட்டார். பிட்ச்சிற்கு வாயிருந்தால் அழும்.

ஆடுகள பார்டரில் ஆடும் ச்சியர் கேர்ள்ஸ் நடனம் ச்சீச்சீ... ரகத்தில் இருந்தது. அவ்வளவு சோபிதமாக இல்லை. அடுத்தமுறை இந்தியாவில் நடந்தால் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டமெல்லாம் வைத்து “மாங்குயிலே... பூங்குயிலே...” வாசித்துக் குஷிப்படுத்தலாம். ”ச்சீ.. போடா...” சொல்லும் கலா மாஸ்டரைத்தான் சியர் கேர்ள்ஸுக்குக் கத்துக்கொடுக்கச் சொல்லணும்.

ஆறும் நான்குமாய் ரன்களை வாரி வழங்கிவிட்டு சுரேஷ் ரெய்னாவை வீழ்த்தி உப்பு தின்னத்துக்கு தண்ணிக் குடித்தார் இஷாந்த். இந்நேரம் எங்க கிரிக்கெட் கோச் ராமு சாரா இருந்தா நிச்சயம் மாட்ச் முடிஞ்சத்துக்கப்புறம் மாமரத்துக்குப் பின்னாடி தரதரன்னு இழுத்துண்டு போய் மண்டையிலேயே லொட்டு லொட்டுன்னு போடுவார்... முதுகுல நாலு சாத்து சாத்தி “இனிமே இப்டி போடுவியா.. இப்டி போடுவியா... கையை முறிச்சுடுவேன்...கம்மனாட்டி....”ன்னு கதகளி ஆடியிருப்பார்.

குருதிப்புனல் கமல் கெட்டப்பில் களமிறங்கிய தோணி இளம்புயல் ஸ்மித்தை அடிக்கவிட்டு வேடிக்கைப் பார்த்தார். ஸ்மித் சுற்றிய பக்கமெல்லாம் சோட்டா மோட்டா சிக்ஸராக பந்து போய் இறங்கியது.

ஒரு கட்டத்தில் பேதி புடுங்கியது போல வரிசையாக உள்ளே சென்றார்கள். ஸ்டேன் ஒழுக்கமாக பந்து வீசினார். நடுவில் கழன்றதைச் சமாளித்து ரவீந்தர ஜடேஜாவும் தோனியும் ஒன்றும் இரண்டுமாகப் பொறுக்கி விளையாடினார்கள்.

சீட்டாட்ட ரம்மியில் விட்டதைப் பிடிப்பது மாதிரி இஷாந்த் கடைசியில் இரண்டு விக்கெட் வீழ்த்தி முகத்துக்கு துண்டு போடாமல் மைதானத்தை விட்டு வெளியேற வழிவகுத்துக்கொண்டார். வாழ்ந்து கெட்ட குடும்பம் மாதிரி நல்லா போய்க்கிட்டிருந்த சென்னையின் வாழ்க்கையில் விக்கெட் புயல் வீசி தத்தளித்து கடைசி ஓவர் வரை வந்து.... பெட்டிங் பணத்தை உச்சத்துக்குத் தூக்கிவிட்டு.... தோனியின் நான்கால் கெலித்தது சென்னை.

இந்த ஸ்டேட்டஸை இப்படி முடிச்சுக்கலாம்....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails