Tuesday, July 29, 2014

அன்னமிட்ட கை

கோயிலில் அர்த்தஜாம பூஜை முடிந்து குருக்கள் வீட்டிற்கு கிளம்பிவிட்டார். ”ராமலிங்கம்... ஏம்ப்பா... ராமலிங்கம்...”. ஊஹும். சலனமேயில்லை. சன்னிதி ஓரத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்த இராமலிங்கம் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. “மெய்க்காவல்.. ராமலிங்கம் எழுந்து ஆத்துக்கு போனப்புறம் கோபுரவாசல் சின்னக் கதவையும் பூட்டிடுப்பா..” என்று பித்தளை நெய்வேத்திய தூக்கும் கையுமாக வீட்டை நோக்கி நடையைக் கட்டினார்.

இராமலிங்கத்திற்கு எத்தனை நேரம் வடிவுடையம்மனை மனதில் நிறுத்தி அந்த சன்னிதியில் தியானத்தில் அமர்ந்திருந்தோம் என்று தெரியாது. இமையைத் திறந்த போது பிரம்மாண்ட மதிலருகே மங்கலாக வெளிச்சம் தெரிந்தது. மற்ற இடங்களில் காரிருள். மெய்க்காவல் கோபுரவாசலில் முதுகைச் சாய்த்து தலை தொங்க தூங்க ஆரம்பித்திருந்தது அந்த சன்னமான ஒளியில் நிழலாகத் தெரிந்தது. எழுந்து சென்று “கதவைச் சார்த்திக்கோப்பா...” என்று தோளைத் தொட்டுச் சொல்லிவிட்டு ஆளரவமற்ற திருவொற்றியூர் வீதிகளில் தனியாளாகக் கிளம்பினார்.

இராமலிங்கம் அப்போது அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். அண்ணிதான் தினமும் அவருக்கு அன்னமிடுவார். அன்று நேரம் கிட்டத்தட்ட நள்ளிரவை நெருங்கிவிட்டதால் வாசல் கதவு சார்த்தியிருந்தது. உள்ளே தூங்கிக்கொண்டிருப்பவரை தொந்தரவு செய்ய மனம் ஒப்பாத இராமலிங்கம் திண்ணையில் துண்டை விரித்து படுத்துக்கொண்டார்.

பாதி தூக்கத்தில் யாரோ எழுப்புவது போலிருந்தது. கண்ணை விழித்துப் பார்த்தால் அண்ணி நிலைவாசப்படியருகே நின்றுகொண்டிருந்தார். முகம் மலர்ந்து தெய்வீகமாக சிரித்தார். “என்ன அண்ணி.. அர்த்த ராத்திரி தாண்டிவிட்டதே.. இன்னமும் நீங்கள் தூங்க வில்லையா?” என்று பரிவுடன் கேட்டார். ”இன்று ஏன் உனக்கு இவ்வளவு தாமதம்?” என்று கேட்ட அண்ணியிடம் “வடிவுடையம்மனை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். சற்று நேரத்தில் மனதிற்குள் நினைத்து கண்களை மூடி தியானித்தேன். நேரம் போனதே தெரியவில்லை” என்றார். அர்த்தபுஷ்டியாக சிரித்த அண்ணி “ஏனப்பா.. உனக்கு அன்னமிடாமல் ஒருநாளும் நான் தூங்கியதில்லையே.. நீ ஏன் என்னைக் கதவைத் தட்டி எழுப்பவில்லை?” என்று வாத்சல்யத்துடன் கடிந்து கொண்டார்.

இப்படி நேரங்கெட்ட நேரத்தில் அண்ணியாரின் தூக்கத்தைக் கலைத்துவிட்டோமே என்று இராமலிங்கத்திற்கு மனதை பிசைந்தது. இந்த சிந்தனையில் குனிந்து நிமிர்ந்த இராமலிங்கத்திற்கு பெரிய ஆச்சரியம். தன்னெதிரே வாழையிலை விரித்திருந்தது. அண்ணியார் தண்ணீர் தெளித்து வகைவகையாகப் பரிமாறினார். அன்று அவருக்கு அகோரப் பசி. விதம் விதமாக பரிமாற நன்றாக விருந்து சாப்பிட்டார். ”அண்ணி.. இன்று சாப்பாடு அபார ருசியாக இருக்கிறது...” என்று பாராட்டினார். அதற்கு அண்ணி “இருக்காதா என்ன... தேவலோகத்திலிருந்து வந்து சமைத்தார்கள்....” என்று சொல்லிவிட்டு ”களுக்”கென்று சிரித்தார். நன்கு பசியாறிய இராமலிங்கமாகிய வள்ளலார் திண்ணையோரத்திலேயே கைகளை கழுவி விட்டு மீண்டும் நித்திரைக்குப் போனார்.

தூக்கம் வராமல் புரண்டு படுத்த வள்ளலார் வீட்டின் வாசல் கதவைத் திறந்து அண்ணியார் எட்டிப்பார்ப்பதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். “ஏனப்பா.. ராமலிங்கம். எப்போ வந்தே.. எழுப்பக்கூடாதா... நீ ஏன் ஒன்றும் சாப்பிடாமல் தூங்குகிறாய்.. பசிக்கவில்லையா...” என்று வாஞ்சையோடு கேட்டார். இராமலிங்கத்திற்கு திடுமென்று தூக்கி வாரிப்போட்டது.

“அண்ணி... நீங்கள் தான் சற்று முன்பு சாப்பாடு போட்டீர்களே.. நான் கூட தேவாமிர்தமாக இருந்தது என்று ருசித்துச் சாப்பிட்டேனே...” என்று இராமலிங்கம் கேட்கக் கேட்ட அண்ணிக்கு ஒன்றுமே புரியவில்லை. புருவத்தைச் சுருக்கி “ஒன்றும் விளங்கவில்லையேப்பா..” என்று கேட்டவுடன் இராமலிங்கத்திற்கு அனைத்தும் புரிந்து போயிற்று. தனக்கு அர்த்தராத்திரியில் அன்னமிட்டது வடிவுடையம்மன்தான் என்று அறிந்துகொண்டார். கண்களில் இருந்து தாரைதாரையாய் கண்ணீர் சொரிந்தார். தெய்வபலம் தனக்கு இருப்பதை உணர்ந்தார். ”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய...” வள்ளலார் ”மாணிக்கமே...மாணிக்கமே...” என்று கசிந்துருகிப் பாடிய நூற்றியிரண்டில் ஒரு பாடல்....

அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே
பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா
மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே

நேற்றைக்கு எழுதிய திருவொற்றியூர் மகாத்மியத்தில் நான் தவறிய ஒரு திவ்ய சரித்திரம். “இதையும் பதிவு செய்திருக்கலாமே...” என்று கேட்ட Rajan Raj அவர்கட்கு நன்றி!

வள்ளலாரின்_பசிப்பிணி_போக்கிய_வடிவுடையம்மன்

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails