Tuesday, July 29, 2014

திருவள்ளுவர் தெரு

தாடியை எழுத்தாணியால் நீவி விட்டுக்கொண்டு திண்ணையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறார்.”வாசுகி... அந்த பென் ஸ்டாண்டிலிருக்கும் எழுத்தாணியை சித்த எடுத்தாம்மா....” என்று உள்ளே குரல் விட்டார். காஃபிக்கு டிகாக்ஷன் போட்டுவிட்டு கிணற்றடியில் தண்ணீர் இரைத்துக் கொண்டிருந்ததைப் பாதியில் விட்டுவிட்டு திண்ணைக்கு ஓடி வருகிறார். வாளி கிணற்றுக்குள் விழாமல் அந்தரத்தில் நிற்பதைப் பார்த்து பக்கத்து வீட்டுப் பங்கஜம் “கயித்த ஜகடையில சொருகிட்டுப் போயிருக்கா...” என்று சத்தமாகவே சொல்லிக்கொள்கிறாள்.

“வாசு... வாசும்மா... அந்த டேபிளுக்கு அடியில க்ளிப் போட்டு வச்சுருக்கிற ஓலைச்சுவடி கட்டைக் கொண்டு வாம்மா... எனக்கு குறள் எழுதற மூட் கன்னாபின்னான்னு வந்திருக்கு...”.

“மனுசனுக்கு காப்பித்தண்ணி டீத்தண்ணி கழனித்தண்ணி தேவையில்லை. நேரங்காலம் கிடியாது. பொண்டாட்டிக்கு காய் நறுக்கிக் கொடுப்போம்.. துணியைக் காயப் போடுவோம்னு பொறுப்பு கிடையாது... சாப்ட்டு சாப்ட்டு மடக்கி மடக்கி குறள் எழுதிட்டு கட்டைய நீட்டிட்டா போதும்.. ச்சே.. என்ன ஜென்மம்டா.. மொதல்ல எழுத்தாணியால நீவுற அந்த தாடியை சரைக்கச்சொல்லி பட்டாளத்தான் மாதிரி சம்மர் க்ராப் அடிக்கச் சொல்லணும்... தாடியையும் ஆளையும் பாரு... லோக்கல் தாதா மாதிரி... ” என்று இக்கால மனைவியர் குல மாணிக்கங்கள் போலக் குமுறாமல் “அப்படியே செய்கிறேன் ப்ராணநாதா...” என்று ஆக்ஞைக்குக் கீழ்ப்படிந்துள்ள பாசமிகு வைஃபாகக் கொண்டு வந்து தருகிறார்.

அதற்குள் வாசலில் ”மடார்..மடார்...” என்று ஒரே சத்தம்.

“யாரது? நானெழுதும் வேளையில் சாலையை நோண்டி நொங்கெடுப்பது?” என்று சீற்றமுடன் கேட்கிறார்.

“சீவேஜு வேலை செஞ்சிகினுருக்கோம்.. நீ பாட்டு வேலையைப் பாரு வாத்யாரே... பாக்க பளமாட்டமிருக்கே.. எங்களாண்ட பாயாத... ஹக்காங்..”

“பளமாட்டமா? இளவட்டம் தெரியும். பளமாட்டமென்றால்?” கண்களில் கேள்வி தொக்கி நிற்க பார்க்கிறார்...

“போச்சுடா. கிளத்துக்கெல்லாம் பதில் சொல்லிட்டுதான் நோண்டனுமா?... த்தோ பாரு பெர்சு.. களிவு நீர் போணுமா வாண்டாமா? அதுகாக பைப் சொருவி பாதாள சாக்கடைப் போட நோண்ட வந்துருக்கோம். கம்னு வேடிக்கை பாரு.. இல்லாட்டா.. வூட்டம்மாச் சொல்லி நாஷ்டா துண்ட்டு டிவியில குடும்ப சீரியல் பார்த்துட்டு ரெஷ்ட் எடுப்பா...”

“ஒன்றுமே விளங்கவில்லையே! வாசு... வாசு...”

பாதி சீரியலில் எழுந்து வந்து ”ச்சே.. ஒரே தொந்தரவாப் போச்சு.. வூட்லயே குந்திகினு ஒரு சீரியல் பார்க்க விட்டேனா பார்னு.. ஹிம்சை தாங்க முடியலை.. ச்சும்மா நோண்டிகிண்டே இருக்காருப்பா...” என்று பொறுமும் மங்கையர் குல மாணிக்கங்கள் போலல்லாமல் “நாதா.. சீக்கிரம் உள்ளே வாருங்கள்... துஷ்டர்கள் உங்களை வம்பிக்கிழுப்பார்கள்...” என்று அனுகூலமாக அழைத்துக்கொண்டு செல்கிறார்.

மறுநாள் பொழுது விடிந்தது. உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. திண்ணையில் சும்மாதான் உட்கார்ந்திருந்தார். “ஒரு காஃபி தர்றியாம்மா... குறள் எழுதணும் போல்ருக்கு...” என்று கடந்த கால அப்பாக்கள் திலகம் நாகையா போல நா தழுதழுக்கக் கேட்கிறார். சட்டென்று பூர்ணம் விசுவநாதன் ஞாபகம் வருவோர் அவர் போலவும் பாவித்துக்கொள்ளலாம். பாதகமில்லை. எஸ்.வி.ரங்காராவும் ஓகேதான்..

“நேத்திக்கு டிகாக்ஷன் போட்டு வச்சிருந்தேன். காஃபியே வாண்டாம்னு சொல்லியாச்சு. இன்னிக்கி இன்னும் டிகாக்ஷன் இறங்கவேயில்லே... காஃபி கேட்டாறது... இந்த மனுஷ்யரோட அழிச்சாட்டியம் நாளுக்கு நாள் தாங்க முடியலையே” என்று... சரி.. மீண்டும் இக்காலப் பெண்டிர் என்று சொன்னால் ஆம் ஆத்மி சின்னத்தைத் தூக்கிக் கொண்டு அடிக்க ஓடிவருவீர்கள்.. சொல்லவில்லை.. அந்தம்மா பூப்போல நடந்து வந்து பொண் போல “என்ன வேண்டும் நாதா.. இன்னும் டிகாக்ஷன் இறங்கவில்லை.. நீங்கள் வீதியில் போவோரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டோ அல்லது எழுத்தாணியில் குறள் எழுதிக்கொண்டோ தேமேன்னு வீற்றிருங்கள். காஃபி வரும்.” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்கள்.

உள்ளே சென்றதுதான் தாமதம், ஒரு டாட்டா ஏஸிலிருந்து ஐந்தாறு பேர் திண்ணையோரமாக தொபகடீர் என்று குதித்தார்கள். சட்டி மண்வெட்டியெல்லாம் வைத்திருந்தார்கள். வார்த்தைக்கு வார்த்தை ”லு..லு....டி..டி..” என்று சுந்தரமாகத்தெலுங்கு பேசினார்கள்.

“என்னப்பா செய்ய உத்தேசம்?” என்று பொறுமையாகக் கேட்டார்.

“ஏமண்டி? ஏமி செப்தாரு?” என்றதும். “சுத்தம்...” என்று வெறுப்பாகச் சொல்லிவிட்டு சாலையை வேடிக்கை பார்த்தார்.

திண்ணை ஓரமாக அரையாள் ஆழத்துக்கு தோண்டினார்கள். “ஏனப்பா மீண்டும் மீண்டும் பூமா தேவியை சித்ரவதை செய்கிறீர்கள். அவள் என்ன உங்களுக்கு துரோகம் செய்தாள்?” என்று தீந்தமிழில் வினவினார். தமிழ் அரைகுறையாகத் தெரிந்த ஒருவன் வெட்டி வெட்டி பதிலளித்தான்.

“தாடி பாபு... வூட்ல உட்கார்ந்து எஃப்பியில சொகுசா ஸ்டேட்டஸ் போடணும்னா இது தேவை. இண்டெர்னெட் கனெக்சன் குடுக்க நோண்டறோம்.. மீரு.. “ என்று கையை அசைத்துச் சொல்லிவிட்டு வயரைப் புதைத்து விட்டுப் போய்விட்டான்.

மூன்றாம் நாள். நோண்டிய பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் இருக்க... ஆற்றங்கரையில் ஸ்நானம் செய்துவிட்டு வந்த திருவள்ளுவரின் கால் மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டது. ஸ்லிப் ஆகாமல் உதறிக் காலை வெளியே இழுத்து நாட்டியமாடி ஒருவாறாக வீடு வந்து சேர்ந்தார். பாதாள சாக்கடை, இண்டர்நெட் குழி தோண்டும் ஆட்கள் என்று ஒவ்வொருவராக கண்களில் வந்து போனார்கள். அவருக்கு இடது வலது கண்கள் துடித்தன.

சந்து வழியாக கொல்லைப்புறம் சென்று கால் அலம்பிவிட்டு அவரே டேபிளில் இருந்த ஓலைச்சுவடியையும் எழுத்தாணியையும் எடுக்கப் போனார். லேப்டாப் இருந்தது. மோடத்தில் இண்டெர்நெட் எல்ஈடி ஒளிர்ந்தது. லாப்டாப்பை எடுத்துக்கொண்டு திண்ணைக்கு வந்து ஆன் செய்தார். வைஃபை டிஸ்டர்ப் செய்யாமல் வைஃபையில் இணைத்துக் கொண்ட லாப்டாப்பில் பின் வரும் ஸ்டேட்டஸைத் தட்டி ஏற்றிவிட்டார். ஐந்து நொடியில் ஐந்து லட்சம் லைக்ஸ் கிடைத்தது. பத்து லட்சம் டமிளர்கள் ”சூப்பர்.. பலே.. பிரமாதம்...” என்று ஷேர் செய்தார்கள். அப்படி அவர் ஏற்றிய குறள் எர்த் டேக்காக சிறப்பாக எழுதப்பட்டது என்று அவருக்கே அப்போது தெரியாது. வழக்கம்போல மக்களுக்குக் கொஞ்சம் போதனையோடுயிருக்கும் அந்தக் குறளானது.....

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

வீதிதோறும் பாதாளச் சாக்கடைக்குத் தோண்டுபவர்களுக்காகவும், இண்டர்நெட் இணைப்புக்காகவும் புவியை ரணகளப்படுத்துபவர்களுக்காகவும் அந்த அநீதியைக் கண்டு புழுங்குவோருக்காகவும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் மேற்கண்ட வேர்ல்ட் எர்த் டே ஸ்டேட்டஸ் பல நூற்றாண்டிற்கு முன்னரே எழுதிவிட்டார்

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails