Tuesday, July 29, 2014

’க’மான் கராத்தே!

Boy next door அந்தஸ்திலிருந்து சிவ.கார்த்தியேகன் Box Office Hit நாயகனாக உயர்ந்திருப்பது அவரது பீட்டர் அறிமுகப் பாடலிலிருந்து தெரிகிறது. கணினித் துறையில் வேலை பார்க்கும் ஐவர் ட்ரெக்கிங் செல்கிறார்கள். சதுரகிரி என்றும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் என்பதையும் வாய் விட்டுச் சொல்லாமல் சத்வம் கம்ப்யூட்டர்ஸ் சந்திரகிரி ஃபாரெஸ்ட் என்று ரொம்பவும் மெனக்கெடாமல் பெயர்களை வைத்துக்கொண்டு தொடங்குகிறது சினிமா. ஆனந்தவிகடன் சித்திரக் காமெடியில் விஜய்க்கு குஜய் போடுவதுபோல.

இரண்டரை மணி நேர சினிமாவை நடத்துவதற்கு தண்ணீருக்குள் தவமியற்றும் ஒரு சித்தரிடம் தினத்தந்தி பேப்பர் முடிச்சு வாங்கி கதையை லாவகமாக நகர்த்த முயன்ற டைரக்டருக்கு ஒரு பாராட்டு. யுஎஸ் விஸா, கார் போன்று லௌகீகமாக விண்ணப்பித்த நண்பர்களிடையே ”ஆயுதபூஜைக்கு அடுத்தநாள் பேப்பர் கொடு” என்று சித்தரைப் பரிசோதிப்பது போலக் கேட்டுப்பெற்றச் செய்தித்தாள் அடுத்தடுத்த நடக்கப்போகும் நிகழ்வுகளை உள்ளடக்கியது என்று புரிய ஆரம்பிக்கும் போது சுவாரஸ்யமாகயிருக்கிறது. பாக்ஸர் பீட்டர் இரண்டு கோடி ரூபாய் வெல்கிறான் என்பதையும் அதற்கு யாத்திரை சென்று ஐந்து நண்பர்களும் குறி வைக்கிறார்கள் என்பதை வைத்து அறுபதடிக் கூந்தல் போலக் கதையைப் பின்னியிருக்கிறார்கள். ஆங்காங்கே பாடல்கள் காமெடி என்று குஞ்சலம், நெத்திச்சுட்டியெல்லாம் வைத்து அலங்கரித்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் கைகால்கள் சுளுக்கிக்கொள்ளுமாறு நன்றாக டான்ஸ் ஆடுகிறார். ஊதா கலர் ரிப்பனில் தலைக்குப் பின்னால் கொக்கி போட ஆரம்பித்தவர் கொஞ்சம் மான் முத்திரைக் காட்டி இதிலும் சாய்ந்து ஒய்யாராம நின்று கராத்தே போடுவது படத்தின் கூடுதல் சிறப்பம்சம். பாபாவில் ரஜினிக்கு ஒர்க்கவுட் ஆகாத மான் முத்திரை சிவகாயனுக்கு கெலித்திருக்கிறது.

தமிழில் நாயகிகளுக்கும் நடிப்பிற்கும் ஸ்நானப் ப்ராப்தி கூட கிடையாது என்று எப்போதோ முடிவெடுத்துவிட்டார்கள். அந்த விதியை கிஞ்சித்தும் மீறாமல் செக்கச்செவேலென்று அங்கங்கள் பளிச்சிட கேமிராவை அடைத்து வரும் ஹன்ஸிகா மோத்வானி சிவகாயனுக்கு ”யக்கோவ்...” மாதிரியிருக்கிறார். கூகிள் பார்த்து விசிலடிக்கக் கற்றுக்கொள்கிறார். அழகாக அழ வேண்டும் என்று எத்தனித்திருக்கிறார். தமிழ் வாத்தியார் பொண்ணு என்பதால் யாழினி என்பது நாமகரணம். ஆறுதலான விஷயம் ”யாளினி” என்று யாரும் விளிக்கவில்லை. நடிகர்கள் அனைவரும் பின்னணி பேசும்போது ழகரத்தில் பழம் தின்று கொட்டைப் போட்டிருக்கிறார்கள்.

ஃப்ளூட்டுக்கு கை கால் முளைத்து அதற்கு காஸ்ட்லியான கோட் சூட் போட்டு விட்டதுபோல இசையமைப்பாளர் அனிருத் சரக்கடிக்கும் பாடலில் தோன்றி நடுரோட்டில் குத்தாட்டம் போடுகிறார். கேளிக்கையை பிரதானமாக வைத்து இயக்கப்படும் படங்களில் தண்ணியடிக்கும் பாடல் இருக்கவேண்டுமென்பது சமகாலப் படங்களில் எழுதப்படாத விதி. ”மாஞ்சா போட்டுதான் நெஞ்சாங்கூட்டுல...” பாடலுக்கு இளையராஜாவின் மை டியர் மார்த்தாண்டனிலிருந்து “பாக்கு வெத்தலை போட்டேன் பத்தலை..”யை ரகஸியமாக கையாண்டது யாருக்கும் தெரியாது. கோரஸை முதற்கொண்டு “தஜும்தகிடதா..” என்று பாடியது கூடுதல் சிறப்பு. பரோட்டா சூரியும் தன் பங்கை பாராட்டும்படி செய்திருக்கிறார்.

தமிழ்ப்படங்களின் தரத்தை மாற்றாமல் வில்லனிடம் அடிபட்டுக் குத்துயுரும்கொலையுருமாகக் கிடந்து நாயகியைப் பார்த்துச் சிலிர்த்தெழுந்து வீருகொண்டு அவனை அடித்து ஜெயிக்கும் காட்சிகளை இனிமேலாவது மாற்றுவீர்களா? செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? என்று இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இத்தோடு எண்ட் கார்டு போட்டுக்கொள்கிறேன்.

சுக்கிரன் ஒம்பதிலிருந்தா பணம் கூரையைப் பிச்சுக்கிட்டுக் கொட்டும்னார் வீகேயெஸ். சிவகாயனுக்கு சுக்கரன் ஒன்பதாமிடத்தில் போலிருக்கிறது. அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு தடவைப் பார்க்கலாம். தோஷமில்லை!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails