Tuesday, July 29, 2014

இது ஒரு இராக்காலம்!

நள்ளிரவுக்கு இன்னும் அரை மணி இருக்கிறது. நிர்ஜனமான வீதி. பத்து வீட்டிற்கு ஒரு தரம் ரோட்டில் பட்டை பட்டையாய் வெள்ளிப் பாதை. இராக்காலத்தில் க்ரில் கேட்டிற்குத் துணையாக அதன் மேல் கை போட்டபடி இப்படி விஸ்ராந்தியாக சாய்ந்து நிற்பது பரமானந்தம். மனசு பந்தாகக் கழன்று எதிரில் வந்து பேசும். நின்ற பொருள் நிற்கவும் அசையும் பொருளும் நிற்பதுமான கசகச நேரம். பாலிதீன் மற்றும் பேப்பர் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் பட்டினத்து மடி சிறுத்தப் பசு மாடு. பக்கத்துத் தெரு ஆர்த்தோ டாக்டர் வீட்டு டாமியின் கட்டுக்கடங்கா “ஊ”ங்காரம். டாமிக்கு ஒரு ஸ்ட்ரீட்டியின் வலுவான “லொள்”ளெதிர்பாட்டு. தொடர்ந்து சிக்குசிக்குசிக்கு என்று மண் தரையைத் தேய்த்துக்கொண்டு பரிவாரங்களோடு விரட்டி எல்லைச் சண்டையில் ஈடுபடும் பைரவர்கள்.

டர்ர்ரும் டிவியெஸ் ஃபிஃப்ட்டியில் சைக்கிள் வேகத்தில் கடையடைத்துச் செல்லும் அண்ணாச்சி. “கிணிங்.. கிணிங்..”. நம்பிக்கையோடு தெருக்குள் நுழையும் குல்ஃபி ஐஸ்காரர். குல்ஃபிப்பானைப் பக்கத்து பேட்டரி லைட்டில் புட்டபர்த்தி சாய்பாபா. குல்ஃபியைக் கடந்து செல்லும் பெடல் தேய்ந்த க்ரீச்..க்ரீச் சைக்கிள். க்ரீச்சிசை தேய்ந்து சன்னமாகக் கேட்டு மௌனமாக அடங்குகிறது. இப்போது தெருவில் யாருமில்லை. ஒன்று.. இரண்டு.. மூன்று.. நிமிடங்கள் கடந்திருக்கும். ஊஹும். யாருமில்லை. கழுத்தை எக்கி இடமிருந்து வலமாக தெருமுழுவதையும் பார்க்கிறேன். ஈ காக்காயில்லை. காலையிலிருந்து உழைத்துக் களைத்த தெரு அமைதியாகத் தூங்குகிறது. அட.. லேசாக காற்று கன்னத்தைத் தடவுகிறது. தலைக்கு மேலே தென்னங்கீற்றுகளின் கிச்சுக்கிச்சு உரசல். ஆஹா... ஆஹா.. இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நிற்கத் தூண்டுகிறது. மீண்டும் இடது கன்னம் தடவி செல்லமாய்த் தலைமுடி கோதுகிறது. சுகமோ சுகம். சரி.... கண்ணை இழுக்கிறது. நான் தூங்கப்போகிறேன். நீங்கள் இந்தத் தெருவைப் பார்த்துக்கொள்ளுங்கள். குட் நைட்!!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails