Friday, April 4, 2014

வாஸவேச்வரம்

முன்னணி எழுத்தாளர்கள் பலர் "படிக்க வேண்டியது” என்று பரிந்துரைத்தது. EraMurukan Ramasami சார் தன்னுடைய ஆகச் சிறந்த நாவல்கள் வரிசையில் இதைப் பட்டியலிட்டிருந்தார். சிலாக்கியமான படைப்பு என்று தெரிந்தது. பக்கம் திருப்பி அழுக்கு பண்ண முடியாதவாறு காலச்சுவடுக்காரர்கள் பாலிதீன் கவரில் லாமினேட் செய்திருந்தார்கள். 1966ம் வருடம் முதல் பதிப்பு கண்டிருக்கிறது. நவீனத் தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் காலச்சுவடு 2011ல் பதிப்பித்தது.

சீலை உடைத்துக் கிழித்துப் பிரித்தேன். நேரமின்மையால் இரண்டு நாட்கள் விட்டு விட்டுப் படித்தேன். காஃபிக்குக் காத்திருக்கும் ஐந்து நிமிட இடைவெளியைக் கூட வீணாக்காமல் இரண்டு பக்கங்களாவது திருப்புமளவிற்கு குன்றாத சுவாரஸ்யம்.

வாஸவேச்வரம். இது எழுத்தாளர் கிருத்திகாவின் கற்பனைக் கிராமமாம். மலையடிவாரத்திலுள்ளது. அக்ரஹாரக் கதை. சுப்புக்குட்டி சாஸ்திரிகளின் உபன்யாசத்தில் ஆரம்பிக்கிறது. மாண்டவ ரிஷியின் பத்னியைக் கள்ளத்தனமாக அடைந்த வாஸவனாகிய இந்திரன் அம்முனியிடம் சாபம் பெற்று பூலோகத்தில் வந்து விழுந்த இடம் வாஸவேச்வரம் என்று தன்னுடைய கனவு கிராமத்திற்கு அழைத்துப்போகிறார். இங்கு ஒரு ஸ்படிக லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சாபவிமோசனம் பெற்று இந்திரலோகம் செல்கிறான் வாஸவன்.

முதல் இரண்டு பக்கங்களில் வாஸவேச்வர ஸ்தல புராணமாகச் சுப்புக்குட்டி சாஸ்திரிகள் நாவலின் ப்ளாட்டை உபன்யாசமாகச் சொல்லிவிடுகிறார். பெரிய பாட்டா என்ற பெரியவர் பஞ்சாயத்துத் தலைவர். தங்கத்தின் புருஷன் சுந்தா என்கிற உள்ளூர் டாக்டர். அம்பி மாமா என்று ஊருக்கு உதவும் பரோபகாரி. மிட்டா மிராசுதார் சந்திரசேகரய்யர். வயல்வரப்புகளையும் தோட்டம் துரவுகளையும் காதலிப்பவர். பொண்டாட்டி ரோகிணியின் (வாஸவேச்வரத்திலேயே அவள்தான் அழகி) கைப்பிடியில் அகப்படாமல் ஆண்மை காட்டுபவர். விதவையாக தன்னுடன் இருக்கும் அக்காள் மீனாவுக்கு சிரேஷ்ட தம்பி.

சந்திரசேகரய்யரைப் போட்டியாகக் கருதும் சுப்பையா. சுப்பையாவுக்கு சமத்துப் போதாதென்று துளைத்து எடுக்கும் அவன் மனைவி விச்சு. வீட்டிற்கு வீடு இருக்கும் மாமியார்க் கிழவிகள். தண்ணீர்த் துறை பேச்சுகள். பாலுண்ணிப் பாட்டி. ஐந்தாறு கிராப் தலைகளுடன் கம்யூனிஸம் பேசும் பிச்சாண்டி.

பிச்சாண்டிக்கு ரோகிணி மேல் ஒரு கண். சுப்புக்குட்டி சாஸ்திரிகளுக்கு ஆனந்தா மேல் ஆசை. டாக்டர் சுந்தா விச்சுவிற்கு நூல் விடுகிறான். ரங்கன் கோமுவைப் பார்க்கிறான். பப்புவிற்கு கோமுவைப் பிடித்திருக்கிறது. ரோகிணிக்கு பிச்சாண்டி பார்க்கும் போதெல்லாம் மனசுக்குள் பட்டாம்பூச்சி படபடக்கிறது. அறுபதுகளில் இதுபோன்று எழுதுவதற்கு துணிச்சல் வேண்டும். காமதேவனின் லீலா வினோதங்களில் அவ்வூர்க்காரர்கள் ஆட்படுகிறார்கள். மெல்லிய இழையாக கதை நெடுக மோகக் காற்று வீசுகிறது. அது சூறாவளியாகமல் கம்பி மேல் நடந்து சாசகம் செய்திருக்கிரார் கிருத்திகா.

பஞ்சாயத்து தேர்தலில் சந்திரசேகரய்யரை நிற்கச் சொல்கிறார்கள். புரட்சி பேசும் பிச்சாண்டி சந்திரசேகரய்யரை எதிர்த்து நிற்பேன் என்று குதிக்கிறான். சந்திரசேகரய்யருக்கு டாக்டர் சுந்தா ஆதரவு. இந்த நிலைமையில் ஊர்த் திருவிழா வருகிறது. ஊரே கொண்டாடிக்கொண்டிருக்கும் போது சந்திரசேகரய்யர் கொலையாகிக் கிடக்கிறார். பிச்சாண்டி ரோகிணியைப் பார்க்க அவர் வீட்டுப் பக்கம் போகும்போது போலீசாரால் பிடிபடுகிறான். ஆனால், சுப்பையாவைச் சந்தேகிக்கிறார் பெரிய பாட்டா.

ஏற்கனவே சுப்பையாவுடன் வாழப்பிடிக்காமல் அவன் மனைவி விச்சு பிறந்தகம் போய்விடுகிறாள். இதில் இந்தக் கொலைக்கு வேறு அவனை சந்தேகிப்பதால் துக்கம் தாங்க முடியாமல் தூக்க மாத்திரை சாப்பிட்டு கடிதாசு எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறான். ஊருக்கு வந்துகொண்டிருந்த பஸ் கவிழ்ந்து சாவு. கடைசி இருபது பக்கத்தில் இரத்தக்காடாக மாறுகிறது வாஸவேச்வரம்.

திரும்பவும் கடைசியில் சுப்புக்குட்டி சாஸ்திரிகள் கதாகாலட்சேபம் நடக்கிறது. “மா ஜானகி செட்டபெட்டகா....ஓ ராமா... என் ஜானகியால்தானே நீ இத்தனை புகழ் அடைஞ்சே...” என்று சொல்லி “ஸ்த்ரீகள்தான் அவாளோட கற்பைக் காத்துக்கணும். அவா கையில்தான் எல்லாமிருக்கு..” என்று சொல்லிக்கொண்டிருக்கையில் பிச்சாண்டி மேலக்கோடியாத்துத் திண்ணையை நோட்டமிட்டு ரோகிணியைப் பார்க்க மெல்ல நழுவுகிறான். கதை சொல்லிவிட்டு சுப்புக்குட்டி சாஸ்திரிகள் ஆனந்தா வீட்டிற்கு போகும் சந்தில் புகுந்து மறைகிறார்.. என்று கதை முடிகிறது.

கிருத்திகாவின் எழுத்திலிருந்து ஒரு சின்ன பிட்.
=====
வாஸவேச்வரத்து ஆண்கள் உள்ளம் தவியாய்த் தவித்தது. மனத்திரையில் நிழலோடின காமனுடைய கட்டழகியைக் கண்டு மயக்கங்கொண்டார்கள். அழகே திரண்டு உயிர் கொண்டவள் ரதி. அவளை நினைகும்போது அவர்கள் ரத்தம் கொதித்துக் கொப்புளித்தது. துவளும் தேகம், வரிசைப் பற்கள், உதிரம் சிந்தும் இதழ்கள். அப்பா! என்ன வளைவுகள், சரிவுகள்!! பார்த்த இடத்திலெல்லாம் அவள் தேகத்தில் இன்பக் குன்றுகள், பள்ளத்தாக்குகள், மேடுகள்! ரதியை மனதில் நினைத்துப் பார்த்துக் கொண்டே அவ்வாண்கள் தம் பெண்களிடம் போனார்கள். இந்தக் கற்பனை ரதிக்குத்தான் வாஸவேச்வரத்துப் பெண்கள் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறார்கள்?
=====

மேற்கண்ட பாரா கிளுகிளுப்பிற்காக சேர்க்கப்படவில்லை. இதில் எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும் அர்த்தங்கள் ஆயிரம்.

#வாஸவேச்வரம்... . சுகமான வாசிப்பனுபவம்!!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails