மன்னையிலோ அல்லது கும்பகோணத்திலோ தங்கியிருந்தால் மத்தியானம் தூங்கி
எழுந்திருந்து ஒரு மூன்றரை மணி வாக்கில் மூஞ்சி அலம்பிவிட்டு சூடாக ஒரு
காஃபி உறிஞ்சி வெயில் தாழக் கிளம்பினால் நான் இங்கே எழுதப்போகும் சிவத்தலங்களுக்குச்
சௌகரியமாகச் சென்றுவரலாம். சூரியன் ஜோலியை முடித்துக்கொண்டு வானத்துக்குக்
கீழே இறங்கிவிட்டான் என்றால் வயற்காட்டுக்குள் இவ்வூர்களைத் தேடிச் சென்று
திரும்புவதுச் சற்று சிரமமாக இருக்கும். மேலும் இதுபோன்ற கிராமக்
கோவில்கள் சீக்கிரம் நடை சார்த்திவிடுவார்கள். அர்ச்சகர்கள் பெடலுக்கு
எண்ணெய் போடாத சைக்கிளில் (ஹாண்டில் பாரில் தொங்கும் சாலியான்ன நெய்வேத்திய
தூக்கு) க்ரீச்..க்ரீச்..க்ரீச் என்று வெளியூர்களிலிருந்து வந்து
கோவிலுக்குள் விளக்குப்போட்டு ”ஏக வில்வம் சிவார்ப்பணம்” என்று
வெளிப்பிரகாரத்திலிருக்கும் வில்வ மரத்திலிருந்து ரெண்டு பிடி இலை பறித்து
வில்வார்ச்சனை செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியிருப்பார்கள்.
முதல் பாராவின் முதல் வரியின் படி மன்னையிலிருந்து கிளம்பினேன். சௌமி காஃபி
போட்டுக் கொடுத்தாள். கட்டிக்கப்போறவன் அவளுக்கு அடிமையாவதற்கு முன்னர்
காஃபியடிமையாகிவிடுவான். மன்னார்குடி பால் விசேஷம் இருக்கே...சரி...
வேண்டாம்.. திரும்பவும் மன்னார்குடி புராணமாகிவிட்டால் சேதுராம்
க்ருஷ்ணமூர்த்தி கமெண்ட்டில் படம் போட்டு பகடி பண்ணுவார். மன்னார்குடி
கும்பகோணம் சாலையில் குருஸ்தலமான ஆலங்குடியைத் தாண்டிவிடுங்கள்.
ஆபத்ஸகாயேஸ்வரர் ஆர்ச்சுக்கு ஒரு கும்பிடு போடுங்கள். பரமபதத்தில்
82லிருந்து இரண்டுக்கோ மூன்றுக்கோஇறக்கிவிடும் நீண்ட பாம்பின் வளைவுகள் போல
சாலைத் திருப்பங்கள். கடந்து வந்துகொண்டேயிருங்கள்........எப்படா வரும்
என்று நினைக்கையில்.....
அமராவதி பாலம் என்று ஓர் இடம் வரும்.
முன்பெல்லாம் இது ஒற்றைப் பாலம். இரு டிரைவர்கள் தங்களது ஓட்டுனர்
வித்வத்தைப் பலப்பரிட்சை செய்து வெற்றிக்கொடி நாட்டி இவ்வுலகிற்கு
பறைசாற்றும் இடம். வெய்யில் காயும் பகல்நேரத்திலும் “நான் கடந்து
விடுகிறேன். நீ அங்கேயே நில்” என்ற அர்த்தத்தில் முகவிளக்கைப் போட்டுப்
போட்டு டிம்மிடிப்பி ஸ்விட்ச்சுக்கு வலிக்கும் வரை அணைத்துப் போடுவார்கள்.
ஸ்டியரிங் நன்கு ஒடிக்கத் தெரிந்த திமிரில் அகராதி பிடித்த சிலர் பாதியில்
ஏறி தங்களது ஹெட்லைட் எதிர் ஆள் வண்டியின் ஹெட்லைட்டுக்கு முத்தமிடும்
வண்ணம் நிறுத்தி வெறுப்பேற்றுவார்கள். இப்போது எதிரும்புதிருமாக லோடு
லாரியே வந்தாலும் மெதுவாகத் தாண்டிவிடும் அகலம் தாராளமாக இடம் இருக்கிறது.
சரி.. எப்படியும் நாம பாலம் தாண்டப் போவதில்லை. பாலத்துக்கு முன்னர்
இடதுபுறம் காவிரியின் கிளைநதியோடு பயணிக்கும் பாக்கியம் பெற்றோம். தண்ணீர்
கொஞ்சமே இருந்தாலும் ஓடும்நதி ஒரு அழகுதான். நளினமாக வளைந்து நெளிந்து
வாலைக்குமரியாக ஓடிக்கொண்டிருந்தது. இடதுபுறம் பச்சைப் பசேல். வலதுபுறம்
சலசலக்கும் ஆறு. கரையோரத்தில் நெடிதுயர்ந்த அரசமரங்கள். ”காவேரிக் கரையில்
மரமா இருந்தா வேருக்கு யோகமடி” என்று ஷங்கர் மஹாதேவன் மனசுக்குள் சத்தமாகப்
பாடினார். நேரமோ சாயங்காலம். ஏசியை அணைத்துவிட்டு ஜன்னலைத்
திறந்துவிட்டாயிற்று. ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று பறக்கும் பட்சிகள். மர நிழலில் அசைபோட்டபடி
ஓய்வெடுக்கும் ஆவினங்கள். ஆங்காங்கே எதிர்ப்படும் குட்டையில் வெள்ளிக்
கிண்ணங்களாக எட்டிப்பார்க்கும் அல்லி மலர்கள். குலை தள்ளியிருக்கும் வாழைத்
தோட்டம். இயற்கையிலேயே இறைவனைக் கண்டாயிற்று. இந்த ஒத்தையடிப்பாதை
ரோட்டில் எவன் வரப்போகிறான் என்று ஒருவர் ஹீரோ ஹோண்டாவில் ஜுனியர் விகடன்
படித்துக்கொண்டு எதிரே வந்தார். கிராம வழக்கப்படி ஊருக்குப் புதுசான நான்
பதவிசாக ஒதுங்கிக்கொண்டேன். அவர் ரோடு. அவர் வண்டி. அவர் போறார். இடையில்
நாமார்?
நீங்களே தொலைந்துவிடலாம் என்று தாறுமாறாக வண்டி
ஓட்டினாலும் நேரே ஹரித்துவாரமங்களத்துக்குத்தான் சென்றடைவீர்கள். இதுபோன்று
வயற்காட்டை கிழித்துக்கொண்டு போகும் ரோட்டில் உல்லாசமாகப் பயணிக்கும் போது
திசை முக்கியம். சரேலென்று ஒரு கிளை ஒத்தையடிப்பாதை ரோடு பிரியும்.
நீங்கள் மேற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தால் தென்மேற்கில் திரும்பும்
ரோட்டில் ஒடித்துவிடக்கூடாது. “இப்படி போவணுமா?” என்று யாரிடமும் கேட்க
முடியாது. எப்பவாவது ஆடு மாடு ஓட்டிக்கொண்டு யாதவ குல முரளீக்கள் வந்தால்
கேட்கலாம். சரி. மேலே போவோம்.
ஹரித்துவாரமங்கலம் கிராமத்தை
அடைந்து கிராமவாசலில் பீடியும் கையுமாக நின்றிருந்த ஒரு கைலியிடம் “சிவன்
கோவில் எங்கயிருக்கு?” என்றேன். சின்ன சந்து மாதிரி ஒரு இடத்தைக்
காண்பித்தார். சேப்பாயி உள்ளே நுழைந்தவுடன் எதிரே தெரிந்த குளமும் அதை
ஒட்டியிருந்த கோவிலையும் பார்த்துப் பிரமித்துப்போனேன். மனசுக்குள் சிவசிவ
ஒலித்தது. வயற்காட்டிற்கு நடுவில் உறையும் நண்டாங்கோயில் கற்கடேஸ்வரர் போல
இவரும் இருக்கிறார். கோவில் நடை திறந்திருந்தது. திருஞானசம்பந்தர் பாடல்
பெற்ற திருத்தலம். வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைவதற்கு முன் வெள்ளை
வாத்து நீந்திய திருக்குளம் “வா..வா..” என்றழைத்தது.
காலை
நனைத்துவிட்டு தீர்த்தத்தைப் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டோம். கோபுரவாசலை
மிதித்ததுமே எட்டூருக்கு மணம் வீசும் பாழடைந்த சிவத்தலங்களுக்கே உரித்தான
வௌவால் “வாசனை”. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் கும்பாபிஷேகம் ஆனதாக
மெய்க்காவல் சொன்னார். “வன்னி மரம் தல விருச்சமுங்க. அதானுங்க இங்கின
விசேசம்.” என்று முன்னால் வந்தார். “குருக்கள் இருக்காருங்களா?” என்று
கேட்ட என்னைத் தாண்டி என் பிள்ளைகளைப் பார்த்து “உள்ள போலாமுங்க” என்றார்.
கொடிமரம் தாண்டி சன்னிதி நந்தியருகில் சென்ற போது மீண்டும் நான்
“குருக்கள்...” என்று இழுத்தவுடன் “ஐயிரு சம்சாரத்துக்கு காலு
ஒடிஞ்சிபோச்சுங்க... ரெண்டு நாளு ஆவுது. நாளக்கி வருவாரு... நா சாமிய
காமிக்கிறேனுங்க..” என்று கண்ணப்பன் போலக் கூப்பிட்டார். ”ஒரு நிமிசம்...”
என்று வெளியே ஓடினார்.
நான்கைந்துக் கொத்து புன்னை இலைகளைக்
கொண்டு வந்து கையில் திணித்தார். “இதை அப்படியே படியில போட்டுக்
கும்பிடுங்க...” என்று கர்ப்பக்கிரஹ வாசலைக் காண்பித்தார். உள்ளே ஸ்வாமி
விளக்கு எரிந்துகொண்டிருந்தது. “ஐயிறு ரெண்டு நாளா வரலைன்னு சொன்னீங்க..
விளக்கு எரியுது” என்று ஆச்சரியமாகக் கேட்டேன். “இங்கே இன்னொரு விசேசம்
என்னான்னா.. வெளக்கு எரிஞ்சுகிட்டேயிருக்கனும்ங்க... அதான் நானு ஏத்தினேன்.
நீங்களும் இங்கின விளக்கு போட்டு சாமி கும்பிடுங்க...குடும்பத்துக்கு
நல்லது...எல்லா தோசமும் போயிரும்...”. “கையில எண்ணெயெல்லாம் கொண்டு வரலையே”
என்று கையை விரித்தவனை “அந்தால ஒரு மளிய கடை இருக்கு பாருங்க.. அங்கின
விளக்குக்கு ஊத்தற எண்ணெ கிடைக்கும். நீங்க வாங்கியாரீங்களா? இல்ல காசைக்
குடுங்க நா வாங்கியாரேன்...” என்பவரைப் பார்க்கும் போது சிவபெருமானே
கைலாயத்திலிருந்து ஒரு கைடுவை அனுப்பி தரிசனம் தர தயாராகிவிட்டான் என்று
எண்ணினேன்.
கையில் ரூபாய் தாளை அமுக்கி எண்ணெய் வாங்கிவரச்
சொன்னேன். விரைந்தார். அவர் வாங்கி வரட்டும். இங்கே பாருங்கள். நாம்
ஸ்வாமியை தரிசிப்போம். சுயம்பு மூர்த்தி. பானம் சற்றே வளைந்து
காணப்படுகிறது. தண்ணீரில்லாத தாராபாத்திரமும் ருத்ராட்ச பந்தலும்
பாதாளேஸ்வரரின் சிரசுக்கு மேலே அலங்கரிக்கிறது. ஹரி வராஹ அவதாரமெடுத்து
சிவனின் அடியைக் காண முடியாமல் திரும்ப வெளிப்பட்ட துவாரம்
இருக்குமிடமாகையால் அரி(விஷ்ணு)+துவார+மங்கலம்(ஊர்). பெரிய வெளிச்சமில்லாத
கோவில். ஒற்றைத் திரியில் எரியும் இரு விளக்கொளியில் ஏகாந்தமான தரிசனம்.
கையில் வாங்கிக் கொண்டு சென்ற வேஷ்டியை கர்ப்பக்கிரஹ வாசலில் வைத்தேன்.
“விஸ்ணு வெளியிலெ வந்த துவாரம் லிங்கத்துக்கு பின்னாடி இருக்குதுங்க.. மூடி
வச்சுருக்காங்க...” என்று ஸ்தலபுராணத்தின் ஹைலைட்டைச் சொல்லியபடியே கையில்
ஷாஷே எண்ணெய் பாக்கெட்டோடு வந்தார் மெய்க்காவல்.
பக்கத்தில்
தண்ணீர் குடித்த அகல் விளக்குகளை எடுத்து வடித்துவிட்டு விளக்குப்
போட்டோம். தண்ணீரில் விளக்கெரித்தாராம் வள்ளலார்...” என்ற என் புராண
வசனத்திற்கு முறைத்தார்கள். ”நமஸ்தே அஸ்து பகவன்....” சொல்லி வழிபட்டு
அலங்காரவல்லி சன்னிதியிலும் விளக்கேறினோம். கர்ப்பக்கிரஹ வாசலிலிருந்த
சிம்மத்தின் பிடரியெங்கும் குங்குமம். அங்கும் புன்னையார்ச்சனை செய்து
வழிபடச்சொன்னார் மெய்க்காவல். நல்ல அகண்ட பிரகாரம். வலம் வந்தோம். சுத்தமாக
இருந்தது. பிரகாரத்தில் தல விருட்சம் வன்னி செழித்து இருந்தது. ஒரு
காலத்தில் வன்னி வனமாக இருந்த பிரதேசமாம். மேலும் சிவனின் பஞ்ச ஆரண்ய
க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. திருக்கருகாவூர் முல்லை வனம்.
அவளிவநல்லூர் பாதிரி. அரதைப்பெரும்பாழி அதாவது இப்போது நீங்கள்
தரிசித்துக்கொண்டிருக்கும் அரித்துவாரமங்கலம் வன்னி வனம், இரும்பூளை
எனப்படும் ஆலங்குடி பூளை வனம், திருக்கொள்ளம்புதூர் வில்வ வனம். இந்த ஐந்து
வன க்ஷேத்திரங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது சர்வ பாப விமோசனம்
கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கொடிமரத்தருகில் நமஸ்கரித்தோம்.
“இங்கேயிருந்து கும்பகோணத்துக்கு மறுபடியும் அமராவதி பாலம் போய்தான்
போகனுங்களா.. இல்லை வேற வழி இருக்கா?” என்று கேட்டேன். “கிழக்கால போய்
இடதுபக்கம் போனீங்கன்னா வலங்கைமான் போயிறலாங்க.. அப்படியே போங்க.. வளி
நல்லாருக்கும்...” என்றது மெய்க்காவல். அதுவரை பரப்பிரம்மமாக
மடப்பள்ளியருகே திண்ணையில் படுத்திருந்தவர் எழுந்து ”சந்திரசேகரபுரம்
போய்ப் போங்க.. போற வளியில இன்னும் சிவங்கோயிலு இருக்கு...” என்றார்
என்னுடைய நீறுபூத்த நெற்றியைப் பார்த்து. “சந்திரசேகரபுரம் எப்படி....”
என்று மெள்ள ஆரம்பித்ததும் கோவிலுக்கு எதிர்த்தார்ப்போல இருந்த குளத்துக்கு
அப்பால் சின்ன சந்தைக் காண்பித்தார். ”ரோடு எப்படியிருக்கும்?” என்று நான்
கேட்டுக்கொண்டிருக்கும் போது சின்ன யானை ஒன்று அந்த வழியாக வந்தது.
அது......
{யாத்திரை தொடரும்...}
[தவில் வித்வான்
ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் நியாபகம் வந்தது. அவரைத் தேடி இங்கே
2013ம் வருஷத்திய தியாகராஜ ஆராதனையில் நாகஸ்வரக் கச்சேரியோடுப் பிடித்தேன்.
http://www.youtube.com/watch?v=P5F828OxPwg
இப்போது பார்த்த கோவிலுக்கு இதைப் பின்னணி இசையாக வைத்துக்கொள்ளுங்கள்.
மீண்டும் படித்துப்பாருங்கள். சிவபெருமான் ரிஷபாரூடராகக் காட்சி தருவார்!]
3 comments:
இன்று மட்டும் 24 பதிவுகள்...!
?
நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மகாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னி ருத்ராய ம்ருத்யுஞ்சயாய சர்வெச்வராய சதாசிவாய ஸ்ரீமன் மகாதேவாய நமஹ.
சுப்பு தாத்தா.
நல்லதொரு பகிர்வு...
தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...
Post a Comment