இரண்டு
பக்கமும் அடர்ந்து வளர்ந்த செழிப்பான புளிய மரங்கள். மேடுபள்ளமில்லாத
செம்மண் சாலை. சூரியன் கவிழ்ந்து இருள் பரவத் தொடங்கியிருந்த முன்னிரவு
நேரம். நிர்மலமான வானத்தில் தனித்து ஆட்சியிலிருக்கும் பௌர்ணமி நிலா. ஒரு
குடும்பம் கொள்ளுமளவுக்கு மேலே மூடியில்லாத ஜட்கா வண்டியில் காதில் வைரக்
கடுக்கனுடன் நான் முதலில் உட்கார்ந்திருக்கிறேன். ஆமாம். நான்தான். கட்டுக்
குடுமி. அரையில் பட்டு பஞ்சகச்சம். மேலே பட்டு
உத்தரீயம். பக்கத்தில் பட்டுப் புடவையில் சங்கீதா கைக்கு பஃப் வைத்த
ஜாக்கெட்டில். அப்புறம் பின்னால் பட்டுப் பாவாடை சட்டையில் பெரியவளும்
சின்னவளும். மரங்களுக்கிடையில் வரும் இடைவெளியில் ஓடி வரும் முழு நிலா அந்த
செம்மண் தரையில் வெளிச்சக்கோடு போட்டு போட்டு மறைகிறது. மேல்
சட்டையில்லாமல் முண்டாசோடு ஒருவன் நின்று கொண்டே குதிரை ஓட்டுகிறான்.
ஒரு பழங்காலத்து கோயில் வாசலில் போய் வண்டி நிற்கிறது. வண்டியிலிருந்து குதித்து இறங்குகிறேன். ராஜகோபுரமில்லை. சொற்ப கூட்டமிருக்கிறது. ஃபோகஸ் லைட் போல நிலா வெளிச்சத்தில் கோயில் முழுவதும் தெரிகிறது. நல்ல காற்று. உள்ளே நுழையும் முன் மண்டப கருங்கல் சுவரில் ஒரு சித்திரம். பழங்கால பச்சிலை காவிக் கலரில் வரைந்தது. புலித்தோலை அரைக்கசைத்திருக்கிறார் சிவபெருமான். சிரசில் பிறைசூடியிருக்கிறார் எம்பெருமான். ஜடையில் கங்கை எட்டிப்பார்க்கிறாள்.
அர்ஜுனனுக்குக் கொடுத்த பாசுபதாஸ்திரத்தை அம்பு தொடுத்துக் கையில் ஏந்தியிருக்கிறார். முதுகில் அம்பராத்தூளி. அவருடைய காலடியைச் சுற்றி நாக்கு தள்ளிய அசுரத் தலைகள் இரைந்து கிடக்கின்றன. உயிர்ப்பான அந்த ஓவியத்தைப் பார்த்து சிலிர்ந்துக்கொண்டே உள்ளே செல்கிறோம்.
அது ஒரு அம்மன் கோயில் என்று தெரிகிறது. கர்ப்பக்கிரஹத்துள் அரை முழம் வெண் தாடி வைத்த ஆகிருதியான குருக்கள் கணீரென்று ஸ்லோகம் சொல்லி தீபாராதனை காண்பிக்கிறார். அபய ஹஸ்தங்களோடு ஆறடிக்கும் மேலிருக்கும் அம்மன் சிலை. கர்ப்பக்கிரஹம் ஒரு அதிசய அமைப்போடு இருக்கிறது. அம்மனுக்கு வலதுபுறம் வெளி பிரகாரமெல்லாம் தெரிய திறந்தவெளியாக இருக்கிறது. வானத்தில் நிலா ஒளிர்வதை சன்னிதிக்குள்ளிருந்து பார்ப்பது மனசுக்கு ரம்மியமாக இருக்கிறது. கோயிலுக்குப் பின்னால் சலசல ஓசையுடனும் நிலா வெளிச்சம் வெள்ளிக் கம்பிகளை வாரி இறைத்த காவிரி கரைபுரண்டு ஓடுகிறது.
“ம்... குழந்தை பாக்கியம் வேணும்னு வேண்டிக்கிறவா இந்தப் பக்கம் வாங்கோ”ன்னு அழைக்கிறார். இரண்டு மூன்று பேர் அவருக்குப் பக்கத்தில் சென்று இடது புறம் கொஞ்சம் மேடாக இருந்த இடத்தில் சம்மணமிட்டு அமர்கிறார்கள்.
“இப்ப வானத்துல நிலாவைப் பாருங்கோ...”
பார்த்தவர்கள் பரவசப்படுகிறார்கள்.
“தெரியறதா?”
“ம்...அம்மன் ஜொலிக்கிறா...” என்கிறாள் ஒரு மாது.
நான் நிமிர்ந்து பார்க்கிறேன்.
பால் நிலா இப்போது வண்ண நிலவாக இருக்கிறது. ரத்தினம், பவளம் ,முத்து வைர வைடூர்யங்களால் அலங்காரம் பண்ணிக்கொண்டு அம்மன் கலகலவென்று சிரிக்கிறாள். மெய்சிலிர்த்துப் போகிறேன்.
பக்கத்தில் ஒரு பச்சை உடம்புக்காரி “ரெண்டு மாசத்துக்கு முன்னால தான் வந்தேன். இந்த மாசம் கொழந்தை பொறந்திருச்சு..” என்று கையில் துணி சுற்றி ஒரு கைக்குழந்தையை ஏந்திக் கொண்டு சிரிக்கிறாள். இரண்டு மாதத்தில் குழந்தையா என்று வாய் பிளந்து ஆச்சரியமாகப் பார்க்கிறேன்.
அம்மனை தரிசித்துவிட்டு வலது புறம் திரும்பினால் ஒரு நாகர் சன்னிதி. ஒரு பீடத்தில் உயிரோடு ஒரு நாகம் அமர்ந்திருக்கிறது. படமெடுத்து ஆசீர்வாதம் செய்யும் போஸில் மேனியெங்கும் தீபாராதனை ஒளியில் பளபளக்கிறது. பார்த்தால் பயமாக இல்லை. அனைவரும் தரிசிக்கிறோம். “யானை தும்பிக்கை வைக்கிறா மாதிரி இதுவும் பண்ணுமா?” என்று சின்னவள் குனிந்து கேட்கிறாள். சிரித்துக்கொண்டே கோயிலை விட்டு வெளியே வருகிறோம்.
ஒரே ஆச்சரியம். கோயிலுக்குள் செல்லும் போது தூண்களில் தீவட்டி சொருகியிருந்தார்கள். இப்போது வெளியே சீரியல் பல்புகள் ஒளிர்கிறது. வாசலில் அர்ச்சனைத் தட்டு மற்றும் பூக்கடைகள். பார்க்கிங் டிக்கெட்டும் கஷ்கட்டில் பையோடும் வேஷ்டியை மடித்துக்கட்டிய ஒருவர் நிற்கிறார்.
ஐராவதம் போல ஒரு வெள்ளைக் கலரில் ஒரு பியெம்டபிள்யூ வந்து நிற்கிறது. சட்டையில்லாமல் முண்டாசு கட்டிக்கொண்டு ஜட்கா ஓட்டியவன் தலைக்கு வெள்ளை தொப்பியுடன் ஒயிட் அண்ட் ஒயிட்டில் கதவு திறந்துவிடுகிறான். க்ராப்பு தலையுடன் நானும் ஃபேமிலியும் காரேறி பறக்கிறோம். ஆனால், அதே செம்மண் சாலை. பின்னால் புழுதி பறக்கிறது.
எழுந்துவிட்டேன். இதை நினைத்துக்கொண்டே ஒரு ஐந்து நிமிடம் அதிகமாக பல் தேய்த்தேன். காஃபி குடிக்கும் போது வீட்டிலுள்ளோர்க்கு வேண்டிக்கொண்ட தெய்வங்கள் எல்லாம் கண் முன் வந்தது. “கனவுல நாகர்லாம் வந்ததுன்னு சொன்னியே.... பொன்னமராவதி அழகிய நாச்சியம்மனுக்குப் போனுமோடா?” என்றாள் அம்மா.

0 comments:
Post a Comment