Saturday, February 22, 2014

பாலகுமாரனுடன் புத்தகக் காட்சியில்!

பத்தாம் தேதி கோயில் திருவிழாவுக்கு கொடியேத்துகிற மாதிரி ஆரம்பித்ததிலிருந்து வொய்யெம்சியேவுக்கு போவதற்கு ஆளாய்ப் பறந்தேன். நேற்று அந்த வேளை வாய்த்தது. 37வது புத்தகக் காட்சி. சைதையிலிருந்து வரும் போது தேவர் சிலை சிக்னலில் யூ டர்ன் எடுக்கும் போதே நந்தனம் கல்லூரி மைதானத்திற்கு எதிரே கை போட்டு நாற்சக்கர வாகனங்களை உள்ளே கடத்திக்கொண்டிருந்தார்கள். வலது மீடியோட்டரோடு அணைத்துத் தப்பித்து மெயின் நுழைவுவாயிலுக்குச் சேப்பாயி திறமையாகக் கொண்டு சேர்த்தாள்.

உள்ளே நுழைந்தவுடன் கண்ணில் பட்டது நாய்க் கண்காட்சி. பக், அல்சேஷன், டாபர்மேன் மற்றும் பெயர் சொல்லத்தெரியாத பெரிய மனுஷர்கள் வீட்டு செல்லங்கள் நாய்கள் என்ற பெயரில் உலவியது. கையில் பிடித்துக்கொண்டு நடந்தவர்களைத் தாண்டுவதற்கு சிரமமாயிருந்தது. அரை மைக்ரோ செகண்ட் அடித்த ஹாரனைக் கரிய நிற புஷ்டியான நாயொன்று இனம் கண்டு கொண்டு “அட.. நாயே..” என்று முறைத்தது. வாலைச் சுருட்டிக்கொண்டு பதவிசாய் வண்டியை ஒட்டிக்கொண்டு போய் இரண்டு பேர் சுவற்றைப் பார்த்து நின்றுகொண்டு தலை குனிந்து நிலம் ஈரமாவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் இடமருகே நிறுத்தினேன். இயற்கை யோகாவிலிருந்த அவர்கள் நிறுத்தவில்லை.

காட்சிக்குப் போகும் வழியெங்கும் வாகனங்கள். 1500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தலாம் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். 1250 வாகனங்கள் வழியோரத்தில் நின்றிருந்தது. காரம் போட்ட படா அப்பளத்தைக் கடித்துக்கொண்டே வந்தவனைப் பார்த்து ஷோவுக்கு வந்திருந்த நாயொன்று நாக்கைத் தொங்கப்போட்டது. எதிர்சாரிக்கு எகிறி கடித்துக்கொண்டு தொடர்ந்தான்.

பத்திரிகையில் பணி புரிவதால் அலுவலகத்தில் நண்பர்களிடம் இலவச நுழைவுச் சீட்டுப் பிச்சையெடுத்தேன். ஊஹும். எவரும் மசியவில்லை. பத்து ரூபாய் செலவுக்காக இல்லை. டிக்கெட் வாங்கும் வரிசை மௌண்ட் ரோடு வாசல் வரை நின்றால் அதில் ஒரு அரை மணி நேரம் வீணாகுமே என்ற புத்தக ஆசையில். ஒரே கவுண்டரில் இருவர் கிழித்துக்கொண்டிருந்தார்கள். ஆயிரம் ரூபாய் சலவைத் தாளை காண்பித்து ஒருவர் டிக்கெட் கேட்டு மிரட்டிக்கொண்டிருந்தார். அடக் கடவுளே!

நுழையுமிடத்தில் இருந்த செக்கர் டிக்கெட்டில்லாமல் சொக்கனாதனே வந்தாலும் உள்ளே விடமாட்டார் போல நக்கீரத்தனமாகத் தெரிந்தார். நான்கு டிக்கெட்டுகளையும் அவர் கையில் கொடுத்ததும் “போங்க..போங்க..” என்று எண்ணிப் பார்க்காமலேயே உள்ளே விட்டபோது அவரது வெள்ளையுள்ளம் புரிந்தது. நுழைந்ததும் வலது சாரியில் கடைசி ரோவிலிருந்து பார்க்க ஆரம்பித்தேன். சிலர் அமரர் நம்மாழ்வார் புத்தகங்களை பிரித்துப் பிரித்துப் பார்த்தார்கள். அகஸ்தியர் போகரின் டு கலர் ப்ரிண்டிங் அட்டைகளை தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டும் சிலர் சித்தபுருஷர்களின் ஆசியை தேடிக்கொண்டிருந்தார்கள். ராஜ நாகம் அட்டையை அலங்கரிக்க இந்தியப் பாம்புகள் என்ற புத்தகம் கண்ணில் பட்டது. எடுக்கலாமென்றால் “இதெல்லாம படிக்கப்போறீங்க?” என்று மிஸ்ஸஸ் புஸ்புஸ்ஸென்றுச் சீறிக் கொத்தினார்கள்.

விசாவில் இரண்டு வாங்கினேன். திருமகள் வாசலில் பாலாவை ஃப்ரேமில் மாட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். நெருடியது. கேமிராவும் வாட் போரில் எதிரி மன்னனை வீழ்த்தும் வாள் போல இரண்டடி நீள மைக்குமாக பாதசாரியில் சேனல்காரர்கள் வலம் வந்துகொண்டிருந்தார்கள். நாலைந்து புத்தகங்களுடன் வீருநடை போட்டுக்கொண்டிருக்கும் போது சன் டிவிக்காரர் ”லீவு நாள்ல இந்த புக் ஃபேர்ல புக் வாக்கிறதப் பத்தி நாலு வார்த்தைச் சொல்லமுடியுங்களா?” என்று நெருங்கினார். கேட்டபடி பேசினேன். “எப்ப வரும்?” என்று அல்பமாகக் கேட்டேன். “ஏழு மணி.. சன் ந்யூஸ்ல” என்று காமிராவை மூடிக்கொண்டு “அவர் யாரோ..நான் யாரோ.” என்று போய்விட்டார். இதை எழுதும் வரை ஒளிபரப்பியதாக தெரியவில்லை. போகட்டும்.

எழுத்தாளர்கள் விண்ணப்பக்கலாம் என்று ஒரு பதாகை தொங்கியது. பிக்கலாம் என்று எழுதுவதற்கு பிடிக்கவில்லை போலும். சாப்பாடு, போகவர பயணச்சீட்டோடு மலேசியா பயணமாம். இலக்கிய எழுத்தாளர்களுக்குக் குடிக்க எதாவது வேண்டுமே. அதற்கெல்லாம் வழிவகை செய்தால் பத்து பேருக்குப் பயணச்சீட்டு எடுக்கலாமே! 120 பக்கங்களுக்கு மிகாமல் எழுதவேண்டுமாம். ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். இன்னொரு ஸ்டாலில்”Improve your Enlish தமிழ் விளக்கத்துடன்” என்று இங்லீஷில் ஜியை விட்டு எழுதிய விங்லீஷ் ஸ்ரீதேவியைத் தேடினேன். அகப்படவில்லை. விவேகானந்தர் படங்களுடன் பாலகௌதமன் ஸ்டாலில் அமர்ந்திருந்தார். பசங்களுக்கு லேபிளும் விவேகானந்தரின் திருவுருவப் படங்களும் கொடுத்தார்கள்.

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் போல அப்படியே வாசகக் கூட்டத்தோடு கூட்டமாக நகர்ந்து கொண்டிருக்கையில் டிஸ்கவரியில் வேடியப்பன் பிஸியாக பில் போட்டுக்கொண்டிருந்தார். ”வேடியப்பன்” என்று தொந்தரவு செய்து விஜாரித்தேன், பக்கத்திலிருந்து “நேர்ல ரொம்ப யங்கா இருக்கீங்க சார்..” என்று ஒரு கணீர்க் குரல். டீஷர்ட்டில் ஆஜானுபாகுவாக நின்றிருந்தார்.”தேங்க்ஸ்...” என்றதற்கு “டீலிங் புரியலையா?” என்று எதிர் கேள்வி கேட்டு மடக்கினார். சுதாரித்துக்கொண்டு “நீங்களும் ரொம்ப யங்கா இருக்கீங்க.. காத்தடிச்சா பறக்கிற மாதிரி இளைப்பா இருக்கீங்க...” என்று ஒன்றுக்கு பத்தாக பதில் மரியாதை செய்துவிட்டுதான் வந்தேன். யங்கா இருக்கேன் என்ற உண்மையை இந்த அண்டமறிய உரைத்தவர் ஜீவ கரிகாலன்.

அடுத்த ரெண்டாவது ரோவில் குமுதம் ஸ்டால் வாசலில் சுப்ரஜா ஸ்ரீதரன். கையைப் பிடித்து உள்ளே அழைத்துக்கொண்டு போனார். உள்ளே ப்ரியா கல்யாணராமன். நாற்காலியில் சுதா ரகுநாதன் சர்வாலங்கார பூஷிணியாக அமர்ந்திருந்தார். பக்கத்தில் வெள்ளையில் ஆர்ட் டைரக்டர் ஜி.கே. 108 திருப்பதிகள் வெளியீட்டு விழா. எனது மனைவி சங்கீதாவை சுதாவுக்கு பொன்னாடை போர்த்த ஏற்பாடு செய்தார் சுப்ரஜா ஸ்ரீதரன். கலகலவென்று பேசிக்கொண்டிருந்தோம். ”ப்பா...கால் வலிக்குதுப்பா...” என்று பெண்கள் என் இடுப்பில் குத்தினார்கள். பேர் பாதி ஸ்டால்களைப் பார்வையிடாமல் நேரே சுப்ரஜாவிடம் சென்றேன்.

ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்பது கிடையாது என்று பசங்களுக்குப் புத்திமதி கூறி ஐஸ்க்ரீம் சாப்பிட அழைத்துவந்தார். டிவி அடிபடமால் இருக்க அடைத்துவரும் தெர்மாகோல் பாக்ஸை கையில் வைத்துத் தேய்த்தால் பந்துபந்தாக உதிருமல்லவா? அப்படி ஒரு ஐஸ்க்ரீம். மினி மெல்ட்ஸாம். அமெரிக்காவில் பிரபலமானது என்று சென்று வந்த மருமான் சொன்னான். ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது பாலகுமாரன் வந்தார். வணக்கம் சொன்னேன். அடையாளம் சொன்னேன். புரிந்து கொண்டு “ஃபேஸ்புக்ல கொஞ்சம் புஷ்டியா இருக்கிறமாதிரி இருக்கு...” என்று சொல்லிவிட்டு பசங்களின் கன்னத்தைத் தடவி ஆசீர்வதித்தார். வீகேயேஸ் இன்று நிராயுதபாணியாக வந்தாலும் தன்னுடைய லுமியாவில் நேர்த்தியாக ஃபோட்டோ பிடித்துக் கொடுத்தார். நான் வீடு வந்து சேர்வதற்குள் என்னுடைய மெயிலுக்கும் அனுப்பி மகிழ்வித்தார். அவருக்கு என் நன்றிகள் பல!

வாங்கின புக்ஸ் கீழே கொடுத்துள்ளேன். இன்னும் ரெண்டு மூன்று வாங்கவில்லை. மீண்டும் போவேன்.

1. திருக்குறள் பரிமேலழகர் உரை
2. உயிர்ச்சுருள் - பாலகுமாரன்
3. எரியாத நினைவுகள் - அசோகமித்திரன்
4. 1945ல் இப்படியெல்லாம் இருந்தது.... - அசோகமித்திரன்
5. அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்
6. பட்டினத்தார் பாடல்கள் (விருத்தியுரை) - திரு.வி.க
7. நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) - நகுலன்
8. வாஸவேச்வரம் - கிருத்திகா
9. திருமூலரின் திருமந்திரம் - சி.எஸ். தேவநாதன்
10. ஜகத்குரு - ப்ரியா கல்யாணராமன்
11. வாஷிங்டனில் திருமணம் - சாவி
12. பாதகம் செய்பவரைக் கண்டால் - பாலகௌதமன்
13. நாய்கள் - நகுலன்
14. தமிழ் அன்றும் இன்றும் - சுஜாதா
15. வேணியின் காதலன் - சுஜாதா
16. விளிம்பு - சுஜாதா
17 வேதம் (வாழ்வின் வழிகாட்டி) - சுவாமி ராம்ஸ்வரூப்ஜி, யோகாச்சார்யா
18. காயத்ரீ மந்திரம் (பொருளும், ஹோம விதியும்) - சுவாமி ராம்ஸ்வரூப்ஜி, யோகாச்சார்யா
19. தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை
20. துளி விஷம் - ஆனந்த் ராகவ்
21. டாக்ஸி டிரைவர் - ஆனந்த் ராகவ்

2 comments:

அப்பாதுரை said...

இதையெல்லாம் எப்ப் எப்படி படிக்கப் போறீங்கனு ஒரு வரி எழுதியிருக்கலாம்.

சாந்தி மாரியப்பன் said...

அடுத்த புத்தகத் திருவிழாவுக்குள்ளே வாசிச்சுருவீங்கதானே :-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails