"எங்கப்பா சின்ன வயசிலேயே தவறிட்டார். அம்மாவும் என்னைப்
பெத்துப்போட்டுட்டு காலமாயிட்டா. இங்க பாருங்கோ.. இத்துணூண்டுலேர்ந்து...
என் கையைப் பாருங்கோ.. இத்துணூண்டுலேர்ந்து... அக்காதான் என்னை எடுத்து
வளர்த்தா.. ரொம்பவும் தங்கமானவ..... எப்போதும் சிரிச்ச முகம்... தயாள
குணம்.. ஏதோ யூரினரி இன்ஃபெக்ஷன்னு பேசிக்கிறா... சீஃப் டாக்டர் வந்து
பார்த்தாதான் என்னென்னு தீர்க்கமாத் தெரியுங்கிறா....”
ஆஸ்பத்திரி காரிடாரின் செண்டட் ஃபினாயில் வாசனையைத் தாண்டி வார்டுக்குள் நுழைந்து காஃபி ஃபிளாஸ்க் வயர்க்கூடையை பாட்டியின் படுக்கையருகே வைத்துவிட்டு நிமிர்ந்து பக்கத்தில் வீசிய ஒரு ஸ்நேகப் புன்னகைக்கு போன பாரா அளவுக்குப் பேசியிருந்தார். ஜன்னலோரமாகப் படுக்கையில் கிடந்த ஆஜானுபாகுவான அம்மாவிற்கு அட்டெண்டராக கோடு போட்ட தொளதொளா காமராஜர் சட்டையும் மயில்கண் வேஷ்டியுமாக உட்கார்ந்திருந்த அந்தப் பெரியவர் ஆதூரமாகப் பேச ஆரம்பித்துவிட்டார். லேசாக அம்மைவட்ட முகம். குடைமிளகாய் மூக்கின் மேலிருந்த நோஸ் பேட் தழும்பு அவர் பிறவிக் கண்ணாடிக்காரர் என்று காட்டியது. சாக்தத்தில் அதீத பற்று மிக்கவர் போலும். நெற்றியில் தீற்றலாய்க் குங்குமம் மணத்தது. கை மணிக்கட்டில் சிவப்புக் கலர் முடிகயிறு கட்டியிருந்தது. வார்த்தைக்கு வார்த்தை எப்போதும் வாயில் ஒரு அசட்டுப் புன்னகை.
உடம்பெங்கும் துளைத்து காவடிக்கு அலகு குத்தினாற்போல ட்யூப் மாட்டிப் படுத்திருந்த அந்த அம்மாவின் உடம்பு கண்ணுக்குத் தெரிந்த இடமெல்லாம் கண்டுகண்டாக வீங்கியிருந்தது. காலில் பாளம்பாளமாக வெடித்திருந்த பித்த வெடிப்புகள் அவர் ஒரு உழைத்த கட்டை என்று கட்டியம் கூறியது. பாத்திரம் தேய்த்துக் காய்த்துப்போயிருந்த கையை கட்டிலோடு சேர்த்துக் கட்டியிருந்தார்கள். வாயோரத்தில் லேசாக எச்சில் வழிந்தது. பக்கத்திலிருந்த அந்த அட்டெண்டர் டிஷ்யூ பேப்பர் வைத்து சாஃப்ட்டாகத் துடைத்துவிட்டார்.
என்னுடைய நோய் விசாரிக்கும் பார்வையைப் புரிந்து கொண்டது போல
”யூரினரி ட்ராக்ல இன்ஃபெக்ஷன்ங்கிறதுனால யூரின் சரியா வரமாட்டேங்கிறது.. நீர் பிரியாமத் தேங்கிப் போயி உடம்பெல்லாம் கெழங்கா வீங்கிப் போயிடுத்து. ஏற்கனவே பெருத்த சரீரம். ரெண்டிரெண்டு பவுனுக்கு ரெண்டு ஜோடி வளை போட்டிருந்தா.. கார்த்தாலதான் ஆசாரியை கூட்டிண்டு வந்து கட் பண்ணி எடுத்தோம். மோதிரவிரல்ல பவழத்தைக் கட் பண்ணும் போது லேசா கீறிடுத்து.. பாருங்கோ...” துவண்ட கையைத் தூக்கிக் காண்பித்தார். உப்பிய மோதிர விரலில் கட்டிங் ப்ளேயரால் பதிந்த சின்ன ரத்தக் கோடு ரேகையாய்த் தெரிந்தது. பாவம்.
“என்ன ஏஜ் இருக்கும் சார்?”
“போன ஃபிப்ரவரியோட எழுவத்து மூணு”
படுக்கையில் கால்மாட்டில் மாட்டியிருந்த அட்டையில் ”PATIENT NAME" க்கு அருகில் “:”னோடு சேர்த்து பர்வதமும் கீழே “AGE: 73” ம் தெரிந்தது. பேஷன்ட் ஹிஸ்டரி ஷீட்டின் கடைசியில் சில கிறுக்கலான மருந்துப்பெயர்களுடன் வைத்தியம் பார்த்த டாக்டரின் கையெழுத்தும் சேர்ந்திருந்தது.
“நீங்க?”
“என்ன கேட்டீங்க?” என்று காதருகில் கையை ஒத்தாசைக்குக் கொடுத்துக் கேட்டார்.
நான் நுழைந்த போது குடும்ப ஸகிதம் சூறாவளியாய் உள்ளே வந்த விஸிட்டர் கும்பலைப் பார்த்து ”நய்நய்ன்னு பேசி பேஷண்டை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று அடக்கிய, கருணையோடு கண்டிப்பு இரத்தமும் ஓடும் சிலுவையணிந்த ஸ்டாஃப் நர்ஸிடம் வசவு வாங்கக்கூடாது என்று மெதுவாகக் கேட்டதனாலும், டிக்கிடிக்கியென கிலுகிலுப்பையாய் ஓடும் கூரை ஃபேன் சப்தத்திலும் அவருக்கு காதில் விழவில்லை போலும்.
“இல்ல.. நீங்க.. அவங்களுக்கு...” என்று ஆரம்பித்து கடைசி ’யாரு’வும் ’?’க்குறியும் போடாமல் தனித்தனியாக கேட்டேன்.
“நா அவளோட கடேசித் தம்பி. ஐயப்பன். சேலத்துல இருக்கேன்.”
”எங்கியாவது ஒர்க் பண்றீங்களா?”
”சன்மார்ல ஒர்க் பண்றேன். வர வருஷம் ரிடையர்மெண்ட்.”
“அக்கான்னா ரொம்ப பாசம் போலருக்கு... இப்படித் தவிக்கிறீங்களே...”
”அக்காவா சார் இவ.. இல்ல..அம்மா.. அம்மா இவ எனக்கு. வேளாவேளைக்கு சாதம் போட்டு... சனிக்கிழமையானா எண்ண தேச்சுவிட்டு... ஸ்கூல் கொண்டு போய் விட்டு.. ரிப்போர்ட் கார்ட்ல கையெழுத்துக்கூட போட்ருக்கா.. பெத்தவ மாதிரி என்னைப் பார்த்துண்டா... நா கடைக்குட்டிங்கிறதால எம்மேல அவ்ளோ ப்ரியம். பாவம் திடீர்னு இப்டி வந்துடுத்து. இப்டி படுத்த படுக்கையாயிட்டாளே... ஈஸ்வரா..... தெய்வத்துக்கே இது அடுக்குமா?”
”அழாதீங்க சார்... ம்.. கண்ணைத் துடைச்சுக்கோங்க.. வயசாவுதில்லை.. என்ன சார் குழந்தைமாதிரி தேம்புறீங்க? கூடிய சீக்கிரம் எழுந்தும் உட்கார்ந்துடுவாங்க பாருங்க.. முகத்தை துடைங்க... ட்யூட்டி சிஸ்டர் வந்தா என்னையும் எதுனா சொல்லுவாங்க...”
நோய்வாய்ப்பட்டு தன்னிலை மறந்து சயனித்திருக்கும் படுக்கையாளர்களை பயமுறுத்துவது போல “சர்ர்ர்ர்”ரென்று ராக்கெட் வேகத்தில் மூக்கைச் சிந்திக் கர்ச்சீஃப்பில் துடைத்துக்கொண்டார். பக்கத்துப் படுக்கையில் சலேன் ஏறிக்கொண்டிருந்தவருக்கு பயத்தால் ஒருமுறை உடல் உதறித் தூக்கிப்போட்டது. தாலி பாக்கியத்திற்காக பாக்கெட் சைஸ் சஷ்டி கவசம் (அட்டை கசங்கியது. கோயிலுக்கு விளக்கேற்றும் எண்ணெய்க் கறை படிந்தது) புத்தகம் படித்துக்கொண்டிருந்த அவரது மனைவி உதடு முருகனை முணுமுணுக்க ஐயப்பனை விரோதமாகத் திரும்பிப்பார்த்தார்.
என்னை ரிலீவ் செய்வதற்கு அட்டெண்டர் வர இன்னும் அரை மணிநேரமாவது ஆகும். அதுவரை ஆறுதலாக இருக்கட்டுமேயென்று ”என்னாச்சு.. ஏன் இப்படியானாங்க?” என்று கூடுதல் விபரங்கள் கேட்டேன். பொழுதுபோக்குப் பேச்சு என்பது நமது ரத்தத்தில் ஊறிய சமாச்சாரம்.
“ரெண்டு மாசம் முன்னாடி வரை நன்னாத்தான் நடமாடிண்டிருந்தா.. திடீர்னு பொதேர்..பொதேர்னு கீழே விழ ஆரம்பிச்சுட்டா.. ஒரு நா சமச்சிண்டிருக்கும் போது ஓடிண்டிருக்கிற க்ரைண்டர் மேலே சாஞ்சுட்டா.. ஒரு நா வாசல்ல கோலம்போடும் போது... இப்படி நெலையில்லாம இருந்தவ ஒரு நாள் பாத்ரூம் வாசல்ல பொதகடீர்னு துணி ஒனத்தற கழி மாதிரி கீழே விழுந்து.... படியில முட்டிண்டு... மண்டை உடைஞ்சு.... தரையெல்லாம் ரத்தம் கொட்றது... ராயப்பேட்டை ராகவன்கிட்ட தூக்கிண்டு ஓடினோம்... ஃபேமிலி டாக்டர். என்னடாது.. அருவியாக் கொட்டறதுன்னு ஸ்டிட்ச் போட்டு.. ட்ரெஸ்ஸிங் பண்ணிக் கட்டுப் போட்டார்... ஏதோ விவகாரமாப் படறதேன்னு சொல்லி ப்ரெயினை ஸி.டி ஸ்கேனெல்லாம் எடுக்கச் சொன்னார்... இருபதினாயிரம் செலவு பண்ணி பாரத் ஸ்கேன்ஸ்ல எல்லாம் எடுத்துப் பார்த்தோம்...”
பாட்டில் தண்ணீரை ஒரு மிடறு தொண்டைக்குச் சரித்துக்கொண்டார். அந்த இடைவெளியில் நான்..
“என்ன சொன்னாங்க?”
”டிமென்ஷியா மாதிரி இருக்கு. மூளைக்கு ரத்தம் சரியாப் போய்ச் சேரமாட்டேங்கிறது. அதனால மூளையிலிருந்து உடம்போட பார்ட்ஸுக்கு வர்ற ஆர்டரெல்லாம் சரியா வந்து சேரமாட்டேங்கிறது.ன்னார் சீஃப் டாக்டர். மூளைக்கு ரத்தம் சரியாப் பாயறவாளெல்லாம் சரியா இருக்காளோ? கேர்ஃப்ரீலேர்ந்து கீரை நறுக்கின வேர் வரைக்கும் பாலிதீன் கவர்ல கட்டி குப்பத்தொட்டில போடறேன்னு காம்பெண்ட் தாண்டி எங்காத்துள்ள போட்டுப்போறான்கள்.. இவனுக்கெல்லாம் மூளைக்கு இரத்தம் பாயறதோ?.. நன்னாத்தானே நடமாடரான்கள்... மகராஜி... இவளுக்குப் போயி இப்டி ஆயிடுத்தேன்னு துக்கம் தொண்டையை அடைக்கிறது... உறவுக்காராள்ட்ட . ஸ்நேகிதாள்கிட்டன்னு.. ஒருத்தரையும் வேத்துமை பாராட்டினது கிடையாது.. வரவாளுக்கெல்லாம் காஃபி.. டிஃபன்.. சாப்பாடு... தெருல யாருக்காவது எதாவதுன்னு சரீர ஒத்தாசை... ” குரல் கம்மியது. இதுவரை கண்கள் குளமாயின என்று கதைகளில் படித்திருந்த நான் ஐயப்பன் சார் கண்கள் கடலுக்குள் இருப்பதைப் பார்த்தேன்.
“ம்.....யாராவது ஃபேமஸ் ந்யூராலஜிஸ்ட்ட காட்டியிருக்கலாமே..” என்று அவரை அடுத்த முறை மூக்குச் சிந்த விடாமல் அடுத்த கேள்வி கேட்டேன்.
”சென்னையில ஆர்டினரியா ப்ராக்டீஸ் பண்றவாகிட்டயே அனுமார் வால் மாதிரி க்யூகட்டி நிக்கறா. இதுல பெரிய டாக்டர்கிட்டேயெல்லாம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா? எப்பக் கேட்டாலும் அடுத்த மாசம் அப்பாயிண்ட்மெண்ட் இருக்குன்னு சொல்றா. ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒடம்பு சரியிலலாம போகும்னு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிண்டு அவா க்ளினிக் வாசல்ல தவம் பண்ணிண்டு உட்கார்ந்திருக்க முடியுமா? இவா சொல்றதைப் பார்த்தா கிரிமேஷன் கிரௌண்டுக்கு லெட்டர் எழுதி ரிசர்வ் பண்ணணும்னு சொல்றா மாதிரியிருக்கேன்னு லோக்கலா ஒரு ஸ்பெஷலிஸ்ட்டு கிட்ட காமிச்சோம். பொட்ல அடிச்சா மாதிரி எடுத்தவுடனேயே ‘பெட்லயே யூரினேட் பண்றாங்களா?’ன்னு கேட்டார்.”
அந்த அம்மாளுக்கு லேசாகக் கால் அசைந்தது. “ரொம்ப சில்லுன்னு இருக்கு. எனக்கே குளிர்ராப்ல இருக்கு...” என்று சொல்லிக்கொண்டே இரண்டு இன்ச் தூசியேறிப் பழுப்பாப் போயி தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த ஆஸ்பத்திரி ஃபேனை ”டக்” ”டக்” கென்று திருகி ஒன்றுக்கு மாற்றினார்.
இன்ஜெக்ஷன் தடிமனில் இருந்த வெள்ளை கோட் நர்ஸ் பொண்ணு ஒன்று சரேலென உள்ளே வந்தது.
”பர்வதம்மா அட்டெண்டரா நீங்க?” கீச்சுக் கீச்சென்று கேள்வி கேட்டது. ஏதோ ஒரு வயற்காட்டு நர்ஸிங் காலேஜில் சர்ட்டிஃபிகேட் வாங்கிய கையின் ஈரம் காயாமல் பர்வதம்மாவைப் பார்க்க வந்தது போலிருந்தது.
“ம்...ஆமா” என்று மூக்கு சிந்திய ஆய் கர்ச்சீப்பைச் சட்டைப் பையில் திணித்துக் கொண்டார் ஐயப்பன் சார்.
“ட்யூட்டி டாக்டர் ப்ளட் டெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்காரு..” என்று சொல்லிக்கொண்டே பர்வதம்மா கத்தமாட்டாங்க முண்டமாட்டாங்க என்கிற தைரியத்தில் சிரஞ்சியை புஜத்துக்கு கீழே சொருகி நரம்பு கிடைக்காமல் குத்திக் குத்தி புள்ளி வைத்து கையில் ஊசிக் கோலம் போட்டுக்கொண்டிருந்தது. என்னமோ ஊசியைத் தனக்குக் குத்துவது போல பாவித்துக்கொண்டு அசௌகரியமாக ஜன்னலுக்கு வெளியே பார்த்தார் ஐயப்பன். இன்னமும் இரத்தம் எடுத்தபாடில்லை என்று தெரிந்தவுடன் எண்கள் தேய்ந்த ஆதிகாலத்து மொபைலை எடுத்து ஏதோ ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்.
பத்து இருபது வினாடிகள் ஃபேனின் டிக்....டிக்.. மட்டும் கேட்க பேச்சில்லாமல் நகர்ந்தது.
”ம்.. இங்க அழுத்திப் பிடிச்சுக்கோங்க..” என்று ஊசி குத்திய இடத்தில் பஞ்சை அழுத்தி ஐயப்பன் சாரிடம் பர்வதம்மாவின் கையை கொடுத்துவிட்டு சென்னைக் கொசு போலப் பறந்தது அந்த நர்ஸ்.
பஞ்சோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டார்.
“எங்க விட்டேன்..” அவர் விடறாமாதிரி தெரியவில்லை.
“ம்... ஞாபகமில்லை சார்..” ஐபேடில் விளையாட ஆரம்பித்த டெம்பிள் ரன்னை ரத்து செய்துவிட்டு நிமிர்ந்து அவரைப் பார்த்தேன்.
“யூரினேட்...யூரினேட்... நாங்க அப்படியெல்லாமில்லையே...ன்னு டாக்டர்ட்ட சொன்னோம்... அப்புறம் மகேஷ் சொன்னான் ”இல்ல மாமா.. சில நாள் புடவை பின்னாடி நனைஞ்சிருக்கும்.. என்னம்மான்னு கேட்டா... ராத்திரி தாகமிழுத்துதுடா... சொம்புலேர்ந்து தண்ணி குடிக்கும்போது வழிஞ்சுடுத்துடான்னு சொல்லியிருக்கா..ன்னான்.. மகேஷ் சிட்டிபேங்க்ல இருக்கான். அவளோட மூத்தவன். ரொம்ப ப்ரில்லியண்ட். வெரி ப்ரைட்.”
”இந்த ஹாஸ்பிட்ல்ல சேர்த்து எவ்ளோ நாளாகுது சார்?”
”இன்னியோட மூணாவது நாள். தானாடாட்டாலும் தன் சதையாடும்னு சொல்லுவாளோனோ அது மாதிரி ரெண்டு நாள் முன்னாடி பூஜை பண்ணின்டிருக்கும் போது மனசுக்கு ஏதோ சங்கடமாவேயிருந்துது. சித்த நாழியில மெட்ராஸ்லேர்ந்து ஃபோன். அக்காவ ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்கான்னவுடனேயே பதறிப்போய்ட்டேன். பகவானே இது என்னடா சோதனைன்னு மேனேஜர்ட்ட சொல்லிட்டு ஒரு எட்டு பார்த்துட்டு போய்டலாம்னு ஓடி வந்துட்டேன். எனக்கும் லீவேயில்லையாக்கும்...”
வார்டு மூலையில் விஜயா அசைந்தாடி வருவது தெரிந்தது. எனக்கு ரிலீவர் வந்தாகிவிட்டது. ஐயப்பன் சாரை இப்போது ஆஃப் செய்துவிடும் எண்ணத்தில் ”அப்ப பார்க்கலாம் சார்.. அக்கா குணமாயிடுவாங்க.. கவலைப்படாதீங்க.. ஆண்டவன் இருக்காரு.. அவரு பார்த்துப்பாரு...” என்று அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினேன்.
“இங்க கேண்ட்டீன்ல சூடா ஃபில்டர் காப்பி கிடைக்குமாம்மா?” என்று பிபி மானிடரை எடுத்துக்கொண்டு டாக்டர் பின்னால் சென்ற இரத்தமெடுத்த நர்ஸைப் பார்த்து இரண்டாவது மாடி கேண்டீனுக்கே கேட்கும்படி சத்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
வெளியில் வந்து ஸ்கூட்டியைக் கிளப்பினேன். ”வரும்போது மறந்துடாம ஃப்ளாஸ்க்கை எடுத்துக்கிட்டு வாடா” என்ற அம்மாவின் கட்டளை மூளைக்குள் ஃப்ளாஷ் அடிக்க மறுபடியும் ஆஸ்பத்திரிக்குள் ஓடினேன்.
“இரு ஃப்ளாஸ்க்கைக் கழுவித் தரேன்...” விஜயா குழந்தை போல ஃப்ளாஸ்க்கைத் தூக்கிக்கொண்டு வாஷ்பேசினுக்கு அடிபிரதக்ஷிணம் செய்தாள். ( ”யம்மாடி... எப்படித்தான் உனக்கு காபி டம்ப்ளர் கழுவறதுக்குக்கூட கால் மணி ஆவுதோ.. நீயெல்லாம் புருஷன் வீட்லபோய் எப்படி குடும்பம் நடத்தப்போறியோ...” என்கிற சகஸ்ரார்ச்சனைகள்) அம்மாவின் பெருமூச்சோடு கலந்த அங்கலாய்ப்பு நினைவுக்கு வந்தது. எப்படியும் விஜயா வருவதற்கு ஒரு ஐந்து பத்து நிமிடமாவது ஆகும். வெயிட் பண்ணினால் உபயோகப்படும் என்று கைவசம் வைத்திருந்த Three men in a Boat ஐ எடுத்துப் புரட்டினேன். மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு தானொரு ஒரு பொக்கிஷம் என்றும் பல நோய்களைப் பார்க்க சிரமப்பட்டு ஆஸ்பத்திரிக்குப் போகாமலே தன்னை ஒரு முறை சுற்றிவந்து டாக்டர் பட்டத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று ஜெரோம் கே ஜெரோம் ஆரம்பப் பக்கங்களிலேயே அசத்தியிருந்தார்.
புத்தகத்தினுள் மூழ்கி “I tried to examine myself. I felt my pulse. I could not at first feel any pulse at all. Then, all of a sudden, it seemed to start off. I...." என்று கண்களை விலக்காமல் படித்துக்கொண்டிருந்த போது ”என்ன புஸ்தகம் படிக்கறேளா?” என்று என் மூக்கிற்கு காஃபி வாசனை எட்டும் தூரம் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு நெருங்கி உட்கார்ந்தார். அவருக்கு பெப்டிக் அல்ஸர் இருக்கவேண்டும். காஃபியும் அல்ஸரும் சேர்ந்து ஒரு துர்கந்தம் வீசியது.
புன்னகைத்துவிட்டுத் தொடரலாம் என்று தலையைக் குனியும் போது யார்ட்லி பவுடர் வாசனையோடு ஒரு மாது ஐயப்பன் சார் பக்கத்தில் வந்திருந்தார். தலையை நிமிர்த்தினேன். கண்கள் நீர் கோர்த்துக்கொண்டு நின்றது. படுக்கையில் கிடக்கும் அந்தம்மாவின் பெண்ணாக இருக்கக்கூடும் என்று ஊகித்தேன்.
“சார்.. இது மஞ்சுளா..”
“வணக்கம்”
மறுவணக்கத்திற்கு பதிலாகச் சோம்பலாய்த் தலையை ஆட்டியது அப்பெண்.
“எங்கக்காவோட மாட்டுப்பொண். ரொம்ப சமர்த்து. மாயவரம். பட்டமங்கலத் தெரு.”
இன்னும் அரைமணிக்கு கிளம்பமுடியுமா என்று தெரியவில்லை. சங்கடமாக நெளிந்து காட்டினேன். அவர் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை.
”இவளை மாட்டுப்பொண்ணாயில்லை.. மகளாத்தான் சீராட்டினா எங்கக்கா.. என்னம்மா மஞ்சு சரிதானே..” அப்பெண்ணிடமிருந்து ஐயப்பன் சார் கன்ஃபர்மேஷன் எதிர்பார்த்தார்.
இப்போது அந்தப் பெண் ரொம்பவும் சங்கடமாக நெளிந்தது. கண்களில் தேங்கிக்கிடந்த கண்ணீர்க்குளம் எந்நேரமும் உடைப்பெடுக்கும் அபாயம் தெரிந்தது. ”அழாதம்மா.. அம்மாவுக்கு ஒண்ணுமில்லே... நாளைக்கே எழுந்து வந்து நமக்கெல்லாம் கத்திரிக்கா ரசவாங்கி வச்சுத்தருவா பாரேன்...” என்று ஐயப்பன் சார் ஆரம்பிக்கவும் மஞ்சுவுக்குத் தாரை தாரையாய் கண்ணீர் வழிவதும் ஒருசேர நடந்தது.
“வாடாப்பா... மகேஷ்.. உம் பொண்டாட்டியப் பாரு.. எப்டி அழறான்னு.. இப்படியொரு மருமகளான்னு ஊர் கண்ணே பட்டுடுத்துப் போலருக்கு....”
வெள்ளை நீல ஸ்ட்ரைப்புடு வான் ஹூசைனும் கருப்பு நிற ப்ளாக்பெர்ரி பேண்ட்டுமாய் ஆஃபீஸுக்கு செல்லும் தோரணையில் இருந்தார் அந்த மகேஷ். ஆறடி. ஆட்காட்டி விரலில் மரத்தடி நிழலில் நிறுத்திவிட்டு வந்தக் கார் சாவி. செவத்த நிறம். கர்ணனின் கவசகுண்டலம் போல கண்களைவிட்டு அகலாமல் ரேபேன் மூக்கின் மேல் உட்கார்ந்திருந்தது. காதுகளில் நீலப்பல் நீலநீலமாய் தன் இருப்பைக் காட்டி மினுமினுத்தது. எப்போதும் பிஸினஸ் பேசும் வாய். அதைத் திறந்து “மஞ்சு.. வாட் இஸ் திஸ். நிறுத்து..” என்று அதட்டாதது போல அதட்டினான். புடவை முந்தானையை எடுத்து அந்தப் பெண் முகத்தை ஒத்தி எடுத்துக்கொண்டது.
அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என் மடியில் ஃப்ளாஸ்க் பொத்தென்று இறங்கியது.
”என்ன வேடிக்கையா?” என்ற விஜயாவும் அனைத்துச் சம்பவங்களையும் பார்த்திருந்தாள்.
மகேஷ் என்ற அந்தப் பையன் ஒரு இரண்டு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் நடந்து வார்டை அளந்தான். ப்ளூடூத்துடன் பேசினான். “நோ..நோ..நோ... இட்ஸ் ஓகே. டெஃபனட்லி..” போன்றவைகள் அடிக்கடி வாயிலிருந்து வெளியே வந்து விழுந்தன.
“கம். லெட்ஸ். கோ.. “ என்று அழுத பெண்ணை தோளோடு அணைத்து அழைத்துக்கொண்டு வெளியே நடந்தான். படுக்கையில் “.ம்மா...” என்று அந்தம்மாள் ஈனஸ்வரத்தில் முணகியது. ஐயப்பன் ஓடிப்போய் பார்த்தார். ”சாப்பிட முடியாது. நாக்கெல்லாம் தடிச்சுப்போச்சு..” என்று சொல்லிவிட்டு மாத்திரைகளில் சிலவற்றைப் பொடித்துக் கஞ்சியில் கலந்து பெரிய சிரிஞ்சி வழியாக மூக்கில் ஏற்றினார். ”இதையெல்லாம் மகேஷுக்கு பார்க்கவே முடியாது.. அதான் கிளம்பிட்டான்... பாவம்... “ என்று வந்து போன துரைக்கு சப்பைக்கட்டு கட்டினார்.
“அண்ணே... நீ கெளம்பு....” என்று என்னை எழுப்பினாள் விஜயா. புத்தகத்தின் பக்கத்தின் காதை மடக்கி மூடி வைத்தேன். கிளம்பும்போது நெடுநெடுவென்று வளர்ந்த ஒருவர் வார்டுக்குள் நுழைந்தார். அவரின் அத்தர் மணம் அனைவரையும் தூக்கியது.
“வாங்கோ.. அத்திம்பேர்... வாங்கோ..” என்று வரவேற்றார் ஐயப்பன். வந்தவர் ஏரியாக் கவுன்சிலர் போல வெள்ளை வேஷ்டி ஷர்ட்டில் பளபளப்பாக இருந்தார். புருவங்களைத் தூக்கி பலவந்தமாக கவலை ரேகைகளை நெற்றிக்குக் கொண்டு வந்து எட்டிப் பார்த்தார். படுத்திருந்த அம்மாவிற்கு சதையாடியது. கிளம்பிய என்னை கையைப் பிடித்து நிறுத்தினார் ஐயப்பன் சார்.
“கும்பகோணம் காலேஜில ப்ரொஃபஸரா இருந்தார். இங்கிலீஷ் ப்ரொஃபஸர். பாண்டித்யம் ஜாஸ்தி”
திரும்பி ஒரு கும்பிடு போட்டேன். பதில் வணக்கம் சொன்னார்.
“உங்க வீட்ல யார் அட்மிட் ஆயிருக்காங்க?” இரண்டு மணி நேரமாக ஐயப்பன் சார் கேட்காத கேள்வியை இரண்டு நிமிஷத்திற்கு முன் நுழைந்தவர் கேட்டார்.
“அச்சச்சோ. இவ்ளோ நாழி நா கேட்கவேயில்லை.. தொணத்தொணன்னு பேசிண்டுருந்தேன். யாருக்கு என்னன்னு கேட்கத் தோணலை.. நான் சொல்லலை.. அத்திம்பேர் ப்ரில்லியண்ட்னு...” என்று பல்லைக்காட்டிக்கொண்டு புகழாரம் சூட்டினார்.
“எங்க பாட்டிக்கு.. ஃபுட் பாய்ஸன் ஆயிடிச்சு. டிஸண்ட்ரியாப் போய் டிஹைட்ரேட் ஆயிடிச்சு. அதான் சலேன் ஏத்திக்கிட்டிருக்கோம். நத்திங் சீரியஸ் சார்” என்றேன்.
”ஒண்ணுமில்லை. கவலைப்படாதீங்கோ. பைரவி இல்லைன்னா ஆனந்த பைரவி ராகத்துல பாட்டிக்குக் காதில் விழறா மாதிரி பாட்டுப் பாடச்சொல்லுங்கோ. எல்லாம் சரியாப்போய்டும். இல்லைன்னா நாலு கன்யாக் கொழந்தேளுக்கு....”
அத்திம்பேர் பேசிக்கொண்டிருக்கும் போது ப்ரேக் போட வைத்தவர் ஒரு பெண்மணி. காதிலும் மூக்கிலும் வைரம் மின்னியது. கலையாத கேசமும் கொசுவம் மடிப்புக் கலையாத சேலையும் பார்த்தால் அவர்கள் பலலட்சம் பொருமானமுள்ள சொகுசுக் காரில் தான் பயணித்திருக்கவேண்டும் என்று உறுதியாய்த் தெரிந்தது.
“வாடிம்மா சாவித்ரி.. பர்வதத்தைப் பார்த்தியா... எப்படி ஆயிட்டா பாரு...” இதுவரைத் தெளிவாக இருந்தவர் குரல் கம்மப் பேசினார். சாவித்ரி தனது லட்சம் கட்டி வராகன் புடவை பெட்டில் படாதவண்ணம் மேனியோடு அணைத்துக்கொண்டு ஜாக்கிரதையாக எட்டிப் பார்த்தார். தடித்த நாக்கு பற்களுக்கிடையில் மாட்டிக்கொண்டு எச்சிலோடு வாயையும் திறந்து மூச்சுவிட்டுக்கொண்டிருந்தார். முகத்தை சுருக்கிக்கொண்டு பார்வையை உதிர்த்துவிட்டு அத்திம்பேரைப் பார்த்து “அண்ணா! சொல்றேன்னு தப்பாயெடுத்துக்காதே... நாளைக்கு பௌர்ணமி. கணத்த நாள். பர்வதம் தாக்குவாளான்னு தெரியலையே!”
எனக்குப் பக்கென்று இருந்தது. ஆஸ்பத்திரியில் அனைவர் எதிரிலும் அசால்ட்டாக பேசிவிட்டு, “எனக்கு அவசரமா வேலையிருக்கு. நான் கிளம்பறேன்.” என்று திரும்பினார். “என்னையும் கொஞ்சம் ட்ராப் பண்ணிடேன்” என்று அந்தம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டே அத்திம்பேரும் கிளம்பினார். “இந்த ஐயப்பனை எங்கே காணோம்.” முணுமுணுத்துக்கொண்டே என்னைப் பார்த்தார். தெரியலை என்பதாக தலையை ஆட்டினேன். “நான் சொன்னதைப் பண்ணுங்கோ. உங்க பாட்டிக்கு உடனே தேவலையாயிடும். பார்க்கலாம்” என்று பறந்தார். ”உங்க வீட்டுக்காரிக்கு இந்த பைரவி ராகக் கச்சேரியை ஏற்பாடு பண்ணுங்களேன்” என்று பச்சாதாபத்தோடு மனசுக்குள் அலறினேன்.
சுற்றிலும் பார்த்தேன். ஐயப்பன் சாரைக் காணோம். ஃப்ளாஸ்க்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். பைக் ஸ்டாண்டிலிருந்து வண்டியை எடுக்கும்போது கையில் ஒரு காகிதத்தை வைத்துக்கொண்டு செல்லில் பேசிக்கொண்டிருந்தார். வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு “பார்க்கலாம் சார்” என்றேன். ஸ்கூலில் டீச்சரிடம் பசங்க ஒன்றுக்கு கேட்பது போல விரலை உயர்த்திச் சைகை செய்தார்.
நின்றேன்.
செல்லை அமர்த்திவிட்டு வந்தார். “ரிலேட்டிவ் ஒரு பையன் ஐஜி ஆஃபீஸ்ல இருக்கான். இன்னிக்கி ராத்திரிக்கு ட்ரெயினுக்கு புக் பண்ணியிருந்தேன். ஈக்யூ கோட்டாவில ரிலீஸ் பண்ண முடியுமாடான்னு கேட்டுண்டிருந்தேன். எனக்கு லீவே கிடையாது வேற... இன்னும் ஒரு வருஷம் சர்வீஸ் பாக்கியிருக்கு. சண்டை சச்சரவில்லாம வெளிய வரணுமோண்ணோ...” என்று கேட்டார்.
“சரி சார். பார்க்கலாம். நான் கிளம்பறேன்” என்று கைகுலுக்கிவிட்டு வந்தேன்.
**
மறுநாள் பாட்டியை டிஸ்சார்ஜ் செய்யும்போது பக்கத்துப் படுக்கை காலியாய் கிடந்தது. வேறு வார்டிற்கோ அல்லது ஐசியூவிற்கோ மாற்றியிருப்பார்கள் என்று நினைத்து “இந்தம்மா எங்கேங்க...” படுக்கையைக் காட்டி அந்த தேசலான நர்ஸைக் கேட்டேன்.
“இன்னிக்கி விடிகாலேல அஞ்சு மணிக்கு செத்துட்டாங்க சார். ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர் ஆகி கொலாப்ஸ் ஆயிட்டாங்க..” என்றது.
ஃபேன் காற்றில் சடசடத்த டே ஷீட் காலண்டரில் வட்டம் போட்டு ”பௌர்ணமி” என்று அச்சடித்திருந்தது.
”இத்துணூண்டுலேர்ந்து.. இங்க பாருங்கோ.. இத்துணூண்டுலேர்ந்து....” என்று ஒரு குரல் காதுகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. ஐயப்பன் சார் எங்கே?

13 comments:
பர்வதம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே தெரியவில்லை. ஆயுசுக்கும் எல்லோருக்கும் நல்லது பண்ணிக்கொண்டு வாழ்ந்து என்ன சாதித்தார் என்றே தெரியவில்லை! எல்லோரையும் கண்முன்னே வந்து காட்டிவிட்டீர்கள்!
@bandhu
கருத்துக்கு நன்றிங்க. :-)
ஃபார்மாலிட்டிக்கு வந்து எட்டிப் பார்த்த யாருமே காப்பாத்தணும்னு முயற்சி பண்ணலை. ஊருக்காக ஒப்புக்கு ஒரு ட்ரை. :-(
வாழ்க்கைப்பாடம் ...
துணுக்குறவைத்த கதை..!
கண்முன் நிகழ்வதாய் கதையின் பிரத்யோக நடையழகு ....
// ஃபார்மாலிட்டிக்கு வந்து எட்டிப் பார்த்த யாருமே காப்பாத்தணும்னு முயற்சி பண்ணலை. ஊருக்காக ஒப்புக்கு ஒரு ட்ரை. :-(//
அன்னை தினத்தன்று அம்மாக்கள் படும் அவஸ்தையையா நிதர்சனமா கொண்டு வரணும் அப்படின்னு தோணித்து.
இருந்தாலும், லோகத்துலே நித்யப்படி எல்லோர் வீடுகள்லேயும் நடக்கிறதை தான்,
சலைன் ட்யூபிலேந்து நிதானமா சொட்டு சொட்டா நீர் இறங்கறாப்போல வர்ணிச்சு இருக்கீக...
பாட்டில் முடிஞ்சு போச்சு. அடுத்த பாட்டிலுக்கு தேவை இல்லாம போயிடுத்து.
ஒரு வயசுக்கு மேலே இருக்கறதே ஒரு லயபிலிடி தான். மத்தவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கே.
என்னப்பா என்னம்மா பண்றது அப்படின்னு யாராவது ஒருவர் வந்து கேட்குமுன்னே
அந்த த்ர்யம்பகன் வந்து அழைச்சுண்டு போகணும்.
த்ர்யம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்.
உருவாரகம் இவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
மனம் கனத்தது. நமக்கும் இப்படித்தான் ஒருநாள் ஆகும். ஆனால் இந்த அவஸ்தை இல்லாமல் போகணும். :)
@இராஜராஜேஸ்வரி
நடையழகைப் பாராட்டியதற்கு நன்றி. உலக அழகு இப்படிதான் உள்ளது மேடம். :-)
@sury Siva
@geethasmbsvm6
சார் & மேடம்,
புராண இதிகாசக் காலத்துலேர்ந்தே வயசான அப்பா அம்மாவை பத்திரமா பார்த்துக்கணும்ங்கிறதுக்கு ஏகப்பட்டக் கதைகள் வரலாறுகள் சொல்லியிருக்கு. இராமாயணத்துல ஷரவணகுமாரன் படிச்சிருக்கோம். மஹாபாரதத்துல வயசான அப்பாவை பார்த்துக்கொள்ளும் தர்மவியாதரர் பற்றி படிச்சிருக்கோம். ஆனால் நிஜத்துல..........
RVS,
என்ன ஒரு ஒற்றுமை பாருங்க, முன்னேயே சொல்லி இருக்கேன், எங்க அண்ணா பேரும் உங்க பேரும் ஒண்ணுனு. :))) அவரையும் ஆர்விஎஸ்னு தான் கூப்பிடுவாங்க. போகட்டும், இப்போச் சொல்லவந்தது என்னன்னா,
பெத்த அம்மாவைப் பிள்ளை, பெண்களும், கட்டிய மனைவியை ஒப்புக்குப் பார்க்க வந்த கணவரும் உண்டு தான் இல்லைனு சொல்லலை. அதே உலகில் தாய், தகப்பன் சின்ன வயசிலேயே செத்துப் போய்த் தன்னை வளர்த்த பெரியம்மாவை 90 வயசுக்கு மேல் ஆகியும் இன்னமும் பார்த்துக் கொள்ளும் பிள்ளையும் இருக்கிறார். இங்கே எங்க குடியிருப்பு வளாகத்திலேயே இருக்கார். ஆங்காங்கே சில சில்லறை கோபங்கள் இருக்கலாம்; எனக்கு அது குறித்துத் தெரியாது. ஆனால் அந்த மநுஷி இங்கே தன் தங்கை பிள்ளையிடம் தான் இருக்கிறார். தங்கை மாட்டுப்பெண்ணும், குழந்தைகள்(வளர்ந்து பெரியவங்களாகி அவங்களுக்குக் குழந்தைகள் இருக்கு) மரியாதை செலுத்துகின்றனர்.
இந்தக் கதையில் எங்கோ ஒரு நெருடல், அது பிடிபடவில்லை. பிடிபட்டால் காரணம் புரியும். இப்போதைக்கு யோசிக்கலை; திடீர்னு தோணும். :))))
மற்றபடி நான் முதலில் சொன்ன கருத்தில் வேறுபாடு எதுவும் இல்லை.அவஸ்தை இல்லாமல் யாருக்கும் எந்தத் தொந்திரவும் கொடுக்காமல் போகணும். :)))) யாரோட இருந்தாலும்!
@geethasmbsvm6
மேடம். நான் என்னுடைய அம்மாவின் தங்கைகளிடம்தான் முழுவதும் வளர்ந்தேன். திருமணம் செய்துகொள்ளாத அவர்கள் இன்னமும் என்னுடன் தான் இருக்கிறார்கள். சித்திகள் இருவரும் 70+.
நீங்க சொன்னது ரைட். யாரையும் கஷ்டப்படுத்தாம கரை சேரணும். எங்க பாட்டி அடிக்கடி ஆகாசத்தைப் பார்த்துச் சொன்ன ஸ்டேட்மெண்ட்.
@geethasmbsvm6
மேடம். நெருடியதும் சொல்லுங்க. :-))
அனாதைக்குச் சரியான பொருள் சொல்லியிருக்கீங்க. எல்லாரும் இருந்தாலும் யாருமே இல்லைனாலும் ஒரு வயசுக்கு மேலே நாம அனாதை தான். கொஞ்சம் ஜீரணிக்க சிரமமான தத்துவம்.
//“எங்க விட்டேன்..” அவர் விடறாமாதிரி தெரியவில்லை.
nice touch.
கதையழகும் நடையழகும் ஜூப்பரு..
Post a Comment