Sunday, February 10, 2013

விஸ்வரூபம்

உலகநாயகனின் விஸ்வரூபம் கண்டு களிப்பதற்கு நிறைய உலக விஷயங்களும் விஞ்ஞான சங்கதிகளும் தெரியவேண்டியிருக்கிறது. பாப்கார்ன் கொரித்துக்கொண்டு பல்லிளித்துக்கொண்டு பொழுதுபோக்கலாம் என்ற திட்டத்தில் சாதாரணர்கள் தியேட்டருக்குள் நுழைந்தால் கதையைப் பின் தொடர சற்றே தடுமாறுவார்கள். ஃபைனல் எக்ஸாமிற்கு டிஸ்டிங்ஷன் வாங்கப் படிப்பது போல சிந்தனையைக் குவித்து சிரத்தையாக பார்க்கவேண்டிய/ரசிக்கவேண்டிய படம்.


”..க்காளி போடுறா அவனை” என்று கொக்கரித்து நடு வீதியில் எதிராளிகளைக் கூறுபோடும் யதார்த்த சினிமாக்களை எப்படி தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடுகிறோமோ அதுபோல சர்வதேச விவகாரங்களை மையமாக வைத்து மசாலாவுடன் எடுக்கப்பட்ட இப்படத்தையும் தாராளமாக மனமுவந்து கொண்டாடலாம். படத்தின் களம் ஆஃப்கானிஸ்தானும் ஓபாமா ஆளும் அமெரிக்காவும். எடுத்தவுடன் தலைப்பில் காண்பிக்கப்படும் சமாதானத்தின் அடையாளமான புறாக்களை பின்னால் எவ்விதம் தீவிரவாத்திற்கு ஒத்தாசையாக வைத்துக்கொள்கிறார்கள் என்கிற விஷயத்திலிருந்து படத்தின் பலபடிமானங்கள் கதைக்குள்ளே இறங்க இறங்க கொஞ்சம் கொஞ்சமாக வெளியே விரிகிறது. படத்தில் இளையராஜா இருக்கிறார். லால்குடி ந. இளையராஜா. ஆர்ட் டைரக்டர். பாராட்டப்பட வேண்டியவர்.

”அமெரிக்காவுக்கு படிக்கதான் வந்துருக்கேன்... எனக்கு படுத்துண்டேயெல்லாம் படிக்கிற பழக்கமில்லைன்னேன்.. அவரும் சிரிச்சுண்டே ஒத்துண்டார்...” என்று சைக்கியாட்ரிஸ்ட்டிடம் கன்ஸல்ட்டேஷனில் கால் நீட்டி அமர்ந்திருக்கும் பூஜாகுமார் மூலமாக பிராமண பாஷையில் படத்தை வசனமாக ஆரம்பிக்கிறார். பூ.குமாருக்கு புருஷன் மேல் சந்தேகம். அவரும் உருப்படியில்லை. தன் முதலாளியோடு கசமுசா. தன் தப்புக்கு புருஷன் விஸ் தப்பு சரியென்கிற கணக்குக்காகுமா என்று கமலைக் கண்காணிக்க டிடெக்டிவ் ஏஜெண்ட் வைக்கிறார். கதை அங்கிருந்தே மரண வேகத்தில் தொடர்கிறது. வரிசையாய்க் கொலைகள்.

பூ.குமாருக்கு 35 வயசாம். பார்க்க ஒரு ஏழெட்டு வயசு கம்மியாகத்தான் தெரிகிறார். ”கமல் ஒரு கலா ரசிகன்” என்று அந்த பழயழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கும் போது பேரழகாக அவரே திரையில் தோன்றுகிறார். கதக் கற்றுக்குக் கொடுக்கும் பெண்மை பூசிய மிஸஸ் அண்ட் மிஸ்டர் விஸ்வநாத் எனும் நளினம் மிகுந்த பாத்திரமாக. கதக் போன்ற அபிநயம் பிடிக்கும் நர்த்தனங்களில் ஆண்கள் முகம் அவ்வளவு எளிதாக ஞாபகத்திற்கு வராது. ஆனால் ”உன்னைக் காணாது” கமல் இமைக்கும் போதெல்லாம் கண்ணுக்குள்ளேயே தகதிமி..தகதிமி ஆடுகிறார். ஷண்முகி மாமியும் காமேஸ்வரனும் சரிவிகிதமாகக் கலந்து செய்த கலவை.

ஷங்கர் மஹாதேவனும் கமலும் உன்னைக் காணாது பல்லவியிலேயே பார்ப்பவர்களை பல்லாங்குழி ஆடிவிடுகிறார்கள். “உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா”ங்கிற பதத்திலும் ஃபோனையெடுக்க அர்த்தநாரீஸ்வரனாக துள்ளி ஓடிவருவதிலும் “குருதட்சணையா நிமோனியாவாக் குடுக்கறது...போய்ச் சேருங்கோடிம்மா...” என்று சிஷ்யைகளை அவாத்துக்கு விரட்டும் போதும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் செவிக்கும் கண்ணுக்கும் தேனாய் இனிக்கிறது.

படம் பார்த்தவர்கள் சிலாகித்த அந்த முதல் சண்டைக்காட்சி மிரட்டுகிறது. அசையும் பொருட்கள் நிற்க எடுக்கப்பட்ட காட்சி அது. திரையில் பத்து நிமிடத்திற்கு முன்பு ”ஆயர் தம் மாயா நீ வா...” என்று வளையல் கழற்றி விரக தாப அபிநயங்கள் பிடித்த ஐயர் கமலா அது என்று மொத்த அரங்கமும் பிரமித்துப்போக வேண்டியிருக்கிறது. மூக்கில் ரத்தமொழுக கடைசி ஆளையும் தீர்த்துக்கட்டிவிட்டு முடி சிலுப்பி உக்ர சிம்மமாய்த் திரும்பும்போது ”நீ நடிகன்டா...” என்று உள் மனசு உச்சுக்கொட்டுகிறது.

ஆஃப்கானில் மூளைச் சலவை செய்யப்பட்டு ஜிஹாதிகள் உருவாக்கப்படுவதை வேறு யாரும் படமாக்கியிருந்தால் அது ஆவணப்படமாயிருக்கும். ஆகச்சிறந்ததாக எடுப்பதற்கு கமல் மெனக்கெட்டது பல காட்சிகளில் தெரிகிறது. படத்தில் தமாஷில்லை என்பார்கள். இரண்டுவிதமான தமாஷ்களை படம்பிடித்திருக்கிறார் கமல். பிடித்திருக்கிறது. ந்யூயார்க் வேர்ஹவுஸில் கமல் கவுட்டிக்கிடையில் அடிபடுவதற்கு முன்னால் நடக்கும் சில காட்சிகள் ஹாஸ்ய தமாஷில் அடங்குகிறது.

தொர்காம்-ஜலாலாபாத் நெடுஞ்சாலையில் லஞ்சம் கொடுத்து பாகிஸ்தான் பார்டர் தாண்டி ஆஃப்கானிஸ்தானிற்குள் நுழைவதற்கு முன்னர் ஒரு “தமாஷ்” காட்சி நம்மைக் கட்டிப்போடுகிறது. ”அப்பன் இல்லாத பசங்க ரொம்ப உஷாரா இருப்பாங்க... உன்னமாதிரி.. தமாஷ்” என்று எகத்தாளமாகச் சொல்லும் ராகுல் போஸ் உமருக்கு “அப்பன் யாருன்னே தெரியாத பசங்க அதைவிட உஷாரா இருப்பாங்களோ... உங்கள மாதிரி... தமாஷ்” என்று பதிலுக்கு விஸாம் அஹமது கஷ்மீரியாக கமல் சத்தாய்க்கும் காட்சியும் ஒரு வரலாற்று தமாஷ் வகையறா.

மனிதவெடிகுண்டாக NATO படைகள் வரும் சாலையில் படுப்பதற்கு முன்பாக அந்த மம்மூ என்கிற இளைஞனை சித்தரித்த விதம் அருமை. ஒரு ஊஞ்சலில் உட்கார்ந்து சுதந்திரமாக ஆட ஆசைப்படவும் பெரியவனாக வளர்ந்தாலும் ஒரு குழந்தைக்குரிய குணாதிசியங்களோடு இருப்பவனை மூளைச்சலவை செய்து ஜிஹாதியாக்குகிறார்கள் என்பதை அந்த பாலைவனப் பிரதேசத்திலும் குகைகளுக்குள்ளும் உட்கார்ந்து படமாக்கியிருக்கிறார். அல்-கய்தாவிற்கே பயிற்சியளித்தவராக அமர் பாராட்டும் இந்த விஸாம் தான் “விஸ்” என்று எல்லோரும் அழைப்பதாக நிருபமாவாகிய பூஜா குமார் பூர்வாங்க காட்சியில் டாக்டரிடம் சொல்வது இப்போது விளங்கும்.

இப்படத்தின் காட்சிகளை எவ்வளவு பேர் கதாகாலேட்சபம் செய்தாலும் எழுத்துப்பூர்வமாக விமர்சனங்களால் பிரித்து மேய்ந்தாலும் வெள்ளித்திரையில் பார்த்தாலேற்படும் விசேஷ அனுபவமே தனி. சில வன்முறைக்காட்சிகளின் (குறிப்பாக கழுத்தை அறுப்பது) போது குழந்தைகள் தலையை மடியில் போட்டுத் தட்டிக்கொடுப்பது நல்லது. சிறார்களுக்கும் பாமரர்களுக்கும் சீசியம், ஹைஜாக் ராக்கெட், ஃபேரடேஸ் ஷீல்ட் போன்ற சமாச்சாரங்கள் எவ்வளவு புரியும் என்பது பெரிய கேள்விக்குறி. ஸ்டீல் பீரோவில் தங்க நெக்லஸை வைக்கும் ஸேஃபிற்குள் மொபைலை ஒளித்துவிட்டால் “Subscriber cannot be reached at the moment" ஒலிக்குமென்பது பூ.குமாருக்கு க்ளைமாக்ஸில் தெரியவில்லை. அவனை எடுத்துக் கவிழ்த்து அனைவரையும் காப்பாற்றினார். ந்யூக்லியர் ஆங்காலஜி புரியாதவர்களுக்கு நல் ஆசானாக இருக்கவே இருக்கிறது கூகிள். தேடிக் கண்டுபிடித்துப் படித்துக்கொள்ளலாம்.

புறாக்கால்களில் சீசியம் கோலிக்குண்டுகளை கட்டிவிட்டு பாம் ரேடியேஷனை மோப்பம் பிடிக்கும் கெய்கர் கவுண்ட்டர்களை ஏமாற்றுவதைத் திட்டமாக ராகுல் போஸ் உத்தராங்கமாகச் சொல்லும் காட்சியைப் பார்க்கும் போது நடிகநடிகையர் பெயர்களை காண்பிக்கும் தலைப்பில் புறா வளர்ப்பில் ஈடுபடும் ஒருவர் அதை ஜன்னலுக்கு வெளியே துரத்திவிடுவது ஞாபகம் வந்தால் பராக்கு பார்க்காமல் படத்தை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கவனித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். சீசியம் எதற்கு சுரண்டுகிறார்கள் அப்படியாகப்பட்ட ஜிஹாதிகளைப் பற்றிதான் கமலும் ஆண்ட்ரியாவும் பூ.குமாரிடம் சொல்கிறார்கள் என்று கதை மொத்தமாக உங்கள் மனக்கண் முன் விரிய ஆரம்பிக்கும். ஒரு முறை நண்பர்களிடம் முழுக் கதையும் கேட்டுவிட்டு தியேட்டருக்குப் போனாலும் ஒன்றும் பாதகமில்லை. ரசிக்கலாம்.

கமலின் விஸ்வரூபம் தமிழ்த் திரைப்படத்துறையின் விஸ்வரூபம். I really enjoyed it.

29 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஆரம்பகாலங்களில் திரைக்கதை வ்சனம் முழுமையாக பாடல்கள் அடங்கிய புத்தகத்தில் வெளியிடுவார்கள்..

அப்படி இந்த படத்திற்கு வெளியிட்டிருக்கலாம் ..

சிறப்பாக விமர்சித்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..

Prem S said...

//பாப்கார்ன் கொரித்துக்கொண்டு பல்லிளித்துக்கொண்டு பொழுதுபோக்கலாம் என்ற திட்டத்தில் சாதாரணர்கள் தியேட்டருக்குள் நுழைந்தால் கதையைப் பின் தொடர சற்றே தடுமாறுவார்கள்.//

உண்மை உண்மை

எல் கே said...

// நிறைய உலக விஷயங்களும் விஞ்ஞான சங்கதிகளும் தெரியவேண்டியிருக்கிறது.//

அப்ப நான் படம் பார்க்கலை

Anonymous said...

மிகச்சிறப்பான விமர்சனம். மிக அழகாக ஆரம்பம் முதல் இறுதி வரை விமர்சித்தமைக்கு நன்றி.
பாரடே ஷீல்ட், நியூக்ளியர்
ஒன்கோலாஜி போன்ற அறிவியல் விவரங்களையும் உன்னிப்பாக கவனித்து விளக்கியுள்ளீர்கள். அருமை. தமிழ்நாடு பனிரண்டாம் வகுப்பு இயற்பியல் புத்தகத்திலேயே Gauss Law's Applications-ல் Electrostatic Shielding என்பது பற்றி விளக்கம் உள்ளது. ஆனால் எவ்வளவு பேருக்கு புரியும் என்பது பற்றி நீங்கள் குறிப்பிட்டது மிகவும் சரி.

Anonymous said...

மிகச்சிறப்பான விமர்சனம். மிக அழகாக ஆரம்பம் முதல் இறுதி வரை விமர்சித்தமைக்கு நன்றி.
பாரடே ஷீல்ட், நியூக்ளியர்
ஒன்கோலாஜி போன்ற அறிவியல் விவரங்களையும் உன்னிப்பாக கவனித்து விளக்கியுள்ளீர்கள். அருமை. தமிழ்நாடு பனிரண்டாம் வகுப்பு இயற்பியல் புத்தகத்திலேயே Gauss Law's Applications-ல் Electrostatic Shielding என்பது பற்றி விளக்கம் உள்ளது. ஆனால் எவ்வளவு பேருக்கு புரியும் என்பது பற்றி நீங்கள் குறிப்பிட்டது மிகவும் சரி.

sury siva said...

// I really enjoyed it.//

எதை ? சிக்கன்... ?? !!!

சுப்பு தாத்தா.

மாதேவி said...

ரசனையாக விபரித்துள்ளீர்கள். அருமை.

படம் இன்னும் பார்க்கவில்லை. பார்க்கின்றேன். நன்றி.

vimalanperali said...

நல்ல விமர்சனம்.

ஸ்ரீராம். said...

எங்கு பார்த்தீர்கள்? சவுன்ட் சிஸ்டம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!

சேலம் தேவா said...

//பாப்கார்ன் கொரித்துக்கொண்டு பல்லிளித்துக்கொண்டு பொழுதுபோக்கலாம் என்ற திட்டத்தில் சாதாரணர்கள் தியேட்டருக்குள் நுழைந்தால் கதையைப் பின் தொடர சற்றே தடுமாறுவார்கள்.//

உண்மை.சாமான்யர்களின் அனுபவத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்வதில் எப்போதும் முனைப்பு காட்டுபவர் கமல்.இந்தளவு எதிர்ப்பு இருந்திரா விட்டால் இந்தளவு வெற்றி கிடைத்திருக்குமென்பது சிறிது சந்தேகமே...

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம். கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் போதும். புரிகிறது. :-)

RVS said...


@Prillass s
நன்றி. :-)

RVS said...


@எல் கே
அப்படி ஒன்றும் பயப்படும்படியாக இல்லை. தாராளமாகப் பார்க்கலாம் எல்.கே. :-)

RVS said...


@Anonymous
ஆமாம். நிறைய பிரயர்த்தனப்பட்டிருக்கிறார் கமல். :-)

RVS said...

@sury Siva
சார்! சினிமாவையும் வேறு எதையும் போட்டுக் குழப்பிக்கொள்வதில்லை நான். சிக்கன் சாப்பிடப் பிடிக்காது ஆனால் அந்த சீன் பிடித்திருந்தது. :-)

RVS said...


@மாதேவி
கருத்துக்கு நன்றி. :-)

RVS said...


@விமலன்
நன்றி.

RVS said...


@ஸ்ரீராம்.

நாவலூர் ஏ.ஜி.எஸ் சினிமாஸ். சத்யத்தில் ஒரு தடவை பார்க்கவேண்டும். :-)

RVS said...


@சேலம் தேவா
ம்... சரிதான். பி மற்றும் சி செண்டர்களில் இவ்வளவு பெரிய வெற்றி பெற வாய்ப்பில்லைதான்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம்...

RAMA RAVI (RAMVI) said...

விமர்சனம் அருமை.

//கமலின் விஸ்வரூபம் தமிழ்த் திரைப்படத்துறையின் விஸ்வரூபம்.//

உண்மை.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

|| ஸ்டீல் பீரோவில் தங்க நெக்லஸை வைக்கும் ஸேஃபிற்குள் மொபைலை ஒளித்துவிட்டால் “Subscriber cannot be reached at the moment" ஒலிக்குமென்பது பூ.குமாருக்கு க்ளைமாக்ஸில் தெரியவில்லை. ||

அதுதான் பாமின் மேலேயே செல்போனை வைத்துக் கட்டியிருக்கிறேதே சாமி..அதை எப்படி எடுப்பது?
நைஜீரியன் வீட்டிற்குள் தங்கநகை சேஃபை தேடுவதைக் காட்டிலும் கண்முன்னே இருக்கும் அவனை எடுத்துக் கவிழ்ப்பது லாஜிக்..ஆனால் வரும் அழைப்பை அது தடுக்குமா என்பதுதான் புரியவில்லை. எஃப் பி ஜ இலிருந்து, அனைவரும் இந்த இடத்தில் கடவுளை வேண்டிக் கொண்டு நிற்பதுதான் சிறிது தமாஷ் !!

|| “உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா”ங்கிற பதத்திலும் ஃபோனையெடுக்க அர்த்தநாரீஸ்வரனாக துள்ளி ஓடிவருவதிலும் “குருதட்சணையா நிமோனியாவாக் குடுக்கறது...போய்ச் சேருங்கோடிம்மா...” என்று சிஷ்யைகளை அவாத்துக்கு விரட்டும் போதும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் செவிக்கும் கண்ணுக்கும் தேனாய் இனிக்கிறது.||

எனக்கு வாயோடு வாய் வைத்துக் கொண்டானடி என்ற வரியில் !!!! படத்தில் கமலின் ஹை லைட் படத்தின் முதல் 20 நிமிடம். அந்த இருபது நிமிடத்தில் உச்சம் நான் சொன்ன அந்தக் கண்ணாடி முன்னாடி பின்னாடி இருந்த எடுத்த அந்தக் காட்சி !

|| தமிழ்த் திரைப்படத்துறையின் விஸ்வரூபம் ||

அந்த அளவுக்குச் சொல்ல முடியா விட்டாலும், ஒரு குறிப்படத் தகுந்த படம். தாரே ஜமீன் பர் போன்ற ஒரு படத்தை அவர் தந்தால் அதுதான் விஸ்வரூபம். இது மசாலா போண்டாவும், சூடான டீயும் !

உமது ரிப்போர்டிங் அபாரம் !

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

எனக்கென்னவோ பூஜா குமாரை விட ஆண்ட்ரியா சிறப்பாக செய்திருப்பதாத் தோன்றுகிறது.

பூஜா இயல்பிலேயை பார்ப்பனராக இருந்தால்(அப்படியா?) அவருக்கான மதிப்பெண்ணை இன்னும் சற்றுக் குறைக்க வேண்டும்.

ADHI VENKAT said...

நல்ல விமர்சனம். படிக்கும் போதே ஒருமுறை பார்க்கத் தூண்டுகிறது.

Matangi Mawley said...

Friend's "thiruttu VCD"-- happened to watch in Hindi. I didn't like it much- to be frank. Dashavatharam was much better. :)

அப்பாதுரை said...

கஷ்டம்! கஷ்டம்!

R.SOLAIYAPPAN said...

hello sir,

சாய்ராம் கோபாலன் said...

I liked it too RVS.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட

வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - சிம்லா நகர்வலம்

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails