Thursday, January 24, 2013

மலை மேல் மருந்தே


எஸ்.பி.கோயிலில் பச்சைக் கலர் ஹைவேஸ் போர்டு தாம்பரத்திற்கு வழிகாட்டியது. மனசு வேறொரு இடத்துக்கு வழிகாட்டியது. இரயில்நிலையம் இருக்கும் திசையில் வண்டியைத் திருப்பினேன். மனைவிக்கு நான் செல்லும் பாதை புரிந்தது. மின்சார ரயில் தடையின்றி செல்வதற்கும் சைக்கிளிஸ்ட்டுகள் இருசக்கராதிகள் குனிந்து இலகுவாக அக்கரைக்கு வாகனம் தள்ளிச் செல்வதற்கும் தோதாக ஒரு கேட் போட்டிருந்தார்கள். கேட்டுக்கு அந்தப் பக்கம் நிலமகளுக்குப் பச்சைப் பாவாடை கட்டியிருந்தது. அரைக் கிலோ மீட்டர் தூரத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக தஞ்சாவூர் மாயவரம் என்று மருதநிலங்கள் தெரிந்தது. சற்றே ஊரை அசை போட்ட நினைவை பெரும் அலறலுடன் கடந்த மின்ரயில் தட்டிச் சுக்குநூறாக்கிச் சிங்கை கோயிலுக்குள் மீண்டும் தள்ளி விட்டது.

“எங்க போறோம்ப்பா?” சிறுசு, பெருசு இரண்டும் ஜோடியாகக் கேட்டன.

“மலைமேல இருக்கிற கோயிலுக்கு..”

“திருவண்ணாமலையா?”

“அண்ணாமலை இங்க எங்க வந்தது?”

“வேற எங்கப்பா?”

“போறோம் பாரு...”

ஏதேதோ கொலை மற்றும் “திடுக்கிடும்” செய்திகள் தொங்கிய மாலை மலர் மற்றும் முரசு பத்திரிகைகள் போஸ்டராய் சடசடக்கும் பொட்டிக்கடைகளும், கட்டை வெளக்கமாறு தோசைக்கல்லில் ரெஸ்ட் எடுக்கும் பரோட்டாக்கடையும், இங்கிலீஸ் மருந்துக்கடையும் இன்ன பிற கடைகளும் நிறைந்த குட்டியோண்டு பஜார் ரோடு அது. கேட் எப்போது திறப்பார்கள் என்று ஜன்னல் கண்ணாடியைத் திறந்து தலையை எக்கிப் பார்த்தேன். எதிர் பக்கத்து ஆட்களுக்கு வழிவிடாமல் வேலி தாண்டிய வெள்ளாடு போல உயர்ரக வெள்ளைக் காரொன்று மூக்கை நுழைத்துக்கொண்டு அதிகப்பிரசங்கித்தனமாக முன்னால் நின்றது.

திறந்த கேட் தாண்டியதும் நெற்பயிர்கள் தலையசைக்கும் பச்சை வயல்களின் ஓரத்தில் வண்டி ஆசையாய் ஓடியது. கார் ஜன்னல்களை இறக்கி இயற்கைக் காற்றை ஸ்வாசித்தோம். உள்ளத்தில் புத்துணர்ச்சி பிறந்தது. ஒரு கி.மி தூரத்தில் வலது பக்கம் திரும்பியதும் ஒரு கால் ஒடிந்து தலைசாய்ந்து இருக்கும் பழைய போர்டை பெரியவள் நிதானமாகப் படித்தாள்.

“தி....ரு....க்....க....ச்.....சூ....ர்...”

பாரதியின் பெயர் தாங்கிய குழந்தைகள் பள்ளிக்கூடமென்று ஒரு 40 அடி நீளக் கூடம் புழுதியாய் பூட்டிக்கிடந்தது. இடதுபுறம் நாலைந்து பேர் கதைபேசியபடி நடந்து ஊருக்குள் சென்று கொண்டிருந்தார்கள். இருட்டிவிட்டது. முன்னிரவு நேரம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சன்னமான வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருக்கும் தெருவிளக்குகள், ஓரமாக இருக்கும் இரும்பு பைப்படி, வீடு திரும்பும் ஆடும் குட்டிகளும், குறுக்கே ஓடும் கூடையில் அடைக்கப்படாத ஒரு கோழி, வேப்பமரத்தில் கட்டப்பட்ட ஏர் மாடு, சட்டையில்லாமல் தலைக்கு முண்டாசு கட்டிக்கொண்டு கால்வாய் முகட்டில் உட்கார்ந்திருக்கும் பெரியவர், யாரும் கவனிக்காத ரேடியோ பாடும் மரபெஞ்சு டீக்கடை என்று ஒரு குக்கிராமத்திற்கான அனைத்து லக்ஷணங்களும் அங்கே பொருந்தியிருந்தது.

“இத்துணூண்டு கிராமத்தில ரெண்டு பெரிய கோயில் இருக்கு. தெரியுமா?”

“பக்கத்துல பக்கத்துலையா?”

“ம்..ஊஹும். ஒன்னு கீழே. இன்னொன்னு மலை மேலே. ஒருத்தர் கச்சபேஸ்வரர். மலை மேல் ஔஷதீஸ்வரர் (எ) மருந்தீஸ்வரர்”

ஆலக்கோயில் என்று அழைக்கப்படும் கோயிலில் எப்போதும் கச்சபேஸ்வரர் ஏகாந்தமாக இருப்பார். இங்கிருக்கும் ஈசனுக்குப் பெயர் விருந்திட்ட ஈஸ்வரர். திருக்கழுக்குன்றத்திலிருந்து சிவதரிசனம் செய்து, நடையாய் நடந்து களைத்து வந்த சுந்தரருக்கு அந்தணர் வடிவத்தில் வந்த சர்வேஸ்வரன் இவ்வூரிலுள்ளவர்களிடம் பிக்ஷை வாங்கி அன்னமிட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது. மந்திரமலையை மத்தாக்கி வாசுகியை கயிறாக்கி பாற்கடலைக் கடைவதற்கு விஷ்ணு மலை தாங்கும் ஆமையாக உதவிபுரிய சம்மதித்தார். அதற்கு முன்னர் இத்தலத்து ஈசனை வழிபட்டுச் சென்றதால் இம்மூர்த்திக்கு கச்சபேஸ்வரர் என்று பெயர். சுயம்பு மூர்த்தி. கொட்டைப்பாக்களவுதான் தெரிகிறார். கீர்த்தி பெருசு.
முதுவாய் ஓரி கதற முதுகாட்
டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
பெருவாயெடுத்து ஓலமிடும் நரிகள் உலவும் இடுகாட்டில் தீச்சட்டியை ஏந்தித் திருநடனம் புரிபவனே, தேன் வடியும் புத்தம்புது கொன்றைப் பூவினைச் சுடும் மலையவன் மகளான பார்வதியை மணந்தவனே, கச்சூர் ஆலக்கோயிலில் உறையும் எம்பெருமானே நீ ஓட்டையெடுத்துக்கொண்டு போய் பிட்சையேந்தி அமுதிட்டால் உன் அடியார்கள் கவலையடைய மாட்டார்களோ? என்று பாடினார் சுந்தரமூர்த்தி நாயனார்.

ராஜகோபுரமில்லாத கோயில். விண்ணைத் தொடும் பிரம்மாண்ட மரக்கதவுகள். நேரே கொடிக்கம்பம். வெளிப்பிரகார புல்வெளியை மேய்ச்சல் மைதானமாக்கியிருந்தன உள்ளூர் மாடுகள். ஒன்றல்ல இரண்டல்ல அந்த ஊரின் ஆக மொத்தம் மாடுகள் அனைத்தும் அங்கேதான் மேய்ந்துகொண்டிருந்தன. சிவன் கோயில் மேய்ச்சலில் காளைகள் மட்டுமல்ல பசுக்களும் போஷாக்காய் இருந்தன. சுருக்குப்பை ஆத்தா ஒன்று கையில் ஒடியும் குச்சியோடு மாடுகளோடு உலவிக்கொண்டிருந்தது. சின்னவளை மோந்து பார்ப்பது போல் வந்த கொம்பு சீவிய மாட்டால் “யப்பா...”வென்று அலறியடித்துக்கொண்டு ஓடினாள். ஆத்தா மாட்டை விரட்டியது.

ஈசனும் பஞ்சகச்சமணிந்த குருக்களும் ஏகாந்தமாக இருந்தார்கள். சிவன் கோயிலுக்கே உரிய சொத்தாகிய வவ்வால் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தது. கோயிலில் சாயரட்சை நடந்துகொண்டிருந்தது. தீபாராதனை காண்பித்தார். “நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய.. மஹாதேவாய.. த்ரயம்பகாய...திரிபுராந்தகாய..” என்று ருத்ரம் சொல்லிக்கொண்டேன். சட்டென்று பின்னாலிருந்து சங்கூதும் ஒலி கேட்டது. மேலும் இருவர் தரிசனத்தில் கலந்துகொண்டனர். வெளியூர்க்காரர்களாக இருக்கவேண்டும்.

மொத்தமே அந்த ஊரில் நான்கு கடைகள் தான். மூன்று பலசரக்கு பொட்டிக் கடை. ஒரு டீக்கடை. மூன்று கடைகளில் ஐநூறு ரூபாய்க்கு சில்லரை கிடைக்காமல் நான்காவது பாய் கடையில் கோயில் உண்டியலுக்கும் தட்டுக்குமாக நிறைய சில்லரை கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு மலைக்கோயிலுக்கு வண்டியை விட்டேன். இல்லை. நீங்கள் எதிர்பார்ப்பது போல பெரிய மலையில்லை. சிறு குன்று தான். இப்போது சில்லரை வாங்கிக்கொண்டு “சிறு குன்றுதான்” என்று நான் எழுதியிருப்பது வரை படித்தீர்களல்லவா? அந்த நேரத்தில் காரில் மேலே ஏறி விடலாம்.

கீழே கச்சபேஸ்வரர் மாடுகளோடு வாசமிருந்தார். மேலே மருந்தீசர் பைரவரோடு காலந்தள்ளுகிறார். கோயிலுக்குள் இரண்டு நாய்கள் கையை நக்கிக்கொண்டு பின்னாலையே பிரதக்ஷிணம் வருகிறது. மருந்தீஸ்வரர் சற்று பெரிய மூர்த்தம். அடிவாரத்தில் சங்கு ஊதியவர்கள் மேலேயும் வந்து ஊதினார்கள். கையில் தோள்பட்டையில் அடிப்பட்டு சரியாகாதவராம். மருந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ள வந்திருக்கிறார். இந்திரன் ஒரு சாபத்தினால் நோய்பீடிக்கப்பட்டு அவதியுற்ற போது பலா, அதிபலா என்ற மூலிகைகளைக் காட்டி அருள் பாலித்தவர். எனக்கும் அவருக்கும் விபூதியை மடித்துக்கொடுத்து ”இது ஆத்தில இருந்தா ரக்ஷை மாதிரி. உடம்புக்கு எதாவது பண்ணித்துன்னா எடுத்து பூசிக்கோங்கோ”ன்னு கண் மூடி உருவேற்றிக் கொடுத்தார் குருக்கள். முதன்முறை இந்தக் கோயிலுக்கு வந்து போனபின் தேவாரத்தைப் புரட்டியபோது எழுதியிருந்த “மலைமேல் மருந்தே” என்று வரும் பாடல் மங்கலாக ஞாபகம் வந்தது.

மலையடிவாரத்தில் பாய்கடையில் வாங்கிய மூங் தால் பாக்கெட்டைப் பிரித்து கொஞ்சம் நாய்க்கு ஈந்துவிட்டு புறப்பட்டோம். காரோட்டும் போது மலைமேல் மருந்தே மனசெங்கும் ஒலித்துக்கொண்டேயிருந்தது.

வீட்டிற்கு வந்ததும் கூகிளைத் தட்டி ”மலைமேல் மருந்தை” தேடினேன். அந்த அற்புதமான பதிகம் கிடைத்தது.
மேலை விதியே விதியின் பயனே
விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவே னடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே
உயரிய அறநெறியாகவும் அதன் பயனாகவும் இருப்பவனே, பகைவர்தம் திரிபுரமெறித்தவனே, காலையில் உன்னைத் தொழுபவர்களின் கவலைகளைக் களைபவனே, நீலகண்டனே, மாலையில் தோன்றும் குளிர்நிலவைப் போன்றவனே, மலை மேல் மருந்துபோல இருப்பவனே, வயல்கள் சூழ்ந்த, கரும்பாலைகள் சூழ்ந்த பண்ணைகள் உடைய இடத்தில் உறையும் திருக்கச்சூர் ஆலக்கோயில் அம்மானே, உன்னை மறவேனோ? என்கிறார்.
 
 ஒரு முறை படித்துத் தெளிந்தேன். திருக்கச்சூர் ஒரு காலத்தில் ஆலைகள் ஓடிய பதியாக இருந்திருக்கிறது.

ஒரு கோணத்தில் மலைக்கோயிலில் வெள்ளைத் தாளில் பொட்டலம் கட்டி வாங்கி வந்த விபூதி டேபிளின் மேல் ஸ்படிக லிங்கம் போலத் தெரிந்தது.

12 comments:

விஸ்வநாத் said...

அருமை அற்புதம்
அடைந்தேன் புண்ணியம்.

RAMA RAVI (RAMVI) said...

//ஒரு கோணத்தில் மலைக்கோயிலில் வெள்ளைத் தாளில் பொட்டலம் கட்டி வாங்கி வந்த விபூதி டேபிளின் மேல் ஸ்படிக லிங்கம் போலத் தெரிந்தது.//

அருமை.

திருக்கச்சூர் பற்றிய அருமையான தகவல்களுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

திருக்கச்சூர் பற்றிய சிறப்பான தகவல்கள்......

ADHI VENKAT said...

திருக்கச்சூர் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

சீனு said...

வணக்கம் சார் இன்றுஉங்களைப் பற்றி வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி

http://blogintamil.blogspot.in/2013/01/tamil-bloggers-2.html

மாதேவி said...

திருக்கச்சூர் தர்சனம் கிடைத்தது. நன்றி.

RVS said...

@விஸ்வநாத்
நன்றி விசு. எனக்கும் புண்ணியம். :-)

RVS said...


@RAMVI
நன்றி மேடம். :-)

RVS said...


@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைவரே! :-)

RVS said...


@கோவை2தில்லி
நன்றிங்க சகோ! :-)

RVS said...


@சீனு
மிக்க நன்றி சீனு! :-)

RVS said...

@மாதேவி
தரிசித்தமைக்கு நன்றி. :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails