Wednesday, January 16, 2013

அன்பே வா.... அருகே வா....


ரெண்டு ஃபர்லாங் தூரம் கடந்து “வண்டியை அங்க போடு” என்கிற மதராஸ் பாஷை திசைக் காட்ட எனது சேப்பாயியை நிறுத்திவிட்டு 36வது புத்தகக் காட்சிக்குள் ஒரு காதலியைப் பார்க்கப் போவது போல இன்ப அதிர்வுடன் நுழைந்தேன். என் பாரியாள் மற்றும் ஒரு பெரிய லிஸ்ட்டோடு களம் புகுந்த என் செல்வங்கள் இரண்டோடும் காலடியெடுத்து உள்ளே வைத்ததும் புத்தகங்களின் மானசீகக் குரல் கோரஸாக “அன்பே வா.. அருகே வா...” என்று ப்ரியமுடன் பாடி அழைத்தது. வெளியே ”உள்ளகரத்திலிருந்து தியாகராஜன் உடனே பப்பாசி அலுவலகத்து வரவும்.” என்று பபாசியின் ப்பை இரண்டு மாத்திரை அளவுக்கு அழுத்தி கூட்டத்தில் தொலைந்த யாருக்கோ குரல் விட்டுக்கொண்டிருந்தார்கள்.

எடுத்தவுடன் கண்ணில்பட்டார் கண்ணதாசன். அப்பதிப்பகத்தில் புரட்டி முகர்ந்து பார்க்க முடியாதபடி லாமினேட் செய்யப்பட்ட வனவாசத்தை எடுத்துக்கொண்டேன். “எல்லாத்தைப் பத்தியும் எழுதியிருக்காரு” என்று நிறைய பேர் ஏற்கனவே பிரஸ்தாபித்திருந்தார்கள். என் பின்னாலேயே அந்தப் புஸ்தகத்தை பில்போடுபவரிடம் கொண்டு வந்து மூக்குக்கண்ணாடியணிந்த மாமியொருவர் “இது எதப்பத்தி?” என்று விசாரித்து நுணுக்கமாக மேலும் ரெண்டு கேள்வி கேட்டார். அந்தக் கல்லாப்பெட்டிப் பையன் “வாங்கினா வாங்கு” பார்வை பார்த்தான். அம்மாமி பணிந்து ஏதோ ஒரு ”ஏணிப்படிகள்” என்று தலைப்பிட்ட ஒரு வாழ்வூக்கப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒதுங்கினார்.

அடுத்த ஸ்டாலில் Mark Twainனின் The Adventures of Tom Sawyer என் பெரியவள் எடுக்க ANA Junior Classics என்றொரு அற்புதமான புத்தகம் என் மனைவியார் தேர்ந்தெடுத்தார். சிறார்கள் படிப்பதற்கு தோதாக H.G. Wells இன் Time Machineல் ஆரம்பித்து Gullivers Travels, The Prince and The Pauper, Kidnapped, Treasure Island, The Jungle Book என்று கீர்த்தி பெற்ற இருபது புத்தகங்களின் 30 பக்க சுருக்க வெர்ஷன் வெளியிட்டிருந்தார்கள். தலகாணி சைஸ் புத்தகங்களை பல நாட்கள் காது மடக்கிப் புரட்டும் என் போன்ற சோம்பேறி பெரியவர்களுக்கும் இந்த கலெக்ஷன் ஒரு வரப்பிரசாதம். அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

இருபுறமும் சுற்றியலைந்த கண்ணுக்கு அடுத்தது தென்பட்டது United Writers ஸ்டால். ஹாலோ ப்ளாக் சைஸ் புத்தகங்கள் சுவர் போல அடுக்கியிருந்தார்கள். சென்ற முறை இங்கே வாங்கிய ரஸிகன் கதைகள்(ரகுநாதன்) ஒரு பொக்கிஷம். ஈர்த்தது. ஜெயமோகனின் விஷ்ணுபுரங்களினால் மதிலமைத்திருந்ததில் எக்கி “கொற்றவை”யை எடுத்துக்கொண்டேன். எனக்குத் தெரிந்த இலக்கிய வட்டாரத்தில் பலர் சிலாகித்திருந்தனர். கடைசியிலிருந்து விசிறியாகப் பக்கங்களை திருப்பி முதல் பக்கத்துக்கு வந்தால் கொற்றவை:காப்பியம்:ஜெயமோகன் என்றிருந்தது.

திரும்பவும் குழந்தைகளுக்கான ஒரு ஸ்டால். SCHOLASTIC. ஏற்கனவே அவர்களது பள்ளியில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கூடாரம் கட்டி அப்பன்மார்களின் பர்ஸை மொட்டையாக்குவார்கள். சந்தோஷ மொட்டை. இங்கேயும் குடியிருந்தார்கள். நான்கு புத்தகங்களை அள்ளிக்கொண்டார்கள். பில் போடுமிடத்தில் ஒரு அட்டையைக் கொடுத்து சுரண்டிப் பார்க்கச் சொன்னார்கள். மூத்தவளுக்கு ஆட்டோகிராஃப் புத்தகமும் இளையவளுக்கு ஃப்ரிஸ்பீயும் பரிசாகக் கிடைத்தது. வாழ்க ஸ்காலஸ்டிக். வளர்க அவர்தம் தொண்டு.

கிழக்கில் கொஞ்சம் நேரம் கடத்தினேன். சர்வர் சுந்தரம் நாகேஷ் அட்டை கவனத்தை ஈர்க்க பாம்பின் கண் வாங்கினேன். முறுக்கு மீசையுடன் பின்னட்டையில் கையைக் கட்டிக்கொண்டு ஆசிரியர் தியடோர் பாஸ்கரன். சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு என்று ஏற்கனவே இணையத்தில் ட்ரைலர் ஓட்டப்பட்ட சரஸ்வதி:ஒரு நதியின் மறைவு வாங்கியிருக்கிறேன். தொன்மமான நதி தொலைந்து போன வரலாறு. ரிஷிமூலத்தையல்லாமல் நதிமூலத்தை தேடி.

வாத்தியார் இல்லாத புத்தகக் காட்சியா? இன்னமும் ஆளுயரப் பதாகைகளில் கையில் புத்தகத்தைப் பிரித்து நம்மைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார் மங்காப் புகழ் பெற்ற சுஜாதா. ஆட்டக்காரன், இளமையில் கொல், ஓரிரவில் ஒரு ரயிலில் என்று மூன்றை எனதாக்கிக்கொண்டேன். வாழும் இலக்கியகர்த்தாவான அசோகமித்திரனின் வாழ்வாங்கு வாழும் தண்ணீர் மற்றும் மானசரோவர் என்ற இரண்டை எடுத்து அக்குளில் அடக்கிக்கொண்டேன். ஏற்கனவே புத்தகம் வாங்கிய எந்தக் கடையிலும் காது வைத்த பை கொடுக்கவில்லை. ஏ4 கவரில் போட்டு பாலீதின் ஒழிப்பை கடைபிடித்தார்கள். கிழக்கில் நான் வாங்கிய இந்த ஏழு புத்தகங்கள் மட்டும் நுழையும் படியாக ஒரு காதுப்பை கொடுக்கும்போது “இன்னொரு பை கிடைக்குமா?” என்று வெட்கத்தை விட்டு கேட்டேன். முகத்தைப் பார்த்தால் தயவுதாட்சண்யம் பார்க்கவேண்டும் என்று லாப்டாப்பை விட்டு பார்வையைத் திருப்பாமல் “ஊஹூம்” என்ற கறார் பதில் வந்தது. வீடு கட்ட செங்கல் சுமக்கும் தொழிலாளி போல அடுக்கிக்கொண்டு மீண்டும் இலவசப் பை கேட்காமல் அமுக்கிக்கொண்டு நகர்ந்தேன்.

விகடன் பிரசுரம் ரங்கநாதன் தெரு போல ஜேஜேவென்று நிறைந்திருந்தது. நிறைய புத்தகங்கள் பல கை பட்டு மிரண்டிருந்தன. விகடன் சுஜாதா மலர் என்ற மலர்க்கென்று பல பிரசுரங்கள் நிர்ணயித்த சைஸ் புத்தகம் தட்டுப்பட்டது. கையகப்படுத்திக் கொண்டேன். கொஞ்சம் நகர்ந்ததில் தொ.பரமசிவனின் சமயங்களின் அரசியல் கிடைத்தது. ஏற்கனவே தொ.பவின் மூன்று புத்தகங்கள் படித்திருக்கிறேன். படித்ததையும் மனதில் பட்டதையும் அப்படியே ஆவணப்படுத்தும் வழக்கம் கொண்டவர். சிலருக்குப் படிக்கக் கொஞ்சம் சுரீர்ரென்று இருக்கலாம். நிறைய ஆய்வுகளை மேற்கோள் காட்டி எழுதும் வழக்கத்தால் ஜூஸ் நிறையக் கிடைக்கும்.

விகடனில் இரண்டே புத்தகங்கள் வாங்கினாலும் திருமண் இட்டிருந்தவரிடம் கண்களில் தயை பொங்க “சார்! அந்தப் பெரிய பை கொஞ்சம் தர்றீங்களா?”. சுமை வெட்கமறியாது. “எவ்ளோவுக்கு வாங்கியிருக்கார்?” என்று பக்கத்திலிருந்தவரிடம் ஆடிட் செய்தார். “224". என்னை நிமிர்ந்து பார்த்தார். இரண்டு பெண் பிள்ளைகள் என் பாரத்தில் பாதி சுமந்த என் சம்சாரம் என்று புடை சூழ வாசிக்கும் தாகத்தில் நின்றிருந்த எங்கள் குடும்பத்தைக் கண்ணுற்று இரங்கினார். “இந்தாங்க” என்று பெரியமனது வைத்து பெரியபை கொடையளித்தார். என்னை விட என் மனைவியிடமிருந்து பெரியதாக ஒரு தேங்க்ஸ் வந்தது.

இரண்டு வீதிகள் சுற்றினோம். முதல் வீதியின் மூலையில் இரண்டு தாத்தாக்கள் உட்கார்ந்திருந்த கடைக்குள் சென்றேன். திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட். வெளியே ப்ளாட்பாரத்தில் குவிக்கப்பட்டிருந்த புத்தகங்கள் கூட அப்பழுக்கில்லாமல் இருந்தது. இங்கே அடுக்கியிருந்த புத்தகங்களில் பல மழையில் நனைந்து துவட்டிக்கொள்ளாமல் இருப்பது போலிருந்தது. கல்லாவில் இருவரும் முதியவர்கள். குப்பையில் மாணிக்கம் கிடைக்கும் என்ற நப்பாசையில் தேடினேன். கழக வெளியீடாக யாழ்பாணத்து ந.சி. கந்தையா பிள்ளையவர்கள் எழுதிய தமிழகம் கிடைத்தது. பத்து சதவிகித கழிவு விலையில் டிஸ்கௌண்ட்டை floor(discount) ஃபார்முலாவில் போட்டு 120 ரூபாய் புத்தகத்து 12 ரூபாய்க்கு பதிலாக பத்து ரூபாய் கழித்து 110 கேட்டார்கள். பாவம். சில்லரை எடுக்க சிரமப்படுவார்கள். பதில் பேசாமல் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினேன்.

அதற்கடுத்து பாரி நிலையம் என்று நினைக்கிறேன். அவர்களிடத்தில் இலக்கிய தலைப்புகள் போல மினுமினுக்க உள்ளே நுழைந்தேன். இந்த நேரத்தில் பசங்களுக்கு பசித்தது. கால் வலித்தது. அவர்களது வருகை ஈடேரிவிட்டது. ”அப்பா! போலாம்ப்பா. பசிக்குது”. இந்த அழைப்பு வருவதற்குள் நிறைய வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆரம்பமாகிவிட்டது. தமிழகத்தில் பாரதம்: வரலாறு - கதையாடல் என்ற புத்தகத்தின் அட்டைப் படத்துக்கே அடிமையாகி வாங்கினேன். புத்தகம் முழுக்க விரவிக்கிடந்தன ஆய்வுக்கட்டுரைகள். நச்சரிப்பு தாளமுடியாமல் “ஒரு இடத்தில் உட்கார்ந்துகொள்ளுங்கள் அப்பா ஒரு சின்ன ரவுண்ட் அடித்துவிட்டு வருகிறேன்” என்று வெயில் தாழ உள்ளே வந்து புத்தகம் தேடிக்கொண்டிருக்கும் தலை சமுத்திரத்திற்குள் சங்கமமானேன்.

ந்யூபுக்லேண்ட்ஸில் சுப்புடு தர்பார் என்று இரண்டு பாக புக் வெளியிட்டிருந்தார்கள். இணையத்திலேயே அகப்பட்டது. நேரே வாங்கிக்கொள்ளலாம் என்று அவர்கள் ஸ்டாலுக்குள் நுழைந்தால் “எல்லாப் புத்தகத்தையும் இங்கே அடுக்க முடியாது. டிநகர்லதான் இருக்கும்” என்று என்னை அறுத்துவிட்டார். ஓடிவந்துவிட்டேன். கர்நாடக சங்கீதத்தின் பூர்வ ஜென்ம வாசனை எனக்கு இருப்பதால் ராகம் தாளமெல்லாம் தெரியாமலும் நிறைய கச்சேரி கேட்கிறேன். வெங்கடசுப்புடு அடுத்து எங்கே நுழைவது என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அல்லயன்ஸ் கண்ணில் பட்டது. வாதூலனின் “கர்நாடக சங்கீதத்தை ரஸியிங்கள்” என்ற புத்தகம் இரண்டு கிராப் ஐந்து குடுமி வைத்த ஸங்கீதக்காரர்கள் அலங்கரிக்கும் அட்டைப் படத்தோடு ”என்னை எடுத்து உன் சங்கீத தாகத்தை தணித்துக்கொள்” என்று கூப்பிட்டது. அள்ளிக்கொண்டேன்.

காலச்சுவடிலும் உயிர்மையிலும் நிறைய நேரம் ஒதுக்கமுடியவில்லை. வெளியிலிருந்து “வாப்பா...வாப்பா..” என்று கூப்பிட்டு என்னை முகமதிய தோழர்களின் அப்பா ஆக்கியிருந்தார்கள். காலச்சுவடில் பள்ளிகொண்டபுரம் வாங்கிக்கொண்டேன். உயிர்மையில் சுஜாதாவின் உள்ளங்கையகல குறுநாவல்கள் பதிப்பித்திருந்தார்கள். மனுஷ்யபுத்திரனும் எஸ்ராவும் வாசலில் உட்கார்ந்து விரலுக்கு சுளுக்கு வர ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஜன்னல் மலர், காகிதச் சங்கிலிகள், யவனிகா என்று மீண்டும் மூன்று சுஜாதா. லா.ச.ராவின் முதல் தொகுதிக் கதைகளில் ஏற்கனவே ருசிகண்டிருந்ததால் இரண்டாம் தொகுதி சிறுகதைகள் எடுத்துக்கொண்டிருக்கும் போது “அப்பாஆஆஆஆ.. எங்கேயிருக்கே” என்று புத்தகக்காட்சியே இடிந்து விழுமளவிற்கு அலைபேசியில் தொலைபேசினாள் அன்பு மகள்.

வாங்கியது வாங்கியபடியிருக்க அப்படியே வெளியேறினேன். ஸ்வீட் கார்ன் வாங்கிக்கொண்டு பம்பர் டு பம்பர் கார்கள் வீட்டுக்குச் செல்லும் வரிசையில் நின்று வந்துசேர்ந்தேன். கால் வைக்காத பதிப்பகங்கள் இன்னமும் இருக்கின்றபடியாலும் வாங்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த லிஸ்டில் சிலவைகள் விடுபட்டுப்போனதாலும் இன்னொரு தடவை போகலாம் என்று சித்தம். பார்க்கலாம். சரஸ்வதியும் சங்கீதாவும் விட்ட வழி.

15 comments:

இராஜராஜேஸ்வரி said...

புத்தக கண்காட்சியை காட்சிப்படுத்தி கைநிறைய புத்தகங்களும் சுமந்த இனிய நினைவுகளைப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..

BalajiVenkat said...

Last linela irukura punchhh sooper :)

RAMA RAVI (RAMVI) said...

சென்னையின் வெயிலிலிருந்து தப்பித்து பெங்களூரில் குளு குளு என்று இருந்து கொண்டிருந்தாலும், புத்தக கண்காட்சியின் போது சென்னை வாசிகளின் மீது பொறாமை படுகிறேன்.

தங்களைப்போன்றோரின் விரிவான சுவாரசியமான பதிவுகள்தான் ஒரே ஆறுதல்.

Madhavan Srinivasagopalan said...

//சரஸ்வதியும் சங்கீதாவும் விட்ட வழி.//

haa.. haa. .haa.. nice 'punching end'

பால கணேஷ் said...

நீங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலையும் இணைத்தது சிறப்பு. உங்களின் ரசனையை அறிந்து என் ரசனையுடன் ஒப்புநோக்க முடிந்தது. இன்னொரு விசிட்டையும் இதேபோல் ரசனையுடன் பகிருஙகள்....

வெங்கட் நாகராஜ் said...

கடைசி வரி.... :)

அதானே - அவர்கள் வழி விட்டால் தானே நாம் செல்ல முடியும்!

பத்மநாபன் said...

வீல் கடுக்க.... எப்படியா உங்களுக்கு மட்டும் இப்படி வார்த்தைகள் பிச்சுக்கிட்டு வருது .....
புத்தகங்களை வரிசையா சொல்லி கடுப்பை நல்லாவே கெளப்பி விட்டுட்டீங்க.. எப்படியும் பிளாக்லா ஏத்துவீங்கன்னு தெரியும் .. அதான் பின்னூட்டத்தை முன்னூட்டாம விட்டுட்டேன் ... எழுதற மகரசான் இப்படி எழுதிட்டே இருங்க .. நேரம் கிடைக்கிறப்ப வந்து படிச்சிட்டு போறோம்.. வாழ்த்துகள்....

பத்மநாபன் said...

மகராசன்....கால் மாறி விட்டது...

எழுதுவதே ஓரிரு வார்த்தைகள்.. அதுலேயும் ரெண்டு மூன்று தவறுகள் ....

தப்பில்லாமல் மாய்ந்து மாய்ந்து எழுதும் உங்களை படிக்கும் பொழுது ஒரு செல்ல பொறாமையை தவிர்க்க முடிவதில்லை ...

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம்! :-)

RVS said...


@BalajiVenkat
நன்றி பாலாஜி! :-)

RVS said...


@RAMVI
ரொம்பவும் சிரமப்பட்டுதான் பார்த்தோம். அவ்வளவு அனுகூலமாக இல்லை மேடம்.

RVS said...


@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவா!! :-)

RVS said...

@பால கணேஷ்
இரண்டாவது விஸிட்டும் முடிந்தது. உங்கள் ரசனை ஒத்துப்போனதா? :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஆமாம் தலைநகரமே! கரீட்டா சொன்னீங்கோ பாஸு! :-)

RVS said...


@பத்மநாபன்
நீங்க அடிக்கடி வராமல் இருப்பதால் எழுத வரமாட்டேங்குது தல! :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails