Tuesday, December 25, 2012

தொன்னை

சிலகாலத்துக்கு முன்னர் திண்ணைக் கச்சேரி என்று அவியல் பதிவு ஒன்று பத்தி பத்தியாகப் பிரித்து பத்தியுடன் எழுதிவந்தேன். முகப்புத்தகத்தில் தீவிரமாகத் துண்டிலக்கியத் தொண்டாற்றுவதால் இங்கே அதைத் தொடர முடிவதில்லை. திண்ணை எங்கே என்று அவஸ்தைப் பட்டவர்களுக்காக....

**********தொன்னை ************

தனுர் மாச ஞாயிற்றுக்கிழமையில் ஸ்ரீசூர்யபகவான் தன் ரதத்திலேறி புறப்பட்டு புத்தொளி வீசுமுன்னே எழுந்திருந்து பச்சைத் தண்ணீரில் ஸ்நானத்துக்கப்புறம் நித்யானுஷ்டானங்கள் செய்வது மனசுக்குத் திவ்யமாக இருக்கிறது. மார்கழிப் பனியில் ஜில்லென்று நிர்ஜனமாகயிருக்கும் அதிகாலைச் சாலையில் விபூதி மணமணக்க கோயிலுக்குச் செல்வது அதைவிட திவயமாக இருக்கிறது. இதற்கெல்லாம் சிகரமாக இல்லாளுடன் அபிஷேகம் தரிசிப்பது பரம திவ்யமாக இருக்கிறது.

ஆஞ்சு கோயிலுக்குள் நுழையவும் திருக்கதவுகள் திறக்கவும் நேரம் சரியாக இருந்தது. விஸ்வரூப ஆஞ்சநேயர் பட்டுக் கட்டிக்கொண்டிருந்தார். துளசி வாசம் அடித்தது. ”புத்திர்பலம் யசோதைர்யம் நிர்பயத்வம் அரோகதாம்...” என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே நுழைந்தால் கணிசமான அளவில் பனியைப் பொருட்படுத்தாத பக்தர்கள் பாசுரம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

நெற்றிப்பொட்டுகள், தோள்பட்டையும் புஜமும் சேருமிடங்கள், நெஞ்சு, வயிற்றில் மூன்று என்று கண்ணுக்குத் தெரிந்த இடத்திலெல்லாம் கோபியிட்டுக்கொண்டு ஸ்ரீராகவேந்திரர் சொரூபத்தில் மாத்வர் மாமா ஒருவர் வேதம் சொல்லிக்கொண்டிருந்தார். பிரத்தியேகமான மைக்கில். இன்னமும் வெளியே முழு வெளிச்சம் வரவில்லை. விடிகின்ற பொழுதில் ஹனுமானுக்கும் நமக்கும் மந்திரங்களினால் கனெக்ஷன் கொடுத்துக்கொண்டிருந்தார் அவர்.

அரை மணி நேரப் பிரார்த்தனை அரை நொடிப்பொழுதாக கழிந்தது. பிரதக்ஷினத்தையும் தேகப்பயிற்சியையும் ஒரு சேர செய்ய விருப்பட்டவர்கள் வீதிகளில் நடப்பது போல கைகாலை வீசிவீசி அனுமனை வலம் வந்தார்கள். சந்நதிக்குப் பின்புறம் தலையை முட்டி எண்ணெயைச் சுவற்றில் எண்ணெய் ஈஷி இன்னமும் கருப்பாக்கினார்கள். ”புள்ளும் சிலம்பின காண்” என்று கோயில் மாடங்களில் வசிக்கும் புறாக்கள் சடசடத்தன. வைணவக் கோயில்களில் இரண்டு சுற்று பிரதக்ஷினம் கட்டாயம் அனுசரிக்கவேண்டும். அவ்விதிப்படி நிதானமாக 1... 2... வலம் வந்தாயிற்று. வலப்புறம் மனைவியார் பஞ்சாங்க நமஸ்கரிக்க அஷ்டாங்க நமஸ்காரம் அனுமனுக்கு முன்னால் செய்தாயிற்று.

பாசுரம் சொன்ன மாமிகள் கோஷ்டியின் மையத்திலிருந்து ஒரு ஆகிருதியான குரல் “அந்த பச்சக் கலர் டெம்போ நிக்குமே. அதுக்கு பக்கத்தாந்தான் மாமீ... அவசியம் வாங்கோ...” என்று குழுவில் புதியதாய் சேர்ந்த அந்த தீர்க்க சுமங்கலியிடம் அட்ரஸாக ஒலித்தது. சிறிய துவாரங்களுடைய பெட்டியில் துழாவி தாழம்பூ குங்குமம் இட்டுக்கொண்டோம். இப்போது ஆஞ்சு கோயிலின் மிக முக்கியமானக் கட்டத்திற்கு வந்தோம். பிரசாதம் விநியோகிக்குமிடம்.

ஆவிபறக்கும் வெண்பொங்கல் சூடு தாங்காமல் இரண்டிரண்டு தொன்னைகளினால் ஆளுயரக் கலயத்திலிருந்து வழித்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சமீபத்தில் அனுமார் கோயிலுக்கு வரும் பக்தர் கூட்டம் அதிகரித்திருந்தது உருவம் இளைத்த அந்த பிரசாத தொன்னையில் தெரிந்தது.

***********சோகம்*************
நித்யஸ்ரீ எனக்கு மிகவும் பிடித்த பாடகி. மைக் செட் அவசியமில்லாமல் ஆயிரம் பேருக்குக் கேட்கும் காத்திரமான குரல். அமிர்தமான குரல்வளத்தை வழங்கிய ஆண்டவனின் அனுக்கிரஹம் ஏனோ அவரது குடும்ப வளத்திற்கு கிடைக்கவில்லை. இந்த மார்கழியில் கம்பீர நாட்டையிலும் தர்பாரிலும் அடானா போட்டுப் பாடவேண்டியவரை முகாரி பாடவைத்த அந்த மஹாதேவனின் திருவிளையாடலை என்னவென்று சொல்ல?

*********கோரம்**********
தில்லிச் சம்பவம் மனதைப் பிசைகிறது. தலைநகரமா தறுதலைநகரமா என்று தெரியவில்லை. இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்ளத் துணிந்தவர்களை கருப்பையில் சுமந்த தாய்கூட இதை பொறுக்கமாட்டாள். ஒட்ட நறுக்கவேண்டும்.  

******** ஸ்நேகிதம்******* 


 
நேற்றிரவு மெரினாவில் நட்பு அலை அடித்து எல்லோருடைய கால்களையும் நனைத்தது. இதயத்தைக் குளிர்வித்து மெல்ல வருடியது. மேனி மார்கழியால் நடுங்கியதை விட இந்தத் தோழமை கண்டு உணர்ச்சி வயப்பட்டு நடுநடுங்கியது. ”....மூழ்காதே ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்தான்.....” என்று பச்சக்குழந்தையிலிருந்து பல்லு போன பாட்டிவரை இவர்களைப் பார்த்து நின்று காயர் பாடினார்கள்.

ஆல் இந்தியா ரேடியோ வாசலிலிருந்து ஐ.ஜி ஆஃபீஸ் வரை ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. கலங்கரை விளக்கம் தாண்டிய இருட்டில் திருட்டுத்தனமாக ஒதுங்கியிருந்த காதலர்கள் அலறிப்புடைத்து வெளிச்சத்துக்கு இடம் பெயர்ந்தார்கள்.

மாயன் காலண்டர் மூன்று நாட்களுக்குப் பிறகு வேலை காட்டியதோ என்றஞ்சும்படி நின்ற பொருள் அசையவும் அசையும் பொருள் நிற்கவும் ஒரு வரலாற்று நிகழ்வு பீச்சாங்கரையில் நடந்தேறியது. Enough! Enough!! ஸ்டாப் பில்டப். Dot.

மன்னையில் பள்ளிப் பருவத்து ஸ்நேகிதர்கள் அறுவர் அங்கே தோழமை வாசம் வீச கடற்கரை மணலில் கால் புதைத்து அரட்டையடித்தார்கள். அஃதே. குமரர்களாகப் பழங்கதைகள் பல பேசினார்கள். நெருங்கி வந்த அண்ட்ராயர் பையனின் சுண்டலைத் தின்றால் வாய் மெல்லும் நிமிடங்கள் பேச்சில்லாமல் போய்விடுமே என்று தவிர்த்துவிட்டு ஒரு தவம் போல சுவாரஸ்யமாக மூச்சுவிடாமல் சம்பாஷித்தனர்.

கடற்கரையில் காற்றோடு கரைந்த சில வசனங்களை இங்கே பகிர்கிறேன். பிரசூரித்தால் இல்வாழ்க்கைக்கு ஆபத்தில்லை என்றவைகள் மட்டும் இங்கே..

“டேய். ------யை ஞாபகம் இருக்கா?”

“உன்னோட ரசிகாள்லாம் வாய் பிளந்து அசந்துபோகிற மாதிரி.... இதழில் கதை எழுதும் நேரமிது பாடுவியே..... இன்பங்கள் அழைக்குது...ஆஅ.ஆஅ..ஆஅ..ஆ”

“லீகலா இல்லீகல் ப்ரொஃபஷன் பார்க்கிற லாயர் தானே நீ”

“சொந்தமா நீ கம்பெனி வச்சுக் கிழிச்சதுபோதும்னு சொல்லிட்டாடா வொய்ஃப். ந்யூ இயர்லேர்ந்து லன்ச் கட்டிக்கிட்டு வேலைக்கு...”

”முதன்மை விஞ்ஞானிக்குதான் எப்பவுமே முதல் மரியாதை”

”பில்கேட்ஸே உங்கிட்ட உத்தரவு வாங்கிண்டுதான் பாட்ச் ரிலீஸ் பண்றாராமே”

”நீதான் காக்னியில கிங்காமேப்பா..ஊர்ல பேசிக்கிறாங்க...”

“உங்க வீட்டுப் புது வீஸியாருக்குப் பூஜை போட்டது நியாபகமிருக்கா?”

ஒவ்வொருவருக்குள்ளும் உன்னதமான யதார்த்த சினிமா எடுப்பதற்கான லட்சம் சங்கதிகள் சுருள் சுருளாய் குவிந்து கிடந்தன.

ஒருவர் புகழை மற்றவர் பேச இனித்திருந்த அத்தருணம் இன்னும் நீளாதா என்றென்னும் போதே ஒவ்வொருவரின் அலைபேசியும் வங்கக் கடலலையின் ஓசையைக்காட்டிலும் ஆர்ப்பரித்து அவர்களின் மனைவியர் கடிவாளத்தை இழுக்கிறார்கள் என்று தெரிவித்தது. ”ம்.. வந்துட்டேம்மா..” என்று ஈனஸ்ருதியில் பொட்டிப்பாம்பாக அடங்கி பவ்யமாகப் பதிலுரைத்தார்கள்.

பசித்தது. ந்யூ உட்லண்ட்ஸ் உணவகத்தில் ஒரே தள்ளுமுள்ளு. இன்னும் லேட்டாகப் போனால் வீட்டிற்குள் காலை வைக்க முடியாதே என்ற எங்கள் பதபதைப்புத் தெரியாத சூப்பர்வைசரிடம் மன்றாடி டேபிள் பிடித்து டின்னர் முடித்தோம்.

சர்வலோகத்திற்கும் ஜன்னல் கொடுத்து கம்ப்யூட்டரும் கையுமாக ஆசீர்வதித்த கம்பெனியிலிருந்து கடல் கடந்து பறந்துவந்திருந்த தோழன் இம்மானுட வாழ்வின் இன்றியமையாத முதலிரண்டு ஐட்டத்தைக் கொடுத்து கௌரவித்தான்.

சாப்பாட்டுக்கு பில்லும் ஆளுக்கொரு டீஷர்ட் கொடுத்ததையும் இப்படி எழுதியதால் மூன்றாவதையே அடுத்த முறை வாங்கித்தருவான் என்ற நம்பிக்கையில் வீட்டிற்கு பறந்து படுக்கையில் விழுந்த பின்னரும் அழகழகான வீதிகளுடன் மன்னார்குடியும், நேஷனல் ஸ்கூலும், ராஜவீதியும், மூன்றாம் தெருவும், சோமேஸ்வரைய்யா வைத்தியசாலையும், முதல் தெருவும், சங்கரா கம்ப்யூட்டர்ஸும், பள்ளிகால சேஷ்டைகளும் கண்களுக்குள் கருப்பு வெள்ளையில் ஃப்ளாஷ் அடித்தன.

ஆட்டோகிராஃப் சேரன் போல படுத்துக்கொண்டே சைக்கிள் ஓட்டினேன்.
 

10 comments:

Madhavan Srinivasagopalan said...

nice... kadhambam, as usual in RVS' style.

கார்த்திக் சரவணன் said...

//ஒட்ட நறுக்க வேண்டும்//

கரெக்ட்...

மெரினா அனுபவம் சூப்பர்...

இராஜராஜேஸ்வரி said...

மலரும் அழகிய நினைவுகள்..

RVS said...

@Madhavan Srinivasagopalan

Thanks Madhava! :-)

RVS said...

@ஸ்கூல் பையன்
நன்றி. உங்கள் கேரளா படங்கள் கண்ணுக்கு விருந்து. :-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி

நன்றி மேடம். :-)

சாந்தி மாரியப்பன் said...

தொன்னையில் பரிமாறிய அத்தனையும் ருசியோ ருசி. பக்தர் கூட்டம் எத்தனை பொங்கி வழிந்தாலும் தொன்னை இளைக்காமலிருக்கும் வரத்தை ஆஞ்சு அருள்வாராக :-))

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.

RVS said...

@அமைதிச்சாரல்
ஆனாலும் அவர் கருணை இளைக்காது என்கிற நம்பிக்கை. :-)

RVS said...

@Rathnavel Natarajan
நன்றி சார்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails