கோசலம் என்பதை கா+அசலம் என்றும் பிரிக்கலாம் என்கிறார்கள். கா என்றால்
மிகுதி என்றும் அசலம் என்றால் மயிலென்றும் பதம் பிரித்து அர்த்தம்
சொல்கிறார்கள். மயில்கள் மிகுந்த தேசம் என்பதால் கோசலம் என்று
வழங்கலாயிற்று. அப்பேர்ப்பட்ட கோசலத்தை கம்பநாடன் நாட்டுப்படலமாக 61
பாடல்களில் கொஞ்சம் விஸ்தாரமாக எழுதினான். தேசியக் கொடி போல தேசிய விலங்கு
தேசியப் பறவை என்கிற தேசிய வழக்கு அக்காலத்திலிருந்திருந்தால் கம்பரே மயிலை
தேசியப் பறவையாக அறிவித்திருப்பார்.
தேசப்பற்றாளனாகச் சித்தரிக்கப்படும்
இக்கால சினிமா நாயகர்கள் அரும்பாடுபட்டுக் குருதிச் சிந்தி நாட்டைக்
காப்பாற்றும் படத்தில் நடிக்கும் போது நாட்டின் கொடியைத் தவிர வேறெதையும்
நாட்டுடமையாக அறியாதவர்கள். காவிப் பட்டை கீழே வரும்படி கொடி தலைகீழாகப்
பறப்பதற்கும், கொடியை யாராவது தீயிலிட்டு எரித்தாலும் ஆவேசப்பட்டு
எதிராளியை அடித்துத் துவைக்கும்படி படம் பண்ணினார்களேத் தவிர பாசிட்டிவ்வாக
நாட்டின் வளத்தையும் மாண்புகளையும் சிறப்புகளையும் விளக்கிக்
காட்டினார்களா என்று தெரியவில்லை. இரு தசாப்தங்களுக்கு முன்னர் ஷ்யாம்
பெனகல் எடுத்த பாரத் ஏக் கோஜ் வீடியோக்கள் யூட்யூப்பில் இலவசமாகக் காணக்
கிடைக்கிறது. தாய்நாட்டைப் பற்றிக் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொள்ளலாம்.
காவியநாயகனை அறிமுகப்படுத்தவதற்கு முன்னர் அவன் அவதரித்த தேசத்தையும்
அதில் வாழும் மக்களையும் அந்நாட்டினரின் இயல்புகளையும் ஒழுக்கத்தையும்
எடுத்துக்காட்டிவிட்டுதான் காப்பியத்திற்குள்ளேயே நுழைகிறான். ஔவையார்
“நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ”வில் ”எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை,
வாழிய நிலனே” என்று நல்லோர் உறையும் இடம் எதாகிலும் அந்தத் தேசம் நல்ல
தேசம் என்று பொதுப்படையாக ஒரு புறநானூற்றுப் பாடலில் விவரித்திருக்கிறார்.
ஆனால் கம்பன் மாஞ்சு மாஞ்சு அந்நாட்டின் இயற்கை வளத்தையும் எழிலையும்
அந்நாட்டினரின் பொழுதுபோக்குகளையும் கூறுகிறான்.
இப்படலத்தின் ஆரம்பப் பாடலில் மீண்டும் ஒருமுறை ஆதிகவியாக
வான்மீகியின்(வான்மீகம் என்றால் புற்று. புற்றிலிருந்து வெளிப்பட்டவன்
வான்மீகி) கவித்துவத்தை வணங்கி மகிழ்கிறான் கம்பன். வான்மீகி நன்நான்கு
வரிகளாக எழுதிய அந்தத் தேன் கவியை தேவர்கள் செவிவழியாக உண்ணக் கொடுத்தான்
என்றும் அவன் அந்த நாட்டைப் புகழ்ந்ததைப் பார்த்து மூங்கையானே(ஊமை)
பேசினான் என்றால் நான் என் மொழியில் பேசமாட்டேனா? என்கிறார் அடக்கத்துடன்.
கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்குப் பிடித்த மற்றும் பார்த்து ரசித்த ஒரு
ஆறு பக்கத்தில் ஓடும் செழிப்பான வயல் வரப்பான பிரதேசத்தை நினைவுக்குக்
கொண்டு வாருங்கள். மருதநிலவாசியான கம்பன் கோசலநாட்டில் நீங்கள் இப்போது
நினைவுக்குக் கொண்டு வந்தப் ப்ரிய நிலம் எப்படிக் காட்சியளித்தது என்று
எப்படி வர்ணிக்கிறான் என்று படித்துப் பாருங்கள்.
வரம்பு எலாம் முத்தம்; தத்தும்மடை எலாம் பணிலம்; மாநீர்க்குரம்பு எலாம் செம்பொன்; மேதிக்குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;பரம்பு எலாம் பவளம்; சாலிப்பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்கரம்பு எலாம் செந்தேன்; சந்தக்கா எலாம் களி வண்டு ஈட்டம்.
வரப்புகளில் முத்துக்கள் கிடக்கின்றனவாம், நீர் பாயும் மடைகளில்
சங்குகள்(பணிலம்), அதிகமாக நீர் பாயும் கரைகளில் செம்பொன்
ஒதுங்கியிருக்கிறதாம், எருமைகள்(மேதி) உழலும் குழிகளில் செங்கழுநீர்
பூக்களும், பரம்படித்த (சமன்படுத்தப்பட்ட) நிலங்களிலெல்லாம் பவளங்கள்
மின்னுகிறது, நெற்கதிர்கள் நிற்கும் இடங்களில்(சாலிப்பரப்பு)
அன்னப்பட்சியும் சேர்ந்து நிற்கிறது, மேற்கண்ட நிலப்பரப்புகளில் அடங்காத
இடங்களில் தேனிருக்கிறது, சோலைகளில் மதுவில் மயங்கி மகிழும் வண்டுக்
கூட்டம்(ஈட்டம்) என்று கோசலநாட்டின் வளத்தை ஒரே பாடலில் கவிவடித்தான்
கம்பன்.
இப்படியந்த மருத நிலத்தை காட்சிப்படுத்திக் காண்பித்தக் கம்பன்
அடுத்ததாக பின்னணி இசையாக என்னென்ன ஒலித்தது என்று செவிக்கு
விருந்தளிக்கிறான். கம்பனின் சொல்லாட்சி இப்பாடலில் சப்தத்திற்காக ஒலிக்காக
வரும் வார்த்தைகளாக அரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி என்று பிரித்து
மேய்வதில் புரிகிறது. ஆறு பாய் அரவம், ஆலை பாய் அமலை, ஆலைச் சாறு பாய் ஓதை,
சங்கின் வாய் பொங்கும் ஓசை, ஏறு பாய் தமரம், எருமை பாய் துழனி என்று
ஆற்றின் ஓசையையும், ஆலைகளிலிருந்து ஓடும் சாறுகளின் ஓசையையும் எருமைகள்
உரசிக்கொள்வதையும் பாய் பாயென்கிறான்.
இக்காலத்தில் ஒரு காப்பியமெழுதுவதென்றால் இந்தக் காமாசு (கா+மாசு)
தேசத்தில் என்னென்ன நம் காதுக்கு விருந்தாகும் என்பதை ஷாட் பை ஷாட்
பார்ப்போம். பாம்மென்ற பாஸஞ்சர் அலறலுடன் சென்ட்ரல் ஸ்டேஷனைக்
காண்பிக்கிறோம். அப்படியே கட் பண்றோம். வெளில காண்பிக்கறோம்.
டர்ர்ர்ர்ர்ர்ன்னு புளிமுட்டையாய் சைடு கம்பி வரை மக்களை அடைத்துக்கொண்டு
நகரும் ஆட்டோ சத்தம். அதையப்படியே கட் பண்றோம். சிக்னலில் பச்சை விழுவதற்கு
முன்னாடி பொறுமையின்றி பாம் பாம்முன்னு மாநகரப் பேருந்தின் பேரொலி. கட்
பண்றோம். நடுரோடில் ஹாரனிலிருந்து வைத்தகை எடுக்காமல் ஓட்டும் இருவீலர்
சவுண்டப்பர் ஒருவர். கட் பண்றோம். இன்னும் கொஞ்ச தூரம் வந்தால்
“அம்பிகையைக் கொண்டாடுவோம்” என்று துலுக்காணத்தம்மன் கோயில் கூம்பு
ஸ்பீக்கர் பாடல். கடைசியில் எதுவும் பேசாதபடிக்கு நம்ப தொண்டையைக் கட்
பண்றோம். மேலே சப்தமிட்ட காட்சிகளில் ஒன்றிரண்டு தவிர மீதமெல்லாம்
கிராமப்புறங்களிலும் இருக்கிறது. டர்ர்ர்ர்ரென்ற காதைக் கிழிக்கும் ஆட்டோச்
சத்தம் தேசியச் சத்தமாக வாய்ப்பிருக்கிறது. அரட்டை போதும்.
ஒரு பிரம்மாண்டமான பிஜியெம்மிற்கு பிறகு மருதநிலத்தை வேந்தனாக
சித்தரித்து ஒரு காட்சியைக் கொண்டு வருகிறான். ஒரு சோலையிலே மயில்கள்
களிநடம் புரிகின்றன. அதற்குத் தாமரை மலர்கள் ஃபோகஸ் லைட் போன்று
வெளிச்சமடிக்கிறதாம். விண்ணில் கருமேகங்கள் கடமுடாவென்று முழங்குவது
நடனத்திற்கு மத்தளம் வாசிப்பது போல இருக்கிறதாம். குவளைக் கொடிகளிலிருந்து
மலர்கள் கண்விழித்துப் பார்க்கின்றன. அவைகள் தான் இந்நிகழ்ச்சிக்கு
ரசிகர்கள். இக்கலை நிகழ்ச்சிக்கு நீர்நிலைகள் திரைச்சீலை வேலை பார்க்கிறது.
வண்டுகள் தேனொழுகும் மகர யாழையொத்து இனிமையாகப் பாட மருதமாகிய வேந்தன்
வீற்றிருந்தான். இயற்கையை அன்னைக்கு உருவகப்படுத்தவதால் அ.ச.ஞா அவர்கள்
மருதநிலத்தரசி என்பார். அந்தக் கவிச்சுவை மிகுந்த பாடல் கீழே.
தண்டலை மயில்கள் ஆட,தாமரை விளக்கம் தாங்க,கொண்டல்கள் முழவின் ஏங்க,குவளை கண் விழித்து நோக்க,தெண் திரை எழினி காட்ட, தேம்பிழி மகர யாழின்வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ.
பொன் முத்து பவளமெல்லாம் கூட வேண்டாம், நதிநீர்க் கால்வாய்களில்
மறைக்காமல் மறுக்காமல் சொட்டுத் தண்ணீர் கூட கொடுக்கமாட்டேன் என்று
கர்ஜிக்கும் கர்நாடகா காவேரித் தண்ணீர் வழங்கினால் எதேஷ்டம். உழுது
பிழைத்துக்கொள்ளலாம்.
இப்படிக் கச்சேரி களைகட்டியக் கோசலத்தை வர்ணித்த கம்பன் ஒரு பட்டியல்
கொடுத்து அவை தங்கும் இடங்களாக சொல்லும் ஒரு பாடல் ரொம்பவும் ஃபேமஸ்...
நீர் இடை உறங்கும் சங்கம்;நிழல் இடை உறங்கும் மேதி;தார் இடை உறங்கும் வண்டு;தாமரை உறங்கும் செய்யாள்;தூர் இடை உறங்கும் ஆமை;துறை இடை உறங்கும் இப்பி;போர் இடை உறங்கும் அன்னம்;பொழில் இடை உறங்கும் தோகை
தண்ணீரில் சங்குகள் உறங்கிக்கொண்டிருக்கும், மர நிழலில் எருமைகள் (மேதி)
உறங்கும், தாரிடை வண்டுகள் உறங்குமாம். தார் என்றால் பூ மாலை. மாலை
இருபக்கத்திலும் முடிச்சுப்போடப்பட்டு இருப்பது. தார் என்பது இக்கால மகளிர்
தோளில் சார்த்திக்கொள்ளும் துப்பட்டா அணிவது போன்ற மாலை. ஒரு புறம்
முடிச்சுறாத மாலை. அம்மாலையிலிருக்கும் பூக்களில் வண்டு உறங்குகிறது என்று
சொல்வதன் மூலம் கோசல நாட்டுப் பூக்களில் தேன் மிகுதியாக இருக்கிறது
என்கிறான் கம்பன். அடுத்த வரி மிகவும் அற்புதமான வரி. தாமரை உறங்கும்
செய்யாள்(திருமகள்). விழித்துக்கொண்டு மக்களுக்குச் செல்வத்தை அருள்புரிய
வேண்டிய திருமகள் தாமரை மலரில் உறங்குகிறாளாம். ஏன் தெரியுமா? வேண்டும் என
வேண்டும் வறியவரே இல்லையாம் கோசலத்தில். சேற்றில் ஆமை உறங்குவதும்,
நீர்த்துறைகளில் சிப்பி உறங்குவதையும் சொல்லிவிட்டு போர் இடை உறங்கும்
அன்னம் என்று வரி எழுதி நெற்போர்களில் அன்னம் உறங்குவதாகவும் நெல் மணிகளை
உணவாகக் கொள்ளும் தோகையுடைய மயில்கள் வயிறு முட்டமுட்டச் சோலைகளில்
உறங்குவதாக வர்ணிக்கிறான்.
இப்பேர்ப்பட்ட நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக ஒரு பாடல்.
கரும்பாலைகளிலிருந்து தேனாக ஓடும் கருப்பஞ்சாறும், பாளையை அரிந்து விட்டுப்
போன இடத்திலிருந்து ஒழுகும் தேன் போன்ற கள்ளும், சோலைகளில் பழுத்த
கனிகளின் தேனொத்த சாரும், மாலைகளிலிருந்து வழியும் தேனும் அபரிமிதமாக
பெருகி ஓடி கப்பல்கள் நிற்கும் கடலிலே கலக்கிறதாம். அன்றைய கோசலம் இதுதான்
என்று சொல்லப்படும் வட இந்தியாவில் கடற்கரையே கிடையாது. கோசலமாக
தமிழ்நாட்டைத்தான் கம்பன் வர்ணித்துப்பாடுகிறான் என்பதற்கு இந்தப் பாடலும்
ஒரு சாட்சி. அக்கடலில் வாழும் மீன்கள் அத்தேனைப் பருகி களிக்கிறது என்று
”ஆலை வாய்க் கரும்பின் தேனும்;” என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல்.
இளைஞர்களுக்கான சங்கதி ஒன்றை இப்போது சொல்லப்போகிறான். ஒரு நாட்டில்
பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால் மக்கள் தொகைக் கணக்கெடுத்து
வரும் நம்பர்களைச் சொல்லலாம். ரொம்பவும் சுருக்கமாக கோசலத்துப் பெண்டிரின்
சென்சஸ் கணக்கு ஒன்றைக் கம்பன் சொன்னான். ஆற்றின் புதுப்புனலில் பெண்கள்
குளித்தபிறகு அவர்களது கூந்தலிலிருந்த மலர்களாலும் கஸ்தூரிக் கலவையினாலும்
கமழ்கின்ற நறுமணமான ஓடிச் சென்றுக் கலக்கும் கடலின் அலைகளும் அவ்வாசனையைப்
பெற்றது என்று சொல்வதன் மூலம் பெண்ணினத்தின் பெருக்கத்தை வர்ணித்தான்.
கடலுக்கே அந்த நறுமணம் அளித்த அவ்வாற்று நீராடும் பெண்களின் கடைக் கண்கள்
வாள் போன்றும், இக்கால தொகுப்பாளினிகள் போலல்லாத கொஞ்சும் மழலை
மொழியாகவும், லிப்ஸ்டிக் போடாமலேயே செவ்வரி ஓடிய அதரங்களையும் கொண்ட மகளிர்
என்று கூடுதலாக அவர்களது அழகையினையும் சேர்த்துச் செய்தி சொல்கிறான். அந்த
அழகிய பாடல் கீழே
புதுப் புனல் குடையும் மாதர்பூவொடு நாவி பூத்தகதுப்பு உறு வெறியே நாறும்கருங்கடல் தரங்கம் என்றால்,மதுப் பொதி மழலைச் செவ்வாய்வாள் கடைக் கண்ணின் மைந்தர்விதுப்பு உற நோக்கும் அன்னார்மிகுதியை விளம்பல் ஆமே!
ஒரு எபிஸோட்டிற்குள் இந்த நாட்டுப் படலத்தை அடக்க முடியவில்லை. கடைசியாக
இன்னொரு அற்புதமான பாடலைப் பார்த்துவிட்டு நாட்டுப்படலத்துக்கு தொடரும்
கார்டு போட்டுடலாம்.
சேல் உண்ட ஒண் கணாரில் திரிகின்றசெங்கால் அன்னம்மால் உண்ட நளினப் பள்ளி வளர்த்தியமழலைப் பிள்ளைகால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக்,கனைப்பச் சோர்ந்தபால் உண்டு துயிலப் பச்சைத் தேரைதாலாட்டும் பண்ணை.
வயற்பரப்புகளில்(பண்ணை) மீன் போன்ற கண்களையுடைய பெண்களைப் போன்று
திரிகின்ற சிவந்த கால்களையுடைய அன்னப்பறவைகளின் குஞ்சுகள் தாமரை மலரில்
படுத்திருக்கின்றனவாம். அப்பறவைகளின் பசிக்குக் கன்றுகளை நினைத்துக்
கனைக்கும், கால்களில் சேறு படிந்துள்ள, எருமைகள் மடியிலிருந்து தானாகச்
சுரக்கும் பாலைக் குடித்துத் தூங்குவதற்கு ஏதுவாகப் பச்சைத் தேரைகள்
தாலாட்டுப் பாடுகின்றன என்று முடிக்கிறான்.
எ.பி.சொ: தேம்பிழி மகரயாழ், புதுப்புனல் குடையும் மாதர், குண்டலக் கோல
மைந்தர், அன்பு எனும் நறவம் மாந்தி, களி வண்டு ஈட்டம், கண்களும் காமன்
அம்பும்.
இனிமேல் வாரம் ஒரு பாகமாக இத்தொடர் வெளிவரும்.
10 comments:
nalla irukku... en vaaram irandu kudaathu...?
வாரம் ஒன்றாக ரசிக்கலாம் நாங்களும்
அருமையான பகிர்வு.
அசத்தறீங்க மைனரே....
@மதுரை சரவணன்
நன்றி.வாரத்திற்கு இரண்டு எழுத நேரமில்லைங்க. :-)
@அப்பாதுரை
நன்றி சார்! தங்களது மேலான கருத்துக்களையும் எழுதுங்களேன். :-)
@கோவை2தில்லி
நன்றி சகோ! :-)
@வெங்கட் நாகராஜ்
நன்றி தல! :-)
அற்புதமான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்.
Post a Comment