Sunday, December 30, 2012

2012:ஒரு பார்வை

இந்த வருஷம் எப்படி ஓடியது என்று தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் பட்டினத்தாரின் ஸ்டைலில் சொல்கிறேன்
”உண்டதே உண்டு உடுத்ததே உடுத்தும் அடுத்தடுத்து உரைத்த யுரைத்தும்,கண்டதே கண்டுங் கேட்டதே கேட்டுங் கழிந்தனக நாளெல்லாம்”. 

ஒன்றே ஒன்று புதிதுபுதிதாகப் புத்தகங்கள் தேடித் தேடி படித்தேன். படிக்கிறேன். கம்பராமாயணத்தில் விசேஷ ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கொஞ்சமாக நினைவுக் குதிரையை ஃப்ளாஷ் பேக் மோடில் ரிவர்ஸில் ஓட விட்டுப் பார்த்தும் இணையத்தைக் கொஞ்சம் துழாவியும் பத்திரிகைத் துறை நண்பரொருவர் கொடுத்த நிகழ்வுப்பட்டியலையும் தோராயமாக பார்த்துத் தயாரித்த வேர்ல்ட் திஸ் இயர்-2012.

இந்தப் பட்டியலுக்குள் நுழைவதற்கு முன்னர் அதிமுக்கியமாகக் கவனிக்க வேண்டிய மூன்று புல்லட் பாயிண்ட்ஸ்.

அ)இது அதிகாரப்பூர்வ கெஸட் பட்டியல் அல்ல.
ஆ)காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலும் அல்ல.
இ)பூதக்கண்ணாடி கொண்டு பார்க்குமளவிற்கு அதிவிசேஷமான பட்டியலும் அல்ல.

1. என் வயதையொத்த அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் முதல்வராயிருக்கிறார்.

2. மட்டையினால் நாட்டுக்கு விளையாட்டுத் தொண்டாற்றிய சச்சின் டெண்டுல்கர் தேசத்துக்குச் சேவைபுரிய ராஜ்ஜிய சபா எம்பியாக்கப்பட்டார்.

3. நிதித்துறை மந்திரி பதவியிலிருந்து தப்பித்து பிரனாப் முகர்ஜி இந்தியாவின் பதினான்காவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆபத்தில்லாத ஃபாரின் டூர் பதவி என்று ப்ரதீபா ’பாட்டி’லால் அடையாளம் கொடுக்கப்பட்ட பொறுப்பான பதவி.

4. என் போன்ற மீடியம் பட்ஜெட் சிறு கார் ஓட்டும் முதலாளிகளையும் நசுக்கும் முயற்சியாக டீசலை ஐந்து ரூபாய் வரை ஏற்றினார்கள். ஆறு சிலிண்டர்கள்தான் வருடத்திற்கு என்று கட்டை போட்டார்கள். ஒருவாரத்திற்கு டீசல் கிடைக்காமல் அனைவரையும் வீதிகளில் பேயாய் அலையவிட்டார்கள்.

5. தீபா கங்குலி சீதா பிராட்டியாராக நடித்த ராமாயணத்தில் சிரஞ்சீவி ஹனுமானாக நடித்த தாரா சிங் தனது 83 வயதில் உயிர் நீத்தார். அறுபது எழுபதுகளில் கன்னியரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ராஜேஷ் கன்னாவும் இறந்தார்.

6. மனித இனத்தின் ஜெயண்ட் லீப்பாக சந்திரனில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பை பாஸ் சர்ஜரியில் ஏற்பட்ட குளறுபடிகளால் இறந்தார்.

7. சிதாரினால் பல உள்ளங்களில் ஜிப்ஸி கிதார் மீட்டிய பண்டிட் ரவி ஷங்கர் 92வது வயதில் மேலுலகம் சென்றார்.

8.ரொம்பவும் அபர செய்திகளாகப் பார்த்தாயிற்று, சுப செய்தியென்றால் நமக்கெல்லாம் அரட்டையடிப்பதற்கும் அவ்வப்போது சில சத்விஷயங்கள் தெரிந்துகொள்வதற்கும் உறவுப் பாலம் அமைத்துக் கொடுத்த மார்க் ஸூகெர்பெர்க் தனது நீண்ட நாள் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார்.

9.பிரேஸில் நாட்டு இருபதுவயது பெண்ணொருத்தி $780,000 டாலருக்கு தனது கற்பை விற்று கலிகாலப் புரட்சி செய்தார்.

10. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆஞ்சநேயர் விக்கிரஹம் வைத்துக்கொள்ளாமல் பராக் ஒபாமா இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்க ராஜ்ஜியத்தை ஆளும் வாய்ப்பைப் பெற்றார்.

11.ரிக்கி பாண்டிங்கும் சச்சினும் திராவிடும் ”ஆடியது போதும்” என்று இளைஞர்களுக்கு ஒதுங்கி நின்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்கள்.

12.யுவராஜ் சிங் அரிதினும் அரிதான ஜெர்ம் செல் கேன்சரை ஜெயித்து மீண்டும் விளையாட ஆரம்பித்துவிட்டார்.

13.பெட்டிங் கள்ளப் பணம் என்று ஆயிரமாயிரம் நொட்டைகள் இருந்தாலும் ஐபிஎல் ஜமாய்க்கிறது. ஷாரூக்கானின் கொக்கத்தா நைட் ரைடர்கள் 2012ம் வருடத்திய பட்டத்தைக் கெலித்தது.

14. காவல் கோட்டத்திற்காக சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருதும், ஜெயகாந்தனுக்கு ரஷிய நாட்டின் உயரிய நட்புறவு விருதும், அசோகமித்திரனுக்கு என்.டி.ஆர் விருதும் கிடைத்தது தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட சுப நிகழ்வுகள்.

15. ஒரு பதினைந்து வயது பையனை “ஒழுங்கா படியேம்ப்பா” என்று சொன்ன குற்றத்திற்காக உமா மஹேஸ்வரி என்கிற ஆசிரியை சென்னை பாரீஸில் கல்விக் கூடத்திலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார். வன்முறை வரவேற்பறைக்கு வந்ததன் விளைவு.

16. ஒன்பது வருடங்களுப்பிறகு மின் கட்டணத்தை 37% உயர்த்தி தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களை உயிரோடு கொளுத்தியது. ”கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று வரலாறு காணாத மின்வெட்டையும் அறிமுகப்படுத்தி ஏற்றிய கட்டணத்தை ஓரளவிற்கு சமன் செய்தது. மின்சாரமின்மையால் தனது சொந்த தொழிலையே மூட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான ஒரு அபாக்கியசாலியை பேட்டி எடுத்துப் போட்டிருந்தது தினகரன்.

17.அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாத ஹேமமாலினிக்கு சர்வதேச பெரும்புள்ளி அவார்ட் லண்டனில் வழங்கப்பட்டது. இன்னும் பத்து வருடம் கழித்தும் இது போன்ற அவார்ட் வாங்குமளவிற்கு ஹேமமாலினி திகழ்வார் என்று பரவலாக நம்பப்படுகிறது.

18. மாருதி ஸுஸுகி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கிடையே நடந்த கலவரத்தில் மனித வளத் துறை மேலாளர் ஒருவர் கொல்லப்பட்டார். வேலை வாங்கும் தகுதியில் இருப்பவர்களுக்கும் வேலை செய்வதாக பாவ்லா காட்டுபவர்களுக்குமிடையே நடக்கும் போராட்டத்தின் உச்சகட்டம் கொலை என்பது துர்பாக்கியமே. நியாயமான கோரிக்கையுள்ளவர்கள் தர்மமான முறையில் போராடுவார்கள்.

19.ஹிக்ஸ் போஸன் என்கிற கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது. கடவுளையே கண்ட மாதிரி அறிவியல் உலகம் கொண்டாடியது.

20. ஆகாஷ் எனும் டேப்லெட்டின் அட்வான்ஸ்டு வெர்ஷனை இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி நாட்டுக்கு அர்பணித்து புண்ணியம் கட்டிக்கொண்டார். முதல் லட்சம் டேப்கள் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் பல்கலைக்கழங்களில் படிப்பவர்களுக்கு மட்டும் என்று அறிவித்திருக்கிறார்கள். பார்ப்போம் உரியவர்களை சென்றடைகிறதா என்று.

21.திடீரென்று ஒருநாள் நித்யானந்தா மதுரை ஆதினமாக அதிரடியாகப் பதவியேற்றுக்கொண்டார். இருவரும் சிரித்துக்கொண்டே பேட்டியளித்தார்கள். பலர் செல்லாது என்று போராடினார்கள். முடிவில் மதுரை ஆதினமே நித்தியை ஆதினப் பொறுப்பிலிருந்து நீக்கினார்.

22. இரண்டாம் வகுப்புப் படித்துவந்த ஸ்ருதி என்கிற பள்ளி மாணவி பஸ்ஸிற்குள் இருந்த ஓட்டையில் விழுந்து நசுங்கிச் செத்ததும், மாணவனொருவன் நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது விழுந்து உயிரிழந்ததும் நிர்வாகத்தினரின் அலட்சிய மனோபாவத்தினை வெளிப்படுத்தியது.

23. கூடங்குளம் அணு மின்சாரத்தை எதிர்த்து இடிந்தகரையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அணு உலை ஆபத்தானதல்ல என்று கூறி போராடியவர்களிடம் அவப்பெயர் சம்பாதித்துக்கொண்டார் அப்துல்கலாம்.

24.ஆங்காங்கே இயற்கைச் சீற்றங்கள் பெருமளவில் இருந்தது. சுமத்ராவில் பூமித்தகடுகள் இன்னமும் சீட் ஆகாமல் நடனமாடிக்கொண்டிருக்கிறது.

25. மாயன் இனத்தவர்கள் காலண்டர் வரைய கல்லில் இடமில்லாமல் போனதால் நிறைய பேர் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்று ஜல்லியடித்தார்கள். தன்னிடமிருந்த ஒரு லட்ச ரூபாயை ரோடில் சென்றவருக்குக் கொடுத்த ஒரு அநாமதேய அப்பாவியைப் பற்றிய செய்தி வந்தது. வாங்கியவர் திரும்பக் கொடுப்பாரா?

26.ஊழலுக்கெதிராக என்று சொல்லிக்கொண்டு ஆம் ஆத்மி என்கிற அகில இந்திய கட்சியை அண்ணா ஹசாரேவின் டீம் ஆளாக அறியப்பட்ட அர்விந்த கெஜ்ரிவால் தொடங்கினார். ஆம்! கட்சிப் பெயரிலேயே சர்ச்சை ஏற்பட்டது.

27.தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் கொல்வதும் மத்திய மாநில அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதும் தொடர்கிறது.

28. வழக்கம் போல இந்த வருடமும் தமிழில் நிறைய யதார்த்த திரைப்படங்களை எடுத்தார்கள். சாட்டை, வழக்கு எண் போன்ற படங்கள் வெற்றியடைந்தன.

29.தில்லியில் ஒரு மாணவியை பாலியல் வன்கலவியினால் சிதைத்தார்கள். உடனே பூதாகாரமாக நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் ரேப்புகள் ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன. நடைபெற்ற இதுபோன்ற துக்கச்சம்பத்தினால் கொதித்தெழுந்த பொதுமக்கள் கருட புராணத்தை திருத்தியமைக்குமளவிற்கு அக்குற்றத்திற்கான தண்டனைகளை தங்களது கணினியின் கீபோர்ட் மூலமாக வழங்கினார்கள்.

30. தூக்கு போடும் வரை வெளியே மூச்சுக் காட்டாமல் கப்சிப்பென கஸாப் தூக்கிலடப்பட்டார். அவரது மரணதண்டனையைவிட அரசாங்கத்திற்கு அவரால் ஏற்பட்ட செலவினங்கள் அதிகமாகப் பேசப்பட்டது.

31. விலாடிமிர் புடின் மூன்றாவது முறையாக ரஷிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

32.  இளையராஜா இன்னமும் ஜோராக இசையமைக்கிறார்.

33.மற்றபடி எல்லாவருடமும் நடக்கும் அநியாயங்கள் அவலங்கள் அலட்சியங்கள் அவமானங்கள் அதிகார அடக்குமுறைகள் தாராளமாகவும் லோக க்ஷேமத்திற்கான காரியங்கள் விரல் விட்டு எண்ணும்படியாகவும் இந்த 2012லும் நடந்தது.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  இந்த 2013ல் பரவலாக நல்ல காரியங்கள் உலகெங்கும் நடந்து எங்கும் சுபச்செய்திகள் பரவ வாழ்த்துகள்.

 படம் cc-chapman.com என்ற இணையத்திலிருந்து எடுத்தது.

19 comments:

Madhavan Srinivasagopalan said...

good composition.

RVS said...

@Madhavan Srinivasagopalan

Thanks.

ஸ்ரீராம். said...

பதிவுலகில் இருந்துகொண்டு பதிவுலக சந்திப்பை விட்டு விட்டீர்களே...! (இப்படியல்லாம் நல்லா எழுதினா எதாவது குறை கண்டு பிடிக்கணும்னு தோன்றுவது இயற்கைதானே...)

:)))

இராஜராஜேஸ்வரி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

James said...

பயனுள்ள தகவல்கள். நன்றி.

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

RVS said...

@ஸ்ரீராம்.
எழுதியிருக்கலாம். விட்டுட்டேன். நான் அதில் கலந்துகொள்ளாததால் ஞாபகமில்லை. :-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம். தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். :-)

RVS said...

@James
நன்றி. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். :-)

சாந்தி மாரியப்பன் said...

//மற்றபடி எல்லாவருடமும் நடக்கும் அநியாயங்கள் அவலங்கள் அலட்சியங்கள் அவமானங்கள் அதிகார அடக்குமுறைகள் தாராளமாகவும் லோக க்ஷேமத்திற்கான காரியங்கள் விரல் விட்டு எண்ணும்படியாகவும் இந்த 2012லும் நடந்தது.//

2013-லாவது எண்ணுவதற்கு விரல்கள் பத்தாத அளவுக்கு நல்ல காரியங்கள் நடக்கட்டும்.

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

sreekrishnan said...

அட ...இவ்வளவு நாள் உங்களை நான் கவினிக்க வில்லையே... ஓகே பாராட்டுக்கள். தொடரட்டும். http://jothidasudaroli.blogspot.com/ ஸ்ரீகிருஷ்ணன்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Superrrr recap of 2012. Why dont u do a monthly highlights post like this for 'paper padikka somberigal' like me...:) Honestly, a good one. Thank u

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Super recap of 2012. We request u to do a monthly update like this for ' paper padikka somberigal' like me. Good one. Thank u

RAMA RAVI (RAMVI) said...

நல்ல தொகுப்பு.

//மற்றபடி எல்லாவருடமும் நடக்கும் அநியாயங்கள் அவலங்கள் அலட்சியங்கள் அவமானங்கள் அதிகார அடக்குமுறைகள் தாராளமாகவும் லோக க்ஷேமத்திற்கான காரியங்கள் விரல் விட்டு எண்ணும்படியாகவும் இந்த 2012லும் நடந்தது.//

இனி வரும் வருடங்களில் இது தலைகீழாக மாற வேண்டும் என பிரார்த்தனை செய்யலாம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

RVS said...

@அமைதிச்சாரல்
அருமையான வாழ்த்து. நன்றி. :-)

RVS said...

@ Avargal Unmaigal

மிக்க நன்றி. தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். :-)

RVS said...

@sree krishnan
நன்றி. :-)

RVS said...

@அப்பாவி தங்கமணி
முடிந்தால் செய்கிறேன். பாராட்டுக்கு நன்றிங்க. :-)

RVS said...

@RAMVI
நன்றி. அவ்வாறே எல்லோரும் பிரார்த்தனை செய்வோம். புத்தாண்டு வாழ்த்துகள். :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails