கைவசம் ஒரு ராஜா கதை இருக்கு. அதை இப்படிதான்
சம்பிரதாயமா ஆரம்பிக்கணும். ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம். அவன் ஒரு
முட்டாள் ராஜா. அவன் தான் அப்படின்னா அவனுக்கு வாய்ச்ச மந்திரியும் அவனை
விட கடைந்தெடுத்த முட்டாள். இரண்டுபேரும் சேர்ந்து கிரீடத்துக்குள்ள
பொரிகடலை போட்டு பொழுதன்னிக்கும் தின்னுகிட்டிருப்பாங்களாம்.
முட்டாள்தனமான தர்பாரால் நாட்டையே குட்டிச்சுவராக்கிட்டாங்களாம்.
மக்களுக்கும் வேற வழி தெரியாம இந்த முட்டாள் ராஜாவையும் மந்திரியையும்
சகிச்சுக்கிட்டு காலத்தை தள்ளிக்கிட்டிருந்தாங்களாம்.
ஒரு நாள் ஒரு பொம்பளை கண்ணீரும் கம்பலையுமா “ராஜா! நீங்கதான் இதுக்கு ஒரு நியாயம் சொல்லணும்”னு வந்து தர்பார்ல கையைப் பிசிஞ்சிகிட்டு நின்னாளாம்.
சுத்திலும் திருதிருன்னு முழிச்சுப் பார்த்துட்டு “என்ன வேணும்?”ன்னு கேட்டான்.
“எங்க வீட்ல ஒரு திருடன் கன்னக்கோல் போட்டான். அப்படி போடும்போது மொத்த சுவரும் இடிஞ்சு விழுந்திடுச்சு. வீட்ல இருந்த கொஞ்ச நஞ்ச பொருளையும் அவன் கொள்ளையடிச்சுக்கிட்டு ஓடிப்போயிட்டான். நீங்கதான் என்னை காப்பாத்தணும். இதுக்கு ஒரு வழி சொல்லணும்”ன்னு அழுதுகிட்டே கேட்டாள்.
இதுவரைக்கும் யாருமே இப்படி திடுதிப்புன்னு அவன் கிட்ட நீதி நியாயம்னு கேட்டு ஒருநாளும் வந்ததில்லை. என்ன சொல்றதுன்னு புரியாம
“சுவர் இடிஞ்சு விழுந்திடுச்சுல்ல. உன் வீட்டைக் கட்டின கொத்தனாரை அழைச்சுக்கிட்டு வரச்சொல்றேன். அவனுக்கு தண்டனை கொடுத்தா எல்லாம் சரியாப்போய்டும்”ன்னு சொல்லிட்டு “யாரங்கே!”ன்னு வாயிற்காப்போனை கூப்பிட்டு “இந்தம்மாவின் வீட்டைக் கட்டின கொத்தனாரை கொத்தாகப் பிடித்து இழுத்துவாருங்கள்”ன்னு சொல்லி கட்டளை போட்டான்.
ஒரு பத்து நிமிஷத்தில அரையில வேஷ்டியோட தலைக்கு இருந்த முண்டாசை எடுத்து கக்கத்தில் சொருகிக்கொண்டு “கும்பிடறேன் ராஜா”ன்னு வந்து நின்றான் அந்தக் கொத்தனார்.
“இந்தம்மாவோட வீட்டை நீ சரியாக் கட்டலை. வீடு இடிஞ்சு விழுந்துடுச்சு. வீட்ல கொள்ளை போயிடுச்சு. எல்லாத்துக்கும் நீதான் காரணம். நாளைக்கு காலையில உனக்கு தூக்குத் தண்டனை”அப்படின்னு சொல்லி தீர்ப்பு வழங்கிட்டான்.
பிராந்து கொடுத்த பொம்பளைக்கே என்னவோ போல ஆயிடுச்சு. திருட்டுப் போனப் பொருளை கண்டு பிடிச்சுக் கொடுக்காம எப்பவோ வீடு கட்டின ஆளை தூக்குல போடறானே இந்த கேன ராஜா அப்படின்னு அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.
கொத்தனார் இதிலேர்ந்து தப்பிக்க ஒரு யோசனை பண்ணினான்.
“ராஜா! இந்த தப்பு நான் பண்ணியிருந்தாலும். நான் மட்டுமே காரணமில்லை. நான் கலவையைப் பூசும் போது களிமண் பிசைஞ்சு கொடுத்தான் பாருங்க. அவன் மேலையும் தப்பு இருக்கு. அவன் தான் தண்ணிய கூட ஊத்திட்டான். அதனாலதான் சுவரு ஸ்ட்ராங்கா இல்லை”ன்னு நைசாக நழுவினான்.
“அந்த சித்தாளைக் கூப்பிடுங்க. நாளைக்கு அவனுக்கு தூக்கு தண்டனை ”ன்னு உத்தரவு போட்டான்.
சித்தாள் தர்பார் வரத்துக்கு முன்னாலையே ஊர்பூராவும் இந்த விநோத வழக்கைப் பற்றி பேசிக்கிட்டிருந்தாங்க. வந்தவன் தயாராய் ஒரு பதிலோட வந்தான்.
“ராஜா! இது என் தப்பில்லை. நாலு குடம் தண்ணி ஊத்துன்னு சொன்னாரு. நான் ஊத்தினேன். மத்தபடி பானையை பெருசா செஞ்சாம் பாருங்க அந்தக் குயவன். அவன் தப்புதான் இது. அவனைக் கேளுங்க”ன்னு கையைக் காட்டி விட்டுட்டான்.
“அந்த குயவனைக் கொண்டு வாங்க. நாளைக்கு அவனுக்கு தூக்கு”ன்னு பிரகடனம் பண்ணினான்.
ஊருக்கே தெரிஞ்ச விஷயம், அந்தக் குயவனுக்கும் தெரிஞ்சிருந்தது. அவன் உள்ள வரும் போதே சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணிக்கிட்டே வந்தான்.
“ராஜா! நீங்க நல்லா இருப்பீங்க. பானையை பெருசாப் பண்ணினது என் தப்பில்லை ராஜா. நான் இந்தப் பானையைப் பண்ணிக்கிடிருக்கும்போது குறுக்கும் நெடுக்குமா அந்த தாசிப்பெண் போய்ட்டு வந்துகிட்டிருந்தா. அதுல கண்ணை மேய விட்டுட்டு பானையை பெருசாக்கிட்டேன். அவ தான் இதுக்கெல்லாம் காரணம். என்னை விட்டுடுங்க.”ன்னு கெஞ்சினான்.
”அந்த தாசியை அழைச்சுக்கிட்டு வாங்க. நாளைக்கு அவளுக்கு தூக்கு”ன்னு உத்தரவிட்டான் அந்த முட்டாள் ராஜா.
நிறைய கஸ்டமர்களை கொண்ட அவளுக்கு உடனே விஷயம் தெரிஞ்சுபோச்சு. தர்பாருக்குள்ள நுழைஞ்சவுடனேயே நளினமா அபிநயம் பிடித்து வணக்கம் சொன்னாள். எப்படி இப்படி ஒரு ஃபிகரை நாம பார்க்காம விட்டோம்னு ராஜாவுக்கு வாய் திறந்து ஜொள்ளு ஊத்த ஆரம்பிச்சுது.
“ராஜா! நான் குறுக்கும்நெடுக்குமா போய்கிட்டிருந்தது உண்மைதான். ஆனா அதுக்காக் நீங்க என்னை தூக்கில போடக்கூடாது. அந்த துணி தோய்க்கும் சலவைக்காரனைதான் தூக்கில போடணும்.”னா.
முட்டாள் ராஜா “ஏன்?”னு கேட்டான்.
“அவன்கிட்ட நல்லதா துணி ரெண்டு துவைக்க போட்டிருந்தேன். எனக்கு அன்னிக்கு நாட்டியக் கச்சேரி இருந்தது. அவன் இன்னிக்கி தரேன். நாளைக்கு தரேன்னு என்னை அலைக்கழிச்சான். அதுக்காத்தான் நான் குறுக்கும் நெடுக்குமா போயிக்கிட்டிருந்தேன். அதனால நீங்க அவனைதான் தூக்கில போடணும்”ன்னு விண்ணப்பிச்சுக் கேட்டுக்கிட்டா.
“அந்த சலவைக்காரனை அழைச்சுக்கிட்டு வாங்கப்பா. நாளைக்கு அவனுக்கு தூக்கு”ன்னு ரொம்ப நொந்து போய் டயர்டாகிச் சொன்னான் ராஜா.
சலவைக்காரனுக்கு ந்யூஸ் போய் ஒரு மணி நேரமாச்சு. அவன் தயாரா ஒரு பதிலோட உள்ள வந்தான்.
“ராஜா! அந்தம்மா சொல்றது சரிதான். ஆனா என் மேல ஒண்ணும் தப்பில்ல. நான் துணி துவைக்கிற கல்லுல ஒரு சாமியார் தியானம் பண்ணிக்கிட்டு உட்கார்ந்திருந்தாரு. அவரை எப்படி எழுப்பறதுன்னு தெரியலை. அதனால அந்த சாமியாரைத்தான் நீங்க விசாரிக்கணும்”ன்னு சொல்லிவிட்டு கழண்டுகிட்டான்.
“இந்த தடவை எவனாயிருந்தாலும் எங்கிட்டேயிருந்து தப்பமாட்டான். அந்த சாமியாருக்கு நாளைக்கு தூக்கு.”ன்னு சொல்லிட்டு “அந்த சாமியார் வர்றவரைக்கும் எல்லோரும் போய் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வாங்க”ன்னு டீ ப்ரேக் விட்டுட்டு அரியாசனத்துலேர்ந்து எழுந்து போய்ட்டான்.
ஒரு பத்து நிமிஷம் கழிச்சு சாமியார் உள்ள வந்தார். அவர் அன்னிக்கு மௌன விரதம்.
“நாளைக்கு காலையில சரியா பத்து பத்துக்கு உங்களுக்கு தூக்கு”ன்னு சொல்லிட்டு “சபை கலையலாம்”ன்னு கிளம்பினபோது அவையோர்கள் பகுதியின் கடைசியிலேர்ந்து “ஒரு நிமிஷம்”ன்னு ஒரு குரல் வந்தது.
ராஜாவும் மந்திரியும் குரல் வந்த திக்கில ஆச்சரியமாப் பார்த்தாங்க. நம்ம தீர்ப்புக்கு மறுத்து இந்த நாட்ல எவன் சொல்லுவான்னு “யாரது?”ன்னு ராஜாவும் பதிலுக்கு குரல் விட்டான்.
ஒரு மத்திம வயசு இளைஞன். நேரா எழுந்து சபையோட மத்திக்கு வந்தான். ராஜாவுக்கு வணக்கம் சொன்னான்.
“அரசே! சாமியாருக்கு நாளைக்கு எத்தனை மணிக்கு தூக்கு?”ன்னு கேட்டான்.
“பத்து பத்துக்கு”
“அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி. அந்த நேரத்தில என்னை தூக்கில போடுங்க”ன்னு கேட்டான். சபையே அதிர்ந்தது. அப்படியே நிசப்தமா ராஜாவையும் அந்த வாலிபனையும் மாறி மாறி பார்த்தாங்க.
ராஜா “ஏன்?”னு கேட்டான்.
”இல்ல. நாளைக்கு பத்து பத்துக்கு யார் தூக்கிலடப்பட்டு செத்துப்போறாங்களோ அவங்க தேவலோகத்துக்கே ராஜாவாகலாமாம். ஜோசியக்காரன் சொன்னான்.”அப்படீன்னான்.
உடனே ராஜா, “யாரையும் தூக்கில போடவேண்டாம். என்னை போடுங்க”ன்னு சொல்லிட்டு தேவலோகத்துக்கே ராஜாவாகும் கனவுக்கு இன்ஸ்டெண்டா போய்ட்டான்.
அந்த இளைஞன் “ம்க்கும்.. மன்னா!”ன்னு கொஞ்சம் கனைத்துக் கூப்பிட்டு அந்த ராஜாவின் கனவைக் கலைத்து இன்னொரு விண்ணபமிட்டான்.
“என்னா?”ன்னு கேட்டான்.
“அரசே! அட்லீஸ்ட் நாளைக்கு பத்து பதினஞ்சுக்கு என்னை தூக்கில போடுங்க”ன்னான்.
ராஜாவுக்கு ஒரே வியப்பு. என்னடா எப்படியும் நாளைக்கு தூக்கில தொங்கணும்னு ஒருத்தன் நிக்கறானேன்னு “ஏன்?”ன்னு திரும்பவும் கேட்டான்.
“இல்ல! பத்து பதினைஞ்சுக்கு தூக்கில தொங்கி உசிரை விட்டா தேவலோகத்துக்கே மந்திரியாகலாம்னு இன்னொரு ஜோசியான் சொன்னான். ராஜாவாகத்தான் ஆகமுடியாது, மந்திரியாகவாவது ஆகலாமேன்னு ஒரு ஆசை”என்று தலையைச் சொரிந்தான்.
”நாளைக்கு பத்து பதினைஞ்சுக்கு இந்த மந்திரியை தூக்கில போடுங்க. நானும் அவரும் சேர்த்து தேவலோகத்தை ஆளப்போறோம். இதுதான் இறுதி தீர்ப்பு”ன்னு சொல்லிட்டு சபையைக் கலைச்சிட்டு உள்ள போயிட்டான்.
மறுநாள் தலைநகரமே சேர்ந்து அந்த ராஜாவையும் மந்திரியையும் அடுத்தடுத்து தூக்கில போட்டுட்டு அந்த இளைஞனைப் பாராட்டி அரியாசனத்துல அமர வைச்சாங்களாம்.
24 comments:
R eally
V ery
S uperb
Hi !
I am really excited that we are able to recall what happened in our previous birth.
subbu thatha.
நல்ல கருத்துள்ள கதை..
சின்ன வயசில கேட்ட கதை..
மறுபடியும் ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
nice story... but at last you have to put the moral of the story. i thing u have done a well job
Its a good story. But at last you have to put the moral of the story always good for you. At last you have done a good job....ablash....
அட... எனக்கு இந்தக் கதை புதுசு தான். நல்லா இருக்கு.
யார் தருவார் இந்த அரியாசனம்? :-)
வட்டக்கதை நல்லாயிருக்கு. இதுவரை அறியாத கதை.
கேள்விப்படாத கதை... நல்லா இருக்கு...
நன்றி...
அட.... சூப்பர் ராஜாவா இருக்காரே! :)
எனக்கு(ம்) புதிய கதை. ரசித்தேன்.
நல்ல கதை.
தேவலோக ராஜா வாழ்க! :))
ஆஹா.......அருமையான கதை....எதை எதையோ சிந்திக்க வைக்குது. பகிர்வுக்கு நன்றி
@sury Siva
Thank you Sir! இந்தப் பதிவின் மூலமாக எவ்ளோ பேருக்கு பூர்வ ஜென்மம் தெரியறதுன்னு பார்ப்போம். :-)
@Madhavan Srinivasagopalan said...
நானும் ரொம்ப நாளுக்கு முன்னாடி கேட்டது. ஆனா இந்த சீக்குவன்ஸ்ல இருக்காது. இப்படி எழுதினது என்னோட முயற்சி. நன்றி
@Abdul aziz Abdul sathar
புத்திமான் பலவான் என்று நீதி எழுதலாமென்று நினைத்தேன். நீதி சொல்ற அளவுக்கு இன்னும் வளரலைன்னு விட்டுட்டேன். கருத்துக்கும் முதல் வரவுக்கும் நன்றி. :-)
@பால கணேஷ்
நன்றிங்க..
@raji said...
அதான் அப்படி இருந்துட்டாரு அந்த ராசா... :-)
@அப்பாதுரை
நன்றி சார்! :-)
@திண்டுக்கல் தனபாலன்
தொடர் வாசிப்பிற்கு நன்றிங்க தனபாலன்.
@வெங்கட் நாகராஜ்
நம்ம டில்லிக்குக்கூட ராஜாவாகும் யோக்கியதை இருக்குங்கிறீங்களா தலைநகரமே! :-)
@kg gouthaman
நன்றி சார்.
@மாதேவி
நன்றிங்க...
@முத்தரசு
நிறைய மேனேஜ்மெண்ட் கதைகளை உள்ளடக்கியது இது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. :-)
அருமை! நன்றி
Post a Comment