நம்பிஆரூரான் என்கிற சுந்தரரும் கழறிற்றறிவார் என்கிற சேரமான் பெருமாள்
நாயனாரும் அணுக்கமானத் தோழர்கள். சேரமான் பெருமாள் தினமும்
திருவஞ்சைக்களத்தில் சிவ பூஜை செய்து முடித்தபின் தில்லை நடராஜப்
பெருமானின் காலில் இருக்கும் சதங்கை கிணிங் கிணிங்கென்று ஒலிப்பது அவரது
காதுக்கு கேட்குமாம். அப்படி சப்தமெழுந்தால்
அன்றைய பூஜையில் எதுவும் குறையில்லை என்று சந்தோஷப்பட்டு கோவிலிலிருந்து
விடைபெறுவாராம் சேரமான் பெருமாள்.
ஒரு நாள் நெடுநேரமாகியும் சலங்கைச்
சத்தம் கேட்கவில்லை. மிகவும் கவலையுடன் இன்று நமது பூஜையில் ஏதோ
குறையிருக்கிறது என்றெண்ணி தன்னுடைய உடைவாளை உருவி தன் உயிரை
மாய்த்துக்கொள்ளும் வேளையில் “சேரமானே பொறு. சுந்தரனின் தமிழ்ப்பாடலில்
என்னை சற்றுநேரம் மறந்திருந்தேன்.” என்று அசசீரியாய் ஒலித்து காலிலிருந்த
சதங்கைகளை ஒலிக்கச் செய்தாராம் சிவனார். தான் செய்யும் பூஜையை விட அடியார்
ஒருவரின் தமிழ்ப்பாடலில் இறைவன் தன்னை மறந்தான் என்ற செய்திகேட்டதும்
அந்தச் சுந்தரரைப் பார்க்க விழைந்து அவருடன் நட்பு பூண்டு இறுதியில்
இருவரும் கைலாயம் சேர்ந்தார்கள் என்பது பெரியபுராணக் கதை.
அந்தச்
சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்தந்தாதி என்ற ஒன்றை சைவத்திற்கு
அருளிச்செய்திருக்கிறார். அதன் முதலில் வரும் அந்தப் பாடல் படிக்கப்
படிக்க, படித்துக் கேட்கக் கேட்க தெவிட்டாத தெள்ளமுது.
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.
நடைமுறைத் தமிழில் இருப்பதால் பெரிய விளக்கமேதும் தேவைப்படாவிட்டாலும்
ஒருமுறை இங்கே இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எழுவது என் கைக்குக் கிடைத்த
பேறு.
பொன் எந்த வண்ணமோ அந்த வண்ணம் அவருடைய மேனியாம், கருமேங்களுக்கிடையிலிருந்து
எழும் மின்னல்கள் போன்றது அவருடைய விரித்த சடையாம், வெள்ளிக் குன்றுவின்
வண்ணம் என்னவோ அதுதான் அவரேறும் வாகனமாகிய விடையின் நிறம். மால்விடை என்று
எழுதியதற்கு அர்த்தம், திரிபுரசம்ஹாரத்தின் போது திருமாலே அவருக்கு விடை
வாகனமாக வந்தார் என்பது புராணம். கடைசியில் சேரமான் எழுதிய அந்த வரிதான்
இந்தப் பாட்டின் இனிமைக்கே உச்சம். தான் சிவனைக் கண்டால் எவ்வளவு
இன்பமடைவாரோ அவ்வளவு இன்பம் தன்னைக் கண்ட ஈசனுக்கும் என்றார். இறைவனையும்
தன் நண்பனாக சேரமான் பெருமாள் நாயனார் இழுத்துக்கொண்ட வரலாறு இது.
இக்காலத்தில் கண்ணதாசன் போன்றோர் ”பால்வண்ணம் பருவம் கண்டு” என்றெல்லாம்
மெட்டிற்கு எழுதிய காதல் பாடலும் அக்காலத்தில் “கை வண்ணம் அங்கு கண்டேன்,
கால் வண்ணம் இங்கு கண்டேன்” என்று சக்கரவர்த்தித் திருமகனைக் கம்பன்
போன்றோர் அர்ச்சித்து எழுதியதும் நினைவுக்கு வருகிறது.
#என்வண்ணம் மாறி எவ்வண்ணம் இவ்வண்ணம் எழுதினேன்!!
11 comments:
வண்ணமயமான பதிவு...
நீங்கள் குறிப்பிட்ட பாடலும் நினைவிற்கு வந்தது...
அற்புதமான பதிகத்தை நினைவுறுத்திய மடிப்பாக்கம் நாயனாருக்கு என் நல் வாழ்த்துக்கள்.
மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்
இதுவரை அறியாத பாடலை அருமையான
விளக்கத்துடன் பகிர்வாகத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர்ந்தால் அதிக மகிழ்வும் பயனும் பெறுவோம்
தொடர வாழ்த்துக்கள்
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி தனபாலன். :-)
@மோகன்ஜி
நன்றி சொன்ன மோகனேஸ்வரனுக்கு நன்றி. :-)
@Ramani
ரசித்ததற்கு நன்றி சார்! திடீர்னு இப்படி எதாவது எழுதணும்னு தோணும். நன்றி. :-)
"பொன்வண்ணம்"... கண்டுகொண்டோம்.
பொன் எந்த வண்ணமோ அந்த வண்ணம் அவருடைய மேனியாம்,
எண்ணம் நிறைந்த
வண்ண்மய வாழ்த்துகள்...
படிக்க படிக்க தெவிட்டாமல் இருந்தது. பாடலும், விளக்கமும்.
அழகான பாடலுக்கும் அருமையான விளக்கத்துக்கும் நன்றி! (அடிக்கடி இந்தமாதிரி எழுத தோணட்டும்)
சிறப்பான பாடலும் விளக்கமும்.
அருமை மன்னை மைனரே.... தக்குடு சொன்னா மாதிரி அடிக்கடி எழுதுங்க!
Post a Comment