Saturday, November 10, 2012

லட்டில்லாமல் வாழ்தல் அரிது!

செவ்வாய்க்கிழமை தீபாவளின்னா சனி ஞாயிறு வாக்கிலதான் பட்சணம் செய்ய ஆரம்பிப்பாள் பாட்டி. பரணில் தூசியாய்க் கிடந்த பெரிய ஜாரணி கரண்டியை கீழே இறக்கி கிணற்றடியில் போட்டு அலம்பிக்கொண்டிருந்தால் அன்றைக்கு லட்டு பிடிக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். எந்த தீபாவளிக்கும் லட்டே பிரதான பட்சணம். ஆனால், ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒரு தனி ருஜியாய் இருக்கும்.

பத்து பதினோறு மணிக்கு ரமா பாட்டி “சின்தம்பி....” (சின்னதம்பி
) என்று சிரித்தபடியே நிலைவாசப்படியை சப்போர்ட்டாக பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தால் அன்றைக்கு லட்டு பிடிப்பது சர்வ நிச்சயம் என்பது ஊர்ஜிதமாகிவிடும்.


அடுப்பில் எண்ணை சட்டியை ஏற்றி பூந்தி பொரியும் ஓசை காதுக்கினிமை. ஹாலில் உட்கார்ந்து கேரம்மில் ரெட் அண்ட் ஃபாலோவுக்கு எய்ம் பண்ணிக் கொண்டிருந்தாலும் காதும் மூக்கும் சமையற்கட்டே கதியென்று பழியாய்க் கிடைக்கும்.

பூந்தியை ஒரு சம்படத்தில் எடுத்து கொட்டி வைத்துவிட்டு அடுத்தது சர்க்கரைப் பாகு காய்ச்சும் மணம் வீட்டை நிரப்பும். ஸ்வாசத்தில் நுழைந்த அந்த மணத்தில் மனம் சர்க்கரையாய்க் கரையும். ரெட்டாவது ஃபாலோவவது லட்டை ஃபாலோ செய்வதுதான் மோட்சத்திற்குண்டான வழி என்று பூஜை ரூம் தாண்டி சமையற்கட்டின் நிலைவாசப்படியில் நின்று எட்டிப்பார்த்தால் லட்டுக்கு ஒரு கிராம்பு, ஒரு கிஸ்மிஸ் டைமண்ட் கல்கண்டு என்று விகிதாசார வித்தியாசமில்லாமல் கலந்து ரமாபாட்டி பிடித்துக்கொண்டிருப்பாள். வாயை ”ஆ”+”ஆ” என்று திறந்தால் சரியாய் ஒரு லட்டு உள்ளே போகும். அதான் சைஸ்.

“பாட்டி..............”

“போடா! இப்பெல்லாம் சாப்டப்படாது. போ..போ......” என்று என் பாட்டி விரட்டினாலும்...

“கொழந்தேளுக்குதான் மொதல்ல. இது ஒண்ணும் நேவேத்தியம் கிடையாது. அப்புறம் என்ன? இந்தாடாம்பி... வா..வா..” என்பாள் ரமா பாட்டி.

என் பொருட்டு அன்று என்னுடன் கேரம் விளையாடும் அனைவருக்கும் தீபாவளி லட்டு. கொஞ்சம் கொஞ்சமாக கடித்துச் சாப்பிட்டால் தேவாமிர்தம். உள்நாக்கு வரை தித்திக்கும். லட்டுவின் டேஸ்ட் எதிரே சாப்பிடுபவரின் கண்களில் தெரியும்.

திண்டித் தின்காமல் என் பால்ய பருவம் இருந்ததேயில்லை. நிலக்கடலை சாப்பிட்டால் கூட “பாட்டி! கடைசிக் கடலை சொத்தை.. உன்னுட்ட இருக்கறதுலேர்ந்து ஒண்ணு குடேன்.” என்று திண்டித் தின்பேன்.

“பாட்டீ......... பாட்டீ.............”

“என்னடா?”

”இன்னோன்னு”

”அக்கா! இதுக்குதான் இந்தப் பயலுக்கு குடுக்க வேண்டாம்னேன்” என்று எகிறுவாள் என் பாட்டி. ரமாபாட்டி என் பாட்டிக்கு அக்கா வயசு.

“இதுக்குமேல கெடையாது” என்று இடது கைக்கு ஒன்று கிடைக்கும்.

தீபாவளி முடிந்து பத்து நாட்கள் வரை பல் தேய்த்து முடித்தவுடன் லட்டு, தேன்குழல் மற்றும் காஃபி (LTC) சாப்பிடுவது என்பது என் இளவயது கலாச்சாரமாக இருந்தது. சில நாட்களில் இது ரிப்பீட் போகும்.

அன்பைச் சேர்த்து ஆத்தில் பிடிக்கும் லட்டுவை ஸ்ரீகிருஷ்ணாவோ ஏஏபியோ தி கிராண்ட் ஸ்வீட்ஸோ அடித்துக்கொள்ள முடியாது. ஃப்ரெஷ்ஷான லட்டுக்கு இணையாக உசிரைத் தவிர நம்மிடத்தில் இருக்கும் எதைக் கேட்டாலும் அர்பணித்துவிடலாம். லட்டு சாப்பிட உசுரு வேண்டும்.

#லட்டில்லாமல் வாழ்தல் அரிது!
##படத்திலிருக்கும் லட்டு இணைய தேடலில் கிடைத்தது.

28 comments:

geethasmbsvm6 said...

அன்பைச் சேர்த்து ஆத்தில் பிடிக்கும் லட்டுவை ஸ்ரீகிருஷ்ணாவோ ஏஏபியோ தி கிராண்ட் ஸ்வீட்ஸோ அடித்துக்கொள்ள முடியாது. ஃப்ரெஷ்ஷான லட்டுக்கு இணையாக உசிரைத் தவிர நம்மிடத்தில் இருக்கும் எதைக் கேட்டாலும் அர்பணித்துவிடலாம். லட்டு சாப்பிட உசுரு வேண்டும்.//

ஆஹா, படித்தேன் லட்டு மஹாத்மியத்தை. நானும் ஒரு லட்டுப் ப்ரியை தான். அதான் லட்டுக்காக உடனே ஓடோடி வந்தேன். என்னை ஏமாற்றாதே லட்டே.

geethasmbsvm6 said...

அன்பைச் சேர்த்து ஆத்தில் பிடிக்கும் லட்டுவை ஸ்ரீகிருஷ்ணாவோ ஏஏபியோ தி கிராண்ட் ஸ்வீட்ஸோ அடித்துக்கொள்ள முடியாது. ஃப்ரெஷ்ஷான லட்டுக்கு இணையாக உசிரைத் தவிர நம்மிடத்தில் இருக்கும் எதைக் கேட்டாலும் அர்பணித்துவிடலாம். லட்டு சாப்பிட உசுரு வேண்டும்.//

இது பொன்மொழி. :))))))

பால கணேஷ் said...

இளமை நினைவுகள்... ஸேம் பிளட்!

Yaathoramani.blogspot.com said...

தித்திக்கும் பதிவு
தீபாவளி நல் வாழ்த்துக்கள்

ஆர்.வேணுகோபாலன் said...

ஆஹா! லட்டுவின் பெருமையைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறீர்கள். அதுவும் பாட்டி கையால் பிடித்த லட்டு என்றால், கேட்கவா வேண்டும்? இனிப்பான இடுகை! இனிய தீபாவளி வாழ்த்துகள்! :-)

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... தீபாவளி இப்போதே வந்து விட்டது...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
tm4

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்! லட்டு மகாத்மியத்தில் கரைந்து போய் விட்டேன்..

உங்க பால்ய நினைவுகள் பூந்தியாயும், சர்க்கரைப் பாகு உங்கள் எழுத்துநடையாயும்,கிஸ்மிஸ் முந்திரியெல்லாம் உம் நகைச்சுவை உணர்வாயும் சேர்த்து லட்டாய்ப் பிடித்த பதிவு. இந்த அண்ணாவுக்கு ஒரு லட்டு தாங்கோ...



அப்பாதுரை said...

அக்கிரமம் பண்றீங்க ஆர்வீஎஸ்!

அப்பாதுரை said...

ரமாப்பாட்டிகள் வேண்டும் வையகத்தே.

Unknown said...

// அன்பைச் சேர்த்து ஆத்தில் பிடிக்கும் லட்டுவை ஸ்ரீகிருஷ்ணாவோ ஏஏபியோ தி கிராண்ட் ஸ்வீட்ஸோ அடித்துக்கொள்ள முடியாது. //

அனுபவப் பூர்வமான உண்மை .....

நீங்கள் குடுத்த பில்ட் அப்பில் , பதிவை படித்து முடித்தவுடன், அடுப்படிக்கு ஓடி சென்று ஒரு லட்டு சாப்பிட்டு வந்து தான் பின்னூட்டம் இடுகிறேன்

அருமையான பதிவு.... தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

RVS said...

@geethasmbsvm6
லட்டால் யாவர்க்கும் இனிமையுண்டாம். ஓடோடி வந்து கருத்திட்டமைக்கு நன்றி மேடம். :-)

RVS said...


@பால கணேஷ்
ஸேம் லட்டுமா? :-)

RVS said...


@Ramani

தங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள் சார்!

RVS said...

@நாஞ்சில் வேணு
இனிய தீபாவளி வாழ்த்துகள். நன்றி. முதல் வருகைக்கும் கருத்துக்கும். :-)

RVS said...


@திண்டுக்கல் தனபாலன்
தீபாவளி நல்வாழ்த்துகள் பதிவுல சூறாவளி தனபாலன். :-)

RVS said...

@மோகன்ஜி

அண்ணா இரு வரி கமெண்ட்டிலேயே இந்தப் பதிவின் மொத்த சாரத்தையும் சொல்லிட்டீங்களே.

உங்களுக்கு ஒரு சம்படம் நிறையா லட்டு அனுப்பிவைக்கிறேன்.

RVS said...

@அப்பாதுரை
// ரமாப்பாட்டிகள் வேண்டும் வையகத்தே.//
ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு வருடமும் ஒரு வரலாறு. இனி எல்லாம் நினைவலைகளில் மட்டுமே...

RVS said...


@Yazh Inidhu

பாராட்டுக்கும் கருத்துக்கும் முதல் வரவுக்கும் மிக்க நன்றி. தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். நன்றி. :-)

Aathira mullai said...

//தீபாவளி முடிந்து பத்து நாட்கள் வரை பல் தேய்த்து முடித்தவுடன் லட்டு, தேன்குழல் மற்றும் காஃபி (LTC) சாப்பிடுவது என்பது என் இளவயது கலாச்சாரமாக இருந்தது. சில நாட்களில் இது ரிப்பீட் போகும்.//

புழுகு மூட்டை.... புழுகு மூட்டை...
ரமா பாட்டி இன்னொரு விஷயத்தையும் சொன்னாங்க...

Aathira mullai said...

உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய ஒளித்திருநாள் வாழ்த்துகள் RVS!

Aathira mullai said...

@அப்பாதுரை
// ரமாப்பாட்டிகள் வேண்டும் வையகத்தே.//
அவங்களப் பாக்கனும்னா முதியோர் இல்லத்துக்குத்தான் செல்ல வேண்டும் அப்பாதுரை.

RVS சொல்வது போல் நடந்ததெல்லாம் ஒரு பொற்காலம்.

இராஜராஜேஸ்வரி said...

அன்பைச் சேர்த்து ஆத்தில் பிடிக்கும் லட்டுவை ஸ்ரீகிருஷ்ணாவோ ஏஏபியோ தி கிராண்ட் ஸ்வீட்ஸோ அடித்துக்கொள்ள முடியாது.//

இனிய தீபாவளித்திருநாள் லட்டு வாழ்த்துகள்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

லட்டு பிடித்த லமா சாரி ரமா பாட்டியின் போட்டோவைப் போட்டிருக்கலாம்!

வெங்கட் நாகராஜ் said...

சார் லட்டு....

இங்கே ஒரு தட்டு....

இனிய நினைவுகள். லட்டு செய்யும் முன் பூந்தி செய்யும்போதே லட்டை நினைத்து மனம் ஏங்க ஆரம்பித்து விடும்!

RVS said...

@ஆதிரா
என் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

// ரமா பாட்டி இன்னொரு விஷயத்தையும் சொன்னாங்க...//

ஓ.. அது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா.. :-)

RVS said...


@இராஜராஜேஸ்வரி
லட்டான வாழ்த்துக்கு நன்றி மேடம். உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

RVS said...


@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
அப்போதெல்லாம் மொபைல் கேமராக்கள் கிடையாதென்பதால் எந்தப் பாட்டியையும் ஃபோட்டோவாக பிடிக்க முடியவில்லை. எல்லோரும் என் மன ஃபோட்டோவில் இருக்கிறார்கள்.

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ம்... உங்களுக்கும் இது அனுபவமாக இருந்திருக்கிறது. ஓ.கே தலைநகரமே! :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails