“ரெண்டாயிரம் சார்”
“ஐநூறு ரூபாய்க்கு வருமா?”
"அபாண்டமா கேக்காதீங்க சார்”
“அபாண்டமா சொன்னா அபாண்டமாதானே கேட்பாங்க”
“ஐநூறு ரூபாய்க்கெல்லாம் கைலாசம் வராதுங்க”
“எவ்ளோ ரூபாய்க்கும் கைலாசம் நிச்சயமா வராதுப்பா”
“அப்டின்னா?”
“இல்ல. எப்படியும் நாமதான் கைலாசத்துக்குப் போக முடியும். யார் நெனச்சாலும் கைலாசம் கீழ வராதுன்னேன்”
”ஓ! நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?” என்று கண்களால் என்னை அளந்தார் அந்த பொம்மைக் கடைக்காரர். மயிலை மாடவீதியில் ஜன வெள்ளத்துக்கு நடுவே கடவுளர்களின் கூட்டம். நவராத்திரியின் இறுதி நாளில் இஷ்ட தெய்வங்கள் சல்லிசாகக் கிடைத்தாலும் பூர்வாங்கமாக முதல் போணி செய்யவேண்டும் என்பது என் மனைவியின் பூஜாக்கால விருப்பங்களில் ஒன்று.
ஒவ்வொரு நவராத்திரிக்கும் ஒரு பொம்மையாவது நவமாக ஒரு படியில் வீற்றிருக்கவேண்டும் என்பது மேடத்தோட இலட்சியம். இம்முறை எல்லாத் தெய்வமும் போன வருடத்தை விட பன்மடங்கு காஸ்ட்லியாக இருந்தன. பெட்ரோலும் டீசலும் அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டன போலும்.
உள்ளங்கையகல சைஸ் கஜலக்ஷ்மி எண்ணூறு ரூபாய் என்று பொம்மையாகக் கூட லக்ஷ்மி நம் இல்லத்தில் தங்கக்கூடாது என்று குறியாக இருக்கிறார்கள். விலை சொல்லிவிட்டு ”நீங்க எவ்வளவு குடுப்பீங்கன்னு சொல்லுங்க சார்” என்று பர்மா பஜார் பேரத்தை ஆரம்பிக்கிறார்கள். “நா விலை கேட்டா நீங்க அசிங்க அசிங்கமாத் திட்டுவீங்க” என்று என்னை அந்த இடத்திலிருந்து அச்சத்துடன் உருவிக்கொள்ளும் வேளையில் “கட்டுபடி ஆச்சுன்னா குடுக்கறோம். இல்லைனா சந்தோஷமா வராதுன்னு சொல்லப்போறோம்” என்று சொன்ன வாலிபனுக்கு 20 வயதிருக்கும். பாண்ட்ஸ் பவுடரை விபூதியாக இட்டிருந்தான். உற்றுப்பார்த்தால் நெற்றியிலிருக்கும் குங்குமம் தெரியுமளவிற்கு கொண்டல் வண்ணன். ”உனக்கு எந்தூருப்பா?” என்று கேட்டேன். “வேலூரு” என்று அசிரத்தையாகச் சொல்லிவிட்டு “அந்த லக்ஷ்மி நரசிம்மர் எவ்ளோப்பா?” என்று கை நீட்டித் தெய்வத்தை விலை கேட்ட மாமியை கவனிக்க போய்விட்டார்.
ஜூவல்லரி வாசல்களிலும் சரவணபவனின் இரு மருங்கும் ஸ்ரீவித்யா குங்குமக் கடை வாசலிலும் இருக்கும் ப்ளாட்ஃபாரங்களில் ஸ்ரீரங்கநாதர் ஹாயாகப் படுத்துறங்கிறார். “நாகத்தை தனியே எடுக்கலாம் சார்” என்று ஆதிசேஷனை உருவிக் காண்பிக்கிறான் ட்ராயர் போட்ட ஒரு பொடியன். ”உட்றா.. உட்றா.” என்று அவனை விரட்டியது அவன் அம்மா.
ராதா கிருஷ்ணர் பளபளவென்று ராதையோடு கடைக்குக் கடை கண்களில் காதல் வழிய புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருக்கிறார். கல்யாண செட், கிரிக்கெட் செட், பொங்கல் செட், தசாவதாரம் செட், அறுபடை வீடு செட் என்ற புராதன செட்டுகளுக்கிடைய இந்த வருடம் கண்ணில் பட்டது ஆண்டாள் செட். பெரியாழ்வார் குடத்தில் தண்ணீர் ஊற்றுவது போன்று ஒரு பொம்மை, துளசி மாடம் ஒன்று, கண்ணாடியோடு நடுவிரல் அளவிற்கு ட்ரெஸ்ஸிங் டேபிள் ஒன்று அப்புறம் ஆண்டாள் முழு அலங்காரத்துடன்.
பார்க் நிரப்புவதற்கென்று பிரத்யேகமான கடை ஒன்று போட்டிருந்தார்கள். ப்ளாஸ்டிக்கில் புல், மிருகாதிஜனனங்கள், ஈச்சை மரம், டேபிள் சேர், பென்ச், செடி கொடிகள் இத்தியாதிகள் இரைந்து கிடந்தன. ரொம்பவும் கறாராக விலை பேசியவர் சந்தனக் கடத்தல் வீரப்பன் மீசை வைத்திருந்தார். கண்ணத்திற்கும் வலது கண்ணிற்கும் இடைப்பட்ட இடத்தில் இருந்த பெரிய மரு இயற்கையா செயற்கையா என்று சோதித்துப் பார்க்க கை விருவிருவென்றது. அவரது மீசை என்னைத் துரத்தியது. சாப்பிடாத குழந்தைகளுக்கு அவரைக் காட்டினால் கிண்ணம் அரை நிமிடத்தில் காலியாகிவிடும். கேட்ட காசை கொடுத்துவிட்டு மிரட்சியுடன் அடுத்தக் கடைக்குத் தாவினோம்.
நவராத்திரிக்கு வீட்டிற்கு வருபவர்களுக்கு வச்சுக் கொடுப்பதற்கு நெய் தீப விளக்கும் பித்தளை தட்டும் வாங்கிக்கொண்டு திரும்பவும் கைலாசப் பார்ட்டிக்கு வந்தோம். ”மொத்தம் பத்து பொம்மை இருக்கு சார்” என்று மீண்டும் ஆரம்பித்தார். என்னுடைய நெகோஷியேஷன் ஸ்கில்ஸ் அனைத்தையும் பயன் படுத்தினேன். இருவர் கைக்கும் துண்டு போட்டுக்கொள்ளாமல் ஆயிரம் ரூபாய்க்கு கைலாசம் எங்கள் கைவசமானது.
சிவன், பார்வதி உட்கார்ந்திருப்பதற்கு பின்னால் வெள்ளியங்கிரி மலை, முருகன், நின்ற திருக்கோலத்தில் கஜமுகன், விஷ்ணு, பிரம்மா, நாரதர், நந்தியெம்பெருமான் மற்றும் சிவ கணங்களோடு பெட்டியில் எழுந்தருளினார்கள். கார் டிக்கிக்கு செல்லவிருந்தவர்களைக் காப்பாற்றி பின் சீட்டிற்கு கொண்டு வந்து பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளேன். கயிலையே மயிலை மயிலையே கயிலையிருந்து இந்த மன்னை மன்னாரின் வீட்டிற்கு விஜயம் செய்துள்ளார்கள். சேவிக்க அனைவரும் வருக! அருள் பெருக!!
விடிய விடிய கொலு வைத்தாயிற்று. மன்னையைப் போல சென்னையில் சுற்றத்தார்கள் மற்றும் உறவினர்கள் தினமும் நவராத்திரி விஜயம் செய்வதில்லை. சுண்டல் வீணாகிறது. வீட்டிலுல்லோர்க்கு அதான் தலையாயக் கவலை.
பயில்வான் கணவர்கள் இதுபோன்ற கொலு விசிட்டிற்கு காரைக் கிளப்ப மறுக்கும் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கில் நாலைந்து பெண்மணிகளாகச் சேர்ந்து வாடகைக்கு ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு காலையிலிருந்து மாலை வரை ஒரு ரவுண்ட் அடித்து நண்பர்கள் வீடுகளை கவர் செய்து குங்குமச் சிமிழ் கிஃப்ட்டும் 2x2 ரவிக்கைத் துண்டும் காய்ந்த வெற்றிலைப் பாக்குமாக வீடு திரும்புகிறார்கள்.
நின்னையே ரதியென்று சரணமெய்திய என்னைப் போன்ற அப்பாவிகள் எப்போதும் அவர்கள் இழுத்த இழுப்புக்கு வருவார்கள்.
ஹாப்பி நவராத்திரி!
27 comments:
நவராத்ரி களைகட்டுகிறது உங்கள் சொக்க வைக்கும் ஹாஸ்ய நடையில். ரசித்தேன் மைனரே!
அந்த கயிலை செட் எங்க மைனரே இருக்கு ? மூனாவது படத்துல இடதுபக்கம் ??
அடக்கடவுளே ......அது ஆயிரம் ரூபாயா??????
சரியான பெண்டாட்டி தாசன் தான் நீர்.
உமக்கு காசு கொழுப்புத்தான்கணம்!
ஆமாம் குளம் எல்லாம் வைக்க மாட்டீங்களா ??
அடே !
அந்தக் கைலாசமே
ஆர் வி எஸ்
ஆத்துக்கு வந்துடுத்தா !! தேவலையே !!
ஈசா ! சர்வேசா !
இந்த க்ஷணம் என்னை அந்த
கைலாசத்துக்கு கூட்டிண்டு போ.
என்னது ! காபி ரெடியாயிடுத்தா
குடிச்சுட்டு கிளம்பணுமா
அதெல்லாம் அவாத்துலே
தருவா.
சுப்பு தாத்தா.
@ தக்குடு
நன்றிப்பா! :-)
@Manickam sattanathan
அதே படம்தான்.
சுப்ரீம் கோர்ட் ஜட்ஜிலிருந்து பேட்டை ரவுடி வரை அல்லாபேரும் பொண்ட்டாட்டிக்கு அடங்கினவங்கதான்னு ஒரு கார்ட்னர் ரிப்போர்ட் சொல்லுதாம். :-)
குளம் இருக்கே!
கருத்துக்கு நன்றி கக்கு.
@sury Siva
அவசியம் வாங்கோ! காபி சுண்டல் எல்லாம் கிடைக்கும். கைலாசபதியையும் பார்க்கலாம். :-)
கைலாயமே மன்னை மைனர் வீட்டில்..
தோ அடுத்த ஃப்ளைட் பிடிச்சு வந்துட்டேன்... சுண்டல்-காபியெல்லாம் ரெடிதானே! :)
அந்தக் கைலாசம் படத்தை தனியா காமிப்பீங்கன்னு நினைச்சு படத்தை படத்தைப் பார்த்தேன்! சுண்டல் வாழ்த்துகள்!
படங்கள் அழகாக ஜோரா இருக்கு சார்...
வாழ்த்துக்கள்...
கொலு சூப்பரா இருக்கு.எங்க வீட்டில் கடைசி மூன்று நாட்கள் மட்டுமே கொலு வைப்போம். 60 வருடங்களுக்கு முந்தைய பொம்மைகள் இருக்கு.
கைலாயமே உங்கள் வீட்டில்......வந்துட வேண்டியது தான்.
போன வருடத்து கலெக்ஷனே இன்னும் கொடுக்கலை. இந்த வருடத்து கலெக்ஷனையும் சேர்த்து எடுத்து வைங்க சகோ...
சுண்டலையும் படம் எடுத்து போட்டிருக்கலாமே...
கொலு ரொம்ப நன்னா இருக்கு. என்பதுகளில் உங்களவா பொண்ணுங்களுக்கு கொலு வந்தாலே நல்ல கலை வந்துவிடும். விளையாடிவிட்டு நண்பர்கள் வீட்டற்கு போனால் அக்கம் பக்கத்து தாவணி போட்ட பெண்கள் கர்நாடக கீர்த்தனைகள் பாடி அசத்துவார்கள். திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் என்னை மாதிரி தடியன்களில் எவனாவது ஒருவனை கண்ணாலேயே பேசிவிட்டு போய்விடுவார்கள். அதெல்லாம் பொற்காலம். - Rob Anderson
கொலு பொம்மைகளின் வர்ணனை சுவாரசியமாக இருக்கு.
நவராத்திரி வாழ்த்துக்கள்.
வெல்கம் டு நவராத்திரி|கொலு|சுண்டல் அன்ட் மாமி'ஸ் கேங்.
||வீட்டிலுல்லோர்க்கு ||
வீட்டிலுள்ளோர்க்கு
கயிலை செட்தான் இந்த வருஷ வி.ஐ.பியாக்கும். ஜூப்பரா இருக்கு :-)
//“எவ்ளோ ரூபாய்க்கும் கைலாசம் நிச்சயமா வராதுப்பா”
“அப்டின்னா?”
“இல்ல. எப்படியும் நாமதான் கைலாசத்துக்குப் போக முடியும். யார் நெனச்சாலும் கைலாசம் கீழ வராதுன்னேன்”//
இந்த கடுப்ஸுக்கு அடுத்த வருஷம் நவராத்திரி வரைக்கும் உங்களை மறக்க மாட்டார் அந்தாள். அதனால அடுத்த கொலுவுக்கு பொம்மை வாங்க வேற கடைக்குப் போயிருங்க :-)))
@வெங்கட் நாகராஜ்
அவசியம் வாங்க வெ.நா. வெறுமனே அனுப்ப மாட்டேன். :-)
@ ஸ்ரீராம்.
கொலு படங்கள் வரிசையில் மூணாவது படத்தின் ஓரத்தில இருக்கேங்க. நல்லாப் பாருங்க. :-)
@திண்டுக்கல் தனபாலன்
நன்றிங்க தனபாலன்.
@அமுதா கிருஷ்ணா
நன்றி. எங்க வீட்ல 70 வருஷத்திய பொம்மைகள் இருக்கு.முதல் படியில நிற்கும் லக்ஷ்மி பொம்மைக்கு அவ்ளோ வயசாகுது.
@கோவை2தில்லி
நிச்சயமா எடுத்து வைக்கிறேன். சுண்டல் படமெல்லாம் எதுக்கு? நேர்ல வாங்க. கையிலையும் கொடுத்து பார்சலும் கட்டிக் கொடுத்துடலாம். நன்றி சகோ :-)
@Rob Anderson
தாவணி... ம்,, :-)
@RAMVI
நன்றி மேடம். வருகைக்கும் கருத்துக்கும். :-)
@ | * | அறிவன்#11802717200764379909 | * |
// வீட்டிலுள்ளோர்க்கு// ஸ்லிப் ஆயிடிச்சு. இன்னொருமுறை பார்த்துவிட்டு இனிமேல் பதிகிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றிங்க பாஸ்! :-)
@அமைதிச்சாரல்
கைலாசம்தான் புது செட். ஆளு ரொம்ப டரியலாயிட்டான். என் வைஃபைப் பார்த்து பேச ஆரம்பிச்சுட்டான். எம் பக்க திரும்பவே பயம் அவனுக்கு. :-))
|| சுட்டிக்காட்டியதற்கு நன்றிங்க பாஸ்! :-)||
குற்றம் கண்டு பிடிப்பதே கல்வியும் தொழிலுமாகிப் போனாலும், பிழைகளைச் சுட்டுவது வேறு நோக்கத்திற்காக. :))
தமிழில் எழுதுவதும் பேசுவதும் தமிழர்களாலேயே கைவிடப் பட்டுக் கொண்டிருக்கும் இந்நாள் சூழலில் தமிழில் எழுதுபவர்களும்,பேசுபவர்களும் போற்றத் தகுந்தவர்கள். ஆயினும் அந்தப் பயன்பாடு பிழைகளற்றதாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் விளைவே இது..
தட்டச்சுப் பலகை அமைவின் காரணத்தால் சில பிழைகள்(சில ஒற்றுப் பிழைகள் டட என்பது ட்ட ஆவது போல) அமையலாம். அவை தவிர்த்த கவனம் பெறாத பிழைகளைத் திருத்திக் கொள்வது நமது கடமை என்று நினைப்பதாலேயே இந்த வேலை..எவரும் கடிந்தாலும் எனக்கு இதைச் செய்வதில் ஒரு மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கிறது.
@| * | அறிவன்#11802717200764379909 | * |
நானிதை நீங்கள் குற்றம் கண்டுபிடிப்பதாக நினைக்கவில்லை. இன்னமும் என்னுடைய எழுத்தையும் சிறு தவறுகளையும் திருத்திக்கொள்ளவே விழைகிறேன். இது மறுபார்வையில்லாமல் ஏற்றிவிட்டது. தவறியது. இனிமேல் உற்று நோக்கி பகிர்கிறேன். (அதனால் தப்பில்லாமல் வருமா? என்றெல்லாம் கேட்கக்கூடாதுங்க. :-))
Post a Comment