பன்னெடுங்காலத்துக்கு முன்பு நான் கொடுத்த பேட்டியை கீழே பதிகிறேன். படித்து இன்புறவும்.
நீங்கள் எப்போதிருந்து எழுதுகிறீர்கள்?
ஒரு விஜயதசமி நன்னாளில் என் பிஞ்சுக்
கரத்தை அழுத்திப் பிடித்து கோபாலக்ருஷ்ண வாத்தியார் காவிரி பாய்ந்த எங்கள்
பூமியில் செழிப்பாக விளைந்த பொன்னி ரக நெல் மணிகளை வீட்டின் நடுஹாலில்
ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் பரப்பி 'சுர்க் சுர்க்' என்று அது ஆள்காட்டி
விரலில் குத்த குத்த 'அ' எழுத வைத்த நாளிலிருந்து.. தேவலாம்
எழுதுகிறீர்கள் என்று கேட்டீர்கள். நிறைய பேர் கிறுக்குகிறீர்கள் என்று
சொல்லித் தான் சிரித்திருக்கிறார்கள். நன்றி. வலையின் முதல் போஸ்டு
இங்கே.
இலக்கணங்கள்... இலக்கியங்கள்... பற்றி...
(நெடுநேரம் வாய்விட்டு சிரிக்கிறார்!! பரவாயில்லை சொல்லுங்க என்றதும் தொடர்ந்தார்)
நல்ல கேள்வி. கபிலர் எனக்கு பக்கத்து வீடு மாதிரி கேட்கிறீர்கள். கம்பர்
எனக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா போல கேட்கிறீர்கள். இலக்கண சுத்தமாக
எழுதவதற்கு முன்னர் எனக்கு எழுத்துப் பிழை இல்லாமல் எழுதத் தெரியுமா என்ற
கேள்வியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் இலகுவாக கடக்கின்ற
கணங்களை இலக்கணங்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். இலக்கியம் என்பதை
உள்ளூர் அரசியல் கட்சிகளின் மாடுகள் சுவைக்கும் வால் போஸ்டர்கள் மற்றும்
பதாகைகளில் இருக்கும் இலக்கிய அணி என்று அச்சடித்திருக்கும் இடத்தில்
இருந்தும் அறிகிறேன். இது தவிர இலக்கியா என்று வெடவெடவென்று சோனியாக ஒரு
பள்ளித் தோழி இருந்தாள். இலக்கியம் பற்றி எனக்கு தெரிந்தது இவ்வளவே.
உங்களுடைய கதாவிலாசங்கள்....
பொழுதுபோகாத ஒரு வாலிபனின் எண்ணங்களாக இவை பிரதிபலிக்கின்றன.
கார்த்திக்கின் காதலிகள் என்று ஒரு தொடர் எழுதியவுடன் ஆயிரம் பேர் (
சொல்லிக்கொல்வேமே யாருக்கு தெரியப்போவுது என்று முனுமுனுக்கிறார்)
வரிந்து கட்டிக் கொண்டு உன் கதையை எழுதுகிறாயா? எனக்கு தெரியாதா? "உன்
சாயம் வெளுத்துப் போச்சு." என்று முண்டு முட்டி மோதி தட்டிக் கேட்டார்கள்.
அதிர்ந்து விட்டேன். ஏன் ஐயா நான் காதல் கதை எழுதக் கூடாதா? எனக்கு அந்த
அருகதையில்லையா? என்று பாவமாக கேட்டபோது சிறிதும் இரக்கமில்லாமல்
அனுபவிக்காமல் இப்படி எழுதமுடியாது என்கிறார்கள். அனுபவித்து தான்
எழுதவேண்டும் என்றால் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் குறைந்தது ஆயிரம்
கொலையாவது பண்ணியிருக்கவேண்டும். வாத்தியார் ஒரு ஏ க்ளாஸ் 420 ஆக
இருந்திருக்க வேண்டும். கல்கி சோழர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும்.
இருந்தார்களா? சிறுவயது முதலே நாலு பேர் சேர்ந்தால் கதை விட ஆரம்பித்த
பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.
கவிதைகள் இப்போதெல்லாம் எழுதுவதில்லையே..
மாதிரி
போட்டு எழுதியதற்கே சக பதிவர்களும் படித்த அப்பாவிகளும் ரொம்ப
பயந்துட்டாங்க. ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதால் நிறுத்தி விட்டேன்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைப் பார்த்து அதைப் பற்றி எதுவும்...
வேலை பார்க்கும் துறை பற்றி எழுதினால் நமது முகமூடி கிழிந்து நாறிவிடும்
என்று பயம் இருப்பதால் அவ்வளவாக எழுதுவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு
எழுதினாலும் வேறு துறை பற்றி ஏதாவது கிறுக்கியிருப்பேன். வலையில்
சமூக கட்டமைப்பு மற்றும் சில
புரட்சி கர டெக்னாலஜிகள்
பற்றி எழுதிப் பார்த்தேன். ஒரு நாள் வாத்தியாரின் சயின்ஸ் புத்தகம் ஒன்றை
படித்துவிட்டு இனி எழுதக் கூடாது என்று ஞானோதயம் வந்து நிறுத்திவிட்டேன்.
சர்வ ஜன சுகினோ பவந்து.
பார்வை ஒன்றே போதுமே இதிகாச காதலர்கள் போன்ற சீரியல்கள் துவங்கி பாதியில் விட்டதை பற்றி..
முதலில் நடிகைகளின் கண்ணழகை கொண்டாடும் விதமாக இதை துவங்கினேன்.
ஒன்றிரண்டு எபிசோடுகளில் பழைய கருப்பு வெள்ளை நடிகைகளையும் மாதவி போன்ற
இடைக்கால நட்சத்திரங்களை பற்றியும் பிரசுரித்தேன். நீ ஒரு ஓல்டு. அதான்
பழய்யய்ய்ய்ய ஜில்பான்ஸ் போட்டக்களை போடுகிறாய் என்று போர் தொடுத்தார்கள்.
சமீபத்திய அழகுகளின் அஞ்சனங்களை பற்றி போடலாம் என்றால் கண்ணைத் தவிர
மற்றதெல்லாம் பளீரென்று தெரியும்படி போஸ் கொடுத்து அந்த பகுதியை (பா.ஒ.போ)
மூடிவிட்டார்கள். இதிகாசக் காதலர்கள் மேட்டர் இருக்கு எழுதி படுத்தணுமா
என்கிற உயர்ந்த எண்ணம் எழுந்ததால் இன்னமும் எழுதவில்லை.
இசை பற்றி நிறைய எழுதுகிறீர்களே...
ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் பார்க்கில் பெஞ்சில் உட்கார்ந்து இருப்பது
போன்ற போஸில் என் காரில் பயணிக்கிறேன். வெளியிலிருந்து வரும் காதைக்
கிழித்து கூறுபோடும் ஏர் ஹார்ன் சப்தம் மற்றும் மாசு உள்ளே புகாதவாறு கார்
கண்ணாடிகளை தூக்கி விட்டுக்கொண்டு உடையாளூர் பஜனை பாடல்களிலிருந்து
தேவாவின் தித்திக்கும் 'கானா' பாடல்கள் வரை கேட்டுச் செல்கிறேன். அதைத்
தவிர கல்லூரி நாட்களில் இருந்து பஸ்ஸ்டாண்ட் ராஜ் மியூசிக்கல்ஸ் கடையில்
விருப்பப் பாடல்களை கேசெட்டுகளில் காப்பி செய்து டேப் ரேகார்டரின் ஹெட்
தேயும் வரை கேட்டதால் .... தொட்டில் பழக்கம்... இதைத் தவிர எனக்கு இசை
பற்றி அணுவளவும் வேறு எதுவும் தெரியாது. அரசியல் தெரியாதவர்கள் அரசியல்
புரிவதும், கம்பவுண்டர் டாக்டர் தொழில் பார்ப்பதும், கிளீனர் லாரி
ஓட்டுவதும் இந்தியாவில் சகஜம் தானே. அதைப்போல் இதையும் சகித்துக்
கொள்ளுங்கள்.
உங்களுடைய பெயர்காரணம் மற்றும் இளமைப் பருவம் பற்றியெல்லாம் கொஞ்சம்...
என்னுடைய பெயர் ஆர்.வெங்கடசுப்ரமணியன். இந்த ப்லோகின் இடது புறத்தில்
நிரந்தரமாக அச்சடித்து வைத்திருக்கிறேன். ஆறாம் வகுப்பில்
எஸ்.வெங்கடசுப்ரமணியன் என்று ஒரு புத்திசாலி மாணாக்கர் வந்து
சேர்ந்தவுடன் வித்தியாசம் தெரிவதற்காக ஆர்.வி.எஸ்.எம் என்று எனக்கும்
எஸ்.வி.எஸ்.எம் என்று அவருக்கும் கிளாஸ் டீச்சர் தாண்டான் பெயர் சூட்டி
மகிழ்ந்தார். ஆர்.வி.எஸ் என்று ஆரம்பித்தாலே அடிக்கத்தான் கூப்பிடுகிறார்
என்று கையை பின்பக்க டிராயரில் துடைத்துக் கொண்டு தயாராகிவிடுவேன்.
இன்னமும் அதே நிலையில் தான் தொடருகிறேன். ஏழாவதோ எட்டாம் வகுப்போடோ
எஸ்.வி.எஸ்.எம் (என் போன்ற மாங்காவுடன் படிக்கமுடியாமல்) சென்றவுடன் என்
ஒருவனுடைய ரயில் நீள பெயருக்காக வருகைப்பதிவேடு ஒரு எக்ஸ்ட்ரா பக்கம்
வாங்கியது. சிக்கன நடவடிக்கையில் நான் படித்த பள்ளிக்கூடம் இருந்திருந்தால்
என்னை அதற்காகவே மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அணுப்பியிருக்கலாம். இளமைப்
பருவம் பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த ஒரு பதிவு, ப்ளாக் பத்தாது.
வாய்க்கால் வரப்பு, மரத்தடி, பஸ் ஸ்டாண்டு, தேரடி, பந்தலடி, காந்தி ரோடு,
காளவாய்க்கரை, ஒத்தை தெரு, முதல் தெரு, மூன்றாம் தெரு, புதுத் தெரு,
கீழப்பாலம், மேலப்பாலம், ஹரித்ராநதி என்று எந்த இடத்திலும் ஒரு பெண்ணைக்
கூட தலை நிமிர்ந்து பார்க்காத கண்ணியம் இன்றுவரை தொடர்கிறது.
மன்னார்குடி டேஸில் இதைப் பற்றியெல்லாம் விலாவாரியாக பகிர்ந்துள்ளேன்.
பேட்டி கொடுத்த இந்த பிசாத்து பதிவருக்கு வலையில் இன்றோடு ஒருவருடம்
முடிவடைகிறது. நானும் கொளந்தைதான். இரண்டாயிரத்து ஏழில் பிள்ளையார் சுழி
போட்டாலும் பத்தில் தான் எழுத ஆரம்பித்தேன். இவ்வளவு காலம் பொறுமையாக
படித்த மக்களுக்கு கோடி நன்றிகள். கொஞ்ச நாள் எழுதாம மேயலாமா என்று ஒரு
எண்ணம் இருக்கிறது. இன்னும் எழுத்துப் போதையில் நடுங்கும் கரங்களிடம்
கேட்கவில்லை. பார்க்கலாம். என்னுடைய அருகாமை சீனியர்கள்
பத்துஜி மற்றும்
தக்குடு ஆகியோருக்கு இந்த ஜூனியரின் வந்தனங்கள். வலை உலகில் பிரமாதமாக எழுதும் பலருக்கு இந்த பிசாத்து பதிவரின் மரியாதைகள்.