Saturday, July 7, 2012

குடும்ப நீதி - கணவனார் கவனம்


"என்னங்க...” என்று மனைவி ஆரம்பிக்கும்போதே “எதற்கு” என்று புரிந்துகொண்டு “ஏன்” கேட்காத கணவன் “எப்படியும்” பிழைத்துக்கொள்வான்.

#குடும்ப நீதி (1/420)

”க்க்கும்” என்கிற மனைவியின் லேசானத் தொண்டைச் செருமலிலேயே ”இதைச் செய்யக்கூடாது” என்று சமயோசிதமாக விழித்துக்கொள்ளுபவனுக்கு எந்நாளும் வாழ்க்கையில் சங்கடம் இல்லை!

#குடும்ப நீதி (2/420)

”எனக்கு ஒன்னும் வேண்டாங்க...” என்கிற மனைவியின் மாடுலேஷனில் இடம் பொருள் ஏவல் புரிந்துகொண்டு "என்ன வேணும்" என்று சாமர்த்தியமாகத் தெரிந்துகொள்ளும் கணவனுக்கு வாழ்க்கையில் இல்லை இடர்தானே!

#குடும்ப நீதி (3/420)

பைசாப் பெறாத விஷயத்திற்கு “ஒரு தடவ மரியாதையாச் சொன்னாக் கேட்கமாட்டே...” என்று ஆரம்பித்து சகட்டுமேனிக்குத் தன் பிள்ளைகளை கணவன் காதுபட மனைவி திட்டுவது அவனுக்கும் சேர்த்துதான் என்று சுதாரித்துக்கொள்பவன் அடுத்த முறை பிடிபடாமல் இருக்க இன்னும் நேர்த்தியாகத் திருட்டுத்தனம் செய்ய முயற்சிப்பான்.

குடும்ப நீதி (4/420)

மனைவியின் ”இந்தப் புடவை எப்ப எடுத்தது தெரியுமா?” என்ற கேஷுவலான கேள்விக்குப் பேந்தப் பேந்த முழித்து ஹி..ஹி என்று பல்லைக் காட்டிக்கொண்டிருக்கும்போது  “இதெல்லாம் உங்களுக்கெங்க ஞாபகம் இருக்கப்போவுது?” என்கிற பெருமூச்செறிந்த தீவீரமான இரண்டாவது கேள்வியில் அந்த அப்பாவிக் கணவன் விழித்துக்கொள்வான்.

#குடும்ப நீதி (5/420)

"ஹெஹ்ஹே.. நானெல்லாம் டெர்ரர். நா ஒரு பார்வை பார்த்தாலே எம் பொண்டாட்டிக்கு சப்தநாடியும் அடங்கிடும்” என்று சம்பந்தமே இல்லாமல் நொடிக்கொருதரம் அடிக்கடி பொது இடங்களில் அலட்டிக்கொள்ளும் கணவன்மார்கள் சர்வநிச்சயமாக வீட்டில் பொட்டிப்பாம்பாக அடங்கி மனைவியின் திறம் வியந்து செயல் மறந்து தாள் பணிந்துச் சரணாகதியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

#குடும்ப நீதி (6/420)

“என்னாச்சு. ஏன் இன்னிக்கி லேட்டு?” என்கிற மனைவியின் அடிக்குரல் அதிரடிக் குரலாக வானம் கிடுகிடுக்க கேட்கும் போது அல்வா, மல்லிப்பூ, அர்ச்சனா ஸ்வீட்ஸ்... இத்யாதி இத்யாதிகளில் இலகுவாக சரிக்கட்டி விடலாம் என்று நம்புபவனின் கதி அதோகதிதான்.

#குடும்ப  நீதி (7/420)

”நீதான் இவ்வுலகத்திலேயே சொக்கவைக்கும் பேரழகு! உன் கைப்பக்குவம் யாருக்காவது வருமா? உன்னோட வத்தக் குழம்பு மாதிரி இந்த ஊர்ல ஒருத்தியாலும் வைக்கமுடியாது! அஞ்சாவது ஆறாவது பசங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிற உன்னோட திறமையைப் பார்த்தால் உன்னால அஞ்சாறு ஐஏஎஸ்ஸையே உருவாக்க முடியும் போலருக்கே!” என்பது போன்ற புரை தீர்ந்த நன்மை பயக்கும் புகழுரைகளை அடிக்கடி மனைவி மேல் அள்ளி வீசுபவனது மணவாழ்க்கையில் மணம் வீசுவது நிச்சயமே!

#குடும்ப  நீதி (8/420)

மிடில் ஷிஃப்ட்டாக இருக்கலாம், அதிகாலையில் எழுந்திருந்து மார்னிங் ஷிஃப்ட்டுக்கு சீக்கிரம் ஓடுபவனாகவும் இருக்கலாம், அல்லது குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்துபோனவனாகவும் இருக்கலாம். யாராயிருந்தாலும் அவன் தான்

"பின் தூங்கி முன் எழுவான் ப(த்)தி(னன்)!!"

#குடும்ப நீதி (9/420)

மனைவியை நோக்கிக் கூறும் மெய்யுரையோ பொய்யுரையோ புகழுரையோ எவ்வுரையும் தனதுரையாகயும் நுண்ணுரையாகவும் அளவுரையாகவும் தெளிவுரையாகவும் இருத்தல் நலம். அதுவன்றி சம்சாரத்தில் அடிபட்ட கணவன்மார்களின் அச்சுப்பிச்சு அருளுரைகளைக் கேட்டு வந்து வீட்டில் உளறுரையாகவோ அறவுரையாகவோ பேருரையாகவோ உரைப்பவனின் முடிவுரை இல்லா நொய்நொய்யுரைகள் அந்த ”துரை”க்கு உதவாக்கரை பட்டத்தையே பெற்றுத் தரும்.

#குடும்ப நீதி (10/420)

##குடும்ப நீதியின் முதல் அதிகாரம் "கணவனார் கவன” த்திற்கு இத்தோடு ஃபுல்ஸ்டாப் வைக்கப்படுகிறது.

பட உதவி: http://www.awomensclub.com/

14 comments:

ப.கந்தசாமி said...

நிம்மதியாப் பொழைக்கறதுக்கு வழி காட்டிய தெய்வமே, பல கோடி நூறாயிரம் நன்றி.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பகுதி 10ஐயும் விட விகுதி 420ன் பால் கவனத்தை ஈர்க்க வைத்துவிட்டீர்.ஒருவேளை 42 அதிகாரம் எழுதினாலும் எழுதுவீரோ?

அதிகாரம் என்ற தலைப்பை விடப் பொருத்தமாக வேறென்ன தலைப்’பூ’ சூட்டிவிட முடியும் நம் தர்மபத்னீக்களுக்கு ஆர்விஎஸ்?

வெங்கட் நாகராஜ் said...

முகப்புத்தகத்திலேயே படித்திருந்தாலும், மீண்டும் படித்து ரசித்தேன் மைனரே...

கலக்கறீங்க போங்க!

raji said...

முகப்புத்தகத்தில் மூழ்கி முங்கு நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு நல்ல எழுத்தாளரை ப்லாக் உலகம் சமீப காலமாக இழந்து கொண்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் :-))

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.. ஹா.. ரசித்தேன் சார் ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !

சுசி said...

அதென்ன "குடும்ப நீதி - 420" ஓ ... கணவன்மார்கள் செய்கிற திருட்டுதனங்களோ ! :))

raji said...

அன்'பு' என்ற பூ கூட சூட்டலாம் ஜி! :-))

Yaathoramani.blogspot.com said...

குழப்பமின்றி குடும்ப வாழ்க்கைத் தொடர
ஒரு தெளிவான வழிகாட்டும் குடும்ப நீதி
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
(அது என்ன 420
அதற்கு வேற அர்த்தம் அல்லவா உள்ளது )

RVS said...

@பழனி.கந்தசாமி
பொழைக்கவா உதைவாங்கவான்னு தெரியலை. பாராட்டுக்கு நன்றி சார். :-)

RVS said...

@சுந்தர்ஜி
அதிக காரம் என்றும் சிலபேர் சூட்டி மகிழ்வார்கள் ஜி! நன்றி. :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே! :-)

RVS said...

@raji
ஃபேஸ்புக் என்ற சிற்றின்பத்தில் நாட்டம் அதிகமாகிவிட்டது. ப்ளாக் என்னும் பேரின்பத்தில் திளைக்க வேண்டும். வருகிறேன் மேடம். :-)

RVS said...

@திண்டுக்கல் தனபாலன்
நன்றிங்க. :-)

RVS said...

@Ramani
சார்! யார் எப்படிக் கேட்டாலும் தப்பித்துக் கொள்வதற்காக இடப்பட்டது அந்த 420. :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails