Monday, June 4, 2012

எஸ்.பி.பி சொன்ன காதல் கதை

என்னுடைய ஆதர்ஷ பாடகர் பாடும் நிலா பாலுவின் பிறந்தநாள் இன்றைக்கு.  வித்தியாசமான முறையில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் விதமாக சட்டென்று நினைவுக்கு வந்த அவர் பாடிய சில பாடல்கள் மூலமாக ஒரு காதல் கதை சொல்லிப்பார்த்தேன், பச்சை வண்ண குண்டு எழுத்துக்களில். கதைக்கு போவோமா?


இன்று காலையில் எழுந்தவுடன் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கிடைக்கும் என்று நினைக்கவில்லை கார்த்திக். நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில் என்றாகும்படியாக காயும் கத்திரியில் குளிர் நிலவாக எதிர் வீட்டு வாசலில் படைத்தானே பிரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம் நின்று  தலை சாய்த்து விரித்து கைகளை கோதி (இப்போது நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால... என்று நினைத்துக்கொண்டான்) காய வைத்துக்கொண்டிருந்தாள் மஞ்சள் பாவாடை பச்சை தாவணி அணிந்த நித்யா. மெதுவாகவும் இதமாகவும் அடித்த தென்றலை கண்டு மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே என்று கற்பனை செய்துகொண்டு காமனை நிந்தித்தான் கார்த்திக். தலையைக் குனியும் தாமரையாக இருந்தாள். அவளைத் தொட்ட காற்று அவனைத் தொடும் போது பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று என்று மெதுவாக சொல்லிக்கொண்டான். பின்னால் ஏதோ ஒரு எஃப்.எம் ஸ்டேஷன் ரேடியோ  நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா பாடியது. "நித்தூ..." என்ற அம்மாவின் அழைப்பிற்கு "இதோ வந்துட்டேம்மா...." என்று  பாடிப் பறந்த குயிலின் கடைக் கண்களில் இளமனது பலகனவு விழிகளிலே வழிகிறதே என்றுணர்ந்தான் கார்த்திக்.

கல்லூரி வாகனத்திற்காக கடைவீதியில் காத்திருக்கும் போது நம்ம கடைவீதி சும்மா கலகலக்கும் என்று கிண்டலடித்து பாடிய பாஸ்கரிடம் அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை பருவம் பதினாறு என்றான் கார்த்திக். தன்னை கண்டும் காணாதது போல போன நித்யாவைப் பார்த்து கேளடி என் பாவையே பாட வேண்டும் போல இருந்தது அவனுக்கு. பேருந்தின் இடது கைப்பக்கம் கார்த்திக்கும் வலது கைப்பக்கம் மகளிர் வரிசையில் நித்யாவும் பாடம் படிக்க கல்லூரி செல்லும்போது ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் என்று சரணம் பாடும் என் கண்மணி உன் காதலி இளமாங்கனியை கற்பனை செய்துகொண்டான். காலையில் இருந்தே குளிர்த் தென்றல் வீசி தேன் சிந்துதே வானமாகி சற்று தனது பூவாளியை திறந்து விட்டது. மழையும் நீயே வெயிலும் நீயே என்று அந்த கரு நீலக் கண் ரெண்டும் பவழமாக இருக்கின்றவளைப் பார்த்து மருங்கினான். தன்னிடம் இன்னமும் வாய் திறக்காதவளைப் பார்த்து மலரே மௌனமா என்றான்.

எந்தப்பெண்ணிலும் இல்லாத ஒன்று அவளிடம் இருந்ததால் ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது, உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி என்று இவன் நெஞ்சில் இருந்ததை மாலை வீட்டிற்கு பஸ் ஏறும் போது முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே என்று சொல்லிவிட்டான். காதெலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் கார்த்திக் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் என்று தவித்தான். மீண்டும் மாலையில் பன்னீர் மேகம் தூறல் போடும் போது அந்தி மழை பொழிந்து ஒவ்வொரு துளியிலும் அவள் முகம் தெரிந்தது. மாலை கடைத்தெருவிற்கு தன்னை கடந்து செல்லும் போது சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி என்று கேட்டுக் கொண்டிருந்தான். சின்னராசு ஜூஸ் கடையில் நின்றிருந்த பாஸ்கர் நித்யாவிடம் சிரித்தும் கையை பிடித்தும் பேசும்போதுதான் தெரிந்தது இவ்வளவு நாளாய் உன்னை நினச்சேன் பாட்டு படிச்சேன் அப்புவாக அவன் இருந்தது.

என்னை காணவில்லையே நேற்றோடு என்று புலம்பிய கார்த்திக்குக்கு அடுத்த இரண்டு நாளில் நிச்சயாதார்த்தம் முடிந்து அவளின் கல்யாண சேதி கேட்டது. அதிலிருந்து வாழ்க்கை வெறுத்துப் போனவனன் சத்தம் இல்லாத தனிமை கேட்டான். இப்படி இவன் பித்துப் பிடித்து திரிந்த காலத்தில், ராத்திரியில் பூத்திருக்கும் தாமரையாக அவளை பாவித்து வளையோசை கல கலக்க பாஸ்கர் அவள் இதழில் கதை எழுதும் நேரத்தில் கார்த்திக் உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி பச்சைமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னங்க என்று சிவகுமார் கணக்காக பாடிக்கொண்டிருந்தான்.

Happy Birthday SPB Sir. Wish you Many More Happy returns of the Day.
#இது ஒரு மீள் பதிவு

14 comments:

பத்மநாபன் said...

எப்படித்தான் இப்படி ஊற்று மாதிரி எழுத்து பொங்குதோ .. அதுவும் ராஜா..எஸ்.பி.பி ..ன்னா கேட்கவே வேண்டாம்...

பாடும் நிலாவுக்கும் ..இசைஞானிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Unknown said...

HAPPY BIRTHDAY TO YOU S.B.B SIR

Unknown said...

நீண்ட காலம் வாழ்ந்து
இன்னும் பல பாடல்கள் தர
வேண்டுகிறோம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பாலா .

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பச்சை பச்சையா நம்ம பாலுவை உரிச்சிட்டீங்க ஆர்.வி.எஸ்!

சாயங்காலமா உங்க பதிவைப் படிக்க வாய்ச்சவங்க்ச் இது ஒரு பொன்மாலைப் பொழுதுன்னு கண்டிப்பாப் படுவாங்க.

ரிஷபன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமான சிந்தனை
எஸ் பி சாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 2

ஸ்ரீராம். said...

முன்பதிவிலும் பின்னூட்டமிட்டிருந்தேன். மீல்பதிவிலும்! வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

ச்சே....மீள் மீல் ஆகி விட்டது!

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமாய் ஒரு வாழ்த்து பாடும் நிலாவிற்கு....

நல்லா இருந்தது மைனரே...

Anonymous said...

nalam vala ennalum nalvaalthukkal - spb

மோகன்ஜி said...

கலக்கல் ஆர்.வீ.எஸ்! படிச்சா மாதிரி இருக்கேன்னு பார்த்தா மீள்பதிவு!

பார்த்தீங்களா?எப்படி உங்க எழுத்தை ஆராதிக்கிறோம்னு?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வித்தியாசமான பாடல் வரிக் கதை

Unknown said...

semma songs with awesome lyrics and music

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails