சங்கீத மழையில் நனையலாம் என்று ஆஃபீசிலிருந்து அடியெடுத்து வெளியே வைத்தால் கோடை மழையில் குளித்துக்கொண்டிருந்தது சென்னை. அடியேனுக்குப் படியளக்கும் கம்பெனி மண்டகப்படிதாரர்களுள் ஒருவராக இருந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கு அதிமுக்கியஸ்தர் டிக்கெட் கொடுத்து அட்டெண்ட் செய்யச் சொன்னார்கள். கடைநிலை ஊழியனான எனக்கு அந்த டிக்கெட்டை கொடுத்து ஆட்கொண்டார் என்னுடைய பாஸ்.
எஸ்பிபி பங்கேற்றுப் பாடுகிறார் என்கிற சேதி என்னைச் சீஸைக் கண்ட எலிபோல பற்றி இழுத்தது. நிகழ்ச்சியின் பாஸ் கைக்கு வந்தவுடனேயே ”மன்றம் வந்தத் தென்றலுக்கு”வை ஹம்மிங் செய்ய ஆரம்பித்தது இசை மனஸ். ஆறு மணிக்கு துப்பாக்கி நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்துவிடும்ம், MIP டிக்கெட் என்பதால் நேரத்திற்கு நீங்கள் இருக்கையில் இல்லையென்றால் சீட் காலியாக இருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பெரும் அவமானம் வந்து சேரும் என்று எனக்குச் சுதி ஏற்றி கட்டாயமாக நேரத்தைக் கடைபிடிக்கச் சொன்னார்கள். இருப்பினும் சில MIB-க்கள் தாமதமாக நனைந்துகொண்டே வந்தார்கள்.
நல்ல நாளிலேயே தில்லை நாயகமாக இருக்கும் சென்னையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாலைகள் ஒரு மழை நாளில் எந்தக் கோலத்திலிருக்கும் என்பது கர்ப்பவாசமிருக்கும் குழந்தைக்குக் கூட தெரியும். அதுவும் மாலை வேளையில், அலுவலத்திலிருந்து அன்றைய தினத்திற்கு உருவிக்கொண்டு வீட்டுக்கு ஓடிவரும் மக்களினிடையில்! எஸ்பிபி என்கிற இலக்கு ஒன்றே குறியாக கிளம்பினேன். மழை ஒரு அரை மணி நேரம் அடித்துப் பொழிந்திருக்கலாம். சாலைகளில் காவிரியும் கங்கையும் இருமருங்கும் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்திருந்தது. விழா அரங்கத்திற்கு செல்லும் சாலைகளில் எவ்வளவு சுரங்கப்பாதைகள் இருக்கிறது என்பதை விடாப்பிடியாக மூளையின் ஒரு முடிச்சு கணக்குப் பண்ண ஆரம்பித்திருந்தது.
பயந்ததுபோலல்லாமல் கோடை மழைக்குப் பயந்து வீதி கொஞ்சம் வெறிச்சென்று தான் இருந்தது. நாலைந்து நாட்களாக போக்குக்காண்பித்து கொண்டிருந்த மழை திடீரென்று ’மூட்’ வந்து பெய்ய ஆரம்பித்ததால் தயாராக இல்லாத இருவீலரோட்டிகள் சென்னையின் கலாச்சாரமான நடுவீதியில் வண்டியை நிறுத்திவிட்டு மழை விடும் வரை பங்க் கடைக்கு ஒதுங்கி டீ சாப்பிடச் சென்றதால் சில இடங்களில் வண்டிகளின் தேக்கம் ஏற்பட்டது. வண்டிகளுக்குத் தான் அணை. சாக்கடைகளுக்கு இல்லை. சகலமும் கலந்து கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது சென்னையின் அந்த வற்றாத ஜீவநதி. ஒரு வழியாக நீந்தி ட்ராஃபிக் கடலாடி அரங்கத்திற்குச் சென்றடைந்தேன்.
கார் நிறுத்துமிடத்தில் மாருதி 800க்குப் பக்கத்தில் உரசினாற்போல என்னுடைய சேப்பாயியை நிறுத்தச்சொல்லிக்கொண்டிருந்த செக்கியிடம் “எஸ்பிபி வந்துட்டாருங்களா?” என்று காதில் ஆவல் வழியக் கேட்டேன். ”ஆம் இல்லை” இரண்டிற்கும் மையமாக தலையை ஆட்டிவிட்டு உதட்டை அரை எம்மெம் விரித்து அளவாகச் சிரித்தார். மழை இன்னும் விடாமல் பொழிந்துகொண்டிருந்தது. பாஸை எடுத்து இதயத்திற்கு அருகில் சட்டைக்குள்ளே சொருகிக்கொண்டு ஓடினேன். மரங்கள் தற்காலிகக் குடைகளாக உதவிற்று.
அரங்க வாசலில் ஊதுபத்தி விற்றுக்கொண்டிருந்தவரிடம் மீண்டும் கேட்டேன். “ஆரம்பிச்சுடுச்சுங்களா?” அவரும் பதிலேதும் பேசாமல் சிரித்தார். கல்யாண வீட்டில் மேரேஜ் காண்ட்ராக்டர் போல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அங்கேயும் இங்கேயும் ஓடியாடி வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நண்பர் ஒருவர் கண்ணுக்குத் தென்பட்டார். ”என்னாச்சு? எப்ப எஸ்பிபி வருவார்? எப்ப ஆரம்பிப்பாங்க?” என்ற என் நாக்கைத் தொங்கப்போட்ட சரமாரியான கேள்விக் கணைகளுக்கு நிதானமாக பார்த்தார். அவர் கண்களில் “ஏண்டா இப்படி அலையுற?” இருந்தது. ”வாசல்ல நிக்கிற ஒரு முறைவாசல்ட்ட கேட்டேன். எஸ்பிபி எட்டு மணிக்கு மேலதான் வருவாராம்” என்றதும் காற்றுப் பிடுங்கிய பலூனானேன்.
சற்று நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்போகிறார்கள் என்று தெரிந்தவுடன் உள்ளே சென்று எனக்கானச் சீட்டை ஆக்கிரமித்தேன். வலது புறத்தில் “செலிபிரிட்டீஸ்” என்று போர்டு வைத்த இடத்தில் அரைச் சொட்டையாய் ஒருவர் தேமேன்னு உட்கார்ந்திருந்தார். செலிபிரிட்டிகள் இப்போது தான் தங்களது அந்தரங்க அறைகளில் உதட்டுச் சாயமும் கண்ணங்களுக்கு சுண்ணமும் பூசிக்கொண்டிருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன். பரத்வாஜும், உன்னி கிருஷ்ணனும், பார்த்திபனும் அந்த குத்துவிளக்கின் உயரமே இருந்த சரத்தும் அதை ஏற்றினார்கள். அரங்கம் கரவொலி எழுப்பியது.
முதலில் பரத்வாஜின் இசைப் பள்ளி மாணவிகள் யூனிஃபார்மாக மஞ்சள் பாவாடை பச்சை சட்டையில் திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தை பாடலாகப் பாடினார்கள். இது பரத்வாஜின் கனவு ப்ராஜெக்ட்டாம். 133 அதிகாரத்திற்கும் மெட்டமைத்துக்கொண்டிருக்கிறாராம். இது போல மெட்டமைத்துக் கொடுத்தாலாவது நம் பிள்ளைகள் மனதில் பதிகிறதா பார்ப்போம். யாரோ பின்னாலிருந்து “ஓ போடு” மெட்டில் குறள் போட்டால் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகலாம் என்று திருக்குறளைச் சிலாகித்துப் பேசிக்கொண்டார்கள். மை டியர் திருவள்ளுவர்: RIP.
நிகழ்ச்சிக்கு ஆர்க்கெஸ்ட்ரா வாசித்தது லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினர். அவர்களுக்கு இது 25வது வெள்ளிவிழா வருடமாம். 7000 நாட்கள் தொடர்ந்து எங்களுக்கு வேலை கொடுத்த அனைவருக்கும் மற்றும் திரைத்துறைக்கும் பணிவாக நன்றி கூறுகிறேன் என்று 25 வருஷத்திற்கு எவ்வளவு நாட்கள் என்று நம்மை கணக்குப் போட வைத்து ஆரம்பித்தார் லக்ஷ்மண். ஓரிரு பாடல்கள் ஸ்ருதி குழுவினர் பாடினர். எஸ்பிபி எப்போது வருவார் என்று கண்கள் பூக்கக் காத்திருந்தபோது இட்லிப் பூப் போல வெள்ளை வெளேரென்ற பெண்ணொருத்தி பளபளவென்று மேடைக்கு வந்தார். அகலநீளங்கள் ஒத்து வரவில்லையென்றாலும் இந்த முகவெட்டை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது மைக்கில் சத்தமாகச் சொல்லிவிட்டார்கள்.
”ஹியர் யூ ஹாவ் வசுந்தரா தாஸ்”. ஒரு கால் மணி நேரம் கால் கடுக்கக் மேடையில் நடுநாயகியாக நின்று காட்டுக் கத்தலாக கத்தினார். நடு நடுவே “கமான் சென்னை” என்று ரேஸ் குதிரையைப் பார்த்து கூப்பிடுவது போல கூப்பிட்டுப்பார்த்தார். அவர் போட்ட சத்தத்தில் உறைந்து போன ரசிகக்கூட்டம் இம்மியளவும் அசையவில்லை. பாண பத்திரருக்காக ஹேமநாதனை மிரட்டக் கத்தியது ராகமாகமிருக்கும். வ.தாஸுடன் கிடாருக்கு ரெண்டு பேர் (ஒருத்தர் தொப்பியுடன் எகிப்த்திய கிடார் வாசிப்பது போல பக்கத்தில் நின்றிருந்தார்) கீ போர்டுக்கு ஒருத்தர் ட்ரம்ஸுக்கு பெரிய ட்ரம் போல வளர்ந்த ஒருவர் என்று அவரது பேண்ட்டோடு பாண்ட்டும் கோட்டும் போட்டுக்கொண்டு வந்து மேடையில் காது கிழிய கத்தினார். இரவு வீட்டிற்கு வந்து மோர் சாதத்திற்கு ரச வண்டல் தொட்டுக்கொண்டு உறிஞ்சும் வரை காது ஞொய்... என்று குடைந்தது. மைக்கில்லா காலத்தில் பிறந்திருந்தால் அவர்தான் முன்னணி பாடகியாக இருந்திருப்பார் போலத் தோன்றியது.
அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த எஸ்பிபி எட்டு மணிக்குமேல் கோட்டும் சூட்டுமாக மேடையில் தோன்றினார். கொஞ்சம் சோர்வாக இருந்தார். மேடையில் பாடல் பாடும் போது எதாவது சின்னச் சின்ன தவறுகள் நேர்வது சகஜம். பிழை பொருத்துக்கொள்ள வேணும் என்று பணிவாக ரசிகர்களை வேண்டிக்கொண்டு பாடத் துவங்கினார். அந்தப் பணிவுதான் அவரை இவ்வளவு தூரம் உயரமான பல மேடையில் இன்னமும் ஸ்திரமாகத் தாங்கிக்கொண்டிருக்கிறது. இளைய நிலா பொழிகிறது பாடினார். வெளியே பெய்த மழையை ஸ்ருதி குழுவினருடன் ஸ்ருதி சுத்தமான சங்கீதமாக உள்ளே பொழியவிட்டார்.
40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் என்று மேடைத் திரையில் கருப்பு வெள்ளையிலிருந்து கலர்ப் படங்கள் வரை எஸ்பிபியுடன் பணியாற்றிய திரைக்கலைஞர்களின் விஷுவல்களைப் போட்டுக்காட்டினார்கள். அவர் அவ்வப்போது சிரிப்பதும் பேசுவதுமே காதில் சங்கீதமாக வந்து விழுந்தது. ”மொத்தம் பாடிய பாடல்கள் எத்தனை?” என்று பட்டியலிட்டவர்கள் அதையெல்லாம் கணக்கில் எடுத்திருக்கமாட்டார்கள். அடுத்தது முத்தாக ”ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி” பாடினார்.
லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினர் பக்காவாக பக்க வாத்தியங்கள் வாசித்தார்கள். மைக் செட் கட்டிய ஆசாமிக்கு போன பில்லில் செட்டில் பண்ணாதப் பணம் பாக்கி போலிருக்கிறது. நான் கிளம்பும் வரை அவ்வப்போது நிகழ்ச்சியளிப்பவர்களின் கைக்குள் அடங்காமல் மைக்குள் தனியாக “ஊ...ஒய்....ஹீய்.....” என்று அவ்வப்போது தனியாவர்த்தனம் வாசித்துக்கொண்டிருந்தன. எஸ்பிபி பங்கேற்கும் ப்ரியமான நிகழ்ச்சியைப் பாதியில் பிரிய மனசில்லாமல் எழுந்து வந்தேன். காரில் ஏறி ஸிடியை உயிர்ப்பித்ததும் “சங்கீத மேகம்... தேன் சிந்தும் நேரம்...” பாடியது. வெளியே தூறல் விட்டிருந்தது.
#சென்ற வியாழக்கிழமை அனுபவித்தது. செல்ஃபோனை பேசுவதோடு சேர்த்து படம் எடுக்கலாம் என்று கேமரா கோர்த்து சந்தைக்கு அனுப்பிய நோக்கியாவின் உதவியோடு அடியேன் எடுத்த படம்.
-