Friday, March 2, 2012

மாமா மோமோ

சிரங்கு சொறிவதைப் போல முனைப்போடு முகப்புஸ்தகத்தில் எழுதுகிறேன். அப்படி எழுதியதிலிருந்து பலருக்கு பிடித்ததை தொகுத்து திண்ணைக் கச்சேரியாக இங்கே......

********* டாக்டர் *****************
அங்கே ஒரு திருவிழாக் கூட்டம் நின்றுகொண்டிருந்தது. வாசலில் போர்டு இன்னமும் “அவுட்” காட்டிக் கொண்டிருந்தது. ”இன்னிக்கி வருவார்ல” உர்ரென்று மூஞ்சியை வைத்துக்கொண்டு சிடுசிடுவென்று ஒருத்தர் கேட்டார். “நிச்சியம் வருவார்ங்க. எவ்ளோ தடவ சொல்றது” பேச்சில் காரம் சேர்த்தார் சேரை இழுத்துப் போட்டவர். டாக்டர் வரும்வரை இவர்களை கட்டி மேய்க்கவேண்டியது அவரது அன்றாட வேலை.

வெளியில "இன்” போட்ருக்கீங்க. இது ஒரு வெண் தாடிக்காரரின் சந்தேகம். பெரிய வயசில்லை. நாற்பத்தெட்டு ஐம்பதிருக்கலாம். வாட்சை திருகிக்கொண்டே இருந்தார். என்ன அவசரமோ? “நேத்தியிலிருந்து மாத்தலை சார்”. இது கம்பௌண்டர். ”யாருமே அவங்க அவங்க வேலையை ஒளுங்கா செய்ய மாட்டேங்கிறாங்க. அதான் இப்படி இருக்கோம்” இந்தியத் திருநாட்டின் தற்போத நிலைமையை நினைத்து வேதனைப்பட்டு கூரையைப் பார்த்து புலம்பினார் அந்த வெ.தா.

“நாங்க தான ஃப்ர்ஸ்ட்டு?” ஒரு இழுத்துப் போர்த்திய அம்மாளும் அவருடைய லெக்கின் போட்ட பத்தாவது படிக்கும் பெண்ணும் காயர் பாடிக் கேட்டார்கள். “நாங்க ஆறு மணிக்கே வந்து மொதல்ல பார்த்துட்டு போனோம்” முன்னால் கேட்டவர்களை அடிக்க வராத குறையாக பக்கத்தில் டெரர்ராக ஒரு மத்திம வயது ஜோடி பிளிறியது. சேரை இழுத்துப்போட்டவர் இப்போது இந்தியாவிற்கு யார் பிரதமர் என்பது போல குழம்பினார்.

டாக்டர் உள்ளே சென்று சேரில் உட்காருவதற்கு முன்னர் ரெண்டு பேர் தள்ளுமுள்ளுவில் பாய்ந்து நுழைந்துவிட்டார்கள். முன்னால் வந்தவருக்கே முன்னுரிமை என்ற பொது கோட்பாட்டில் ஒருவர் பின் ஒருவராக சென்றுவந்தார்கள். வெளிவருபவர்களில் சிலர் சீட்டோடு, சிலர் சிரிப்போடு, சிலர் புஜத்தில் பஞ்சு வைத்து தேய்த்துக்கொண்டே என்று.

பத்து பேஷண்ட்டுகள் போயிருக்கும் என்று நினைக்கிறேன். வெளியே ஆங்காங்கே அரைத் தூக்கத்தில் இரண்டொருவர் உட்கார்ந்திருந்தார்கள். ”சார் நீங்க போங்க” என்று வழி காண்பித்தார். கிண்டிலை மூடினேன். தாஸ்தாவேய்ஸ்கியின் ”வெள்ளை இரவுகள்” கிண்டிலில் படிக்க ஆரம்பித்து “FIRST NIGHT" முடிந்து “SECOND NIGHT" ஆரம்பித்திருந்தேன். இரவு பதினொன்னரை காட்டியது க்ளினிக் கடிகாரம்.

கிண்டிலின் உபயத்தில் “என் முறை எப்போ?” என்று மற்றவர்களுடன் சரி நிகராக கோதாவில் இறங்காமல் இருந்தது அதன் பெரும் பயனே ஆகும் என்று இந்த கதா காலேட்சேபத்தை முடிப்பதுதான் சாலச் சிறந்தது!

****** ஆதர்ஷ தம்பதிகள் ************
பாதாள சாக்கடைக்காக குதறிக்கிடந்த வீதியில்
மேடு பள்ளங்களுக்கிடையில் இன்ச்சிங் செய்து
பாசமாக திருமதியை இறக்கி ஏற்றி
மொபட்டை ஓட்டிச் சென்றதில்
மிளிர்கிறது காதல்!!

#தாத்தா பாட்டியான தம்பதிகள்!
********** மாமா மோமோ **********

”மாமா மோமோ சாப்பிட்றியா”

“என்னது”

“மோமோ”

மருமான் கேட்க அப்போதுதான் அந்த சைனாக்காரன் கடையைப் பார்த்தேன். ஃபுட் வேர்ல்ட் கீழே சப்பை மூக்கோடு கொழக்கட்டை சொப்பு பிடித்துக்கொண்டிருந்தான். ஜீன்ஸ் போட்ட தலைவிரி கோல இளம்பெண் ஆர்டர் கொடுத்துக்கொண்டிருந்தாள். இங்கு சைவ, அசைவ மோமோக்கள் கிடைக்கும் என்று போர்டு வைத்திருந்தார்கள்.

ஆர்வமாய் நெருங்கிப் பார்த்தேன். சதுர்த்திக்கு பிள்ளையார் நைவேத்தியத்திற்கு வீட்டில் வெல்லக் கொழக்கட்டை செய்வார்களே அதே போல ஒரு வஸ்து. அதே மாவுதான் என்று நினைக்கிறேன். வரிவரியாக டிசையன் போட்ட மார்டன் கொழக்கட்டை. ஃபாஸ்ட் புட் கடைகளில் ஆஸ்தான இடம் வகிக்கும் கோஸ், கேரட், உருளை மூன்றும் சீவியது கொத்துகொத்தாக ஒரு மூலையில் குவித்து இருக்க..

“ஒன் வெஜ் மோமோ” என்று கேட்டால் பூரணத்துக்கு பதிலாக அதை அடைத்து இண்டக்‌ஷன் அடுப்பில் ஏற்றி வேகவைத்து தருகிறார்கள். நான் வெஜ் மோமோ என்றால் சிக்கன், மட்டன் பீஸ் வைத்து சுட்டுத் தருகிறார்கள். அப்புறம் மேலே சிகப்பு பச்சை என்று கலர்க்கலராக சாஸ் தெளிப்பது இது போன்ற சகல ஐட்டங்களுக்கும் சம்பிரதாயமான ஒன்று.

வாசலில் சிறுமலரில் ஒன்னாவது படிக்கும் ட்ராயிங் புக் விற்றுக்கொண்டிருந்த பெண்ணுக்கு சீஸ் ஃப்ராங்கி ஒன்று தானம் செய்துவிட்டு வந்தேன்.

மோமோவை கிட்ட நெருங்கி பார்த்ததோடு சரி! எட்டடி தலைதெறிக்க ஓடிவந்துவிட்டேன். நாளைக்கு ஆஃபீஸ் போகனும். :-)

******* அவ்வை சண்முகி ********
ஞாயிற்றுக்கிழமைகளில் அவ்வை சண்முகியாக மாறப் போகிற அனைத்து ஆண் சிங்கங்களுக்கும் ஹாப்பி வீக் எண்ட்! :-)

********* கொள்ளை காசு *********
அடுத்த ஜென்மத்தில ஒரு கார்பென்ட்டராகவோ அல்லது ஒரு எலெக்ட்ரீஷியனகவோதான் பிறக்கனும். அதுவும் தருமமிகு சென்னையில் பிறக்கனும். அதுவும் ஆர்.வி.எஸ் வீட்டுக்கு வேலை செய்யனும்.
கொள்ளை காசு! :-)

******* அலைவரிசை **************
”ஹள்ளோ”, ”வண்கம்” சொல்லும் எஃப்.எம் ரேடியோ ஜாக்கிகள் எல்லோரும் இன்றைக்கு ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லியிருக்கனும். யாரும் சொன்னதா தெரியலை. ரேடியோ அலைவரிசை ட்ரான்ஸ்மிட்டரைக் கண்டுபிடித்த Heinrich Hertz-ன் பிறந்தநாள். கூகிள் முதல் பக்கத்தில் டூடுல் போட்டு கொண்டாடுகிறது. பாவம் மனுஷன் அல்பாயுசுல போயிட்டார். சாகும்போது 36 வயது.

பிற்காலத்தில் அவரது கண்டுபிடிப்புகள் பற்றி கேட்டபோது அவர் சொன்னது “எனக்குத் தெரிஞ்சு ஒன்னுமில்லை!”. எவ்ளோ அடக்கம். ரேடியோ அலைவரிசைகள் கூட நிர்வாணக் கண்களுக்கு தெரிவதில்லை.

*********** சிவராத்திரி **************
அடியேன் சென்று தரிசித்து படமெடுத்த கோயில்களிலிருந்து எடுத்து கொலாஜ் செய்து சிவராத்திரியன்று ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது.


-

12 comments:

வெங்கட் நாகராஜ் said...

கலக்கலான திண்ணைக் கச்சேரி....

மாமா... மோமோ என்று நானும் ஒரு பதிவு எழுதி வைத்து மாதங்கள் பல ஆகிவிட்டது... போட ஏனோ தோன்றவில்லை இதுவரை... :) சீக்கிரமே பதிவிடுகிறேன்....

CS. Mohan Kumar said...

அங்கேயே ரசித்துள்ளேன். ஆனால் களத்தில் குதித்ததில்லை

//சிரங்கு சொறிவதைப் போல//

RVS பதிவை இப்படி ஆரம்பிக்கணுமா என்ன? சில விஷயம் டீசன்ட் ஆக சொல்லலாம். உங்க கிட்டே நாங்க ரொம்ப எதிர் பார்க்கிறோம் !

சிவகுமாரன் said...

ரசனையான தொகுப்பு RVS

ஸ்ரீராம். said...

மோமோ குறிப்பு கேட்க ஆர்வமாக இருக்கிறது...வாங்க அல்ல, ஐடியா வை வீட்டில் செயல் படுத்தச் சொல்ல!

ஆதர்சமா ஆதர்ஷமா...!

ADHI VENKAT said...

கலக்கலான பகிர்வு.

மோமோ செய்யும் இடத்தில் அடிக்கும் நாற்றமே சாப்பிடவே தோன்றாது. இங்கு நிறைய இடங்களில் கிடைக்கும். செய்யும் இடம் சுத்தமாகத் தான் இருக்கும்..ஆனாலும்....தைரியமில்லை.

படத்தில் உள்ள கோவில்கள் எல்லாமே அருகருகில் உள்ளவையா?

RAMA RAVI (RAMVI) said...

சுவாரசியமான திண்ணைக் கச்சேரி. ஆதர்ஷ தம்பதிகள் அருமை.

RVS said...

@வெங்கட் நாகராஜ்
போடுங்க தல.. படிக்கறோம். :-)

RVS said...

@மோகன் குமார்
ரசித்ததற்கு நன்றி மோகன். சிரங்கு நமநமவென்று அரிக்கும். அதைச் சொறியும் போது ஒரு சுகம் உண்டாகும். அழுத்திச் சொறிந்தால் வலிக்கும். எழுத உட்கார்ந்தால் இரவு நடுநிசியாகிவிடுகிறது. அதனால் அப்படி எழுதினேன். :-)

RVS said...

@சிவகுமாரன்
நாட்ல இருக்கீங்களா ப்ரதர்? ரொம்ப நாளா ஆளையே காணோம். பாராட்டுக்கு நன்றி. :-)

RVS said...

@ஸ்ரீராம்.
ஆதர்ஷம் என்றும் சொல்லலாம். :-)
மோமோ செய்து பார்த்துவிட்டு சொல்லவும். :-)

RVS said...

@கோவை2தில்லி
ஆமாம். கோயில்கள அனைத்தும் காலையில் ஆரம்பித்தால் இரவு அர்த்தஜாம பூஜையின் போது தரிசித்து முடித்துவிடலாம். :-)

RVS said...

@RAMVI
நன்றி மேடம். :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails