இந்திய ரெயில்வேக்கே எங்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகத் தத்துக் கொடுத்தார்ப் போல 17 மணி நேரம் கச்சிகோடா விரைவு(?!) ரயிலில் ஹைதராபாத்திற்கு முதுகுவலிக்கப் பயணம் செய்தோம். எங்காவது வீட்டை விட்டு ஓடிவந்த மாடோ ஆடோ கட்டையை நீட்டிப் படுத்திருக்கும் ஆளில்லா ரயில்நிலைய ப்ளாட்ஃபாரத்தில் கூட எஞ்சின் டிரைவர் கொஞ்ச நேரம் நிப்பாட்டி வாஞ்சையுடன் "வரீங்களா" என்று கேட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார். "என்ன கொடும சார் இது" என்று கருப்புக் கோட்டுப்போட்ட ”கனம் கோட்டார்” டி.டி.ஆர் அவர்களிடம் கேட்டால் அவர் டி.ஆர் பாணியில் "சார்! சிக்னல் கிராசிங் சார்" என்று அடிவயிற்றிலிருந்து ராகமாக இரைந்துவிட்டு அடுத்த கோச்சுக்கு விரைந்தார்.
அவசரத்திற்கு அஞ்சு நிமிஷம் ஒதுங்கும் குவளையில்லா கக்கூஸ் பக்கத்தில் ஸ்லீப்பர் புக் ஆகியிருந்தால் நிச்சயம் அது உங்களின் முன்வினைப் பயனே. அகிலமெங்கும் பயனில் இருக்கும் கழிவறைகளின் ஒட்டுமொத்த துர்நாற்றமும் ஒருங்கே ஆங்கே குப்பென்று வீசியது. இரயில்வே நிர்வாகம் கவனிக்க: எங்களுடன் பிரயாணித்த சகபயணிகளான ஒரு ஒட்டு”மொத்த” எலியார்க் குடும்பமும் பெர்த் கிடைக்காமல் திண்டாடியது.
இரவு முழுக்க ட்ராக் பக்கத்தில் குடியிருப்போரின் உறக்கம் கெடுத்து “ஊ..ஊ” என்று விடாமல் ஊளையிட்டுக்கொண்டே சென்றது கச்சிகோடா. எஞ்சின் ட்ரைவருக்கே மனது வந்து மறுநாள் காலை பத்தேகால் மணிக்கு கச்சிகோடாவில் கச்சிதமாக இறக்கினார். உற்சாகம் குறையாமல் ஓட்டி அலுத்த மகானுபாவனுக்கு ஒரு நன்றி சொல்லி இறங்கினோம். ஹைதராபாத்தில் சுவரெங்கும் ராமராஜ்யம் நடந்துகொண்டிருந்தது. சீதைவேடம் பூண்டிருந்த பிரபுதேவாவின் இரண்டாவது பொண்டாட்டி நயன்தாரா பாலகிருஷ்ணா ராமரோடு போஸ்டர் சிம்மாசனத்தில் அமெரிக்கையாக வீற்றிருந்தார். தியாகைய்யரின் பஞ்சரத்ன கிருதியிலிருந்து பல்லவி எடுத்த ஜெகதானந்தகாரகா.... ஜானகி ப்ராணநாயகா.. பாடல் நன்றாக இருக்கிறது. எவர் க்ரீன் எஸ்.பி.பி. சென்னையில் ஆயிரம் பேரம் பேசி முன்னூறு ரூபாய் பொறுமானமுள்ள தூரத்தை ”ஒற்றைச் சொல்லுக்கு” கட்டுப்பட்டு 170 ரூபாய்க்கு கடந்த அந்த ஆட்டோகாரர் ஏதோ ”உள்ள இருந்துட்டு” வந்தவர் மாதிரி தோன்றினார். சொந்த அலுவல் காரணமாக வந்ததால் முதலில் அதை கர்மசிரத்தையாக கவனித்து முடித்தோம்.
மதியத்திற்கு மேல் சார்மினார் விஸிட். போகும் வழியெல்லாம் ஆங்காங்கே நிறைய ஆட்மினார்கள் தெரிந்தாலும் எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தார்போல கம்பீரமாக இருந்தது சார்மினார். குதுப் வம்சத்தில் பிறந்த சுல்தான் முகம்மது பதினைந்தாம் நூற்றாண்டில் ப்ளேக் நோயை விரட்டியடித்ததின் ஞாபகார்த்தமாக கட்டிய மஸ்ஜித்தே சார்மினார். பட்டிதொட்டியெல்லாம் பதாகை வைக்கும் பழக்கமுடைய நமது அரசியல் ஆட்சியாளர்கள் சார்மினார் வாசலிலும் பெரிதாக ஒன்று நிற்க வைத்திருக்கிறார்கள். இந்த பேனர் நோயை இந்நாட்டிலிருந்து விரட்டியடித்தால் எந்த ஊரில் மினார் கட்டுவது என்றும் யாரிடம் வேண்டிக்கொள்வதென்றும் தெரியவில்லை. யா அல்லா!
கையில் ஒரு முறத்தட்டில் வைத்து கூவிக்கூவி சமோசா வியாபாரம் சூடாக மினாரைச் சுற்றி நடக்கிறது. எலிக்கு தேங்காய் துண்டு போல சமோசாவின் தட்டு தாண்டும் மூக்கு பிடித்து நம்மை தாறுமாறாக இழுக்கிறது. கூட வந்தவர்கள் ஒன்று வாங்கி காக்காய்க் கடி கடித்துவிட்டு பிரமாதம் என்று மோவாயை தூக்கிக் கொண்டு சொல்ல மனசுக்குள் ஆசை அலையடிக்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் பக்கத்தில் நம்மூர் சமாசாரமான சின்ன இலந்தைப்பழம் விற்றுக்கொண்டிருந்தார்கள். எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் குலவையிட்டுப் பாடிய “செக்கச் சிவந்த பழம்” காதில் தானாக ஒலித்தது. ஆனால் விற்றது முழுக்கைச் சட்டை போட்ட ஒரு கிழவர். சாப்பாட்டு ஐட்டங்களில் நாட்டில் ஐந்து ரூபாய்க்கு குறைந்தது எதுவுமில்லை. அதுவும் மினார் வாசலில் கிடைக்குமா? “அப்பா நல்லாயிருக்குமா?’ என்று கேட்ட என் சின்னதிடம் “ஒரு சிலதில குட்டியூண்டு புழு நெளிஞ்சுண்டு இருக்கும். தூக்கிப் போட்டுட்டு சாப்பிடனும்” என்றதும் நாலு அடி தள்ளி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
அதன் வாசனை கொஞ்சம் முகம் சுளிக்கவைக்கக்கூடியது. அதை சொல்லிக்கொண்டே மொசுக்குவது இன்னும் அலாதியானது. மினாருக்குள் காலடி எடுத்துவைக்க தலைக்கு ஐந்து ரூபாய் டிக்கெட் வசூலித்தார்கள். குழந்தைகளுக்கு இலவசம். கொஞ்சம் தாட்டியான ஆள் மினார் மேல் ஏறுவதற்கு படிக்கட்டில் ஏறினால் உள்ளே மாட்டிக்கொள்ளும் பெரும் அபாயம் இருக்கிறது. காதலர்கள் இருவர் இயற்கை அமைத்துக்கொடுத்த இந்த நெருக்கமான வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி நிதானமாக உரசி உரசி ஏறினார்கள். பின்னாலிருந்து “எக்ஸ்க்யூஸ் மீ” என்று மேலே முன்னேற வழி கேட்ட என்னை அவர்கள் பார்த்த உக்கிரப் பார்வை மறக்க இன்னும் நாலு நாள் ஆகும்.
”இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் கட்டிக்காக்கும் இந்தப் பாரம்பரியச் சின்னத்தின் சுவர்களில் தயை கூர்ந்து கிறுக்காதீர்கள்” என்ற கெஞ்சும் வாசக அட்டைக்கு நேர் கீழே ஒரு ஜோடி கையோடு கை கோர்த்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள ஏதுவாக அவர்களது வரலாற்று சிறப்புமிக்க காதலை பொறித்துக் கொண்டிருந்தனர். இந்த அக்கிரமத்தைக் கண்டு பொங்கியெழுந்த ஒரு ஜீன்ஸ் வாலிபன் ஹிந்தியில் கன்னாபின்னாவென்று திட்டினான். கொண்ட கொள்கையில் இருந்து விலகாமல் புன்சிரிப்போடு அவர்களது நாமகரணங்களை ஆட்டீனுக்குள் எழுதி முடித்து அம்புவிட்டு ஒட்டிப் பிறந்த இரட்டைப்பிறவியாய் இடத்தை காலி செய்தார்கள்.
மக்களின் நானாவித கெட்டப் பழக்கங்களினால் அந்த இடம் துப்புரவில்லாமல் சீர்கெட்டுக் கிடந்தது. பான் எச்சில் துப்பியும் தீக்குச்சி மற்றும் சார்மினார் துண்டங்களும் மூலையில் இறைந்து கிடந்தது. ஒரு குவார்ட்டர் பாட்டில் கூட என் கண்ணுக்கு கிட்டாதது என் துர்பாக்கியமே. ”எவ்ளோ காந்தி வந்தாலும் உங்களை திருத்தமுடியாதுடா” என்று ஒரு பட்சி உள்ளுக்குள்ளே உரக்கச் சொன்னது. கத்திச் சொன்னா பாஷை தெரியாத ஊர்ல யார் அடி வாங்கறது?
சார்மினார் வாசலில் முத்துநகைக் கடைகள் ஐந்தாறு வரிசையாக உள்ளது. “ஆயியே...ஆயியே... 100 பர்செண்ட் கியாரண்டி. புராணா ஷாப் ஹை...” என்று க்ரீச் குரலில் ஒரு ஒல்லி பாலகனின் சுண்டி இழுக்கும் குரல். சிரித்துக்கொண்டே திருமதிகள் முத்து கட்டப்பட்ட அலங்கார கழுத்தணிகள், கையணிகள் பார்க்க ஆரம்பித்தார்கள். பொழுது சாய ஆரம்பித்திருந்தது. பொன் அந்தி வேளையில் மினார் மினுமினுத்தது. ரம்மியமான தோற்றம். மனதை கொள்ளையடித்தது. ஒரு முக்கால்மணி நேரம் கடையை சல்லடையாக சலித்துச் செய்த தேர்வில் புண்ணியம் பண்ணிய ஏழெட்டு ஜதை வளையல்கள் பொறுக்கி எடுக்கப்பட்டன. பர்ஸ் நிச்சயம் இளைக்கும் அபாயத்தில் என் பாக்கெட்டில் ஒரு வித பயத்துடன் பதுங்கியிருந்தது. நான் நெஞ்சுரத்துடன் நிமிர்ந்து நின்றேன்.
பேரம் பேச களத்தில் இறங்கியவுடன் அதில் போட்டிருந்த விலையில் பேர் பாதி கழிவுக்கு உடனே ஒப்புக்கொண்டார். ”இந்த முத்து போலியில்லாமல் தரமானதா?” என்ற என் தரமான கேள்விக்கு ”அதுக்குதான் கியாரண்டி கார்ட் தர்றோம்” என்ற உப்புசப்பில்லாத பதிலளித்தார் அந்த ஓனர் இளைஞர். என்னுடன் வந்த பெண்மணிகளின் கண்ணில் தெரிந்த முத்தார்வத்தில் நிச்சயம் நான் வளையல் வாங்காமல் கடையை விட்டு நகரமாட்டேன் என்ற உறுதியில் தன்னுடைய சேல்ஸ் திறமையை வரிசையாக எடுத்து விட்டார். அப்படி இப்படி பேசி இருவருக்கும் பொதுவான ஒரு சகாய விலைக்கு டீலை முடித்தோம்.
சுற்றிக்களைத்ததால் பாலாஜி சாட் என்ற இடத்தில் குட்டியாக வெட்டலாம் என்று முடிவாகியது. “கடை எப்படி?” என்று என்னை கூட்டிக்கொண்டு போனவரிடம் விசாரித்ததில் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ஒரு பி.எம்.டபிள்யூ காரைச் சுட்டிக் காண்பித்தார். இனிமேல் ஆலூ சாட்டை சாப்பிட மட்டும்தான் வாயைத் திறக்கவேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டேன். ரொட்டித்துண்டில் வேகவைத்த மாவு உருளைக்கிழங்கை சேர்த்து இட்டு வாட்டி எடுத்து தருகிறார்கள். அதில் கொஞ்சம் சாஸ் ஊற்றி அதன் மேல் ஓமப்பொடி தூவிக் கொடுக்கிறார்கள். உள்ளங்கையகல ஆலூ சாட் ப்ளேட் பச்சீஸ் ருப்யா. மாயாபஜார் ரெங்காராவ் கணக்காக ஜனம் ரோடில் ட்ராபிக் ஜாம் ஏற்படுத்தி தின்கிறார்கள். அத்தனை ருசி. இத்திருநாட்டு மக்களை உருளை படுத்தும் பாடு இருக்கிறதே! அப்பப்பா..
வயிற்றுக்கு ஈய்ந்தபின்னர் நேரே பிர்லா மந்திர். குன்றின்மேல் வீற்றிருக்கும் வேங்கடவன் கோவில். பார்க்கிங்கிற்கு கஷ்கட்டில் கேஷ் பேக் சுமந்து வந்து பிங்க் ஸ்லிப் கொடுத்து இருபது ரூபாய் வசூலிக்கும் நமது தமிழக கோயில்கள் போலல்லாமல் இலவச பார்க்கிங் அளிக்கிறார்கள். பக்கத்தில் நிற்கும் செக்கியூரிட்டி கூட தலையைச் சொறிந்து காசுக்குக் கை நீட்டிவதில்லை. எப்போதும் சினுங்கும் மொபைலை கட்டாயம் தவிர்க்கவேண்டிய பொருளாக அறிவித்திருக்கிறார்கள். வரிசையில் நிற்கும்போதே பிடிங்கிவிடுகிறார்கள். அப்படியிருந்தும் இரண்டு ஜென்மங்கள் மேலே கொண்டுவந்திருந்தார்கள். ஜட்டியில் மறைத்து எடுத்துவரும் அளவிற்கு அது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகியிருப்பது அதிசயமே.
வரிசையில் நின்று வேங்கடவனின் திருவாயிலை அடையும்போது மின்சாரம் தடைப்பட்டது. யாரோ ஆந்திர ஆர்க்காட்டாரின் வேலையாக இருக்கலாம். இயற்கை ஒளியில், பௌர்ணமி நிலவு பொழிய, மார்கழியின் இதமான வீசு குளிரில் ”கோவிந்தா கோஷம்” விண்ணை முட்ட நிறைவான தரிசனம். மனதுக்கு இதமாக இருந்தது. வெளியே வரும் வழியில் டைமண்ட் கல்கண்டு பிரசாதம் கொடுத்தார்கள். அங்கும் குறுக்குவழியில் உள்ளே புகுந்த இரண்டு பேரை திட்டாமல் சாதுவாகப் பேசி திருப்பி அனுப்பிய பாதுகாவலருக்கு ஒரு சல்யூட். கோவிந்தனின் தரிசனத்தோடு அன்றைய இரவு இனிதாக கழிந்தது. இரவில் நேரமாக நேரமாக ஹைதையில் ஊதக்காற்று அடிக்கிறது. ஸ்வெட்டர் போட்ட பெண்கள் தங்களது தலைவனை மூச்சடைக்க இருக்கப் பின்னிக்கொண்டு இருசக்கரங்களில் ஒருவராக பறந்தார்கள். குளிர் வாழ்க!!
மறுநாள் காலையில் ஃபிலிம் நகர் அசோஸியேஷன் கோயிலுக்கு சென்றோம். வாசலில் விஸ்வரூப தரிசனத்தில் பெருமாள். கண்ணத்தில் போட்டுக்கொண்டே சுமார் முப்பது படியேறி மேலே ஏறினால் தாராபாத்திரத்திலிருந்து ஜலம் சொட்ட மல்லிக்கார்ஜுன ஸ்வாமிவாரு. வலம் வரும் பக்கத்தில் ஆனைமுகன். பின்னால் ஹரிஹரபுத்திரன். அப்படியே ஒரு சுற்று வந்தால் ஸ்ரீவெங்கடாஜபதி. வலம் முடிக்கும் தறுவாயில் சற்றே ஒரு ஐந்தாறு படியேறினால் கிருஷ்ணர், ஆஞ்சநேயர், முருகன், நாகர், நவக்கிரகம், கோதண்டராமர் என்று அனைத்து தெய்வங்களும் ஒரே இடத்தில் ஸ்வாமிகளின் சூப்பர்மார்க்கெட்டாய் எழுந்தருளியிருந்தார்கள். திவ்ய தரிசனம்.
மதியம் வயிறார உண்டு, தொண்டனுக்கும் ஏற்படும் அந்த களைப்பை நீக்கச் சற்று படுத்தெழுந்து மாலை 18:30 சார்மினார் எக்ஸ்பிரஸ் பிடித்தோம். இம்முறை தொடர்வண்டியோட்டியவர் அப்பரெண்டீஸ் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் வண்டி அவரது லகானுக்கு நிற்காமல் படார் படாரென்று பொட்டிக்கு பொட்டி முன்னாலும் பின்னாலும் சினிமாவுற்கு க்யூவில் நிற்கும் பிரகிருதிகளைப் போல முட்டி இடித்து அலைபாய்ந்து நின்றது. வயதானவர்கள் கம்பியில் மோதிக் கொண்டார்கள். வாலிப ஜோடிகளும் ஒருவக்கொருவர் முட்டிக்கொண்டார்கள். ஹைதராபாதி பிரியாணியை மூக்குப் பிடிக்க வெட்டியவர்களுக்கு இலவசமாக ஜீரணமாவதற்கு உதவி புரிந்தார். ஒரு கட்டத்தில் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து என்னாச்சு என்று கேட்கலாமா என்று யோசித்தேன். என் சக பயணிகள் அபராதம் ஐநூறு கொடுப்பதற்கு பதில் நானடித்த காதுகளில் இரத்தம் ஒழுகும் ரம்ப ஜோக்குகளால் என்னையே ரெயில்வேசுக்குத் தாரை வார்த்துவிடுவார்கள் போல தோன்றியதால் ஜகா வாங்கிவிட்டேன்.
நெல்லூரில் டிக்கெட் வாங்கிக்கொண்டு நேரடியாக எங்களது ரிசர்வ் கோச்சில் ஏறி ரைட் ராயலாக எங்களது காலடியில் கிருஷ்ணனிடம் வரம் கேட்க வந்த அர்ஜுனன் போல உட்கார்ந்தான் ஒரு யுவன். ”அப்பா சற்று எழுந்திரு” என்றால் துரியோதனன் போல முறைத்தான். ”ஏனப்பா இப்படி ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்டில் ஏறி வம்பு செய்கிறீர்கள்” என்ற கேள்விக்கு “மணி என்னாவுது” என்றார். ”ஐந்து” என்றேன். “அஞ்சு மணிக்குமேல எல்லோரும் எல்லாக் கோச்சிலையும் வரலாம், ஏறலாம், உட்காரலாம்” என்று தந்திரமாக பேசினார். “அப்படியேதும் எங்களது டிக்கெட்டில் போடவில்லையே. ஸ்லீப்பர் க்ளாஸ் சென்னை வரையில் படுத்துக்கொண்டு போகலாம் என்றுதானே அர்த்தம்” என்று கேட்டால் அந்த அரையிருட்டில் கண்கள் சிவக்க முறைத்தான் அந்த புஜபலம் மிக்க வாலிபன்.
காலை சுருட்டிக்கொண்டு சிவனேன்னு படுத்துவிட்டேன். என்.டி.ஆர் போலிருந்த அந்த டி.டி.ஆர் ஒரு நியாயஸ்தர். அந்நியன் இளைஞன் இந்தியன் தாத்தா போன்ற வயது வித்தியாசமில்லாமல் சமூக சீர்த்திருத்தவாதிகளுக்கு ஆத்ம மித்ரன். திமுதிமுவென்று மந்தை போல ஏறியிருந்த அந்தக் கூட்டத்தை ஒரு திறமையான மேய்ப்போன் போல ஓட்டிக்கொண்டு பல கம்பார்ட்மெண்ட் தாண்டி பட்டியில் அடைத்தார். ஒரு நிறைமாத கர்ப்பஸ்திரீக்கு என்னுடைய சைட் லோயரை பரிசாகக் கொடுத்தேன். கடமையில் கருத்தாக இருந்த அந்த டி.டி.ஆர் அவரையும் அடுத்த கோச்சுக்கு அப்புறப்படுத்தியது எனக்குச் சங்கடமாக இருந்தது.
சென்ட்ரலில் இறங்கும்போதுதான் உரைத்தது இன்றைக்கு ஆபிசுக்கு ஓட வேண்டும் என்று. ப்ரீபெய்ட் ஆட்டோ ஸிஸ்டெத்தில் அவர்களே எங்களது பேட்டைக்கு ஒரு நியாயமான ரேட் பேசி வண்டி ஏற்றிவிட்டார்கள். கையில் ஒரு தடியோடு ஒருத்தர் நின்று ஆட்டோக்களை தட்டி தட்டி வரிசைப் படுத்திக்கொண்டிருந்தார். டோக்கனில் போட்ட காசை மறுபேச்சில்லாமல் வாங்கிக்கொண்டார் ஆட்டோக்காரர். குளித்து முடித்து நித்யானுஷ்ட்டானங்களை முடித்துக்கொண்டு சாப்பாட்டு மூட்டையோடு வண்டியைக் கட்டிக்கொண்டு வேலைக்கு வந்தாச்சு. கார் ஏசியை 18க்கு குறைக்கும்போதுதான் தோன்றியது, சென்னையில் குளிர் விட்டுப் போச்சு!!
படக்குறிப்பு:
சார்மினார் படமெடுத்த ஆங்கிளிலேயே புரிந்திருக்குமே அடியேன் தான் க்ளிக்கியது என்று.
-
34 comments:
அருமையான பதிவு.
அருமையான எழுத்து நடை. எனக்கு திரு சுஜாதா அவர்களை நினைவூட்டுகிறது. உங்களுடனே பயணித்தாற் போன்ற உணர்வு.
மனப்பூர்வ வாழ்த்துகள்.
ஐதராபத்தை மிக அழகாக சுற்றிக்காட்டி விட்டீர்கள்.அருமையான பதிவு.
ரெயிவே நிர்வாகமும் எலி குடும்பத்தாரும் ஏதோ உடன் படிக்கை செய்து கொண்டுடிருக்காங்க போல. போன மாதம் சென்னைக்கு வந்த போது சாதாப்தியில் ஒரு எலியை பார்த்துவிட்டு என் பெண் செய்த கலாட்டா இருகே!!கலை சீட்டில் மடித்து வைத்து கொண்டு விட்டாள் அவளை சென்னையில் இறக்கி அழைத்து கொண்டு போவதற்குள் உயிர் போய் விட்டது.
GREAT VISIT..
அருமை.
Nice review. When did you go? December is a good time to visit there. We were there last Dec.
You should have gone to Film city also. But in 2 days trip, it is not possible
Birla mandir is the BEST one in Hyderabad. I never forget my two time visit to that mandir.
I think here only a scene has been shooted for the Rajni's film Veera. (Rajni goes to that temple to marry one of the heroines, while other also coming up on the steps.. -- comedy scene.
பத்து பைசா செலவு இல்லாம ஹைதராபாத் போயிட்டு வந்தாச்சு! கண்ணுதான் ரொம்ப அலைபாயர்து ஒய்ய்ய் உமக்கு! :)
எங்களையும் கை பிடித்து ஹைதராபாத்துக்கு உடன் அழைத்துச் சென்றது போலிருந்தது உங்கள் எழுத்து நடை. அருமை.
ம்...........
ஒரெ ரயில் பயண்மாகப் படிப்பது போல ஒரு பிரமை. பதிவு முழுக்க சிரிப்பு இழையோடுகிறது.சாப்பாட்டில் காரம் இருந்ததா சொல்லவே இல்லையே,.:)
// பின்னாலிருந்து “எக்ஸ்க்யூஸ் மீ” என்று மேலே முன்னேற வழி கேட்ட என்னை அவர்கள் பார்த்த உக்கிரப் பார்வை
அண்ணா, நீங்க “எக்ஸ்க்யூஸ் மீ” ன்னு தா கேட்டேளா, இல்லே “எஸ் கிச் மீ” ன்னு கேட்டேளா,
ஏன்னா 'pronunciation is international problem'
நம்ப professor சொல்லிருக்காரே. Remember ?
கலக்கிட்டீங்க பாஸ். சுவையான பயணக் கட்டுரை. அருமையான படங்கள்.
அழகா ஹைதராபாத்தை சுற்றி காட்டிட்டீங்க....நல்ல விவரிப்பு....
நல்ல கட்டுரை மைனரே.... தக்குடு சொல்வது போல உம்ம கண்ணை கொஞ்சம் கட்டணும்.... :)
அங்கே மோகன்ஜினு யாராவது இருக்காங்களா கேட்டீங்களா?
சார்மினாரை சுத்திக் காமிச்சதுக்கு நன்றி :-)
அருமையான விளக்க உரையுடன் கூடிய
பயணக் கட்டுரை அருமை
நிஜமாகவே உங்களுடைய அனைத்து அவஸ்தைகளையும்
படிப்பவர்களும்பட நேர்ந்ததைப் போல மிக அழகாக
எழுதிப் போகிறர்ீகள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
@Rathnavel
பாராட்டுக்கு ரொம்ப நன்றி சார்! :-)
@RAMVI
ரயிலோடும் என்னோடும் விளையாடும் சுண்டெலியேன்னு பாடிடலாம் மேடம்.
கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. :-)
@siva sankar
தேங்க் யூ! :-)
@ஸ்ரீராம்.
நன்றி! :-)
@மோகன் குமார்
Mohan! I went there last week. :-)
@Madhavan Srinivasagopalan
Yes Madhava! It was the place where Veera was Filmed. :-)
@தக்குடு
ஏம்ப்பா! கண்ணை மூடிக்கொண்டா ஒரு இடத்தை சுத்திப்பார்க்க முடியும். சொல்லுப்பா... tell..tell..telltell.... :-)))))
@கணேஷ்
பாராட்டுக்கு நன்றி சார்! :-)
@மனசாட்சி
மனசாட்சியே “ம்” கொட்டுவது எனக்கு பெருமைதான்.. நன்றிங்க... :-)
@வல்லிசிம்ஹன்
எங்கள் உறவினர் வீட்டில் உண்டதால் காரம் மட்டாக போட்டு சமைத்திருந்தார்கள். மூக்கிலும் கண்ணிலும் ஜலம் வரவில்லை. :-))
@ViswanathV
விசு! எப்படியப்பா இப்படியெல்லாம் திங்க் பண்றே! நான் சுத்தமானவன்ப்பா.. :-)
@kg gouthaman
பாராட்டுக்கு நன்றி சார்! :-)
@கோவை2தில்லி
பாராட்டுக்கு நன்றி சகோ!
@வெங்கட் நாகராஜ்
கண் கொட்டாமல் உட்கார்ந்து எழுதறேன் தல... கட்டணும்னு சொல்லாதீங்க.. :-))))
@அப்பாதுரை
ரெண்டு நாள் தொடர்ந்து கூப்பிட்டு பார்த்தேன். நோ ரெஸ்பான்ஸ். மலைக்கு போயிருப்பார் என்று நினைக்கிறேன். :-)
@அமைதிச்சாரல்
கூட வந்து பார்த்ததுக்கு நன்றி மேடம். :-)
@Ramani
மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி ரமணி சார்! :-))
Post a Comment