Wednesday, January 25, 2012

ஆ! We!!


அன்னிக்கு கழுத்தை நெறிக்கும் கூட்டம். மாலையும் கையுமா ஒருத்தரோட ஒருத்தர் முண்டியடிச்சுக்கிட்டு ஒரே தள்ளுமுள்ளு. அப்ப அவ அங்க வந்திருந்தாளான்னு தெரியாது. ஆனா ஆத்தாங்கரைக்கு பக்கத்தில தினமும் நாங்க அன்னியோன்யமா சந்திச்சு உறவாடிக்கிட்டுருக்கும் போது அவ மேலேர்ந்து அடிச்ச அந்த கமகம வாசனை நல்லாவே மணம் வீசிச்சு. அப்படியே நாம கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாமா? என்னன்னு கேளுங்களேன்.

அவங்க பாட்டிக்கி எம் மேல நல்ல அபிப்ராயம். ப்ரியம் ஜாஸ்தி. சாதாரணமாக் கொத்தமல்லிப் போட்டு நீர்க்க பச்சை மோர்க்கொழம்பு வச்சாக்கூட ஆசையாசையா வாய் நிறைய “பாபு... இங்க வாப்பா...”ன்னு கூப்பிட்டு தோளைத் தடவிச் சாப்பிடக் குடுப்பாங்க. திண்ணையில் உட்கார்ந்து சதா வில்ஸ் குடிச்சிக்கிட்டிருக்கும் அவ அப்பன் தான் கழுத்தை இறக்கி கண்ணை நிமிர்த்தி ரொம்பத் திமிராப் பார்ப்பான். பாவாடை சட்டையிலேர்ந்து பல்லு போனது வரை ரோடுல போற ஒரு பொண்ணை விடமாட்டான். அப்படியே முழுங்கிடறமாதிரி பார்ப்பான். எப்போதும் கண்ணு ரெண்டும் கோவைப்பழமா சிவந்திருக்கும். ராத்திரி அடிச்சது நெப்போலியனோ ஓல்ட் மாங்கோ. என்னன்னு தெரியாது. ஆனா அவன் தண்ணி வண்டின்னு தெரியும். எங்கனா புதுசா டாஸ்மாக் தொறந்தா அந்தாளை திறப்புவிழாவுக்குக் கூப்பிடலாம். இந்த ஏரியாவில் பெருமைமிக்க மூத்த குடியர். சூப்பர் சீனியர். சும்மாவே வானம் பார்த்த மீசையை ரெண்டு தடவை நீவி விட்டுப்பான். அவன் வாசல்ல இருந்தான்னா அந்தப் பக்கம் நா தலவச்சுப்படுக்கமாட்டேன்.

அவ அம்மா இல்லாத பொண்ணு. பாவம் அவங்க சின்ன வயசிலேயே தவறிட்டாங்க. ஆனா பாட்டி அவள ரொம்ப ஒழுக்கமா வளர்த்தாங்க. ஆறு மணிக்கு விளக்கு வெச்சப்புறம் வாசப்படி தாண்ட மாட்டா. செவ்வாய் வெள்ளி கைலாசநாதர் கோயில் முருகன் சந்நிதி முன்னாடி வாயத் தொறக்காம உதடு மட்டும் அசைய முனுமுனுத்து சஷ்டி கவசம் படிப்பா. நெத்தியில் அள்ளிப் பூசியிருக்கும் விபூதியையும் பக்திப்பழமாக் கண்ணை மூடி கவசம் உச்சாடனம் செய்யிற அவளையும் பார்க்குறப்ப கே.பி.சுந்தராம்பாளுக்குப் பாவாடை கட்டிவிட்டா மாதிரி இருக்கும். அவ கையைப் பிடிச்சுக்கிட்டு கோயிலுக்கு வரும் பாட்டிதான் அவளுக்கு எஸ்கார்ட். அப்பன்காரன் இப்படித் தத்தாரியா, குடிகாரனா ஊர் பொறுக்கிக்கிட்டு திரியறதுனால பாட்டி அவளை உள்ளங்கையில பொத்திவச்சு வளர்த்தா. இப்படி அப்படி வாசல்ல நிக்கக்கூடாது. ரோட்ல நின்னுக்கிட்டு கெக்கபிக்கேன்னு சிரிக்ககூடாது. தலையைப் பின்னி நுனியில ரப்பர் பாண்ட் போட்டுக்கனும். ரெண்டு முழம் மல்லிப்பூ வாங்கி முன்னாடி தோள்ல சரிய வச்சுக்கிட்டா “தாசிப்பொண்ணு மாதிரியாப் பூ வச்சுப்பாங்க”ன்னு நங்குன்னு பின்னாடி இடிப்பா. ஒன்னா ரெண்டா இதுபோல இன்னும் நெறையா கண்டீஷன்ஸ்.

எட்டாவதுலேர்ந்து பதினொன்னாம் க்ளாஸ் போறதுக்குள்ள அவளுக்கு அபரிமிதமான வளர்ச்சி. தளதளன்னு தக்காளிப்பழம் போல இருந்தா. ஒரே ஊர். ஒரே தெரு. ஒரே ஸ்கூல். ஒரே க்ளாஸ். ஒரே செக்ஷன். ஒரு வருஷம் ரெண்டு வருஷமில்லை. ஆறு வருஷம் ஒன்னாவே படிச்சோம். இதுக்குமேல ஒரு ஆம்பிளைப் பையனுக்கு என்ன வேணும். தூரத்தில பார்த்தால கண்ணு ரெண்டுலையும் பல்பு எரியும். அவ பக்கத்தில வந்தா ஏதோ சொல்லத்தெரியாத குறுகுறுப்பு உடம்பில வரும். பதினொன்னு மற்றும் பன்னிரெண்டுக்கு ஹாஃப்ஸாரியை ஸ்கூல் யூனிஃபார்மா கொண்டு வந்திருந்தாங்க அந்த புது ஹெச்செம். சைடில் தெரியும் கொடியிடைக்கு வெர்னியர் காலிப்பர் படம் போட்ட ஃபிசிக்ஸ் ப்ராக்டிகல்ஸ் நோட்புக்தான் மறைப்பு தடுப்பு எல்லாமே. வாலிப வயசுன்னா என்னான்னு எனக்கு அப்பதான் அர்த்தம் புரிஞ்சுது. இராத்தூக்கம் கெட்டுப்போச்சு. நாள் தவறாம நேரம் தவறாம ஸ்கூலுக்கு வந்தேன்னு பாராட்டுப் பத்திரமெல்லாம் கொடுத்தாங்க. நாம எதுக்கு வந்தோம்னு நமக்குத்தானே தெரியும். 

“பாட்டி நா வரேன்”ன்னு அவ குரல் காத்துல மிதந்து வந்துச்சுன்னா துண்டைக்காணும் துணியைக்காணும்னு வாரிச் சுருட்டிகிட்டு நானும் புத்தகமூட்டையை எடுத்துக்கிட்டு கிளம்பிடுவேன். ராஜகுமாரியைச் சுத்தி சேடிப்பொண்ணுங்க போகிற மாதிரி அவளைச் சுத்தி ஒரே பொண்ணுங்க கூட்டமா இருக்கும். காலையிலயும் சாயந்திரத்திலையும் நா சொல்லாமலேயே என்னோட சைக்கிள் அவளை ஃபாலோ பண்ணும். என்னோட சைக்கிள் டயருக்கும் அவளோட காலடிகளுக்கும் கூட ஒரு ஸ்நேகம் பிறந்திடுச்சு. லட்சம் பொண்ணுங்கள்ல ஒருத்தியா அவளை ஒரு பெரும் மைதானத்தில விட்டு நடக்க சொல்லி யாருன்னு அடையாளம் காட்டச்சொன்னா தயங்காம கணநேரத்தில சரியாச் சொல்லிடுவேன். அவளைப் பெத்தவங்களுக்குக் கூட அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்கமுடியாது. முழுப்பரிட்சைக்கு முன்னாடி கணக்கில ஏதோ சொத்தைச் சந்தேகம் கேட்டப்ப தான் நாங்க ரெண்டுபேரும் மொதல்ல பேசிக்கிட்டோம். அவ கேட்க ஆரம்பிச்சத்துக்கப்புறம்தான் இது சந்தேக கேஸ் இல்லைன்னு கண்டுபிடிச்சேன். இது மீண்டும் ஒரு காதல் கதைன்னு ஒரு முடிவுக்கு வந்திருப்பீங்க. சரி. மீதி கொஞ்சம்தான் இருக்கு. அதையும் கேளுங்க.

சந்தேகத்தில ஆரம்பிச்சது சந்தோஷமா தினமும் தொடர ஆரம்பிச்சது. ஆத்துக்கு தண்ணித் தூக்க வரும்போது, கடுகு வாங்க முக்குகடைக்கு போகும்போது, ”லலல்லா” பாடிக்கிட்டே வாசல்ல ஓடி வந்து பூ வாங்கும்போது, விளக்குப்போட கோயிலுக்கு போகும் போதுன்னு எப்பப் பார்த்தாலும் அவ கண்ணு என்னை எங்கவீட்டு சுவரெல்லாம் தேடிச்சு. கண்ணாளனே பாட்டு மனீஷா கொய்ராலா மாதிரி தறிகெட்டு தவிச்ச அவ நெஞ்சு விடாம என்னைத் துரத்திச்சு. முழுக்க மூனு நாளைக்குள்ள நா அவளுக்கு மொத்தமா அடிபணிஞ்சிட்டேன். ஒரு நாள் பொழுது சாயர வேளையில ஆத்தங்கரை அரசமரத்தடி புள்ளையார் கோயில் வாசல்ல ”ஓ”ன்னு அழுதுட்டா. ரெண்டு ஆடும் படித்துறைக்கு அந்தாண்ட சரிஞ்சு அசை போடற மாடும் மட்டும்தான் பார்த்துக்கிட்டு இருந்தது. வேற ஈ காக்கா இல்லை. எனக்கு சடார்னு மனசு விட்டுப்போச்சு. ச்சே. இந்தப் புள்ள இப்படி அழுவுதேன்னு மொத தடவையா தலையை லேசா வருடி அப்படியே மாரோட சாச்சுக்கிட்டேன். “என்னாச்சும்மா”ன்னு துக்கம் விசாரிச்சேன். எம்மார்ல முட்டித் தேம்பித் தேம்பி அழுதா. மல்லிப்பூ மூக்கைத் துளைக்க அவ அழுகை என் இருதயத்தை துளைச்சிச்சு.

தோள்ல சாஞ்சிகிட்டு அணைச்சாப்ல இருக்கிறதனால ”எவ்ளோ நாழி அழுதாலும் பரவாயில்லைன்னு” காமம் சொல்லிச்சு. ”ஐயோ பாவம்! அழறாளே. ஆறுதல் சொல்லுடா முண்டம்னு” காதல் திட்டிச்சு. ஒருவழியா கண்ணை துடைச்சிக்கிட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தா. “என்னைக் கண் கலங்காம பார்த்துக்குவியா”ன்னா. ”ம்”ன்னு தலையை ஆட்டினேன். “சத்தியமா”ன்னு கேட்டுக்கிட்டே என் கையை எடுத்து அவ தலை மேல வச்சுக்கிட்டா. “சத்தியமா”ன்னேன். “ஏம்மா அப்படி அழுதே”ன்னேன். சரேல்னு பாவாடையைத் தொடை வரை தூக்கினாள். வில்ஸ் விளையாடியிருந்தது. ஆங்காங்கே புள்ளி வைக்கப்பட்டிருந்தது. அதிர்ந்துபோனேன். “அடப்பாவி! யாரு அவனா காரணம்?” என்றேன். தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.

குடிகார அப்பனால அவ பட்ற அவஸ்தை எனக்கு நல்லாவே புரிஞ்சுது. ஒரு தடவை காலேஜுக்குப் செமஸ்டர் ஃபீஸ் கட்ட முடியாம தவிச்சா. டவுனுக்கு போய் அதுக்கு தடாலடியா ஒரு ஏற்பாடு பண்ணினேன். மறுநாள் காலையில மோதிரத்தைக் காணோம்னு தெருவில எங்கம்மா போட்ட கூச்சல்ல அந்த ஏரியாவே கிடுகிடுத்துப் போச்சு. ஜன்னல்லேர்ந்து அவ அர்த்தபுஷ்டியா பார்த்தா. நா அதை ஆமோதிச்சுச் சிரிச்சேன். “ஏம்ப்பா”ன்னு அவ கண்ணு கெஞ்சிச்சு. ஆயிரம் காலத்துப் பயிர் அப்பவே என்கிட்ட வளர ஆரம்பிச்சிடுச்சு. அவ அப்பன் தண்டச்சோறு அதைப் பார்த்துட்டான். எங்களை கையும்களவுமாப் பிடிச்சிட்டான்.

எதிர்பார்த்தது போலவே அடுத்த ரெண்டு நாள்ல காலேஜுக்கு இனிமே போகக்கூடாதுன்னு வீட்டுக்குள்ள போட்டு பூட்டிப்புட்டான். கிராதகப் பய.  பாட்டிக்கு ரொம்ப வயசானதால அவனோடப் போராட முடியலை. ஒரு ரெண்டு மூனு நாளைக்கு வாசப் பக்கம் அவளை ஆளையே காணும். எனக்கு எட்டிப்பார்த்துக் கண்ணு ரெண்டும் பூத்துப்போச்சு. அவளைப் பார்க்கமாட்டோமான்னு ஏங்கிக்கிட்டு இருக்கும்போது ஒரு நாள் மத்தியானமா தோள்ல அழுக்குத்துணியெல்லாம் எடுத்துப்போட்டுக்கிட்டு ஆத்தாங்கரைப்பக்கம் போயிக்கிட்டு இருந்தா. ஒரு பத்து நிமிஷ கேப்ல நானும் அங்கே போனேன். மாருக்கு மேல தூக்கிக்கட்டின பாவாடையோட துணிமணி தோச்சிக்கிட்டு இருக்கும்போது படித்துறை மேலே நா நிக்கிறத பார்த்தா.

அப்படியே தோய்க்கிறதைப் போட்டுட்டு மேல வந்து “பாபு! நீ என்ன மறந்துடு”ன்னு வழக்கமா சினிமால வர்ற ஹீரோயின் கணக்கா சொன்னா. கண்லேர்ந்து தண்ணி கரைபுரண்ட வெள்ளமா வந்துச்சு. பக்கத்துல ஓடற காவிரியில கூட அவ்ளோ தண்ணி நா பார்த்ததில்லை. “என்னம்மா ஆச்சு”ன்னு ஆதூரமாக் கேட்டேன். “இல்ல அவன் நம்மளை வாழ விடமாட்டான். நீயாவது உனக்கு புடிச்சவளை கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு”ன்னு குரல் கம்ம துக்கம் தொண்டையை அடைக்கப் பேசினா. “ச்சீ. அசடு. இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கு நீயும் நானும் தான் புருஷன் பொண்டாட்டி. உங்கப்பன் மட்டும் எதாவது சொல்லட்டும். பேத்துர்றேன்”ன்னேன். ஒரு அஞ்சாறு செகண்ட் மௌனமா நின்னா. அரசமரத்துக் காத்து அடிச்சு வீசி கலஞ்ச தலையை ஒரு கையால கோதிக்கிட்டே...

”அது என் அப்பா இல்ல”ன்னாப் பாருங்க. அப்பவே இடிஞ்சுப் போய்ட்டேன். “யார் அது?”ன்னு பதபதைச்சுக் கேட்டேன்.  “அது என்னோட அம்மாவுக்கு புருஷன்”ன்னா. அப்ப நீ யார் பொண்ணுன்னு கேட்கறதுக்கு முன்னாடியே “எங்கம்மாவுக்கும் அவங்களோட முதல் காதலனுக்கும் பொறந்தவ நா. மூனாவதா இந்தாளைக் கட்டிக்கிட்டாங்க. பால்காரப் பன்னீர் தெரியும்ல உனக்கு. ஒரு நாள் அவனோட சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க. எங்கிருந்தோ இதப் பார்த்துப்புட்டு ராத்திரி வந்து ஆவேசமா தூணோட சேர்த்து மண்டைய நெத்தினான். ரத்தம் கித்தம் எதுவும் வரலை. பொட்டுல பட்டு ஆள் அவுட். நானும் பாட்டியும் கிடுகிடுத்துப்போய்ட்டோம். பயத்துல வாயே திறக்கலை. காலையில ஹார்ட் அட்டாக்ல போய்ட்டா எம்பொண்டாட்டின்னு ஊருக்கு நீலிக்கண்ணீர் வடிச்சிட்டு சுடுகாட்டுக்குக் கொண்டு போய் எரிச்சிட்டு வந்துட்டான்”

“அந்த துக்கத்தைவிட ஒரு கேவலமான விஷயத்தைச் சொல்றேன். அவன் ஒரு இன்செஸ்ட். பல தடவை வீட்ல ட்ரெஸ் மாத்திக்கும்போது என்னையே எட்டிஎட்டிப் பார்ப்பான். விகாரமா சிரிப்பான். போதை தலைக்கேறிடிச்சுன்னா அவனுக்கு பொம்பளைங்கள்ல பொண்ணு, பொண்டாட்டிங்கிற பேதமே கிடையாது. அம்மா போனதுலேர்ந்து தினமும் நான் ஒரு விதமான சித்ரவதையை அனுபவிக்கிறேன்.” இப்படி அவ பாட்டுக்கு சொல்லிக்கிட்டே போனப்ப என் ரத்தம் கொதிச்சுப்போச்சு. மவனே அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடனும்னு கொலவெறி வந்திச்சு. இப்படி நா நினைச்சுக்கிட்டே இருக்கும் போது அவ உடனே கடகடன்னு ஆத்துக்கு ஓட ஆரம்பிச்சா. ஒன்னுமே புரியாம நா திரும்பிப் பார்த்தபோது கையில பாட்டிலோட அவ அப்பங்காரன் வந்துகிட்டு இருந்தான்.

எனக்கு பயமா இல்லை. என்ன பண்ணிடுவான்னு நெஞ்சை நிமிர்த்தி நின்னுக்கிட்டுருந்தேன். வாய் குழறி கன்னாபின்னான்னு வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினான். உலகத்தில அவ்வளவு கெட்டவார்த்தை இருக்குன்னு எனக்கு அப்பத்தான் தெரியும். சண்டை போட்டுக்கிட்டே படியிறங்கி கடைசிப் படியில தோச்சிக்கிட்டு இருந்தவ கிட்ட என்னைக் கொண்டுவந்துட்டான். ”அப்பா.. அவர எதுவும் பண்ணிடாதீங்கன்னு” அவன் காலைப் பிடிச்சுக்கிட்டு அவ கெஞ்சறா. அவன் மசியலை. எனக்கு கோபம் தலைக்கேறிப்போச்சு. அவனைப் பிடிச்சு ஆத்துல தள்ளலாம்னு கையத் தூக்கினேன். க்ஷன நேரத்துல தோள்ல போட்டிருந்த அந்த சிகப்புக் கம்பளித் துண்டை எடுத்து முறுக்கி என் கழுத்துல போட்டு நெறிக்க ஆரம்பிச்சான். எனக்கு தொண்டை கமறுது. மூச்சு அடைக்குது. உசுருக்கு போராட ஆரம்பிச்சேன்.

ஒரு ஸ்டேஜுக்கு மேல என்னால அந்த இரும்புப் பிடியைத் தளர்த்த முடியலை. மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு. அவன் காலைப் பிடிச்சு அவ அசராம உலுக்கிக்கிட்டே இருந்தா. அதீதமா உடம்பு குலுங்குனதுல அவளோட பாவாடை படக்குன்னு அவிழ்ந்திருச்சு. என் கழுத்தை நெறிச்சுக்கிட்டு இருந்த அவனுக்கு இதைப் பார்த்ததும் அப்படியே புதுரத்தம் பாஞ்சா மாதிரி இருந்தது. ஒரு அசுரபலத்தோட என்னை  ஆத்துல தூக்கிக் கடாசினான்.

எல்லாம் முடிஞ்சு பார்க்கிறப்ப ஹால்ல உப்பிக் கிடந்த என்னோட உடம்புக்கு எல்லாரும் மாலை போட்டுக்கிட்டு இருந்தாங்க. அவ வந்தாளான்னு தெரியலை. அவ அப்பங்காரன் அதே மாதிரி வில்ஸ் குடிச்சிக்கிட்டு அவங்கவீட்டு வாசல் திண்ணையில உட்nகார்ந்து இருந்தான். நீச்சல் தெரியாத பையன் ஆத்துல விழுந்து செத்துப்போய்ட்டான் அப்டீன்னு ஊர்ல இருக்கிறவங்க நினைச்சாங்க. பாட்டிக்கும் அவளுக்கும் நா எப்படி செத்தேன்னு தெரியும். இருக்கட்டும். ஒரு நா அவனை பழிவாங்காம விடமாட்டேன்.

என்ன கேட்டீங்க? இப்ப நா எங்கேருந்து பேசிக்கிட்ருக்கேனா? சுடுகாட்ல இருக்கிற புளியமரம்தான். இருங்க.. தப்புச் சத்தம் கேட்குது. ஓ. அங்க இன்னொரு பிரேதம் வருது. அட அவ அப்பன்காரன் முன்னாடி கொள்ளிச்சட்டி தூக்கிட்டு வரான். பாட்டி மண்டையப் போட்ருச்சா. கொஞ்சம் இருங்க. என் பக்கத்துல வந்து கிளைமேல ஒருத்தி உட்கார்றா. “உங்ககூட சேரணும்னு நினைச்சேன். அதான் நேரே வந்துட்டேன். உங்களுக்குத் துண்டு. எனக்கு என் தாவணி”. 

”ஆ! We!!”

படம்: என்னுடைய புகைப்பட பரணிலிருந்து....

-

Sunday, January 22, 2012

நண்பன்: யாரு மச்சான்?


காலகாலமாக சத்தியத்திற்கே சென்று பழக்கப்பட்ட கார் டயர்கள் நேற்று ஐனாக்ஸை மிதித்தது. அம்பட்டன் வாராவதி என்று சென்னைச் செந்தமிழில் அழைக்கப்படும் ஹாமில்டன் ப்ரிட்ஜ் ஓரத்தில் கூவம் நதிக்கரையோரமாக சிக்கனமாக கட்டியிருந்த சிட்டி செண்டர் ப்ளாஸாவில் எங்களைப் போன்ற பெத்த க’ஷ்’டமர்களுக்காக பிரத்தியேக காட்சி என்று டாடா கம்பெனியினர் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்திருந்தார்கள். “இந்தக் கடிதத்தை கொண்டு வரும் பையனிடம் --- டிக்கெட் கொடுக்கவும்” என்று அனுப்பியிருந்த இமெயில் கடிதாசை ஐனாக்ஸ் வாசலில் கொடுத்தால் மறுகையில் டிக்கெட் கொடுப்பார்கள் என்றும் ஒரு மின் லிகிதம் வந்தது. ”முந்துபவருக்கே அமர்வதில் முன்னுரிமை” என்று ஒரு கடைசி வரியை 20 பாயிண்ட்டில் போல்ட் செய்து அடிக்கோடிட்டிருந்தது அந்த இமெயிலின் சிறப்பம்சம்.

வெள்ளிக்கிழமை லன்ச்சிலிருந்தே வார விடுமுறை ஆரம்பிக்கும் குதூகலமான நிறுவனங்களுக்கு இடையே; 24x7x365 ”குற்றேவலே எங்கள் உயிர் மூச்சு” என்று உழைக்கும் வர்க்கத்திற்கு இச்சினிமாவிற்கு முதலில் முந்துவது எப்படி? நண்பன் விமர்சனம் எங்கே என்று புருவம் சுருக்குபவர்கள் இந்தப் பாராவைத் தாண்டும்படி கோரப்படுகிறார்கள். ரேஸில் தியேட்டரை அடைந்து முதலில் சீட்டுக்குத் துண்டு போடுவது எப்படி என்று ஆராய்ந்ததில் என்னுடைய மருமானின் நண்பன் ஆபத்பாந்தவனாய் ஒத்தாசைக்கு வந்தான். ஐனாக்ஸின் கொல்லைப்புறத்தில் வசிக்கும் அந்தப் பையன் நண்பனுக்காக மூனரைக்கே முகாமடித்து வாங்கிக்கொடுத்து அந்தச் சரித்திரப் படத்தை பார்ப்பதற்கு உதவி புரிந்தது பாதி படத்தில் என் கண்களில் நீர்க் கோர்த்தது. ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்!! திரையில் சில விநாடிகளே நீடிக்கும் படச் சான்றிதழிலிருந்து கண்கொட்டாமல் பார்க்கும் எனக்கு பார்க்கிங்கில் என்னுடைய ட்ரைவிங்கின் சகல திறமைகளையும் காட்டிக் காரை நிறுத்துவதற்குள் டைட்டில் முடிந்துவிட்டது.

த்ரீ இடியட்ஸ் பார்க்காத ஒரு இடியட் நான். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என்ற நண்பர்களுடைய கல்லூரி வாழ்வில் நடக்கும் பொது நிகழ்வுகள்தான் கதை. கல்லூரிக்கதைகளில் காதல் இருந்தால் அந்தப் பெண்ணின் அப்பன்காரன் நிச்சயம் வில்லனாக இருப்பான். இங்கே ப்ரின்ஸிபால் சத்யராஜ் வில்லன் மாதிரி. அவருடைய ஸ்ட்ரிக்ட்னெஸ் குணாதிசயம்தான் வில்லன். சத்யராஜ் மதிய இடைவேளையில் கல்லூரி வளாகத்தினுள் சவரம் செய்து கொள்வதை படத்தில் புகுத்தியது இந்நூற்றாண்டின் சினிமாப் புரட்சி.

”Life is a Race. நீங்க ஓடிக்கிட்டே இல்லைன்னா பின்னாடி வர்றவன் உங்களை மிதிச்சிக்கிட்டுப் போய்டுவான்” என்று கையில் ஒரு பொம்மை மைனாக் குஞ்சை வைத்துக்கொண்டு புது மாணவர்களுக்கு புத்தி புகட்டுகிறார் வைரஸ் என்கிற விருமாண்டி(VIRU) சந்தானம்(S). வருடாவருடம் அந்த வாந்தியை அவர் எடுக்கிறார் என்பதை அந்த ஹாஸ்டல் கேம்பஸில் பொட்டிபோடும் இஸ்திரி சிறுவன் எம்.எம் (மில்லி மீட்டர் (எ) மணிமாறன்) அவரை இமிடேட் செய்வதிலிருந்து தெரிகிறது. சத்யராஜ் புஸ்புஸ்ஸென்று பேசுவது அவருடைய மானரிஸமாகக் காட்டப்படுகிறது. அந்த புஸ்புஸ்ஸுக்கு அழுத்தம் கொடுக்கும் வசனங்கள் கொஞ்சம் மிஸ்மிஸ்ஸிங்.

வித்தியாசமாக மாத்தி யோசியாக வரும் விஜய் முதல் காட்சியிலேயே சீனியருக்கு கரண்ட் ஷாக் கொடுக்கிறார். அந்த சீனியருக்கு எங்கே கரண்ட் ஷாக் கொடுத்தார் என்று எழுதினால் இங்கே நாறிவிடும். ஹாஸ்டல் ரூமுக்கு முன்னால் ஒன்றுக்கு அடிப்பது எந்தக் கல்லூரியின் ரேக்கிங் கலாச்சாரம் என்று தெரியவில்லை. இவர்களின் கற்பனைத் திறன் மூக்கின் மேல் கைவைக்கத் தூண்டுகிறது. படத்தில் பஞ்சவன் பாரிவேந்தன் என்ற தமிழொழுகும் பெயர் விஜய்க்கு. இண்டெர்வெல்லுக்கு முன்னால் டைரக்டர் சூர்யாவை நான் தான் பஞ்சவன் என்று பஞ்ச் வைக்கச்சொல்லி இடைவேளை விடுகிறார்கள். ஒன்றும் பெரிதாகக் கவரவில்லை.

ஜீவாவின் பி.ஈயை நம்பி அவரது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் வாழ்வியல் அடங்கி இருக்கிறது. காசநோயுடன் கட்டிலில் படுத்தபடுக்கையான சீக்கான தந்தை, சொற்ப வருமானத்தில் குடும்பத்தை ஓட்டும் அன்னை, இன்னும் வரப்போகும் 500 வருஷ தமிழ்த் திரைப்படங்களுக்கு முடிச்சு சங்கதியாக வரப்போகும் கல்யாணம் ஆகாத அசிங்கமான அக்காவென்று எல்லாமும் அவருக்கும் இப்படத்தில் இருக்கிறது. ஜீவாவுக்கு அவரது நிலைமையப் புரியவைக்க 25000000 என்ற இலக்கத்தை போர்டில் எழுதி “இது பாரி அப்பாவோட மாத வருமானம்” என்றும் கடைசி மூன்று சைபரை அழித்து “இது வெங்கட் அப்பாவோட மாத சம்பளம்”, இன்னும் கடைசி ஒரு சைபரை அழித்து “இது தான் உங்க குடும்பத்தோட வருமானம்” என்று விளக்குவது நல்ல சீன். சத்யராஜின் கண்டிப்பிற்கு ஒரு மாணவனை பலிவாங்குவது அக்கிரமம்.

வெங்கட்டாக வரும் ஸ்ரீகாந்த் தன் பங்கிற்கு சுமாராகச் செய்திருக்கிறார். மிருகங்களை படமெடுக்கும் ஆர்வலராக இருக்கிறார். தனது விருப்பத்திற்கு மாறாக தகப்பனாரின் ஆசைக்காக பி.ஈ படிக்க விழைகிறார். மீசையை சுத்தமாக மழித்தால் கல்லூரி மாணவன் வயதை எட்டிப்பிடிக்கலாம் என்று பளபளா சவரம் செய்து கொண்டிருக்கிறார். யாராவது கொடுவா மீசைக்காரர்கள் இந்த உத்தியை முயற்சித்துப் பார்த்து கமெண்ட்டவும். இப் படத்தின் கதையே ஆரம்பத்தில் அவரது நேரேஷனில் தான் விரிகிறது. வைரஸின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் மாடியிலிருந்து விழுந்த ஜீவாவை சொஸ்தப்படுத்தும் பணியில் இருக்கும் விஜய் அவனுடைய அவலட்சணமான அக்காவை ஸ்ரீகாந்த் கல்யாணம் செய்துகொள்வான் என்கிற ஃபால்ஸ் ப்ராமிஸ் கொடுக்கும் போது ஏதோ நடித்தமாதிரி இருக்கிறது. நிறைய இடங்களில் ரெண்டோடு மூன்றாக ஃப்ரேமுக்குள் வந்துபோகிறார். தந்தை தனது விருப்பத்தை பூர்த்தி செய்கிறார் என்று தெரிந்ததும் கட்டியணைத்துக்கொள்ளும் காட்சியில் நடிப்பு பரவாயில்லை.

இலியானா என்ற ஒல்லிக் குச்சி உடம்புக்காரி தான் ஹீரோயின். வைரஸின் பெண்ணாக பஞ்சத்தில் அடிபட்டது போல இருந்தார். தெற்கத்திக்காரர்கள் இப்படி ஒரு பட்டுக்குஞ்சலம் கட்டிய ஈர்க்குச்சியை எப்படி ஜொல்லொழுக விரும்புகிறார்கள் என்பது ”ஒல்லி பெல்லி” என்ற பாடலில் தெளிவாக விளங்குகிறது. அங்கே அவர் இடுப்பைச் சுழற்றி ஆடியது இங்கே நமக்கு கயண்டுவிட்டது. டாக்டர் படிக்கும் முனியம்மா என்றுதான் நெஞ்சில் நிற்கிறார். ”வைரஸ் இல்லாக் கணினி” என்று சத்யராஜை வம்பிக்கிழுத்து அவரது மகளாக வரும் இலியானாவிற்கு பாட்டெழுதியிருக்கும் மதன் கார்க்கியின் புலவர்க்குசும்பு நன்றாக தெரிகிறது. படத்திற்கு வசனமும் அவரே.

படத்தின் ஆங்காங்கே ஒரு சில காட்சிகளில் இலியானாவை கலியாணம் செய்துகொள்ள ஒரு கேரக்டர் வருகிறது. எல்லாவற்றையும் ப்ராண்ட் பார்த்து தெரிவு செய்யும் திருவாளர். விஜய் செய்யும் சில சட்னி சேஷ்டைகள் இலியானாவை அவர் பக்கம் ஈர்த்துவிடுகிறது. ஷூக்காலில் சட்னி கொட்டியதும் “இடியட் இது 400 டாலர்ஸ். தெரியுமா?” என்று மூச்சிரைக்க இரைகிறது அந்த பாத்திரம். மோதலில் ஆரம்பித்தது கடைசியில் ”முத்தம் கொடுக்கும் போது மூக்கோடு மூக்கு இடிக்குமாப்பா” என்ற கேள்வி வரை வந்து நிற்கிறது.

ஒரு முக்கியமான விஷயம். படமெங்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் உள் ஜட்டித் தெரியக் கால்சராயை அவிழ்த்து திரைக்குப் பிருஷ்டத்தைக் காண்பித்து சீனியர்களுக்கு நமஸ்காரம் செய்வது இளைஞர்களின் மரியாதை மொழி. ’குசு’ம்பன் கதாப்பாத்திரத்தில் ஸைலன்ஸர் என்று கல்லூரியில் டீஸ் செய்யப்படும் சத்யன் ”டீச்சர்ஸ் டே” கொண்டாட்டங்களை காம்பியர் செய்கிறார். அவரது விழாப் பேச்சில் கற்பித்தலை கற்பழித்தலாகவும், கல்வி அமைச்சரை கலவி அமைச்சராகவும், அவரின் கொள்கைகளை கொங்கைகளாகவும் Find and Replace செய்கிறார் விஜய். தமிழ் தெரியாத சத்யன் மேடையில் அதை சத்யராஜையும், கல்வி அமைச்சரையும் பார்த்து அபிநயத்துப் பேசி கிச்சுகிச்சு மூட்டுகிறார். ஒன்றும் பிரமாதமாய் இல்லை.

புதுச்சேலைக் கட்டக் கூட தன் அம்மாவிடம் பணம் இல்லாததை ஜீவா துக்கம் தொண்டையடைக்கச் சொல்லும் சீரியஸான காட்சிகளில் கூட ”உங்கம்மா தெரசாவாடா” என்று கிண்டல் செய்வதும், உயிருக்கு போராடும் அவன் தந்தையை “உங்கப்பா புட்டுக்கிட்டாரா”ன்னும் விளையாடும் வசனங்கள் கொஞ்சம் நெருடுகிறது. வசனங்கள் பளிச்சென்று ஷார்ப்பாகவும் இல்லை. படத்தில் பெரிய ஆறுதல் விஜய்யை அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் ஷங்கர். க்ளைமாக்ஸில் காதலி இலியானாவின் அக்காளுக்கு பிரசவம் பார்க்கிறார் விஜய். மின்சாரம் தடைபட்ட நேரத்தில் தான் தயாரித்த இன்வெர்ட்டரின் கரண்ட் உதவியில் இலியானா வெப்கேமராவில் விவரிக்க ஹாஸ்டல் பசங்களின் சேர்ந்துதவில் தாதியாகிறார். ஆல் இஸ் வெல் என்கிற தனது தாரக மந்திரத்தை உச்சாடனம் செய்து அழாது பிறந்த பிள்ளையை அழ வைக்கிறார். தாங்க முடியவில்லை. ஆல் இஸ் பேட்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அஸ்கு லஸ்கு என்று எல்லா பாஷையிலிருந்தும் வார்த்தைகளைப் பொறுக்கி போட்டு எழுதியது பரவாயில்லையாக இருக்கிறது. ஒல்லிபெல்லி பாடல் க்ளப் டான்ஸ் வகையறாவில் போட்டிருக்கிறார். இதுவும் எங்கிருந்தோ உருவியது போலத்தான் இருக்கிறாது. ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான் பாடல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைப்புப் பாடல். பின்னணியில் பிரமாதமாய் ஒன்றும் இல்லை. படத்தில் காமிராதான் டாப். க்ளோஸ் அப் மற்றும் கல்லூரியை தூரத்திலிருந்து மற்றும் ஹாஸ்டல் அறை இரவுக் காட்சிகள், நீலநிற கோவா கடற்கரை, வைரஸ்ஸின் கல்லூரி கேபின் என்று இண்டோரும் அவுட்டோருமாய் அமர்க்களப்படுத்துகிறது மனோஜ் பரமஹம்சாவின் காமிரா. புகுந்து விளையாடியிருக்கிறார் மனுஷன். விண்ணைத் தாண்டி வருவாயா, ஈரம் போன்ற படங்களில் முத்திரை பதித்தவர் இவர்.

ஸ்பேஸ்ல பேனாவுக்கு பதில் பென்ஸில் உபயோகித்திருக்கலாமே, மெஷின் என்பதற்கான விளக்கம் என்று வித்தியாசமாக சிந்திப்பவராக வரும் விஜய் கடைசியில் கொஸாக்ஸி பசப்புகழ் என்ற அகில உலகம் போற்றும் விஞ்ஞானி என்கிற போது தியேட்டரில் நமக்கு மெய்சிலிர்க்கிறது. அவர் வழிநடத்தும் பள்ளியில் எல்லாம் மெஷின் மயம். பசங்கள் இளவயதிலேயே விஞ்ஞானப் பாதையில் பயணிக்கிறார்கள். நினைத்தாலே நெக்குருகுகிறது. படத்தின் பாதியில் விஜய் அண்ட் கோவிற்கு சவால் விடும் சத்யன் கடைசியில் அவர் கொடுக்கும் ஆர்டரில் தான் பிஸினெஸ் நடத்துகிறார் என்கிற தொழில் ரகசியத்தையும் வெளியிடுகிறார்கள். மரியாதையாக கடைசி அரை மணி நேரத்திற்கு முன்னால் எழுந்து வந்திருந்தால் மயிலாப்பூர் சரவணபவனில் இடம் கிடைத்து திருப்தியாக பசியாறியிருக்கலாம். ச்சே! க்ளைமாக்ஸ் பார்ப்பது அவ்வளவு பெரிய குற்றமாப்பா?

மொத்ததில், ஷங்கர் படமா இது? என்று அதிசயமே அசந்து போகும் படம் இது!!

பட உதவி: http://www.apden.com/

Wednesday, January 18, 2012

சாம்பார் வடா

திண்ணைக் கச்சேரிகளுக்காக பிரத்யேகமாக எழுதுவதை விட்டுவிட்டேன். பல தரப்பட்ட விஷயங்களை முகப்புஸ்தகத்தில் சல்லடையாக அலசி ஆராய்ந்துகொண்டிருப்பதால், நிற்க. (வம்பு பேசிக்கொண்டிருப்பதால் என்று திருத்தி வாசிக்கவும்) அங்கிருந்து திரட்டி இங்கே தருகிறேன்.

*********ராஜராஜனின் புதுவருஷ உரை**********
”நாட்டைச் சுற்றிக் கரும்புகையாய் சூழ்ந்திருந்த போர்மேகங்கள் விலகிவிட்டன. அதோ! கதிரவன் சுடரொளி வீசிப் புறப்பட்டுவிட்டான். இந்தத் தைத்திங்கள் முதல் எல்லோருக்கும் நல்லது பிறக்கட்டும். சத்தியம் ஜெயிக்கட்டும். பயிர் செழிக்கும் தஞ்சைத் தரணியிலிருந்து முப்போகமும் விளைந்த நெற்கதிர்கள் நமது தேசத்தை வளப்படுத்தட்டும். மக்கள் பூரண மகிழ்ச்சியுடன் எப்போதும் களித்திருக்கட்டும். யாரங்கே... ஏன் பதுங்குகிறாய்..”

ஒன்றுமில்லை மன்னா”

”ஏய்.. என்னது இது கையில்... வட்டமாக அட்டைப்பெட்டியில் வைத்திருக்கிறாய்”

“இது பிட்சா மன்னா.”

“அப்படியென்றால்”

“சீஸ் பீஸா.. தக்காளி போட்டு ரொட்டித் துண்டு போல ஒரு ஐட்டம்...”

“அடேய்.... இப்போதுதான் நெல்மணிகளைப் பற்றியும் அதன் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.. யாரது அங்கே... உன் கையில் என்ன? ஏதோ வாளி போல வைத்திருக்கிறாய்”

“கே.எஃப்.ஸி பக்கெட் சிக்கன் மன்னவா...”

“கே...எஃப்..... என்னதுதிது புரியாத பரங்கியர் பாஷை பேசுகிறாய்..”

“கென்டக்கிஸ் ஃப்ரைட் சிக்கன்...”

“வீட்டில் உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் சோறாக்கிப் போடவில்லையா... ஐயகோ!.....”

”விஷ் யூ ஆல் ஹாப்பி பொங்கல்!!”

“யாரப்பா நீ.. சிறுவனாய் இருக்கிறாய்... என்னென்னவோ தஸ்புஸ்ஸென்று பேசுகிறாயே”

“எம்பரர் ராஜராஜ்... திஸ் இஸ் பொங்கல் விஷஸ் ஃப்ரம் மீ தி பப்லூ”

“என்னப்பா...புரியாமல் பேசுகிறாய்...”

“லீவ் இட். ஐ ஹாவ் அனதர் இம்பார்ட்டண்ட் வொர்க். நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம். வொய் திஸ் கொலவெறி கொலவெறி டீ.....”

“அடப்பாவி.. ஏதோ அந்தப் பெண்ணைப் பார்த்து கண்டபடிப் பாடிக்கொண்டு போகிறானே... எல்லோரையும் இந்தப் பெரு ஆவுடையார் காக்கட்டும்...”

தஞ்சைப் பெரியகோயில் வாசலிலிருந்து மாமன்னன் ராஜராஜசோழன் நாட்டு மக்களுக்கு புது வருஷ உரையாற்றிக்கொண்டிருக்கும்போது இரு வீரர்கள் பீஸாவும் கே.எஃப்.ஸி சிக்கனும் கொண்டுவந்து மன்னனிடம் வசமாக மாட்டிக்கொண்டபோது நான் தூக்கம் கலைந்து எழுந்தேன்.

#இதை இன்னும் பெரிதாக எழுத விருப்பம். நேரமின்மையால் முடிக்கிறேன்.

***********குடும்ப கொரி************

 FAMILY SQL QUERY
-----------------------
SELECT (AFFECTION,KNOWLEDGE,LOVE,HAPPINESS,WEALTH) AS "PEACE" FROM FAMILY_TREE WHERE AFFECTION = (SELECT UNCONDITIONAL_AFFECTION FROM MOTHER) AND KNOWLEDGE = (SELECT LIFE_EXPERIENCE FROM FATHER) AND LOVE = (SELECT BOUNDLESS_LOVE FROM WIFE) AND HAPPINESS = (SELECT ALL_ACHIEVEMENTS FROM OUR_CHILDREN) HAVING WEALTH IN (SELECT ESTATE FROM GRAND_FATHER) ;

If you execute this Query in our life database.....

#நிமிஷத்தில் தோன்றிய கரு இது. தேவைக்கேற்றபடி இன்னும் இதில் கொஞ்சம் கூட்டலாம், கழிக்கலாம், மாற்றலாம்.
## IT சிங்கங்களுக்கு இக் கொரி சமர்ப்பணம்.

************** என் Friendஅப் போல யாரு மச்சான்*************
வாக்கிங் போகும்போது தூரத்தில் சின்னதும் பெருசுமாக ஒரே கூட்டம். இவ்வளவு அதிகாலைப் பொழுதை இதுவரை பார்த்திராத ஒரு இளைஞர் படை. பஜனைக் கூட்டம் மாதிரியும் தெரியவில்லை. அவர்களை நெருங்குவதற்குள் ஆவல் பிடிங்கித் தின்றது.

பக்கத்தில் சென்று பார்த்தால் அது தியேட்டர் வாசலில் கூடிய கும்பல். ”என் friendஅப் போல யாரு மச்சான்” என்று தலை கலைந்து பல் விளக்காத ஒரு பையனின் மொபைலிலிருந்து பாட்டு ஒலித்தது. தியேட்டர் வாசலில் போஸ்டரில் சத்யராஜும் விஜய்யும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

#என் ரசிகரைப் போல யாரு மச்சான் என்று விஜய் பெருமைப்பட்டுக்கொள்வாரோ?

************** சாம்பார் வடா**************
ப்ளேட்டில் அழுத்தினால் நாணப்பட்டு வில் போல வளையும் மெல்லிய ப்ளாஸ்டிக் ஸ்பூனால் சாம்பார் வடை சாப்பிடும் திறன் போட்டி வைத்தால் அதற்கு நான் தயார். நிச்சயம் பரிசு எனக்குதான். கிண்ணத்தினுள் ஸ்பூனுக்குப் பிடிகொடுக்காமல் தப்பித்த அவ்வடையோடு வளைந்து நெளிந்து விரலொடிய அரை மணி நேரம் போராடி ஒரு வடை சாப்பிட்டேன்.

சாம்பார் வடை கேட்டதற்கு சட்னி போல கொஞ்சூண்டு சாம்பாரை வடை மேல் தெளித்து எடுத்து வந்த அந்தச் சப்ளையரைத் தூக்கி யாராவது ஜெயில்ல போடுங்க சார்!

பாடம்: ப்ளாஸ்டிக் ஸ்பூனால் சாம்பார் வடை சாப்பிடுவது ஒன்றும் எளிதல்ல.
#அபூர்வ பாடங்கள்
இந்த உபதலைப்பை சாம்பார் வாடா என்று யாராவது படித்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல..

***************** மடத்தனம் ****************
ஆஸ்திரேலியாவைச் சுற்றிப்பார்க்க போறோம்னு சொல்லிட்டுப் போயிருக்கலாமே! நாமெல்லாம் கிரிக்கெட் விளையாடப் போயிருக்காங்க நினைச்சுக்கிட்டிருக்கோம்.

#சே! என்ன ஒரு மடத்தனம்.

**************ரசிகர்களின் ராஜா***************
ஜெயாவில் ”என்றென்றும் ராஜா” பார்த்தேன். தாஸேட்டன், பாடும் நிலா பாலு, சின்னக்குயில் சித்ரா மேடம் என்று இசைக் கடல்கள் இளையராஜா என்ற சங்கீத சாகரத்தில் ஒன்றாய் இணைந்த நிகழ்ச்சி. மனதுக்கு நிறைவாய் இருந்தது.

இயந்திரங்கள் இல்லாத மெல்லிசை. பல தசாப்தங்கள் கடந்து திரும்ப வாசிக்க அப்படியே அன்று கேட்டது போல தத்ரூபமாக இருக்கிறது. துளிக்கூட ஸ்ருதியும் தாளமும் பிசகாமல். பருவமே பாடலுக்கு தொடை தட்டி ரன்னிங் ஸ்டெப் போட்டதை ராஜா சொன்னபோது நெக்குருகிப்போனேன். என்ன ஒரு டெடிகேஷன்.

பார்வையாளர்கள் வரிசையில் அசலாரிடமிருந்து உருவிப் போடும் நிறைய இசையமைப்பாளர்கள் கைகட்டி உட்கார்ந்திருந்தார்கள்.

கேட்போர் காதுகளில் இசை கசிய கண்களில் நீர் கசிய மேடையில் ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்தான் ஒரு ஜிப்பா போட்ட ராஜா!! இந்த யுகக்கலைஞன்.

என்றென்றும் ராஜா!

#இந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நான் தயாரித்த “சுகமான காதல் ராகங்கள்” என்ற தலைப்பிட்ட சிடியில் வைத்திருக்கிறேன்.

##ஒரே ஒரு வருத்தம். எஸ்.பி.பி ஒல்லியாக... அந்த பற்றிக்கொள்ளும் சிரிப்பு இல்லாமல்.. பிள்ளைச் சோகமோ.. என்னவோ.. மனசுக்கு சங்கடமாய் இருந்தது. இருந்தாலும் ”பாட்டுத் தலைவன்... பாடினால்... பாடல்தான்.....”

*************புகைப்படக்கலைஞரின் க்ளிக்**************


வளரும் என்று மேலே இருக்கும் சப் டைட்டில் முன்னால் சேர்த்துக்கொள்ளவும். கேமிராவினால் சுட்டவர் ஆர்.வி.எஸ்.

-

Monday, January 16, 2012

புத்தகக் காட்சி

 
மார்கழிக் கடைசியில் இலக்கிய தாகம் கன்னாபின்னாவென்று எடுத்தது. புத்தக விக்கலே வந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். “ஐயா! எதாவது செய்யுங்க ஐயா” என்று தமிழ் என்னைச் சுண்டி இழுத்தது. அடுத்தவர் வியர்வை ஆளைத் தூக்கும் நாற்றமடிக்கும் மாமாங்க கூட்டம் இருக்கும் என்று டாமிடம் பயப்படும் ஜெர்ரி போல பயந்துகொண்டே ஆங்கிலோ இந்தியன் பள்ளி புஸ்தகக் காட்சிக்குள் தலையை நீட்டினால் சண்டே இரவு ரங்கநாதன் தெரு போல ஃப்ரீயாகத்தான் இருந்தது. நுழைவாயில் அரங்கில் மாலன் மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். அவரது குரல் எப்போதும் என்னை வசீகரிக்கும். கீழேயிருக்கும் கூட்டத்தின் பேர் பாதி மேலே மேடையிலும் சிகப்புச் சேரில் வீற்றிருந்தது. பந்தலில் கடைசி வரிசை ப்ளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து வேறோர் உலகத்திலிருந்த ரெண்டு பேர் சுண்டலையும் கடலையையும் கொரித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆபீஸ் நண்பர் சத்யநாராயணா ஒரு வி.ஐ.பி டிக்கெட் கொடுத்திருந்தார். முகப்புத்தக ஆத்ம நண்பர் சந்திரமௌலீஸ்வரனும் நானும் இது இரண்டாவது ரவுண்ட். முதல் ரவுண்டில் எங்களை இணையவிடாமல் வேறு ஜோலிகள் பிடிங்கித் தின்றதால் இம்முறை இணைந்தோம். ஓப்பனிங் டே அன்றைக்கே இலக்கிய ஆர்வமிக்க, கேட்ஸ் ஆபீஸில் பணிபுரியும் என்னுடைய நண்பன் மைக்ரோஸாஃப்ட் விஜயுடனும் சுயதொழிலில் கொடிகட்டிப் பறக்கும் இன்னொரு பள்ளித் தோழன் சிவகுமாருடனும் புத்தக உலா சென்றிருந்தேன்.

நிர்வாணமான ஷெல்ஃபுகளில் புத்தகங்கள் அடுக்கிக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன். எல்லாக் கடை அலமாரிகளும் ரொம்பி வழிந்தது. விஜய்க்கு சில புதினங்கள் வேண்டும் என்றான். அவனுக்கு பி.ஏ.கிருஷ்ணனை அறிமுகம் செய்துவைத்தேன். அக்கிரகாரத்தில் பெரியாரும், புலிநகக் கொன்றையும் வாங்கிக்கொடுத்தேன். வாசகர் வட்டாரத்தில் வாத்தியார் சுஜாதா ஆசையில்லாதவர் எவர். விஜய்யும் ஆசைப்பட்டான். ”ஆ”, “கொலையுதிர் காலம்” என்ற சில்வர் ஜூப்ளி கண்ட எனக்குத்தெரிந்த சுஜாதா புத்தகங்களையும் இன்ன பிறவும் எடுத்துக்கொடுத்தேன். பையனுக்கு பரம திருப்தி.

அந்த முதல் சுற்றில் நானெடுத்த முத்துக்கள் சில. வழக்கம் போல நிறைய சுஜாதா.
1. மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம் - சுஜாதா - கிழக்கு
2. நடந்தாய்; வாழி, காவேரி! - சிட்டி,தி.ஜா - காலச்சுவடு
3. மீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா - விசா
4. ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா - விசா
5. க - ராபர்ட்டோ கலாஸ்ஸோ தமிழில் ஆனந்த்,ரவி - காலச்சுவடு
6. நிலா நிழல் - சுஜாதா - உயிர்மை
7. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா - உயிர்மை
8. புறநானூறு ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா - உயிர்மை
9. திரும்பிச் சென்ற தருணம் - பி.ஏ.கிருஷ்ணன் - காலச்சுவடு
10. 18வது அட்சக்கோடு - அசோகமித்திரன் - காலச்சுவடு
11. மௌனி படைப்புகள் - மௌனி - காலச்சுவடு

இந்த முறை மௌனி எனக்குப் புதுசு. நிறைய பேர் சிலாகித்திருப்பதால் வாங்கியிருக்கிறேன். இன்னமும் புரட்டிப் பார்க்கவில்லை. பி.ஏ.கிருஷ்ணனின் அக்கிரகாரத்தில் பெரியாரால் ஈர்க்கப்பட்டு திரும்பவும் திரும்பிச்சென்ற தருணம் வாங்கியிருக்கிறேன். நிலாநிழல் தினமணிக்கதிரில் தொடராக வெளிவந்தது அனைவரையும் கொள்ளை கொண்டது.

இரண்டாவது சுற்றில் வாங்கிய முதல் புத்தகம் “அறியப்படாத அண்ணா ஹசாரே”. அதன் ஆத்தரும் என்னுடன் வந்திருந்தார். அவர்தான் நண்பர் சந்திரமௌலீஸ்வரன். கிழக்கில் ஜெ.மோவின் அண்ணா புத்தகத்தை ஆயிரம் காப்பி போட்டு சல்லிசாக விற்றுக்கொண்டிருந்தார்கள். ஸ்டாலுக்குள் யாராவது “அ” என்று ஆரம்பித்தாலே கேஷ் கவுண்ட்டர் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு ஜெ.மோவின் அண்ணாவைக் கையில் தள்ளிவிட்டார்கள். அவர்களைக் கொஞ்சம் சுரண்டிக் கேட்டதில் உள்ளேயிருந்து பதுக்கிவைத்திருந்த யாரும் அறியப்படாத அண்ணாவைத் தந்தார்கள்.

“பர்த்ருஹரியின் நீதி சதகம் எங்கே கிடைக்கும்” என்ற கேள்விக்கு நண்பர் மௌலியிடமிருந்து டான்னு “கடலங்குடி பதிப்பகம்” என்று பதில் வந்தது. மேப் அச்சிட்ட மடக்கிய நோட்டீசில் ஒரு ஓரத்தில் கடுகாக இருந்தது. ஏழு ரோ தாண்டி அங்கே நுழைந்ததில் காற்றைப் புசித்துக்கொண்டு உயிர் வாழும் அம்மா ஒருவர் கல்லாவில் நின்றிருந்தார். உள்ளே இருக்கும் டேக் மாட்டிய பையன் “அப்படி ஒன்னும் இல்லீங்க” என்றான். கண்ணில் கடலெண்ணையை ஊற்றிப் பார்த்ததில் கடலங்குடி நடேச சாஸ்திரிகளின் நீதி சதகம் கிடைத்தது. அப்புறம் சிருங்கார சதகம் மற்றும் வைராக்கிய சதகம் இரண்டும் வாங்கிக்கொண்டேன்.

டிஸ்கவரி புக் பேலஸில் ப்ளாக் நண்பர் மெட்ராஸ் பவன் சிவாவையும், பிலாசபி பிரபாகரனையும் சந்தித்தேன். கொஞ்ச நேரம் அவர்களை ரம்பம் போட்டேன். சற்று நேரத்திற்கு பின்னர் “கவிதை வீதி” சௌந்தர் மற்றும் ரஹீம் கஸாலியும் சேர்ந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தோம். டிஸ்கவரியில் லலிதா ராம் எழுதிய துருவநட்சத்திரம் வாங்கிக்கொண்டேன். அப்புறம் திரும்பவும் காலச்சுவடுக்கு கால் போனது. இம்முறையும் பி.ஏ.கிருஷ்ணன் கண்ணில் மாட்டினார். தி மட்டி ரிவர் என்று ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் கலங்கிய நதி என்று எழுதியிருந்தார். வாங்கிக்கொண்டேன். கிழக்கில் “உருப்படு” என்று எழுதியிருந்த கே.ஜி.ஜவர்லாலை கடைசியில் குறிப்பிடுவதால் உருப்படுவேனா? என்று தெரியவில்லை.

இதுவல்லாமல் இந்த வருடம் இண்டெர்னெட்டில் ஃப்ளிப்கார்டில் வாங்கும் பழக்கம் நண்பர் மௌலியிடமிருந்து தொற்றிக்கொண்டது. அதன் மூலமாக வாங்கிய சில ஆங்கில புத்தகங்கள்.
1. The Difficulty of being good - Gurcharan Das
2. The Best of Quest - Laeeq Futchally, Achal Prabhala, Arshia Sattar
3. The Contact - Carl Sagon
4. The Last Mughal - William Dalrmple
5. The Mathematical Traveler - Clawson
6. The Unauthorised Autobiography - Julian Assange
7. The Selfish Gene - Richard Dawkins

ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு அரை அவராது படிக்கிறேன். அடுத்த புத்தகத் திருவிழாவிற்குள் முடித்துவிடவேண்டும்.

நாளை இப்படம் கடைசி!

படம் பபாசி இணையத்திலிருந்து....

-

Saturday, January 14, 2012

கன்னிப் பொங்கல்

வயசுப் பசங்களுக்குப் போகியும் பொங்கலும் சுத்த போர். குப்பை எரிப்பதையும் மூக்கில் ஒரு பருக்கை எட்டிப் பார்க்கும் வரை சாப்பிடுவதையும் தவிர்த்து இளசுகளுக்கு அவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் எதுவும் இந்த இரண்டிலும் இருக்காது. நட்புகளுக்கும் சொந்தபந்தங்களுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் ஒன்று அக்காலத்தில் வழக்கில் இருந்தது. என்னைப் போன்ற சின்னத்தம்பிகளுக்கு கரும்பு, பொங்கல் பானை போட்ட வாழ்த்து அட்டையும், லெக்ஷ்மி சரஸ்வதி என்று கடவுளர்களின் அருட்படம் போட்ட அட்டைகளையும் தினமும் கையோடு கை கோர்க்கும் பக்கத்துத் தெரு மற்றும் பக்கத்து வீட்டு நண்பர்கள் அனுப்பி மகிழ்வார்கள்.

போஸ்ட்மேன் டெலிவர் செய்யும் போது நம் பக்கத்திலிருந்து அதை நாம் வாங்கிப் பார்த்துப் படித்து இன்புறுவதை கண்ணுற்று ரசிப்பார்கள். பெரிய அண்ணாக்களுக்கு சில சமயம் பாஸ்போர்ட் சைஸ் ராதா, அம்பிகா போட்ட டீசண்ட் அட்டையும் வரும். ரஜினி கமல் பெயர்களை தன் முன்னால் சேர்த்துக்கொண்டு கட் அவுட் வைத்து பைத்தியமாகத் திரியும் அன்பர்களுக்கு அந்த ஹீரோக்களின் படம். சிலருக்கு இமேஜ் டேமேஜ் செய்யும் சிலுக்கு அனுராதா கவர்ச்சி அட்டைகளை அனுப்பி ஏகத்துக்கும் ரேக்கி விட்ட போக்கிரி படவாக்களும் உண்டு. ”யார்டா அது.. இப்படியெல்லாம் அனுப்பறது.. நீ உருப்படியான சங்காத்தம் எதுவும் வச்சிருந்தானே....” என்று பாட்டு விடுவார்கள். அதெல்லாம் விடுநர் பெயர் இல்லா அனானி அட்டைகள். இப்போதெல்லாம் பைசா செலவில்லாமல் ஈகிரீட்டிங்ஸ் ஈமெயிலில் டெலிவர் செய்யப்படுகிறது.


போகியில் கண்டதையும் போட்டு எரித்து கண்ணெரிய ஊர் சுற்ற வேண்டும். பட்ட காலிலே படும்  போல ஏற்கனவே ஓஸோன் லேயரில் ஓட்டை விழுந்து பஞ்சராகிப்போன வானத்திற்கு போகியன்று இன்னும் கொஞ்சம் சேதாரம் ஆகும். தீயிட்டுக் கொளுத்துவது என்பது ஹோமோசேபியன்களாக நாம் இருந்ததிலிருந்து தொன்றுதொட்டு வரும் ஒரு பழக்கம். கஷ்டப்பட்டு கல்லை உரசி கை வலிக்கும் சிரமத்துடன் நெருப்பு உண்டாக்கிய நமக்கு இப்போது குச்சி உரசினால் பத்திக்கும் என்கிற இலகுவான சூழ்நிலையில் கையில் கிடைக்கும் எதையும் போகியில் கொளுத்துவதுதானே தமிழரின் மரபு. ப்ளாஸ்டிக் கொளுத்தாமல் பச்சை போகி கொண்டாடுவது அகிலத்திற்கு உகந்தது. “படுபாவிங்க.. நம்ம பூமியைக் கெடுத்துக் குட்டிசுவராக்கிட்டுப் போய்ட்டானுங்க” என்று எள்ளுப் பேரன் பேத்திகளிடம் பித்ருலோகம் போயும் திட்டு வாங்காமல் இருக்க மாசற்ற பூமியைத் தருவோம். தலைப்பில் கன்னிப் பொங்கல் தாவணி கட்டி ஆடுவதால் அந்தப் பக்கம் திரும்புவோம்.

இந்த இடியட் பாக்ஸ் ராஜ்ஜிய பரிபாலனம் செய்யாத காலங்களில் பண்டிகைகளின் கை ஓங்கியிருந்தது. மாட்டுப் பொங்கலும் கன்னிப் பொங்கலும் கட்டிளம் காளையர்களுக்கு கரும்பு போல தித்திப்பான நாட்கள். மாட்டுப்பொங்கல் அன்று தான் கறக்கும் மாடுகளைக் குளிப்பாட்டி குறவன் குறத்தி ஆட்டத்தோடு முண்டாசுக் கட்டிய கோனார்கள் திரும்பவும் வீடு கொண்டு விடும் வைபவம் நடைபெறும். இதைப் பற்றி சற்று விரிவாக போன வருஷம் இங்கே பிரஸ்தாபித்திருந்தேன். சில அமெரிக்கத் திரைப்படங்கள் ஹிட்டான படங்களுக்கு இரண்டாம் பாகம் போடுவதைப் போல போன வருஷமே காணும் பொங்கல் பற்றி ”பொறவு சொல்றேன்”னு கடைசியில் ஒரு கொக்கிக் கார்டு போட்டிருந்தேன்.

மாட்டுப் பொங்கல் முடிந்த மறுநாள் விடியற்காலை காகத்தை வம்புக்கிழுக்கும் கணுப்பொங்கல் ரசமானது. காக்காவிற்கு அன்றைக்கு டைஜின் சாப்பிடும் அளவிற்கு அஜீரணக் கோளாறு ஆகும். ஓவர் ட்யூட்டி. மஞ்சள்கொத்து இலையில் கொஞ்ச கொஞ்சமாக எல்லா சாதத்திலும் கிள்ளி வைத்து காகத்தை அழைக்காமல் அழைப்பார்கள். மாமிக்களின் கை வண்ணம் அன்று தெரிந்துவிடும். ஒரு காகமும் சீண்டாத மஞ்சள் இலை வீட்டுக்காரியின் ஆத்துக்காரர் ’ஹஸ்பெண்ட் தி கிரேட்’. எப்படிப் போட்டாலும் என்னைப் போல நொட்டை சொல்லாமல் சாப்பிடும் கட்டிச் சமர்த்து என்றர்த்தம். எந்த இலையை காக்கா கொத்திக்கொண்டு போகிறதோ அவர்கள் வீட்டு அடுப்பங்கரை அற்புதமாகும். ஆம்படையான் காலடியில் கிடப்பார். இலையைக் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார்கள்.

கணுப்பொடி வைத்துவிட்டுதான் காபி சாப்பிடவேண்டும் என்பது அன்றைய தினத்தின் சம்பிரதாயம். அதனால் திருமதிகள் அதிகாலையிலிருந்தே ட்யூட்டியில் இறங்கிவிடுவதால் நன்பகலுக்கு முன்பகலில் சாப்பிட்ட பின்னர் சற்று தூங்கி சிரமபரிகாரம் செய்துகொள்வார்கள். மத்தியானம் இரண்டு மணிக்கு மேல் கண்ணுக்கு விருந்தாக கன்னிப் பெண்கள் கோலாட்டமடிக்க குச்சியுடன் வருவார்கள். இரண்டிரண்டாக ஜோடி போட்டுக்கொண்டு பின் கொசுவ புடவையை தூக்கிச் சொருகிக் கொண்டு வரும் கன்னியரின் கனி நடையே அழகு.

திண்ணை வைத்த வீடுகளின் அருமை அன்று தெரியும். வெளித்திண்ணை தட்டியடிக்கப்படாமல் இருந்தால் ரோடிலிருந்து பார்த்தேலே இந்த ஃபோல்க் டான்ஸ் ஷோ தெளிவாகத் தெரியும். எங்கிருந்தோ கோலாட்டச் சத்தம் சன்னமாக கேட்டாலே அவ்வீட்டுத் திண்ணையோரத்தில் கும்பலாக ஆட்டம் காணக் கூடிவிடுவார்கள். கையில் கொண்டு வந்த கூடையை நடுவில் வைத்துவிட்டு குனிந்து நிமிர்ந்து கோலாட்டம் ஆடுவார்கள். பழைய படங்களில் க்ரூப் டான்ஸ் ஆடுபவர்கள் இருகையையும் சேர்த்து ஒரு தட்டு பக்கத்திலாடும் பெண்ணின் கையில் ஒரு தட்டு என்று தாளமாகத் தட்டுவார்கள். அவர்கள் ஓயாமல் கைக்கு வேலை கொடுப்பது போல “கும்மியடிப் பெண்ணே கும்மியடி” என்று பாடிக்கொண்டே ஆடுவார்கள். சாரீரம் நன்கு வாய்த்த பெண்களை ”இன்னொரு தடவ பாடேண்டி” என்று பாட்டி ஒன்ஸ் மோர் கேட்கும் போது அந்த மடி ஆசாரப் பாட்டியை அப்படியே கட்டியணைத்து செல்லமாக முத்தமிடத் தோன்றும்.

தாண்டியா ஆடியவர்களது கூடைகளில் ஒரு படி அரிசியும், அச்சு வெல்லமும் போடுவார்கள். பின்பு பழம், பாக்கு வெற்றிலை தட்டில் வைத்துக் கொடுப்பார்கள். “வரேன் டீச்சர்” என்று சொல்லிவிட்டு கிளம்பும் தருவாயில் “தம்பி அந்த கரும்பை ஒடிச்சி அவாளுக்குக் குடுடா” என்று எனக்கு விசேஷ கட்டளைப் பிறப்பிக்கப்படும். பரிசில் வாங்குவோரின் ஆட்டத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு தக்கக் கரும்புச் சன்மானம் என்னால் வழங்கப்படும். குறிப்பு: அழகுக்கேற்றவாறு என்று நான் இங்கே சொல்லவில்லை.

கலைஞர்களுக்கு தரவேண்டிய மரியாதை நிமித்தமாக வாசலுக்கு வந்தால் ஆண் சிங்கங்களை சைக்கிளில் துணைக்கு அழைத்து வந்திருப்பார்கள். அரிசி, வெல்ல கலெக்ஷன் கூடையை விட்டு வழிய ஆரம்பித்தால் சைக்கிள் கேரியரில் கட்டியிருக்கும் சாக்கு மூட்டையில் கொட்டி முடிந்துகொள்வார்கள். இப்போது சென்னையில் சங்கமமாக விழாவெடுக்கும் அளவிற்கு அப்போது தேவைப்படவில்லை. கிராமிய மணம் கமழும் விளையாட்டுகளும் இதர மரபுகளும் செம்மையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எஸ்.எம்.எஸ்ஸில் பொங்கல் வாழ்த்து அனுப்பிவிட்டு, “முற்றிலும் சந்தோஷத்தை தருவது உறவுகளே என்றும் நண்பர்களே என்று கட்சி பிரித்துப் பேசும் பட்டி மண்டபங்களையும் நடிக நடிகைகளின் “என்க்கு டமில் பிட்கும். பொங்கள் ரொம்ப பிட்க்கும்” என்று முகம் மகிழ்ந்து தரும் பேட்டியையும், உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக போடும் திரைப்படங்களையும் பார்த்துவிட்டுவது இக்கால பண்டிகை கொண்டாடும் முறை. அதிலிருந்து வழுவாமல் இக்கால விதிகளை கடைபிடிப்போமாக.

யாராவது ஆஸ்கி டெக்ஸ்டில் படம் போட்ட பொங்கல் பானையும், கரும்பும் எஸ்.எம்.எஸ்ஸாக அனுப்பினால் எல்லோருக்கும் ஃபார்வேர்ட் பண்ண சௌகரியமாக இருக்கும். அனுப்புவீங்களா?

பின் குறிப்பு:  இது தினமணி இணைய பொங்கல் மலரில் வெளிவந்துள்ளது. நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். தீ.வி.பிக்கு இரண்டு லட்சம் ஹிட்கள் கிடைத்திருக்கிறது என்பது கூடுதல் செய்தி.

பட உதவி: http://www.hottrendsindia.com/
-

Tuesday, January 10, 2012

ஹை(!)தராபாத் ப்ளூஸ்


இந்திய ரெயில்வேக்கே எங்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகத் தத்துக் கொடுத்தார்ப் போல 17 மணி நேரம் கச்சிகோடா விரைவு(?!) ரயிலில் ஹைதராபாத்திற்கு முதுகுவலிக்கப் பயணம் செய்தோம். எங்காவது வீட்டை விட்டு ஓடிவந்த மாடோ ஆடோ கட்டையை நீட்டிப் படுத்திருக்கும் ஆளில்லா ரயில்நிலைய ப்ளாட்ஃபாரத்தில் கூட எஞ்சின் டிரைவர் கொஞ்ச நேரம் நிப்பாட்டி வாஞ்சையுடன் "வரீங்களா" என்று கேட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார். "என்ன கொடும சார் இது" என்று கருப்புக் கோட்டுப்போட்ட ”கனம் கோட்டார்” டி.டி.ஆர் அவர்களிடம் கேட்டால் அவர் டி.ஆர் பாணியில் "சார்! சிக்னல் கிராசிங் சார்" என்று அடிவயிற்றிலிருந்து ராகமாக இரைந்துவிட்டு அடுத்த கோச்சுக்கு விரைந்தார்.

அவசரத்திற்கு அஞ்சு நிமிஷம் ஒதுங்கும் குவளையில்லா கக்கூஸ் பக்கத்தில் ஸ்லீப்பர் புக் ஆகியிருந்தால் நிச்சயம் அது உங்களின் முன்வினைப் பயனே. அகிலமெங்கும் பயனில் இருக்கும் கழிவறைகளின் ஒட்டுமொத்த துர்நாற்றமும் ஒருங்கே ஆங்கே குப்பென்று வீசியது. இரயில்வே நிர்வாகம் கவனிக்க: எங்களுடன் பிரயாணித்த சகபயணிகளான ஒரு ஒட்டு”மொத்த” எலியார்க் குடும்பமும் பெர்த் கிடைக்காமல் திண்டாடியது.

இரவு முழுக்க ட்ராக் பக்கத்தில் குடியிருப்போரின் உறக்கம் கெடுத்து “ஊ..ஊ” என்று விடாமல் ஊளையிட்டுக்கொண்டே சென்றது கச்சிகோடா. எஞ்சின் ட்ரைவருக்கே மனது வந்து மறுநாள் காலை பத்தேகால் மணிக்கு கச்சிகோடாவில் கச்சிதமாக இறக்கினார். உற்சாகம் குறையாமல் ஓட்டி அலுத்த மகானுபாவனுக்கு ஒரு நன்றி சொல்லி இறங்கினோம். ஹைதராபாத்தில் சுவரெங்கும் ராமராஜ்யம் நடந்துகொண்டிருந்தது. சீதைவேடம் பூண்டிருந்த பிரபுதேவாவின் இரண்டாவது பொண்டாட்டி நயன்தாரா பாலகிருஷ்ணா ராமரோடு போஸ்டர் சிம்மாசனத்தில் அமெரிக்கையாக வீற்றிருந்தார். தியாகைய்யரின் பஞ்சரத்ன கிருதியிலிருந்து பல்லவி எடுத்த ஜெகதானந்தகாரகா.... ஜானகி ப்ராணநாயகா.. பாடல் நன்றாக இருக்கிறது. எவர் க்ரீன் எஸ்.பி.பி. சென்னையில் ஆயிரம் பேரம் பேசி முன்னூறு ரூபாய் பொறுமானமுள்ள தூரத்தை ”ஒற்றைச் சொல்லுக்கு” கட்டுப்பட்டு 170 ரூபாய்க்கு கடந்த அந்த ஆட்டோகாரர் ஏதோ ”உள்ள இருந்துட்டு” வந்தவர் மாதிரி தோன்றினார். சொந்த அலுவல் காரணமாக வந்ததால் முதலில் அதை கர்மசிரத்தையாக கவனித்து முடித்தோம்.

மதியத்திற்கு மேல் சார்மினார் விஸிட். போகும் வழியெல்லாம் ஆங்காங்கே நிறைய ஆட்மினார்கள் தெரிந்தாலும் எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தார்போல கம்பீரமாக இருந்தது சார்மினார். குதுப் வம்சத்தில் பிறந்த சுல்தான் முகம்மது பதினைந்தாம் நூற்றாண்டில் ப்ளேக் நோயை விரட்டியடித்ததின் ஞாபகார்த்தமாக கட்டிய மஸ்ஜித்தே சார்மினார். பட்டிதொட்டியெல்லாம் பதாகை வைக்கும் பழக்கமுடைய நமது அரசியல் ஆட்சியாளர்கள் சார்மினார் வாசலிலும் பெரிதாக ஒன்று நிற்க வைத்திருக்கிறார்கள். இந்த பேனர் நோயை இந்நாட்டிலிருந்து விரட்டியடித்தால் எந்த ஊரில் மினார் கட்டுவது என்றும் யாரிடம் வேண்டிக்கொள்வதென்றும் தெரியவில்லை. யா அல்லா!

கையில் ஒரு முறத்தட்டில் வைத்து கூவிக்கூவி சமோசா வியாபாரம் சூடாக மினாரைச் சுற்றி நடக்கிறது. எலிக்கு தேங்காய் துண்டு போல சமோசாவின் தட்டு தாண்டும் மூக்கு பிடித்து நம்மை தாறுமாறாக இழுக்கிறது. கூட வந்தவர்கள் ஒன்று வாங்கி காக்காய்க் கடி கடித்துவிட்டு பிரமாதம் என்று மோவாயை தூக்கிக் கொண்டு சொல்ல மனசுக்குள் ஆசை அலையடிக்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் பக்கத்தில் நம்மூர் சமாசாரமான சின்ன இலந்தைப்பழம் விற்றுக்கொண்டிருந்தார்கள். எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் குலவையிட்டுப் பாடிய “செக்கச் சிவந்த பழம்” காதில் தானாக ஒலித்தது. ஆனால் விற்றது முழுக்கைச் சட்டை போட்ட ஒரு கிழவர். சாப்பாட்டு ஐட்டங்களில் நாட்டில் ஐந்து ரூபாய்க்கு குறைந்தது எதுவுமில்லை. அதுவும் மினார் வாசலில் கிடைக்குமா? “அப்பா நல்லாயிருக்குமா?’ என்று கேட்ட என் சின்னதிடம் “ஒரு சிலதில குட்டியூண்டு புழு நெளிஞ்சுண்டு இருக்கும். தூக்கிப் போட்டுட்டு சாப்பிடனும்” என்றதும் நாலு அடி தள்ளி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

அதன் வாசனை கொஞ்சம் முகம் சுளிக்கவைக்கக்கூடியது. அதை சொல்லிக்கொண்டே மொசுக்குவது இன்னும் அலாதியானது. மினாருக்குள் காலடி எடுத்துவைக்க தலைக்கு ஐந்து ரூபாய் டிக்கெட் வசூலித்தார்கள். குழந்தைகளுக்கு இலவசம். கொஞ்சம் தாட்டியான ஆள் மினார் மேல் ஏறுவதற்கு படிக்கட்டில் ஏறினால் உள்ளே மாட்டிக்கொள்ளும் பெரும் அபாயம் இருக்கிறது. காதலர்கள் இருவர் இயற்கை அமைத்துக்கொடுத்த இந்த நெருக்கமான வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி நிதானமாக உரசி உரசி ஏறினார்கள். பின்னாலிருந்து “எக்ஸ்க்யூஸ் மீ” என்று மேலே முன்னேற வழி கேட்ட என்னை அவர்கள் பார்த்த உக்கிரப் பார்வை மறக்க இன்னும் நாலு நாள் ஆகும்.

”இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் கட்டிக்காக்கும் இந்தப் பாரம்பரியச் சின்னத்தின் சுவர்களில் தயை கூர்ந்து கிறுக்காதீர்கள்” என்ற கெஞ்சும் வாசக அட்டைக்கு நேர் கீழே ஒரு ஜோடி கையோடு கை கோர்த்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள ஏதுவாக அவர்களது வரலாற்று சிறப்புமிக்க காதலை பொறித்துக் கொண்டிருந்தனர். இந்த அக்கிரமத்தைக் கண்டு பொங்கியெழுந்த ஒரு ஜீன்ஸ் வாலிபன் ஹிந்தியில் கன்னாபின்னாவென்று திட்டினான். கொண்ட கொள்கையில் இருந்து விலகாமல் புன்சிரிப்போடு அவர்களது நாமகரணங்களை ஆட்டீனுக்குள் எழுதி முடித்து அம்புவிட்டு ஒட்டிப் பிறந்த இரட்டைப்பிறவியாய் இடத்தை காலி செய்தார்கள்.

மக்களின் நானாவித கெட்டப் பழக்கங்களினால் அந்த இடம் துப்புரவில்லாமல் சீர்கெட்டுக் கிடந்தது. பான் எச்சில் துப்பியும் தீக்குச்சி மற்றும் சார்மினார் துண்டங்களும் மூலையில் இறைந்து கிடந்தது. ஒரு குவார்ட்டர் பாட்டில் கூட என் கண்ணுக்கு கிட்டாதது என் துர்பாக்கியமே. ”எவ்ளோ காந்தி வந்தாலும் உங்களை திருத்தமுடியாதுடா” என்று ஒரு பட்சி உள்ளுக்குள்ளே உரக்கச் சொன்னது. கத்திச் சொன்னா பாஷை தெரியாத ஊர்ல யார் அடி வாங்கறது?

சார்மினார் வாசலில் முத்துநகைக் கடைகள் ஐந்தாறு வரிசையாக உள்ளது. “ஆயியே...ஆயியே... 100 பர்செண்ட் கியாரண்டி. புராணா ஷாப் ஹை...” என்று க்ரீச் குரலில் ஒரு ஒல்லி பாலகனின் சுண்டி இழுக்கும் குரல். சிரித்துக்கொண்டே திருமதிகள் முத்து கட்டப்பட்ட அலங்கார கழுத்தணிகள், கையணிகள் பார்க்க ஆரம்பித்தார்கள். பொழுது சாய ஆரம்பித்திருந்தது. பொன் அந்தி வேளையில் மினார் மினுமினுத்தது. ரம்மியமான தோற்றம். மனதை கொள்ளையடித்தது. ஒரு முக்கால்மணி நேரம் கடையை சல்லடையாக சலித்துச் செய்த தேர்வில் புண்ணியம் பண்ணிய ஏழெட்டு ஜதை வளையல்கள் பொறுக்கி எடுக்கப்பட்டன. பர்ஸ் நிச்சயம் இளைக்கும் அபாயத்தில் என் பாக்கெட்டில் ஒரு வித பயத்துடன் பதுங்கியிருந்தது. நான் நெஞ்சுரத்துடன் நிமிர்ந்து நின்றேன்.

பேரம் பேச களத்தில் இறங்கியவுடன் அதில் போட்டிருந்த விலையில் பேர் பாதி கழிவுக்கு உடனே ஒப்புக்கொண்டார். ”இந்த முத்து போலியில்லாமல் தரமானதா?” என்ற என் தரமான கேள்விக்கு ”அதுக்குதான் கியாரண்டி கார்ட் தர்றோம்” என்ற உப்புசப்பில்லாத பதிலளித்தார் அந்த ஓனர் இளைஞர். என்னுடன் வந்த பெண்மணிகளின் கண்ணில் தெரிந்த முத்தார்வத்தில் நிச்சயம் நான் வளையல் வாங்காமல் கடையை விட்டு நகரமாட்டேன் என்ற உறுதியில் தன்னுடைய சேல்ஸ் திறமையை வரிசையாக எடுத்து விட்டார். அப்படி இப்படி பேசி இருவருக்கும் பொதுவான ஒரு சகாய விலைக்கு டீலை முடித்தோம்.

சுற்றிக்களைத்ததால் பாலாஜி சாட் என்ற இடத்தில் குட்டியாக வெட்டலாம் என்று முடிவாகியது. “கடை எப்படி?” என்று என்னை கூட்டிக்கொண்டு போனவரிடம் விசாரித்ததில் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ஒரு பி.எம்.டபிள்யூ காரைச் சுட்டிக் காண்பித்தார். இனிமேல் ஆலூ சாட்டை சாப்பிட மட்டும்தான் வாயைத் திறக்கவேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டேன். ரொட்டித்துண்டில் வேகவைத்த மாவு உருளைக்கிழங்கை சேர்த்து இட்டு வாட்டி எடுத்து தருகிறார்கள். அதில் கொஞ்சம் சாஸ் ஊற்றி அதன் மேல் ஓமப்பொடி தூவிக் கொடுக்கிறார்கள். உள்ளங்கையகல ஆலூ சாட் ப்ளேட் பச்சீஸ் ருப்யா.  மாயாபஜார் ரெங்காராவ் கணக்காக ஜனம் ரோடில் ட்ராபிக் ஜாம் ஏற்படுத்தி தின்கிறார்கள். அத்தனை ருசி. இத்திருநாட்டு மக்களை உருளை படுத்தும் பாடு இருக்கிறதே! அப்பப்பா..

வயிற்றுக்கு ஈய்ந்தபின்னர் நேரே பிர்லா மந்திர். குன்றின்மேல் வீற்றிருக்கும் வேங்கடவன் கோவில். பார்க்கிங்கிற்கு கஷ்கட்டில் கேஷ் பேக் சுமந்து வந்து பிங்க் ஸ்லிப் கொடுத்து இருபது ரூபாய் வசூலிக்கும் நமது தமிழக கோயில்கள் போலல்லாமல் இலவச பார்க்கிங் அளிக்கிறார்கள். பக்கத்தில் நிற்கும் செக்கியூரிட்டி கூட தலையைச் சொறிந்து காசுக்குக் கை நீட்டிவதில்லை. எப்போதும் சினுங்கும் மொபைலை கட்டாயம் தவிர்க்கவேண்டிய பொருளாக அறிவித்திருக்கிறார்கள். வரிசையில் நிற்கும்போதே பிடிங்கிவிடுகிறார்கள். அப்படியிருந்தும் இரண்டு ஜென்மங்கள் மேலே கொண்டுவந்திருந்தார்கள். ஜட்டியில் மறைத்து எடுத்துவரும் அளவிற்கு அது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகியிருப்பது அதிசயமே.


வரிசையில் நின்று வேங்கடவனின் திருவாயிலை அடையும்போது மின்சாரம் தடைப்பட்டது. யாரோ ஆந்திர ஆர்க்காட்டாரின் வேலையாக இருக்கலாம். இயற்கை ஒளியில், பௌர்ணமி நிலவு பொழிய, மார்கழியின் இதமான வீசு குளிரில் ”கோவிந்தா கோஷம்” விண்ணை முட்ட நிறைவான தரிசனம். மனதுக்கு இதமாக இருந்தது. வெளியே வரும் வழியில் டைமண்ட் கல்கண்டு பிரசாதம் கொடுத்தார்கள். அங்கும் குறுக்குவழியில் உள்ளே புகுந்த இரண்டு பேரை திட்டாமல் சாதுவாகப் பேசி திருப்பி அனுப்பிய பாதுகாவலருக்கு ஒரு சல்யூட். கோவிந்தனின் தரிசனத்தோடு அன்றைய இரவு இனிதாக கழிந்தது. இரவில் நேரமாக நேரமாக ஹைதையில் ஊதக்காற்று அடிக்கிறது. ஸ்வெட்டர் போட்ட பெண்கள் தங்களது தலைவனை மூச்சடைக்க இருக்கப் பின்னிக்கொண்டு இருசக்கரங்களில் ஒருவராக பறந்தார்கள். குளிர் வாழ்க!!


மறுநாள் காலையில் ஃபிலிம் நகர் அசோஸியேஷன் கோயிலுக்கு சென்றோம். வாசலில் விஸ்வரூப தரிசனத்தில் பெருமாள். கண்ணத்தில் போட்டுக்கொண்டே சுமார் முப்பது படியேறி மேலே ஏறினால் தாராபாத்திரத்திலிருந்து ஜலம் சொட்ட மல்லிக்கார்ஜுன ஸ்வாமிவாரு. வலம் வரும் பக்கத்தில் ஆனைமுகன். பின்னால் ஹரிஹரபுத்திரன். அப்படியே ஒரு சுற்று வந்தால் ஸ்ரீவெங்கடாஜபதி. வலம் முடிக்கும் தறுவாயில் சற்றே ஒரு ஐந்தாறு படியேறினால் கிருஷ்ணர், ஆஞ்சநேயர், முருகன், நாகர், நவக்கிரகம், கோதண்டராமர் என்று அனைத்து தெய்வங்களும் ஒரே இடத்தில் ஸ்வாமிகளின் சூப்பர்மார்க்கெட்டாய் எழுந்தருளியிருந்தார்கள். திவ்ய தரிசனம்.

மதியம் வயிறார உண்டு, தொண்டனுக்கும் ஏற்படும் அந்த களைப்பை நீக்கச் சற்று படுத்தெழுந்து மாலை 18:30 சார்மினார் எக்ஸ்பிரஸ் பிடித்தோம். இம்முறை தொடர்வண்டியோட்டியவர் அப்பரெண்டீஸ் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் வண்டி அவரது லகானுக்கு நிற்காமல் படார் படாரென்று பொட்டிக்கு பொட்டி முன்னாலும் பின்னாலும் சினிமாவுற்கு க்யூவில் நிற்கும் பிரகிருதிகளைப் போல முட்டி இடித்து அலைபாய்ந்து நின்றது. வயதானவர்கள் கம்பியில் மோதிக் கொண்டார்கள். வாலிப ஜோடிகளும் ஒருவக்கொருவர் முட்டிக்கொண்டார்கள். ஹைதராபாதி பிரியாணியை மூக்குப் பிடிக்க வெட்டியவர்களுக்கு இலவசமாக ஜீரணமாவதற்கு உதவி புரிந்தார். ஒரு கட்டத்தில் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து என்னாச்சு என்று கேட்கலாமா என்று யோசித்தேன். என் சக பயணிகள் அபராதம் ஐநூறு கொடுப்பதற்கு பதில் நானடித்த காதுகளில் இரத்தம் ஒழுகும் ரம்ப ஜோக்குகளால் என்னையே ரெயில்வேசுக்குத் தாரை வார்த்துவிடுவார்கள் போல தோன்றியதால் ஜகா வாங்கிவிட்டேன்.

நெல்லூரில் டிக்கெட் வாங்கிக்கொண்டு நேரடியாக எங்களது ரிசர்வ் கோச்சில் ஏறி ரைட் ராயலாக எங்களது காலடியில் கிருஷ்ணனிடம் வரம் கேட்க வந்த அர்ஜுனன் போல உட்கார்ந்தான் ஒரு யுவன். ”அப்பா சற்று எழுந்திரு” என்றால் துரியோதனன் போல முறைத்தான். ”ஏனப்பா இப்படி ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்டில் ஏறி வம்பு செய்கிறீர்கள்” என்ற கேள்விக்கு  “மணி என்னாவுது” என்றார். ”ஐந்து” என்றேன். “அஞ்சு மணிக்குமேல எல்லோரும் எல்லாக் கோச்சிலையும் வரலாம், ஏறலாம், உட்காரலாம்” என்று தந்திரமாக பேசினார். “அப்படியேதும் எங்களது டிக்கெட்டில் போடவில்லையே. ஸ்லீப்பர் க்ளாஸ் சென்னை வரையில் படுத்துக்கொண்டு போகலாம் என்றுதானே அர்த்தம்” என்று கேட்டால் அந்த அரையிருட்டில் கண்கள் சிவக்க முறைத்தான் அந்த புஜபலம் மிக்க வாலிபன்.

காலை சுருட்டிக்கொண்டு சிவனேன்னு படுத்துவிட்டேன். என்.டி.ஆர் போலிருந்த அந்த டி.டி.ஆர் ஒரு நியாயஸ்தர். அந்நியன் இளைஞன் இந்தியன் தாத்தா போன்ற வயது வித்தியாசமில்லாமல் சமூக சீர்த்திருத்தவாதிகளுக்கு ஆத்ம மித்ரன். திமுதிமுவென்று மந்தை போல ஏறியிருந்த அந்தக் கூட்டத்தை ஒரு திறமையான மேய்ப்போன் போல ஓட்டிக்கொண்டு பல கம்பார்ட்மெண்ட் தாண்டி பட்டியில் அடைத்தார். ஒரு நிறைமாத கர்ப்பஸ்திரீக்கு என்னுடைய சைட் லோயரை பரிசாகக் கொடுத்தேன். கடமையில் கருத்தாக இருந்த அந்த டி.டி.ஆர் அவரையும் அடுத்த கோச்சுக்கு அப்புறப்படுத்தியது எனக்குச் சங்கடமாக இருந்தது.

சென்ட்ரலில் இறங்கும்போதுதான் உரைத்தது இன்றைக்கு ஆபிசுக்கு ஓட வேண்டும் என்று. ப்ரீபெய்ட் ஆட்டோ ஸிஸ்டெத்தில் அவர்களே எங்களது பேட்டைக்கு ஒரு நியாயமான ரேட் பேசி வண்டி ஏற்றிவிட்டார்கள். கையில் ஒரு தடியோடு ஒருத்தர் நின்று ஆட்டோக்களை தட்டி தட்டி வரிசைப் படுத்திக்கொண்டிருந்தார். டோக்கனில் போட்ட காசை மறுபேச்சில்லாமல் வாங்கிக்கொண்டார் ஆட்டோக்காரர். குளித்து முடித்து நித்யானுஷ்ட்டானங்களை முடித்துக்கொண்டு சாப்பாட்டு மூட்டையோடு வண்டியைக் கட்டிக்கொண்டு வேலைக்கு வந்தாச்சு. கார் ஏசியை 18க்கு குறைக்கும்போதுதான் தோன்றியது, சென்னையில் குளிர் விட்டுப் போச்சு!!

படக்குறிப்பு:
சார்மினார் படமெடுத்த ஆங்கிளிலேயே புரிந்திருக்குமே அடியேன் தான் க்ளிக்கியது என்று.


-

Thursday, January 5, 2012

மன்னார்குடி டேஸ் - தொல்லைக் காட்சிகள்

”யே! இப்ப படந் தெரியுதா?”
“இல்ல”
"இப்ப”
“உஹும். கொஞ்சம் கிழக்கால சர்ச் பக்கம் திருப்பு”
“இப்ப”
“லேசா வருது. இன்னும் ஒரு ஜான் அந்தப் பக்கமே திருப்பு”
“என்னடா ஜான்... முழம்.. இப்ப”
“ஒரு நாலு விரக்கடை திருப்பு”
“ஆ...ஆங்.. நிப்பாட்டு.. போதும்...போதும்”

எண்பதுகளில் டீ.வி பார்க்க வேண்டுமென்றால் முதலில் கணீரென்று எட்டூருக்குக் கேட்கும் “மன்மத லீலையை வென்றார் உண்டோ” என்ற வெங்கலக் குரல் வேண்டும். தேக்குக்கட்டைத் தொண்டை அவசியம் தேவை. டீ.வி பெட்டி நடுநாயகமாக கொலு வீற்றிருக்கும் ஹாலிலிருந்து மொட்டை மாடியில் ஹெலிகாப்டர் ரூட்டை தடை செய்யும் உயரம் வரை தூக்கி நிறுத்தப்பட்ட (அ) நிறுவப்பட்ட (அ) நிர்மாணிக்கப்பட்ட ஆன்டென்னாவை துடுப்புப் போட்டு “எலேலோ ஐலசா” பாடல் மட்டும் இல்லாமல் படக் காட்சி தெரிய திருப்பும் ”திருப்புறசுந்தர” வசனம்தான் இப்பதிவாரம்பத்தில் உள்ளது. ஒவ்வொரு வசன முடிவிலும் உள்ள எழுத்துக்களை மூன்று மாத்திரை அளவிற்கு நீட்டிப் பாட்டாக முடிப்பார்கள். மேலே ஆன்டென்னா திருப்பியவருக்கு ஜிம்முக்கு போகாமல் தம்படி செலவில்லாமல் நல்ல எக்ஸர்சைஸ். நித்யமும் பத்துமுறை திருப்புவருக்கு சிக்ஸ் பேக் பாடி கியாரண்டி. இப்போது டெலிஷாப்பிங் நெட்வொர்க்கில் சுலபத்தவணைகளில் கிடைப்பது அப்போது அன்டென்னா ரூபத்தில்.

ஒரு சமயத்தில் ஊரில் உள்ள ஹார்ட்வேர் கடைகளில் எல்லாம் “இனிமே லோட் வந்தாதான் சார் பைப்பூ” என்று கடையாளர்கள் கையை விரிக்கும் அளவிற்கு இரும்பு பைப் தட்டுப்பாடு ஏற்பட்டு டி.வி. புரட்சி மலர்ந்தது. ஃப்யூஸ் பல்ப் மட்டுமே கழற்றி மாற்றத்தெரியும் எலக்ட்ரிகல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு கம்பி கட்டி ஆன்டென்னா ஃபிக்ஸ் செய்வது லாபகரமான உபதொழிலாக அமைந்தது. யார் வீட்டு மொட்டை மாடியிலாவது செங்குத்தாக விண்ணைக் கிழிக்கும் ஆன்டென்னா தெரிந்தால் அவர்கள் டீ.வி பொட்டி வைத்திருக்கும் உயர் குடியினராக மதிக்கப்பட்ட காலம்.

எங்களூரில் பூமியில் போர் போட்டு தண்ணீர் எடுப்பதற்கு கூட அவ்வளவு உசரத்துக்குப் பைப் வேண்டா. கட்டுமரத்திலேறி கடல் ஆழத்திற்கு சென்று கொழுத்த மீன் பிடிப்பது போல காற்றில் அலையும் சிக்னல்களை மேகத்திற்கு பாதி தூரம் வரை ஆன்டென்னாவை நீட்டி எக்கிப் பிடித்து டி.வி பார்த்தார்கள். ”முப்பது அடி ஓ.கே. இன்னும் ஒரு பத்தடி போட்டால் நேருக்கு நேரா பார்க்கிற மாதிரி தெரியும்” என்று பூமிக்கும் ஆகாசத்திற்கும் இடைப்பட்ட இடத்தை இரும்பு பைப் ஆன்டென்னாவால் அடி அடியாக நிரப்பினார்கள்.

சென்னையில் டி.வி ஸ்டேஷன் வாசலில் கூட அவ்வளவு பெரிய கோபுரம் வைத்திருக்கமாட்டார்கள். யூ.எம்.எஸ் என்ற ஸிக்னல் பூஸ்டர் ஒரு இன்றியமையாத உபரி சாமான். மழைக்காலத்தில் பவர்ஃபுல் மின்னல் வெட்டித் தயாரிக்கும் சர்ஜ் மின்சாரம் அதற்கு அஜாத சத்ரு. பனால் ஆன பூஸ்டரை மாற்றுவதற்கு ஆன்டென்னாவை இறக்கி ஏற்ற இன்ஸ்டால் செய்ததை விட ஒரு நூறு ரூபாய்தான் குறைச்சல்.

ஆன்டென்னா பாலு எங்கள் வட்டாரத்தில் ரொம்ப ஃபேமஸான ஆள். ஐந்தடி வாமன ரூப ஆள் ரெண்டு ஆறடி திடகாத்திர ஆட்கள் புடைசூழ டி.வி.எஸ் 50ல் வலம் வருவார். கீச்சுக் குரல். கறார் கூலி. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு பேச்சு. வரும்படி அதிகம் என்று கண்டு கொண்டதும் ஆளாளுக்கு பகுதி நேரமாக பார்த்ததை இராப்பகல் அகோராத்திரி இதையே தொழிலாக்கிக்கொண்டு ஒரு சேனையாய் சைக்கிள் பின்னால் இரும்பு பைப்பைக் கட்டிக்கொண்டு திரிந்தார்கள். பேய் பிசாசு நிச்சயம் அண்டாது. பைப்பிற்கு அவரவர் ராசி மற்றும் விருப்பத்திற்கு வண்ணம் அடித்து கலர்ஃபுல்லாக ஏற்றியவர்களும் உண்டு. அன்டென்னா பைப்பின் பாதத்தில் ரோட்டர் பொருத்தி மோட்டார் கொண்டு கீழிருந்து ரிமோட் மூலம் திருப்பும் அடுத்த தலைமுறை டெக்னாலஜியை செயல்படுத்தி அசத்தியவர்களும் இந்த லிஸ்டில் உண்டு.

இரு தூறலுக்கு இடையே இடைவெளியில்லாமல் பொத்துக்கொண்டு ஊற்றும் மாரிக்காலமும், சுட்டெரிக்கும் கோடைக்கால பகல் வேளைகளும் டி.வி பார்க்க உகந்த காலம் அல்ல. இந்த சீதோஷ்ணங்களில் டி.வி திரை முழுக்க ரெண்டு அரைபாடி லாரி மணல் அடித்தது போலத் தெரியும். ”புஸ்....ர்...ச்....” என்று காதை அரிக்கும் சப்தம் இலவச இணைப்பாக.  நம் தேசத்து சொந்தத் தொலைக்காட்சியான சென்னை தூ’ர’தர்ஷனை விட அண்டை நாடான ஸ்ரீலங்காவின் ரூபவாஹினி கன ஜோராக தெரியும்.

தமிழ்ப் பாடல்களும், கழுத்து நீண்ட கிழவிகள் மதுக்கோப்பை கையும் ஸ்கர்ட்டும் போட்டுக்கொண்டு நடிக்கும் டைனஸ்டி என்ற தற்போதைய மெகா சீரியல்களின் ஆங்கில முன்னோடி ரூபவாஹினியில் ஒளிபரப்பாகும் (பிரதி செவ்வாய்/புதன் என்று ஞாபகம்). நைட் ரைடர் போன்ற நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் கார் நடித்த ஆக்‌ஷன் ஆங்கிலத் தொடர்களும் உண்டு. காட்டு மரங்களுக்கு இடையில் கைலியை மடித்துக் கட்டிய டீக்கடைக்காரர் முன்னால் கட்டஞ்சாய் அடிக்கும் வெள்ளை முண்டு கட்டிய பல்லு போன பாட்டி நடிக்கும் தேநீர் விளம்பரங்கள் இடையிடையே வரும்போது சானல் மாற்றமுடியாத கட்டாயத்தில் கண்மூடி தியானத்தில் உட்கார்ந்திருப்போம்.


பிபிஎல் நிறுவனத்தாரின் ப்ளாக் அண்ட் வொயிட் பெட்டிகள் சல்லிசாக விற்றுத் தீர்த்து விற்பனைப் புரட்சி செய்துகொண்டிருந்த வேளையில் நாங்கள் ஹை ரேட்டாக கலர் டி.வி வாங்கினோம். வாங்கிய புதிதில் பழசான எம்.ஜி.ஆர் மறைந்தார். எங்கள் வீட்டில் பிரேதம் கிடந்தது போல துக்கத்துக்கு தெருவாசிகள் டிவி பார்க்க முற்றுகையிட்டார்கள். எம்.ஜி.ஆரின் ட்ரேட் மார்க் ரசிகைகளான தோல் சுருங்கிய தொள்ளைக்காது பாட்டிகள் விசும்பித் தேம்பி அழுதனர். மூக்கைச் சிந்தி சுவரில் புதிதாய் பெயிண்ட் அடித்த சுவரில் துடைத்தார்கள். துக்கத்துக்கு வந்தவர்களுக்கு ஒரு வாய் காபி போட்டுக் கொடுக்காத குறையாக அவரது இறுதி அஞ்சலி ஊர்வலம் எங்கள் வீட்டில் நடந்தேறியது.

வால்மீகிக்கு இணையாக வையகமெங்கும் எண்பதுகளில் போற்றப்பெற்றவர் ராமானந்த் சாகர். ராம ராவணாதிகளை ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கும் வில்லு அம்போடு கொண்டு வந்து நிறுத்தியவர் அவர். வசதி படைத்தவர்களின் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் எட்டிப் பார்த்து எட்டிப் பார்த்து ஒட்டகச்சிவிங்கி மாதிரி கழுத்து நீண்ட பிறகு எங்கள் வீட்டிலும் இராமபிரானின் அருளால் பொட்டி ஒன்று வாங்கினோம்.

இப்போது இராமனுக்கு சேவை புரிந்த அந்த அணிலைக் குத்துபவர்கள் கூட வலது கையில் ரிமோட்டும் இடது கையில் பிட்சாவோடும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் ரஜினி படம் பார்ப்பதற்கு கேபிள் தொடர்பும் வைத்திருக்கிறார்கள். ராம மடத்துப் பாட்டிதான் முதலில் இராமாயணம் வந்து சீட் போடுவார். ஒவ்வொருவராக அசெம்பிள் ஆவதற்கும் டைட்டில் சாங் முடிவதற்கும் கனகச்சிதமாக இருக்கும்.

ராமானந்த் சாகரின் ராமாயணம் இங்கே காணக் கிடைக்கும்.


பக்திப் பழமாக பாட்டிமார்களும், பழமாவதற்கு முன் செங்காயாக தீர்க்க சுமங்கலிகளும், ரிடையர் ஆன பாங்க் மாமாக்களும் ஸ்ரீராமபிரானின் அருளில் மூழ்கித் திளைப்பதற்கு டி.வி பயன்பட்டது. என் பாட்டி பால்யத்தில் பார்த்த திரைப்படத்திலிருந்து  “தேர்ந்தெடுத்து/கடைந்தெடுத்த” பழைய பாடல்களை ஒளிபரப்பும் ”ஒளியும் ஒலியும்” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் இளசுகளுக்கும் சற்று ஆறுதலைத் தந்தன அட்டீவிக்கள். வெள்ளிக்கிழமை இரவு 7:30 என்று அதற்கு சுபமுஹூர்த்தம் குறித்திருந்தார்கள். அநேக இரவுகள் மணாளனே மங்கையின் பாக்கியமும், வீர அபிமன்யூவின் பௌர்ணமி நிலவொளியில் கிருஷ்ணர் படகோட்டிப் பாடும் “ஆஹா இன்ப நிலாவினிலே”யும் ஜெகம் புகழ போட்டார்கள். அப்போதெல்லாம் சித்ரஹாரும் ரங்கோலியும் பார்ப்பவர்கள் காண்பிக்கும் கெத்து...ப்பா...எழுத்தில் வடிக்கமுடியாது.

அபூர்வமாக ஒரு தீபாவளி நேர ஒ.ஒவில் முன்சொட்டை தெரிய புதியதாக முன்னால் தூக்கி வாரப்பட்ட ஹேர் ஸ்டைல் செய்து கொண்ட ரஜினியின் “ராக்கம்மா கையத் தட்டுவும்”, மனம் பிழன்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் சொட்டு நீலம் போட்டு வெளுத்த அந்த அம்மணியுடன் புலம்பிய “கண்மணி...அன்போட...காதலன்...நான்..நா... எழுதும்” என்ற குணா பாடலும் ஒளிபரப்பினார்கள். சரித்திரம் காணாத அந்த ஒ.ஒவைப் பற்றி நாலு நாளைக்கு கூடிக்கூடி காடு மேடு கழனியெங்கும் பேசிக்கொண்டார்கள்.

மன்னையில் டி.விக்கள் வீதிக்கு நான்காக மலிந்து போவதற்கு முன்னரும் எங்கெளுக்கென்று சொந்தமாக ஒரு இடியட் பாக்ஸ் இல்லாதவே ளையில்  கிரிக்கெட் பார்க்க நானும் வடக்குத் தெரு கோபாலும் பட்ட பிரயத்தனங்கள் பற்றி கொஞ்சம் அலச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தோளுக்கு மேல் வளர்ந்த கோபாலை “எங்கூட வா டிவியில் கிரிக்கெட் மேட்ச் காமிக்கிறேன்” என்று யாராவது ஆசைகாட்டிக் கூப்பிட்டுக் கடத்திக் கொண்டுபோய்விடலாம். கிரிக்கெட் பார்ப்பதில் அவ்வளவு ஈடுபாடு.

ரேடியோவில் எங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கில, ஹிந்தி பாஷாக்களின் அறிவைக்கொண்டு காமெண்ட்ரி கேட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தெற்கு தெரு முரளி வீட்டில் ஒரு கருப்பு வெள்ளை சாலிடேர் வாங்கினார்கள். அவர்கள் வீட்டு முற்றத்தில் பள்ளிகளில் வாசலில் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக்கொடி கம்பம் போல அங்கே ஆன்டென்னா கம்பீரமாக நின்றிருந்தது. முரளியின் அண்ணா ரவியும் நமக்கு நெருங்கின தோஸ்த். ரவி சாஸ்திரி போலவே நெடுநெடு உயரம். சுருட்டை முடி. மெலிந்த தேகம். சீமைத்துரை போன்ற தோற்றம். முரளியின் தந்தையார் நல்ல ஓவியர். அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியரும் கூட. அதிகம் வாயைத் திறக்க மாட்டார். நான் அதிகம் வாயைத் திறக்காமல் இருக்க மாட்டேன்.

டி.வியில் நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கும் நேரத்திற்கு நானும் கோபாலும் தெற்குத்தெரு மண்டபம் பின்னால் இருக்கும் சாலிடேர் வீட்டை சைலன்ட்டாக முற்றுகையிடுவோம். சைக்கிள் ஸ்டாண்ட் போடும் சத்தம் கூட எழாது. படையோடு போகக்கூடாது. வீட்டை ஸ்டேடியம் ஆக்கும் அபாயம் உள்ளதால் உள்ளே விடமாட்டார்கள். “முரளி” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி ஆடியோ க்ரிப்ட்டோகிராஃபியில் ஒரு சங்கோஜ கூப்பாடு போட்டுவிட்டு சற்று நேரம் மறுவொலி எழுப்பாமல் அமைதியாக வெளியே காத்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட உளவு பார்க்கும் ஒற்றர்கள் தோரணையில் இருக்கவேண்டும். “உஷ். சத்தம் போடாதே” என்று ”வசீகரா...என் நெஞ்சினிக்க..” பாடும் பாம்பே ஜெயஸ்ரீயின் ஹிஸ்கி வாய்சில் வாய்மேல் விரல் வைத்துக்கொண்டே வந்து அந்த நீலக் கலர் சட்டம் போட்ட கதவைத் திறந்து உள்ளே விடுவான். ட்ராயிங் மாஸ்டர் மரச்சேரில் மௌனமாக டிவியைப் பார்க்க வீற்றிருப்பார். அந்த டார்க் ரூமின் சுவரோரத்தில் நானும் கோபாலும் பல்லி போல அவையடக்கமாக உட்கார்ந்திருப்போம்.

ஒரு சிக்ஸருக்கு உற்சாகமாக கைதட்டுவதோ அல்லது விக்கெட்டுக்கு வருத்தமாக உச்சுக் கொட்டுவதோ கூட கூடாது. வாயடக்கமாக உட்கார்ந்து பார்த்துவிட்டு இரவு மதில் கட்டையில் குழுமும் நண்பர்களிடம் ஸ்டேடியத்தில் பாப்கார்ன் கொரித்துப் பார்த்தது போல கதையளப்போம். அதிமுக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த டிவியில் 75% டாட்டுகளுக்கு மத்தியில் 25% சித்திரம் தெரியும். ஊரில் எல்லா டிவிக்கும் அதே கதிதான். க்ரீஸில் காலைப் பரப்பி மட்டையைப் பிடித்து நிற்கும் பிக்ஸல் கூட்டத்தை ஸ்ரீகாந்த் என்றும் எதிர்முனையில் கொஞ்சம் குள்ளமாக மெதுவாக ஓடிவரும் பிக்ஸல் அணிவகுப்பை கவாஸ்கர் என்றும் ஒரு கெஸ்ஸில் பார்க்கவேண்டும். சிக்ஸருக்கு காமிராவைத் தூக்கி விண்ணில் செல்லும் பாலைக் காண்பித்தால் புள்ளியோடு புள்ளியாக பந்தும் கரைந்துவிடும். டி.வி திரையில் மும்மாரி மழை எப்போதும் பொழிந்துகொண்டே இருக்கும். எளிமையாக சொல்வதென்றால் கமெண்ட்ரி கேட்கும் ரேடியோவை விட ஒரு படி மேல். அவ்வளவுதான்.

இப்படி கருப்பு-வெள்ளையில் பார்த்துக்கொண்டிருந்த போது பிருந்தாவன் நகரில் கோபாலின் நண்பன் பாய் வீட்டில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம்புது கலர் டிவி வாங்கியிருந்தார்கள். அப்போதே செட்டாப் பாக்ஸ் வைத்து சாட்டிலைட்டிலிருந்து நேரடியாக சிக்னல் இறக்கி புள்ளியில்லாமல் டி.வி பார்த்த படாடோபர்கள். பாய் வீட்டில் கொஞ்சம் பேசலாம். கொஞ்சம் கை தட்டலாம். கொஞ்சம் உச்சும் கொட்டலாம். ஆனால் அங்கும் ஒரு லிமிட்டோடு அதையெல்லாம் நிறுத்திவிடவேண்டும். இல்லையென்றால் பாய் சூறாவளியாய் உள்ளே வந்து “அத்தா வைவாஹ” என்று கண்டித்து வாய்க்குப் பூட்டு போட்டுவிடுவான். இதில் ஒரு சின்ன பிரச்சனை என்னவென்றால் பாய்க்கு கிரிக்கெட் அவ்வளவாக பிடிக்காது. சில சமயங்களில் அவ்வளவும் பிடிக்காது. பாதி நாள் “அண்ணே இல்ல” என்று தங்கச்சி குரல் மட்டும் சாத்திய கதவுக்கு பின்னாலிருந்து வெளியே வரும். அப்படியே திரும்பி தெக்குத் தெரு க-வெக்கு வந்து தஞ்சமடைவோம்.

சன் டிவி கோலோச்ச ஆரம்பித்ததும் மன்னைக்கு புதுரத்தம் பாய்ச்சப்பட்டதைப் போன்ற உணர்வு. சாயந்திரவேளைகளில் வம்பு பேச வீட்டு வாசல்களில் குழுமும் மகளிர் கூட்டம் குறைந்துவிட்டது. ஆங்காங்கே தெருவோரத்தில் சவுக்குக் கோலூன்றி கேபிள் சுற்றி இழுத்தார்கள். கும்சுகு கும்சுகு குப்புச்சும் பாடலில் மனிஷா கொய்ராலா அர்விந்த் சாமியை 360 டிகிரிக்கு விசிறிப் பார்த்து தேடி முடிப்பதற்குள் நகருக்கு கேபிளினால் பரிவட்டம் கட்டியிருந்தார்கள். சன்னோடு ஸ்டார் தொலைக்காட்சியையும் காண்பிக்கிறேன் என்று வடக்குத் தெரு சரவணன் கேபிள் டி.வி ராஜாங்கத்தை எங்கள் பேட்டையில் தொடங்கினான். அவர்கள் வீட்டு மாடியறைதான் கேபிள் டி.வி அலுவலகம். மேட்ச் நாட்களில் வேறு பக்கம் டிஷ்ஷைத் திருப்பி வீட்டிலிருக்கும் திருமதிகளுக்கு சினிமா காண்பித்துவிட்டு வெளியே போய்விடும் சரவணனை கிரிக்கெட் பார்க்க கையோடு அழைத்துவருபவர்கள் நானும் கோபாலுமாகத்தான் இருக்கும்.

ஊரில் புதிதாய் டி.வி வாங்கிய எல்லோருக்கும் “டெக்” போட்டுப் புதிய படம் பார்க்கும் ஆர்வம் கற்பாந்த காலப் படங்களுடையது போல ரீல்ரீலாக இருந்தது. பந்தலடி ரங்கூன் விடியோஸில் ஒரு இரவுக்கு நாற்பது ரூபாய்க்கு டெக்கும் நான்கு படங்களும் வாடகைக்கு தருவார்கள். சத்யராஜின் “ஆளப்பிறந்தவன்” படம் ஐந்தாறு முறை “ஆண்டவனைப் பார்க்கணும்... அவனுக்கு ஊத்தணும்... அப்ப நான் கேள்வி கேட்கணும்... சர்வேசா... தலையெழுத்தெந்த மொழியடா....” என்ற agnostic வரிகளில் க்ரீச்சிட்டு நின்றுவிட்டது. கூட்டம் கொஞ்சம் கூட அசராமல் அப்படியே உட்கார்ந்திருந்தது. கையால் கொஞ்ச தூரத்துக்கு கேசட் உருளைகளைச் சுற்றிவிட்டு போடும் தனித்திறமை மிக்கவர்கள் முழுப்படம் பார்க்கலாம். சுழற்றுகிறேன் பேர்வழி என்று ஆர்வலன் ஒருவன் இழுக்க ஒளி நாடா முழுவதும் உருவிக்கொண்டு வெளியேவந்து விழுந்தது. தரையில் நாடா நூடுல்ஸ் மலை. அன்றைய தினத்தோடு எங்கள் வீட்டில் டெக் சினிமா பழக்கம் தடைசெய்யப்பட்டது.

நிறைய கீறல் விழுந்த, கண்ணை அரிக்கும் ஆபத்தான விடியோ கேசட்டுகள் புழக்கத்தில் வர கொஞ்சம் கொஞ்சமாக டெக் போதையிலிருந்து மக்கள் மீண்டார்கள். அந்த இராப்பொழுது முழுவதும் கண் முழிக்கும் கெட்டப் பழக்கத்தை கைவிட்டார்கள். சன் டிவியினர் நிறைய புதுப்படங்களையும் சினிமா நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி மக்கள் மத்தியில் மங்காப் புகழ் பெற்றார்கள். அப்புறம் நிலா தொலைக்காட்சி, விஜய் என்று வரிசையாக சாட்டிலைட்டில் நிறைய பேர் கடை விரித்தார்கள். மாலை வேளைகளில் அக்கம்பக்கம் வீடுகளில் சௌஜன்யமாகப் பேசிப் பழகி வந்த மக்கள் அனைவரும் ஹாலுக்குள்ளேயே முடங்கிப்போனார்கள். ஆறு மணிக்கெல்லாம் வெளியே ஊர் அடங்க ஆரம்பித்துவிட்டது. வீட்டிற்குள் “தமிழ் மாலை” ஒலிக்கத்தொடங்கியது.

பின்குறிப்பு: போன பாரா இந்த நெடிய மன்னார்குடி எப்பிஸோடை முடிப்பதற்காக அவசராவசரமாக எழுதப்பட்டது.

பட உதவி: http://8ate.blogspot.com/
-

Tuesday, January 3, 2012

சேவா ரத்னா!

”சேவைகள் பல புரிந்தவரே!” என்று அரசியல்வாதிகளுக்கு வைத்திருக்கும் பேனர்களைப் பார்த்தவுடன் எனக்கு சிரிப்புடன் பிச்சுமணி மாமா, எங்கம்மா மற்றும் என் சோதரியின் ஞாபகம் தான் வருகிறது.

எலும்பிச்சம் சேவை, மிளகு சேவை, தேங்காய் சேவை, வெல்ல சேவை என்று விதம்விதமாக வாய்க்கு வக்கனையாக சேவை செய்பவர்களுக்கு “சேவா ரத்னா” என்று அவார்ட் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
1. பிச்சுமணி மாமா - எங்கள் ஊரின் பிரதான சமையற்கலை வல்லுனர்; எங்கள் குடும்பத்தின் ஆஸ்தான நளபாகராக இருந்தவர்.

2. சேவைப் படியில் உருண்டையாக மாவை இட்டு நான் ஏறி நின்று பிழிந்து தர பல சேவை தயார் செய்யும் எனது தாயார்.

3. “தம்பி இன்னிக்கி எங்காத்ல சேவை” என்று வாஞ்சையோடு கூப்பிட்டு பரிமாறும் என் அக்காள்.

#இவங்களுக்கெல்லாம் நானும் மவுண்ட்ரோட்ல பேனர் வைக்கலாம்னு இருக்கேன்.

##எச்சேவை புரிணும் அவர்களுக்கு பகவான், எம்பெருமான் மன்னார்குடி ஸ்ரீவித்யா ராஜகோபாலஸ்வாமி சேவை சாதித்து அருள் புரிய ப்ரார்த்திக்கிறேன்.
பட உதவி: http://ashwini-spicycuisine.blogspot.com/
பின் குறிப்பு:  ப்ளாக்குலகத்துடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்பதற்காக இதுபோன்ற அக்கப்போர்களையும், துக்கடாக்களையும் பகிரலாம் என்று விருப்பம்.

Sunday, January 1, 2012

நலந்தானா...


தலைப்பிலிருந்து ஆரம்பித்தால் அடுத்த வரி உடலும் உள்ளமும் நலந்தானா. இந்த ப்ளாக் சரித்திரத்தில் இவ்வளவு நாள் கடையை மூடிவிட்டு நான் வனாந்திரம் சென்றதில்லை. சிட்டுக்குருவி தலையில் எட்டு மூட்டை அரிசியை ஏற்றிவிட்டாற் போல இருபது நாட்களாக வேலை அதிகம். வீட்டில் இருக்கும் ஒரே ஒரு அடாசு கணினிக்கு ஒன்பது பேர் இழுபறி போட்டி. ஆயிரமாயிரம் எண்ணங்கள் எழுந்தும் ஆசுவாசமாய் உட்கார்ந்து எழுத நேரம் வாய்க்கவில்லை. மிக்ஸர், ஓமப்பொடி வகையறா ”வாய்மூடா” தீனியைக் கொரிப்பது போல இந்த ஃபேஸ்புக் வேறு பிசாசாய் பிடித்துக்கொண்டது.

அவ்வப்போது மனதில் எழும் எண்ணங்களையும், க்ஷேம லாபங்களையும் ஓரிரு வரிகளில் சுளுவாக முகப்புஸ்தக சுவரில் கிறுக்கி நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள ”உரித்த வாழைப்பழம்” சாப்பிடும் சௌகரியத்தில் இருப்பதால் பிறவிச் சோம்பேறியான நான் அங்கேயே கொட்டாய் போட்டு குடியிருந்துவிட்டேன். 2012-ல் நிறைய எழுத வேண்டும் என்று சத்தியப் பிரமாணம் எடுத்திருக்கிறேன். பயப்படவேண்டாம். உங்களுக்கும் எனக்கும் ஆண்டவன் துணையிருப்பார்.

சென்ற ஆண்டும் பம்பரமாக சுற்றி பல வேலைகள் பார்க்கவேண்டியதாயிற்று. வழக்கம் போல வீட்டிலும், ஆபீஸிலும் என்னை ஸகித்துக்கொண்டவர்களுக்கு ஒரு தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். வருஷாரம்பத்தில் இன்னென்ன இப்படியிப்படி செய்யவேண்டும் என்று திட்டமிட்டுச் செய்தாலும் ஜெட் வேகத்தில் காலம் இறக்கை கட்டிப் பறக்க நிறைய மனோரதங்களை செயல்படுத்த முடியவில்லை. சென்னையில் இருபுறமும் ஆவேசமாகக் கட்டியணைத்து வரும் வண்டிகளுக்கு முத்தமிடாமல் சென்றுவருவது கம்பி மேல் நடக்கிற காரியம். 2011-ல் அந்த கழைக்கூத்தை செம்மையாக நிறைவேற்றியது மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.

செடன் ஜாதிக் கார் வாங்க ஆசைப்பட்டேன். அது நிறைவேறியது. மாருதி கம்பெனிக்காரர்கள் மூலைக்கு ஒரு சர்வீஸ் செண்டர் ஓப்பன் செய்தும், இந்திய ரோடுகளின் தர நுட்பங்கள்  அறிந்தவர்கள் என்பதாலும் அவர்களிடமே டிசையர் வாங்கி என் டிசையரை பூர்த்திசெய்துகொண்டேன்.

சென்ற ஆண்டின் இறுதியில் சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்றது இன்னும் நிறைய எழுதவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது. முகப்புஸ்தக நண்பர்கள் பழக்கம் அதிகரித்திருக்கிறது. புத்தகப் புழுவாக இருப்பவர்களின் சங்காத்தம் கிடைத்திருக்கிறது.

இதற்கு மேல் எழுத இப்போது நேரமில்லை. பிரம்மமுஹூர்த்ததில் எழுந்து மாங்காடு காமாக்ஷி தரிசனம். இப்போது கண்ணைச் சுழற்றுகிறது. இந்த வருடத்தில் நிறையவும் நிறைவாகவும் எழுத முயல்கிறேன். கருத்துரைத்து ஊக்கமளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என் நெஞ்சுக்கினியவர்களுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

WISH YOU A HAPPY & PROSPEROUS
NEW YEAR


பின் குறிப்பு: இப்பதிவின் பூர்வாங்கத்தில் இருப்பது அடியேன் கிளிக்கிய 2011-ன் கட்டக் கடைசி சூரிய அஸ்தமன வானம். ”தானே” புயலடித்து ஓய்ந்து எட்டிப் பார்த்த நீலவானத்தை வரிக்குதிரையாக்கிய மேகக் கூட்டம்.

கடைசி பட உதவி: http://www.stunningmesh.com

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails