கீழ் வரும் சீன்களைப் படித்துவிட்டு கடைசியில் “**********”க்கு
அப்புறம் படிக்கலாம். அல்லது “***********”க்கு கீழ் படித்துவிட்டும்
மேலிருந்து சீன்களைப் படிக்கலாம். உங்கள் விருப்பம்.
கொத்தடிமைகள் போல வரிசையாக நின்று கவுண்டருக்குள் கை நீட்டிச் சம்பளம் வாங்குகிறான் ஹீரோ. ஆனால் சம்பளம் கரன்ஸிகளாக இல்லை!
ஓப்பனிங் சீன்
அது
ஒரு மங்கலான வெளிச்சத்தில் இயங்கும் நட்சத்திர மது விடுதி. அறை முழுக்க
ஆக்ஸிஜெனில் போதையிருந்தது. நீட்டிமுழக்கி நாலு பேர் ”ழ்..ழ்ழ்.ழ்ழ்.”
என்று வழுக்கும் ஆங்கிலம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நெருக்கிப்
போடப்பட்டிருக்கும் டேபிள் சேர்களை கண்ணெதிரே மறைய வைக்கும் சிகரெட் புகை.
புதிதாய் நுழைபவர்கள் வெண்புகைக்குக் கண் பழகிய பின் தான் எவரையும்
பார்க்கமுடியும். பார் சிப்பந்தி ஷெல்ஃபிலிருந்து எடுத்து மது கொடுக்கும்
கவுண்டர் அருகே போடப்பட்டிருக்கும் கழுத்து நீண்ட க்ரோர்பதி சேரில்
உட்கார்ந்து சில அனுபவஸ்தர்கள் நிதானமாக மதுவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
குடிமகன்களின் டேபிள் சேர்களை சுற்றி ’ஒரு மாதிரி’யான மாதுக்கள் சிலர்
குட்டைப் பாவாடையோடு கையில் போத்தல்களுடன் நளினமாக குனிந்து நிமிர்ந்து
வளைய வருகிறார்கள். ஒரு சாந்தமான வாலிபன் தனியனாய் சத்தமில்லாமல் மக் பீர்
அடித்துக்கொண்டிருக்கிறான். ஹீரோவும் அவனுடைய நண்பனொருவனும் உள்ளே
நுழைகிறார்கள். சரக்கு ஆர்டர் செய்யும் முன் திடீரென்று விடுதி வாசலில்
”ஆ.. ஊ...” என்று கூச்சல். ரகளை. தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம்.
உற்சாகபானமருந்திக்கொண்டிருந்த அனைவரும் யோகநிலை கலைந்து தலைதெறிக்க
ஓடுகிறார்கள். கையில் பிஸ்டலுடன் மூக்கு விடைக்க வில்லன் பாருக்குள்
எண்ட்ரீ கொடுக்கிறார்.
வில்லன் பீர் பையன் அருகில் வந்து
நம்பியார் சிரிப்பு சிரித்து அவன் கையைப் பிடித்து இழுத்து கை குலுக்கப்
பார்க்கிறார். அவன் உதறிவிட்டுத் தப்பி ஓடுகிறான். வில்லனிடமிருந்து
தப்பித்து டாய்லெட்டில் ஒளிந்த அவனைக் காப்பாற்றி விடுதிக்கு வெளியே
இழுத்துக்கொண்டு ஓடுகிறான் ஹீரோ. போக்குவரத்து நெரிசல் இல்லாத நிர்ஜனமான
சாலைகளில் வேகமாய் ஓடுகிறார்கள். சிறிது தூரத்தில் சுவரேறிக் குதித்து,
இரும்பு ஷட்டர் திறந்து முதல் மாடியில் ஒரு மறைவிடத்தில் போய்
ஆசுவாசமடைகிறார்கள். இரவுப் பொழுது அங்கேயே கழிய காலையில் சூரியன் கண்ணைக்
குத்த சேரில் உட்கார்ந்த வண்ணம் தூங்கியிருந்த ஹீரோ எழுந்து பார்க்கையில்
பக்கத்தில் இருந்தவனைக் காணவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தால் எதிரே
இருக்கும் பாலத்தின் கட்டைகளில் ஏறி நின்றுகொண்டிருக்கிறான் அவன். ஏதோ
நினைவுக்கு வந்தவனாய் ஹீரோ தனது வலது மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும்
இடையில் பார்க்கிறான். அவனது ஆயுட்காலம் அந்த பீர் பையனால் மேலும் நூறு
வருடங்களாக அதிகரித்திருக்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பீர்
பையனின் ஆயுள் முடிந்து மரக்கிளை முறிவது போல ”மளுக்”கென்று ஒடிந்து
சரிந்து கீழே ஓடும் நதியில் விழுகிறான்.
செண்டிமெண்ட் சீன்
தனது
பிள்ளையைப் பார்க்க பஸ்ஸேரி செல்ல முயல்கிறாள் தனது வாழ்நாளின்
இறுதிக்கட்டதிலிருக்கும் ஒரு தாய். பிரயாணத்திற்காக தனது வாழ்நாளை கொஞ்சம்
தியாகம் செய்ய வேண்டும் என்பது பொது விதி. அதுதான் டிக்கெட் எடுக்க
பேருந்துக் கட்டணம். தேவைப்படுவது பதினைந்து நிமிஷங்கள். அவளிடம்
எஞ்சியிருப்பதோ பத்து நிமிஷங்கள். அதையும் கொடுத்துவிட்டால் பிள்ளையைப்
பார்க்க முடியாது. ஓடலாம் என்று முடிவெடுக்கிறாள். தாய்ப் பாசத்துடன்
இரைக்க இரைக்க ஓடி அவனது இருப்பிடைத்தை அடைகிறாள். நான்கு தெருக்கள்
சந்திக்கும் ஓரிடத்தில் இருவரும் எதிரெதிராக ஓடிவர, நொடிகள் கரைய, ஓடிவர,
நொடிகள் கரைய, மகன் தனது சக்தியனைத்தையும் ஒன்று திரட்டி வேங்கையாய்ப்
பாய்ந்து வர, தடுமாறாமல் ஜாக்கிரதையாக தாய் விரைய இருவரும் நீட்டிய கையோடு
கை கோர்க்கும் சமயத்தில் தாயின் வாழ்நாள் மணித்துளிகள் 00:00:00:00 ஆகி
கரைந்து ஜீவன் பிரிகிறது.
காதல் சீன்
செத்துப்போன
மக் பீர் பையன் கொடுத்த வாழ்நாள் மணித்துளியையும் சேர்த்து ஹீரோவின்
கணக்கில் நிறைய மணிநேரங்கள் சேர்ந்துவிடுகிறது. காஸினோ க்ளப்பில் சென்று
சூதாட்டம் விளையாடுகிறான். எதிராளி மில்லியன் வருடங்கள் வாழ்நாள் தன்
பங்கில் இருக்கும் பில்லியனர். ஆட்டத்தில் வென்ற ஹீரோ மில்லியன் வருடங்கள்
வாழும் வல்லமை படைத்தவராகிறார். இரவு க்ளப்பில் தோற்ற மணிச் செல்வந்தரின்
வீட்டில் ஒரு பார்ட்டி அட்டெண்ட் செய்கிறார். இயற்கையாகவே அவர் மேல் அந்த
தனவானின் பெண்ணான அந்த ஹீரோயினுக்கு காதல் மலர்கிறது. அவரிடம் அடியாளாய்
வேலை பார்க்கும் வில்லன் கோஷ்டி ஹீரோவின் வாழ்நாள் மணிகளை உள்ளடக்கிய
“மணிச் சொத்தை” அபகரிக்க திட்டமிடுகிறான். துரத்துகிறான். பறிக்கிறான்.
காதலர்கள் தப்பிக்கிறார்கள். எதிர் கோஷ்டியினர் துரத்துக்கிறார்கள்.
காதலர்கள் தப்பிக்கிறார்கள்.
படம் முழுக்க காலம் உயிர்
போன்றது என்று காட்டப்படுகிறது. ஜீவனோடு இப்புவியிலிருக்கும் கால அவகாசம்
கடனாகக் கொடுக்கப்படுகிறது. வாழ்நாள் மணித்துளிகளை லோன் கொடுப்பதற்கு நிறைய
வங்கிகள் இருக்கின்றன. ஸேஃப் டெப்பாசிட் லாக்கர்கள் இருக்கிறது.
குற்றவாளிகளைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு இன்னும் பத்து வருடங்கள்
அவர்களது வாழ்நாளுக்கு பரிசாக வழங்கப்படுகிறது. அங்கேயும் அம்மா
செண்டிமெண்ட், காதல், துரோகம், நட்பு, அடிதடி என்று சகலமும் இருக்கிறது.
க்ளைமாக்ஸில் ஹீரோவும் ஹீரோயினியும் கையோடு கை கோர்த்துக்கொண்டு சில்ஹூட்டில் சந்தோஷமாகச் செல்கிறார்கள்.
***************
வியாபாரங்களில்
பண்டைய காலத்தில் பண்ட மாற்று முறை இருந்தது, அதற்கப்புறம் இப்போது
கரன்ஸி பயன்படுகிறது. எதிர்காலத்தில் உலக மக்களுக்கு 25 வருடங்கள் ஆயுள்
என்று பிறக்கும்போது நிர்ணயம் செய்து, வேலை செய்தால் பணத்துக்கு பதில்
வாழ்நாள் மணித்துளிகளை சம்பளமாக கொடுத்தால்? இந்த விபரீத கற்பனைதான் கதைக்
கரு. ஊருக்கு பிரயாணம் போக வேண்டுமா? காருக்கு டீசல் போடவேண்டுமா? கார்
வாங்கவேண்டுமா? டெலிபோன் பேச வேண்டுமா? காதலிக்கு வைர மோதிரம் பரிசளிக்க
வேண்டுமா? ஹோட்டலில் சாப்பிட மற்றும் தங்க வேண்டுமா? எதுவாகினும் வலது கை
மணிக்கட்டுக்கும் முழங்கைக்குமிடையே பச்சையில் நொடி நொடியாகக் கரைந்து
ஒளிரும் நமது ஆயுளின் மணித்துளிகளை பணமாகக் கொடுத்தால் அது கிடைக்கும்.
25
வருடங்கள் தான் வாழ்க்கை என்ற தலையெழுத்தை கையில் எழுதி ராக்கெட் விடும்
கவுன்டவுன் மாதிரி லைஃப் க்ளாக் பச்சையாய் ஒளிர்ந்து ஒவ்வொருப் பிரஜையின்
கண்ணெதிரேயும் நொடி நொடியாகக் கரைகிறது. இன்னும் எவ்வளவு நாட்கள்
உயிர்வாழ்வோம் என்று ஒவ்வொரு பிரஜைக்கும் சத்தியமாகத் தெரிந்துவிடுவதால்
டுபாக்கூர் ஜோசியர்கள், அடாவடி சாமியார்கள் இல்லாத மற்றும் சாமி கும்பிடாத
சமதர்ம சமுதாயமாக இருக்கலாம். எங்கு சென்றாலும், எதை
வாங்கினாலும், எதற்கும் எவரும் காசு கேட்பதில்லை. பதிலாக கையோடு கை
கோர்த்தோ அல்லது ஸ்வைப்பிங் கருவியிலோ வாழ்நாளின் மணித்துளிகளை தியாகம்
செய்தால் நீங்கள் விரும்பியதை அடையலாம்.
இதன் ட்ரெய்லர் சுட்டி.
http://www.youtube.com/watch?v=efNzhEKm3w4
#இது
ஆங்கிலப் படமான IN TIME என்பதன் கதை. படத்திலிருக்கும் சீன் வரிசை எனது
எழுத்தில் துளியூண்டு மாறியிருக்கலாம். அது என்னுடைய ரசனைக்காக அப்படி
எழுதப்பட்டது. நிறைய சீன் சீனாக எழுதலாம் என்றிருந்தேன். மக்கள்
பிழைத்துப்போகட்டும் என்று பெரியமனது பண்ணி இத்தோடு நிறுத்திவிட்டேன்.
##தமிழில்
ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்றவர்களின் உழைப்பிலும் கைவண்ணத்திலும் நியர்
ஃப்யூச்சரில் தமிழ்ப் படமாக்கப்படலாம். நல்ல சயின்ஸ் ஃபிக்ஷன் படம்.
18 comments:
Mee the first in time..
விமர்சனம் அருமையாக இருக்கு.
நம்ப ஊர் அரசியல்வாதிகள் தங்கள் வாழ்நாளை அதிகரிக்க என்ன செய்வார்கள் என்று ஒரு கற்பனைக்கதை எழுதுங்களேன் !
நிறைய சீன் சீனாக எழுதலாம் என்றிருந்தேன். மக்கள் பிழைத்துப்போகட்டும் என்று பெரியமனது பண்ணி இத்தோடு நிறுத்திவிட்டேன்.
nice ..
இப்படிஎல்லாம் சயன்ஸ் பிக்ஷன் படம் எடுத்தாலாவது மனுஷனுக்கு உயிரின், காலத்தின் அருமை புரிந்தால் சரிதான்.
வித்தியாசமான கற்பனைக் கதையாக இருக்கிறது....
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க..
அருமையான விமர்சனம்
படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது
இன்னும் நிறைய எழுதி இருக்கலாம்
காலத்தை மட்டும் மனிதன் கையில் பிடித்துவிட்டால்...
நினைத்துப் பார்க்க பயமாகத்தான் இருக்கிறது
மனம் கவர்ந்த அருமையான பதிவு.வாழ்த்துக்கள்
எதை மனிதன் தொட்டுவிட்டதாக நினைக்கிறானோ அந்த நொடி அவனுக்கான அடுத்த பயணமும் சவாலும் புதிதாய் கண்முன்னே முளைவிடுகிறது.
அறிமுகம் மேலேயுள்ள வரிகளை நினைவுபடுத்தியது.நன்றி ஆர்.வி.எஸ்.
சுந்தர்ஜியின் கமெந்ட் கவர்கிறது.
மிகச் சுருக்கமாய் விறுவிறுப்பாக .. ஒரு டிரைலர் பார்ப்பது போலவே இருந்தது.
விமர்சனக்கலை என்பார்கள். கலையுணர்ச்சியோடு அழகாக சுருக்கமாக அதேசமயம் படத்தை உடனடியாகப் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆர்வத் துடிப்போடு எழுதியிருக்கிறீர்கள். நன்றி ஆர்விஎஸ். அருமை.படத்தின் கதை சுவாரஸ்யம் மிகுந்தது.
ஆர்விஎஸ் அன்பழகன் கோமதி என்று கருத்துரை வந்திருப்பது என்னுடையதுதான் உறரணி.
Are you on leave RVS?
ட்ரெயிலர் சுட்டிய விடுங்க. இதன் ப்ளூரே பிரிண்ட் சுட்டி எங்க இருக்கு சார்?
உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
[புத்தாண்டு வாழ்த்துக்கள்]
மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
Post a Comment