Tuesday, November 1, 2011

மன்னார்குடி டேஸ் - ஸ்நேக் பார்

ஒரு ரூபாய் பட்டர் பிஸ்கெட், ஐம்பது காசு கடலை உருண்டை, சரம் சரமாக பல டினாமினேஷன்களில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஏ.ஆர்.ஆர் மற்றும் நிஜாம் பாக்குப் பொட்டலங்கள், ஹால்ஸ் டப்பா, பின் பாகத்தில் பஞ்சு வைத்த மற்றும் அல்லாத பல கம்பெனி சிகரெட்டுகள், சணல் கயிறில் நெருப்பு, உள்ளே ரெண்டு ப்ளாஸ்டிக் டேபிள் மற்றும் நாலைந்து ஸ்டூல்கள் என்று முன்புறம் பாய்லர் வைத்த டீக் கடைகளுக்கு மாடர்ன் நாமகரணம் ஸ்நேக் பார்! மன்னையில் முக்காலே மூணு வீசம் இளைஞர்கள் திருட்டு தம் அடிக்கத் தேடும் இடம் அது. “காலிப் பய. அவன் சிகிரெட்டு பிடிப்பான்” என்று உற்றாரும் ஊராரும் தூற்றக் கூடாது என்று மறைவிடம் தேடுவோர் நாடுமிடம் ஸ்நேக் பார்.

பந்தலடியில் உடுப்பி கிருஷ்ணாபவன் எதிரில் ஒரு சேட்டன் ஸ்நேக் பார் வைத்திருந்தார். பல பேருக்கு அதுதான் ஆஸ்தான ’தம்’மிடம். சேட்டன் கட்டையாய் பூப்போட்ட கைலி கட்டியிருப்பார். சேரநாட்டு அநேக சேட்டன்மார்கள் போல முன்பக்கம் சொட்டை வாங்கி, சட்டையில்லாமல் இருப்பார். அவரே டீ மாஸ்டர், அவரே சப்ளையர். எனது நண்பர்களில் பலர் அவருடைய டீக் கஸ்டமர்கள். “எந்தா!” என்று விளிக்கும் சட்டையில்லாத கைலிச் சேட்டனின் கட்டஞ்சாயாவில் பல இளைஞர்கள் கவிழ்ந்திருந்தார்கள். ஏனைய வென்ட்டிலேஷன் இல்லாத கீக்கிடமான ஸ்நேக் பார்களைவிட கொஞ்சம் விஸ்தாரமானது அந்த மலையாள ஸ்நேக் பார்.


அந்நாளில் ஜனசந்தடி மிகுந்த அங்காடித் தெருக்களில் மலிந்திருந்தன ஸ்நேக் பார்கள். “மாப்ள” என்று தோளோடு தோள் சேர்த்து ஓருயிர் ஈருடலாக உட்புகுவர். ஒரு அரைமணி நேரம் புகை சூழ்ந்த தேவலோக வாசம். கடைசியில் ஒரு ஹால்ஸ் அல்லது பாக்குப் போட்டுக் கொண்டு வெளிவரும் வேளையில் அவர்கள் முகங்களில் ஜொலிக்கும் திருப்தி கோடி ரூபாய் கொடுத்தாலும் அவர்களுக்கு இவ்வையகத்தில் வேறெங்கிலும் கிடைக்காது.

ஏட்டனின் பாருக்கு தொழில் போட்டியாக அதே ஏரியாவில் இனிய உதயமானது இன்னொரு ஸ்நேக் பார். எஸ்.பி.பியும் ராஜாவும் கைக் கோர்த்துக்கொண்டு அவர்களுக்காக உழைத்தார்கள். வெளியே தைரியமாக சிகரெட்டும் கையுமாக திரியும் தீரர்களைக் கூட கட்டி இழுத்தது தேன் சொட்டும் பாடல்கள். சில சமயம் காது கிழியும் பாடல்களுக்கிடையில் ஒரு சிகரெட்டை வாங்கி விரலிடுக்கில் சொருக்கிக்கொண்டு ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருப்போரும் உண்டு. ஏதோ தயிர் சாதத்துக்கு எலும்பிச்சங்காய் ஊறுகாய் போல டீக்கு தொட்டுகொள்ள சிகரெட்டா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் அதிர்ச்சியுற்று “கண்ணு வழியா புகை விடட்டா” என்றான் கிங்ஸ் சிகரெட் போல நெடுநெடுவென வளர்ந்த நண்பன் ஒருவன்.

புதியதாய் அரும்புமீசை முளைத்து குறும்புப் பார்வையுடன் ஆணாகி ஆளாகி வரும் விடலைகளுக்கு சிகரெட் போன்ற லாஹிரி வஸ்துக்கள் கற்றுக்கொள்ளும் கலாசாலைகளாக பணியாற்றிக்கொண்டிருந்தன பல ஸ்நேக்குகள். “அக்கும்..ஹுக்கும்” என்று இருதயம் வெளியே வந்து விழும்வரை இருமி உள்ளுக்கு இழுப்பார்கள். திருட்டு தம் கோஷ்ட்டிகளின் புகலிடமாகவும் கூடாரமாகவும் செயல்பட்டுவந்த ஸ்நேக் பார்களில், தான் நண்பர்களிடமும் பெற்றோரிடமும் பிச்சையெடுத்து காலில் விழுந்து காசு பொருக்கிக்கொண்டு வந்தாலும் உருப்படியாக வாய்பொத்தி சமர்த்தாக இருக்கும் நண்பனிடம் “மாப்ள! தம் வேணுமா” என்று விருந்தோம்பி தனக்கொரு இழுப்பு அவனுக்கொரு இழுப்பு என்று ’தம்’ தர்மம் மற்றும் தம்தர்மம் காத்து நட்புக்கு இலக்கணமாக நின்ற நண்பர்களை நினைக்கும் பொழுது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகிறது.

இதற்கு மேல் இந்த தம் பர்வத்தை விலாவாரியாக எழுதி, நீங்கள் என்போன்று இப்போது காபி மட்டும் குடிக்கும் டீ டோட்டலரை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடும் என்ற பயத்துடன் முடிக்கிறேன். வணக்கம்.

பின் குறிப்பு: சிகரெட் குடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது, அதைப் பற்றி படித்தல் அதைவிட தீங்கானது என்றெண்ணி இதைப் படிக்காமல் ஸ்க்ரால் பாரை உருட்டி கடைசி வரை நீங்கள் வந்துவிட்டால், மேலே போய் ஒருக்கா படித்துவிடுங்களேன்.


பட உதவி: http://flashnewstoday.com/
-

25 comments:

RAMA RAVI (RAMVI) said...

//'தம்’ தர்மம் மற்றும் தம்தர்மம் //

நன்றாக இருக்கு வார்த்தை ஜாலம்...

சக்தி கல்வி மையம் said...

லாஹிரி வஸ்துக்கள் கற்றுக்கொள்ளும் கலாசாலைகளாக பணியாற்றிக்கொண்டிருந்தன பல ஸ்நேக்குகள்.// நிதர்சன உண்மை நண்பரே...

உண்மைய சொன்னா உங்க பின்குறிப்ப பார்த்துதான் நான் பதிவே படிச்சேன்.. ஹீ.ஹீ..

Madhavan Srinivasagopalan said...

// மட்டும் குடிக்கும் டீ டோட்டலரை //

என்ன பாஸ் .. அப்ப அது 'காபி டோட்டலர்' தான ?

கோவை நேரம் said...

அப்போ பங்க் கடை இல்லையா ..?நாயர் கடை டீ எப்பவும் ஸ்பெசல் தான்...

Ramesh said...

சிகரட்டு புகையில் தேவ லோக வாசம் - as usual அபார சொல்லாட்சி - கூடவே தேவைதைகள் வந்தாங்கள? தெரியலையா ...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

செம பார்ம்ல இருக்கிங்க...


பகிர்வுக்கு நன்றி..

rajamelaiyur said...

பின் குறிப்பு super

ரிஷபன் said...

உங்க எழுத்தே எனக்கு லாகிரி வஸ்து.. அதனால தம் கட்டி படிச்சேன்..

வெங்கட் நாகராஜ் said...

உங்க பக்கம் ஸ்நேக் பார்.. எங்க நெய்வேலியில் பங்க் கடை.... மற்றபடி அதே திருட்டு தம்... புகை மண்டலம்.... அதே தம் தர்மம்.... :))))

புகை பிடிப்பது உடல் நலனுக்குக் கேடு.... :)

அந்த புகைமண்டலத்தில் எத்தனை பேர் கனவு கண்டு இருப்பார்கள்.... :)))

Angel said...

அச்சோ நான் சரியான மங்குனி ஸ்நேக் பாரை அப்படியே தமிழ் படுத்தி பாம்பு பார்னு பயந்து கீழே ஸ்க்ரோல் பண்ணபுரம்தான் தெரிஞ்சுது ...
very nice

Unknown said...

வணக்கம் மைய்னர் வாள்
ஏதோ ஒன்னு குறையுதே
:)
நல்ல நியாபக சக்தி

அப்பாதுரை said...

எப்பவும் சிகரெட் பிடிக்க மாட்டேன்.. தண்ணியடிக்கும் போது மட்டும்...

RVS said...

@RAMVI
பாராட்டுக்கு நன்றி மேடம். :-)

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
எதுக்கும் இருக்கட்டும்னு தான் அந்த பின்குறிப்பைப் போட்டேன். நன்றி! :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
ரொம்ப சரி.. காபி டோட்டலர்தான். மாதவா.. சில பேர் பால் டோட்டலர்ஸ்... :-)))

RVS said...

@கோவை நேரம்
பங்க் கடை எங்கூர்லையும் உண்டு.. ஆனா அங்கெல்லாம் பெட்ரோல் டீசல் போடுவோம்... ஹா...ஹா... :-))

RVS said...

@Ramesh
ஹா.ஹா.. தந்தன தந்தன... பாட்டெல்லாம் பாடுவாங்களா? :-)))

RVS said...

@கவிதை வீதி... // சௌந்தர் //
பாராட்டுக்கு நன்றி! :-)

RVS said...

@"என் ராஜபாட்டை"- ராஜா
ஹா.ஹ... நன்றிங்க... :-)

RVS said...

@ரிஷபன்
பாராட்டுக்கு நன்றி சார்! :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
புகையும் நினைவுகள்-னு டைட்டில் வைக்கலாம்னு இருந்தேன்! :-))\

RVS said...

@angelin
ஹா..ஹா..பாராட்டுக்கு நன்றிங்க. :-)

RVS said...

@siva
என்ன குறையுது? தெரியலையே!! :-))

RVS said...

@அப்பாதுரை
ஓ ஹோ... எப்பெல்லாம் தண்ணியடிப்பீங்க? :-))))

Ponchandar said...

முன்னொரு காலத்தில் (1985) ஜோத்பூரில் எங்களுக்கும் ஒரு ”பார்” உண்டு. திருட்டு தம் அடிக்க வேண்டா. அங்க வந்து யார் பார்த்து போட்டு கொடுக்க போறாங்க.. அங்க நம் நண்பர் சிகரெட்-ஐ விருந்தோம்புவதே இப்படித்தான் “ சிகரெட் சாப்பிடுறீங்களா”

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails